கோவில் மிருகம்-விநாயகமுருகன் கவிதைத் தொகுப்பு-என் பார்வையில்..

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

ராமலக்ஷ்மி


“அழகு என்பது உண்மை. உண்மையே அழகு. உணர்த்துகிறது அதையே உலகம். உணர வேண்டியதும் அதுவே,” சொன்னவர் ஆங்கிலக் கவிஞ்ர் ஜான் கீட்ஸ். உணர்த்தியிருக்கிறார் இளங்கவிஞர் விநாய முருகன். வலித்தாலும் உண்மை ஒன்றே அழகென வாழ்வின் நிதர்சனங்களைக் கண்முன் கொண்டு வந்திருக்கிறார்.

அன்றாட அவலங்களை, மனிதரின் மறுபக்கங்களை, மடிந்து வரும் நேயங்களை ஒரு நெடும் பயணத்தில், பாரதியின் சீற்றம் கலந்த எள்ளலுடன், சமூக அக்கறையும் ஆதங்கமும் தொனிக்க, துறுதுறுப்பான ஒரு இளைஞன் சொல்லச் சொல்ல சுற்றியிருக்கும் அத்தனை சக பயணிகளும் சாமான்ய மனிதர்களும் கவனம் பிசகாமல் கேட்பது போன்றதான உணர்வைத் தருகிறது கோவில் மிருகம் கவிதைத் தொகுப்பு.

இவரது கவிதை, கட்டுரைகளை இணைய இதழ்களில் அவ்வப்போது வாசித்ததுண்டு. ஆனால் ஒரு தொகுப்பாக வாசிக்கையில் கிடைத்த அனுபவம் அலாதியானது. பொதுவாகவே எனக்கு சமூகக் கவிதைகள் மீதும், எளிய, வார்த்தை ஜோடனைகள் அற்ற, வாசித்ததும் மனதில் ஒட்டிக் கொள்கிற கவிதைகள் மீதும் அலாதி நேசம் உண்டு. இவரது கவிதைகளில் என் தேடலின் அடையாளங்களைக் காண முடிகிறது.

சந்தித்த மனிதர்கள், தன்னைக் கடந்து செல்லும் சம்பவங்கள், ஏன் பயணித்த சாலைகளும் இவரது கவிப் பொருளாய் விரிந்துள்ளன.

நகர வாழ்வின் நாகரீகங்களில் விரவி நிற்கும் பாசாங்குகளை பாசாங்கற்ற மொழியிலே பகிர்ந்து கொண்டிருக்கிறார். 58 கவிதைகளிலும் அவரது கூர்ந்த அவதானிப்பு புலனாகி பிரமிக்க வைக்கிறது.

தொலைந்து வரும் ஜீவகாருண்யமே ‘கோவில் மிருகம்’ தலைப்புக் கவிதை. தொடர்ந்து ‘சிங்கம்’, ’உயிர்ப்பு’ ஆகியன. கொன்று விடு கோழிகளை என இவர் விடுக்கும் ‘வேண்டுகோள்’தனில் கொப்பளிக்கிறது கருணை. ‘ஊதியம்’ கவிதையில்,
‘புலி வளையம் தாண்டுகிறது
கிளி சீட்டு எடுக்கிறது
குரங்கு கர்ணம் போடுகிறது
கரடி தாயத்து விற்கிறது
யானை காசு கேட்கிறது
மனிதன் பிடுங்கிக் கொள்கிறான்.’

பல கவிதைகள் குறியீடுகளாய் அமைந்து வாழ்க்கை மீதான கேள்விகளை சந்தேகங்களை உள்ளடக்கியதாயும் உள்ளன.

‘நான்கும் சுவர்களும்
பெல்ஜியம் கண்ணாடி’
என ஆரம்பமாகி தொட்டியின் வசதிகளை சிலாகிக்கும் ‘மீன் தொட்டிகள்’ கவிதையில்,
‘மீன்கள் வளர்க்க
உகந்த தொட்டி என்றான்

எல்லாம் சரி
மீன்களுக்கும் இந்தத்தொட்டி
பிடிக்குமென்று சொன்னதுதான்
எனக்குக் குழம்புகிறது’.

நேயம் அற்றிருப்பதையும் நியாயப்படுத்திக் கொள்கிற மனித மனங்களை நகையாடும் ‘சற்றுமுன் வந்த மின்னஞ்சல்’ ‘இன்று முதல்’ ஆகியவை வாசிப்பவர் மனங்களைக் குறுகுறுக்க வைக்கின்றன:
’வழிதப்பிய குறுஞ்செய்தியொன்று
ஒலித்தது
வேணுகோபால் இறந்துவிட்டான்
உடனே கிளம்பி வா

உண்மையில் வேணுகோபால்
என்று எனக்கு யாரும் இல்லை
இன்று முதல்
அந்தக் கவலையும் தீர்ந்தது”

வாழ்க்கையின் பெரும்பகுதியை விழுங்கி வரும் மெகாத் தொடர்களைச் சாடும் ‘தொடரும்’ கவிதையில்,
‘இடையில் மூன்று முறை
வேறு வீடு வேறு அலுவலகம் மாறியிருந்தேன்.
இது தவிர ஒரு முறை
இறந்து மீண்டும்
பிறந்தும் தொலைத்து விட்டேன்’.

வாழ்வே போலியாகிப் போனதை நையாண்டி செய்கின்றன ‘திருமணமொன்றில்’, ‘பணமா பாசமா’.

உலகம் இப்படியானது இல்லையென உங்களால் சொல்ல முடியுமா? ‘ஒரு விசாரிப்பு’:
‘நீண்ட நாட்கள் கழித்து
நண்பனொருவன்
தொலைபேசினான்

எப்படி இருக்கிறாய்
எப்படிப் போகிறது கேட்டான்

அப்படியேதான் இருக்கின்றேன்
அப்படியேதான் போகிறதென்றேன்

சுவாரஸ்யமற்றவனாய்
துண்டித்தான் தொடர்பை

அப்படியே இருந்து
அப்படியே போவதிலென்ன
அப்படியொரு ஏமாற்றம்.’

தொலைக்காட்சி தொகுப்பாளினியின் ‘நீங்கள் கேட்டவை’:
”கணவருக்கும் மனைவிக்கும்
ஒருவரையொருவர் பிடிக்கிறதாவென்று
கேட்கவேயில்லை இறுதிவரைக்கும்.”

இவரது நெற்றியடிக் கவிதை பாணியே ‘புரியாமை’யாக,
‘இத்தனை எளிமையாக
இருக்கிறதே கவிதையென்று
விமர்சித்தார்கள்

புரியாமை கொண்ட வாழ்க்கையில்
தோற்றுப்போன வரிகளை எழுத
ஜோடனைகள் ஒரு கேடா?’

‘தொலைந்து போனவை’களில் பழைய நண்பனும் சேருகின்றான்:
‘அவன்
புதிதாய் சேர்ந்த வேலை
புதிதாய் வாங்கிய கார்
புதிய மாடல் மொபைல்
புதியாய் கட்டும் வீடு
சமீபத்தில் சென்று வந்த
நாட்டைப் பற்றிய புதிய தகவல்கள்
இவற்றோடு எனக்கு
புதிய நண்பனொருவனை
பரிசாக தந்துவிட்டு சென்றிருந்தான்.’

மின்சார ரயிலில் பாடிப் பிழைக்கும் பார்வையற்ற சிறுமி ‘பூங்குழலி’யில் பாடல் காதில் ஒலிப்பது போன்றதானதொரு பிரம்மை.

பேசவிட்டால் முழுத் தொகுதியையும் உங்கள் முன் வைத்துவிடும் அபாயம் இருப்பதால் ‘குடைக்காம்பு’,. ‘தொலைந்த பறவை’ ‘சாலைகள்’, ‘சந்திப்புகள்’,’குரல்கள்’, ‘அவசர சிகிச்சை’ , ‘விடுமுறை நாள்’ ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.

கவிதையா, அது என் சுவாரஸ்யத்துக்கு உட்பட்டதல்ல[not my cup of tea] எனக் கடக்கக் கூடியவர்களையும் ஈர்க்கும் வகையில், எவரும் நெருக்கமாக உணரும் வகையில், மறக்க முடியாத கவிதைகளைத் தாங்கி ‘கோவில் மிருகம்’. எடுத்து ருசித்தால் உணர்வீர்கள் தேநீரின் கசப்பாய் உள் இறங்கும் உண்மையின் ஸ்வரூபத்தை, எஞ்சி நிற்கும் தித்திப்பாய் நம்முள் அது ஏற்படுத்தும் தீராத தாக்கத்தை.

முப்பத்து மூன்று வயதுக் கவிஞரின் முதல் தொகுப்பு. வருங்காலத்தில் நிறைய எதிர்பார்க்கலாம் இவரிடமிருந்து. வாழ்த்துக்கள் விநாயக முருகன்!
***
கோவில் மிருகம்
பக்கங்கள்:64 ; விலை:ரூ.40
பதிப்பகம்: அகநாழிகை (http://www.aganazhigai.com)
கிடைக்குமிடங்கள்: நியூ புக்லேண்ட்/எனி இந்தியன், தி. நகர், சென்னை

இணையத்தில் பெற: http://www.udumalai.com
http://ezeebookshop.com
http://discoverybookpalace.com

சென்னை, அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே ‘செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப் பள்ளி’ வளாகத்தில் 17 ஜனவரி 2011 வரை நடைபெறவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் அகநாழிகை பதிப்பகப் புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடாகியிருக்கும் நிவேதிதா புத்தகப் பூங்கா ஸ்டால் அரங்கு எண்:274-லிலும் தற்சமயம் கிடைத்து வருகின்றன.
*** *** ***

Series Navigation

ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி