பாலா
****
எதையும் திருந்தச் செய்தல் அவசியம் என்ற வாழ்க்கைப் பாடத்தை என் தாய்வழிப் பாட்டனாரிடம் (RBS என்றழைக்கப்பட்ட R.B.சடகோபாச்சரியார்) தான் கற்றுக் கொண்டேன்! அவர் புதுக்கோட்டை உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். ஆங்கில இலக்கணத்தில் விற்பன்னர். பள்ளிக் காலத்தில் நான் பாடங்களை உரக்கக் கூறி மனப்பாடம் செய்வது வழக்கம். ஆங்கிலப்பாடம் சத்தமாகப் படிக்கையில், நான் ஏதாவது சின்னத்தவறு செய்தால், அவர் வேறு வேலையில் ஈடுபட்டிருந்தாலும் கூட, அத்தவறை உடனே சுட்டிக் காட்டி திருத்துவார்!
தாத்தாவின் ‘ரிடையர்ட் ‘ வாழ்க்கை அபாரமானது. காலை சரியாக 4 மணிக்கு விழித்தெழுவார். மார்கழி மாதமானாலும், குளிப்பதற்கு சுடு தண்ணீர் உபயோகிக்க மாட்டார்! காலையில் காபி/தேநீர் அருந்த மாட்டார்! அதிகாலை பூஜை (நீண்ட!) முடித்து, திருவல்லிக்கேணி பார்த்தஸாரதி கோயில் சென்றால், வீடு திரும்புவதற்கு கிட்டத்தட்ட 11 மணியாகி விடும். சுமார் இரண்டு மணி நேரம் ஹிண்டு நாளிதழ் படித்து விட்டுத் தான், உணவைத் தொடுவார். அக்கால வழக்கப்படி, தனக்குப் பசித்தாலும், அவர் உணவருந்தியே பின்னரே, பாட்டி சாப்பிடுவார். மதியம் உறங்கும் பழக்கமற்றவராதலால், மறுபடியும் ஹிண்டுவைத் தொடர்வார்; வீட்டின் கணக்கு வழக்குகளை கவனிப்பார்; சில ஏழை மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருவார்.
சரியாக மாலை 5 மணிக்கு சற்று பெரிய டம்ளரில் டிகிரி காபி அருந்தி விட்டு வீட்டுத்திண்ணையில் அமர்ந்து பிரபந்தப் பாராயணத்தைத் தொடங்குவார். இரவு ஏழரை மணிக்கு குறைந்த அளவு சாப்பாட்டிற்குப் பின், சரியாக 8 மணிக்கு ரேழியின் ஓரமாக படுக்கையிட்டு உறங்கச் சென்று விடுவார்! இதே தினசரி Routine-ஐ, 12 ஆண்டுகள் அவர் கடைபிடித்ததை நான் பார்த்து வியந்திருக்கிறேன்! என் கல்வியார்வம், பக்தி, ஏழைகளுக்கு இரங்குதல், ஆங்கிலத்தில் ஓரளவு ஆளுமை போன்றவைகளுக்கு வித்திட்டவர் அவரே.
அவருக்கு ஏதாவது ஒரு காரணத்தினால் கோபம் ஏற்பட்டால், அதை அவர் வெளிப்படுத்தும் விதத்தில் நகைச்சுவை (SATIRE) நிறைந்திருக்கும்!!! அவர் ஒரு மாவடு (வடு மாங்காய்) பிரியர். பாட்டியும் ஒவ்வொரு வெயில் காலத்திலும், அவருக்காகவே பெரிய ஜாடி நிறைய மாவடு ஊறுகாய் தயாரித்து வைப்பது ஒரு வருடாந்திர சடங்கு போன்றே நடந்து வந்தது! ஒரு பத்து நாட்களாவது ஊறிய பின்னரே, மாவடு சுவையாகவும், மென்மையாகவும் இருக்கும். ஆனால், தாத்தாவோ மாவடு விஷயத்தில் பொறுமையை கடைபிடிக்க மாட்டார்.
கடுமையான ‘ஆசாரர் ‘ ஆன அவரிடம், உண்ணும் இலையிலிருக்கும் ஒரு பதார்த்தத்தை எடுத்து கடித்து விட்டு மறுபடியும் இலையில் வைக்கும் பழக்கம் அறவே இல்லாததால், முதல் நாள் தயாரித்த மாவடுவை, அது சற்று கடினமாக இருக்கும்போது, கட்டை விரலாலேயே விண்டு உடைக்க முயன்று இயலாதபோது, ‘என் கட்டை விரலை உடைப்பதற்காகவே இதை செய்திருக்கிறாள் ‘ என்று கைக்கெட்டியது வாய்க்கு எட்டாத கோபத்தில், அவருக்காகவே மாவடு தயாரித்த பாட்டியை அன்பாகத் திட்டுவார்!!! (எவ்வளவு பெரிய வாக்கியம் எழுதி விட்டேன், பாருங்கள்!)
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் அக்கா, குதூகலத்துடன் இருக்கிறாள் என்றால், அவள் நடையில் ஓட்டமும் துள்ளலும் தானாக ஏற்பட்டு விடும்! அம்மாதிரியான ஒரு சமயத்தில், சற்று பாவாடையை விசிறிக் கொண்டு அவள் செல்கையில், தாத்தா மீது மோதி விட்டாள்! தாத்தாவுக்குக் கோபம் மூக்கு நுனியில், அக்காவுக்கோ பயம்! ஆனால், தாத்தா கோபத்தை வெளிக்காட்டாமல், நிதானமாக அவளைப் பார்த்து, ‘கல்யாணம் ஆனபிறகு, இதே மாதிரி ஓட்டமும் நடையுமாக நீ இருப்பாயேயானால், உனக்கு வாய்க்கும் மாமியார் உன்னை மிகவும் மெச்சுவாள்! ? ‘ என்று ஒரு போடு போட்டார்! அக்கா உடனே சிரித்து விட, தாத்தாவுக்கும் கோபம் பறந்து போய் விட்டது!
பிறிதொரு சமயத்தில், எனக்கும் என் தம்பிக்குமிடையே நடந்த ஒரு சண்டையில் குறுக்கிட்டு, என்னைப் பார்த்து, ‘நான் ஒன்று சொல்கிறேன், கேட்கிறாயா ? சரியாக அவன் மூக்கைப் பார்த்து ஒரு குத்து விடு! அவனை மேலே அனுப்பி விட்டால், உனக்கு ஒரு பிரச்சினையும் இல்லையல்லவா ?! ‘ என்று கூறியதன் தாக்கத்தில், நான் தம்பியுடன் சண்டை போடுவதை சுத்தமாக நிறுத்தி விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
அடுத்தவர் மனமறிந்து, நாசூக்காக நடந்து கொள்ள அவர் ஒரு போதும் தவறியதில்லை, என்பேன். உதாரணமாக, பள்ளியில் பயில்கையில், நான் ஆங்கிலத் தேர்வு எழுதி விட்டு வீடு வரும் சமயம், அவர் வாசல் திண்ணையில் தான் அமர்ந்திருப்பார். ஆங்கிலத்தில் ஆர்வம் உள்ள அவருக்கு, நான் தேர்வை எவ்விதம் எழுதினேன் என்று அறிந்து கொள்ளவும், என் வினாத்தாளைக் காணவும் மிகுந்த ஆவல் மேலிட்டாலும், என்னை வாசலில் நிறுத்தி உடனடியாக ஒரு போதும் விசாரித்ததில்லை. நான் உணவருந்தி, சற்று ஓய்வெடுத்த பின்னரே, மெல்ல என்னிடம் வந்து, தேர்வைப் பற்றி விசாரிப்பார். வினாத்தாளையும், நான் வாய் வார்த்தையாகக் கூறும் பதில்களையும் வைத்து, அவர் கணித்துச் சொன்ன மதிப்பெண்களுக்கும், நான் தேர்வில் பெற்றதற்கும், அதிக வித்தியாசம் ஒருபோதும் இருந்ததில்லை!!
எனக்கு பொறியியற் கல்லூரியில் பயில இடம் கிடைத்த தகவல் வருவதற்கு ஒரு மாதம் முன்பு அவர் இறந்து போனது என் வாழ்வில் ஒரு பெருஞ்சோகம் தான். அதை இன்று நினைத்தாலும் சற்று வேதனையாகத் தான் உள்ளது.
****
என்றென்றும் அன்புடன்
பாலா
balaji_ammu@yahoo.com
- பெரிய புராணம் – 45 ( திருக்குறிப்புத் தொண்டர் புராணம் நிறைவு )
- தலைப்பு
- ஆதி அதிகாரம்
- மூன்று சந்தோஷங்கள்
- ‘அந்நியன் ‘- சங்கருக்கு என்ன தண்டணை தருவான்… ?
- ‘ சுருதி பேதம் ‘ – சென்னையில் அரங்கேற்றம்
- முன்பட்டமும் பின்பட்டமும்
- மிஸ்டர் ஐயர்
- “பாரிஸ் கதைகள்” அப்பால் தமிழ் வெளியீடு…. விமர்சனம்
- நூல் மதிப்புரை- ‘ரமணசரிதம் ‘- கவி மதுரபாரதி
- சிறு வயது சிந்தனைகள் – என் பாட்டனார்
- உலகத் தமிழ் அடையாளமும் மலேசிய, சிங்கப்பூர் இலக்கியமும்-ஓர் எதிர்வினை
- கானல்காட்டில் இலக்கிய மான்கள்
- ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) கனடாவின் முதல் விமானப் பயணம் (பாகம்-4)
- துடிப்பு
- கீதாஞ்சலி (28) எங்கே உன் பாதை ? மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- மாயமான்
- விடு என்னை
- மனசில் தேரோடுமா ? (உரைவீச்சு)
- இன்றும் என்
- பெருநரைக் கிழங்கள்
- வேண்டிய உலகம்
- விடையற்ற வியப்புக் குறிகள்!!!
- ஒரு வழியா இந்த மெட்டிஒலி.. தலை வலி …
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 3
- புலம்பெயர் வாழ்வில் தமிழ்ப்பெண்கள் எதிர்நோக்கும் உளவியல் பிரச்சனைகள்
- கம்யூனிஸ்ட் கட்சிகளின் வெட்கக்கேடான வெற்றி
- வாடகைத்தாய்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-4)
- சனிட்டறி
- சிறகு
- திருவண்டம் – 5 (End)