கேள்வி -1 சண்டியர் தப்பு ! சாமி சரியா ?

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

ஞாநி


கமல்ஹாசனின் சண்டியர் படம் இன்னமும் புதுப் பெயரிடப்படாமல் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. கமல் ஒன்றும் சமூக சீர்திருத்தவாதியல்ல என்பது நாடறிந்ததுதான். வர்த்தக ரீதியில் வெற்றி பெறுவதும், அதே சமயம் வித்யாசமான உழைப்பின் மூலம் தன் திறமை போற்றப்படுவதில் அக்கறை காட்டுவதும்தான் அவரது தேவைகள். இந்த போக்கில் சில சமயங்களில் அவர் முற்போக்கானவற்றை செய்வதும் சில சமயம் பிற்போக்கானதை செய்வதும் இயல்பு.

சண்டியர் என்ற பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி படத்தலைப்பு பற்றிய பிரச்சினை இப்போதைக்கு முடிந்துவிட்டாலும், படம் அரிவாள் கலாசாரத்தை ஊக்குவிப்பதாக இருக்கக்கூடாது என்றும் படம் எடுத்து முடிந்த பிறகு அந்தப் பிரச்சினையை கவனிக்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறார். எந்த ஊருக்குப் போய் படம் எடுத்தாலும் இங்கேதானே ரிலீஸ் செய்தாக வேண்டும் என்பது அவர் கருத்து.

படம் உருவாவதற்கு முன்னே அதை எதிர்ப்பது, தடுப்பது என்பது நிச்சயம் ஆதரிக்க முடியாத விஷயம். இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டால், நாளைக்கு ஒவ்வொரு எழுத்தாளரையும், பத்திரிகையாளரையும் அடுத்து என்ன கதை/கட்டுரை எழுதப் போகிறாய், அதன் தலைப்பு என்ன, சொல்லிவிட்டு எழுது என்று சொல்ல முடியுமா ?

தணிக்கைக் குழு முன்பு படம் வரும்போது சமூக அமைதி, சட்டம் ஒழுங்குபிரச்சினைகளை கவனிப்பதுதான் முறை. இதற்கு கிருஷ்ணசாமி தரப்பு வாதம் – தணிக்கைக் குழு என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லையே. அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதுதான்.

அப்படியானால் நியாயப்படி கிருஷ்ணசாமி தணிக்கைக் குழுவுக்கு எதிரான போராட்டத்தை அல்லவா அறிவித்து நடத்த வேண்டும் ?

அரிவாள் கலாசாரம் பரவக் கூடாது என்று கவலை தெரிவிக்கும் கிருஷ்ணசாமி , சண்டியர் பெயருக்கும் படப்பிடிப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்த அதே சமயத்தில் ரிலீசாகி ஜே ஜே என்று ஓடிக் கொண்டிருந்த இன்னும் ஓடிக் கொண்டிருக்கிற படம் ‘சாமி’.

இந்தப் படம் கிருஷ்ணசாமியின் விசேஷ கவனத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஏனோா பெறவில்லை. இந்தப் படத்தின் முதல் விளம்பர ஸ்டில்லே அரிவாள்தான். கதாநாயகன் விக்ரம் பன்னிரண்டு கைகளுடன் ஒவ்வொரு கையிலும் அரிவாள் முதல் வகைவகையான ஆயுதங்களுடன் நிற்கும் ஸ்டில். இந்தப் படத்தின் கதை நடப்பது கிருஷ்ணசாமியின் இயக்கத்துக்கு முக்கியமான பகுதியான திருநெல்வேலியில்.

கதாநாயகன் போலீஸ் அதிகாரி. ஆனால் அவன், எந்த சாதி என்று சொல்லப்படாத ஒரு சாதி சங்கத்தினரின் போராட்டத்தைத் தடுக்க, தானே அரிவாளும் உருட்டுக்கட்டையும் எடுத்து வருகிறான். அவன் மட்டும் அல்ல. போலீஸ் படையே அரிவாள், கட்டையுடன் வருகிறது. போலீஸ் பொறுக்கியாக நடந்துகொள்வது படம் முழுக்க நியாயப்படுத்தப்படுகிறது. படத்தில் வில்லன் எந்த சாதி, ஹீரோ எந்த சாதி என்று சொல்லப்படாமலே கதை சாமர்த்தியமாக நகர்த்தப்படுகிறது. வில்லன் ஹீரோவும் தன் சாதிதான் என்கிறான். நெல்லையில் எந்தெந்த சாதிகளுக்கிடையே அடிக்கடி கலவரம் மூளும் என்பது கிருஷ்ணசாமிக்கும் பொதுமக்களுக்கும் தெரிந்ததுதான்.

அண்மை வரலாற்றில் நெல்லையில் நடந்த மறக்க முடியாத மறக்கக்கூடாத ஊர்வலம் கிருஷ்ணசாமி பங்கேற்று நடத்திய மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் ஊர்வலம்தான். அதில் போலீஸ் அராஜகத்தில் பலர் தாமிரபரணி ஆற்றில் அடித்துத் தள்ளப்பட்டும் மூழ்கியும் செத்த வரலாற்றை ‘சாமி’ படம் கொச்சைப்படுத்தியிருக்கிறது. படத்தின் உச்சகட்டமாக நெல்லை நகரில் நடத்தப்படும் ஊர்வலம் வில்லனால் நடத்தப்படுகிறது. வில்லனின் வன்முறை-யை முறியடிக்க, ஹீரோ-போலீசின் வன்முறை முன்கூட்டியே தொடங்கிவிடுகிறது. போலீஸ் வன்முறை நியாயப் படுத்தப்படுகிறது. சண்டியர் என்று பெயர் வைத்ததற்கே துள்ளி குதித்த கிருஷ்ணசாமிக்கு ஏன் இந்தப் படம் கண்ணுக்கே தெரியவில்லை ? இப்படி ஒரு கேவலமான படத்தை கிருஷ்ணசாமி கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு என்ன காரணம் ?

அரிவாள் கலாசாரத்தைப் பரப்புவது ஆபத்தானது என்று சொல்லும் கிருஷ்ணசாமிகள், தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெண்களைப் பாட்டிலும் நடனத்திலும் கதையிலும் கேவலப்படுத்திக் கொண்டிருப்பது தவறானது என்று ஏன் உறைக்கவில்லை ? சாமி படத்தில் ஹீரோயினுடைய குண்டியின் க்ளோசப்பில்தான் டூயட் தொடங்குகிறது. “ கேனா புனா” என்று ஹீரோ பேசும் ஒரு வசனம். இதன் விரிவு என்ன என்பது தமிழ் வசவுகள் தெரிந்த எல்லாருக்கும் தெரியும். அது அல்ல, இது கேனப் புண்ணாக்கு என்று விரிவாக விளக்கம் வேறு.கூடவே அப்ப அந்த அர்த்தம் இல்லியா என்று நினைவூட்டும் வசனம் காமெடியனுக்கு.

தமிழ் சினிமாவுக்கு சிகிச்சை செய்யப் புறப்பட்டிருக்கும் அரசியல் டாக்டர்களின் முயற்சியை நிச்சயம் வரவேற்க வேண்டும். ஆனால் அது மேம்போக்கானதாக, சாதி சார்ந்ததாக மட்டும் இருக்க்கக்கூடாது. முதலில் பெண்களைக் கேவலப்படுத்தும் அத்தனை சினிமா பாடல்கள், வசனங்கள் முதலியவற்றை எழுதும் கவிஞர்கள், கதாசிரியர்கள், இயக்குநர்கள், இவற்றை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக அரசு ஊதியம் பெறும் தணிக்கை அதிகாரி ஆகியோருக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தட்டும். எடுத்து வெளியாகி மக்கள் ஆதரவுடன் ஓடிக் கொண்டிருக்கும் படங்களைக் கண்டு கொள்ளாமல், இன்னும் எடுக்கப் படாத படம் பற்றிப் பேசுவது திசை திருப்பும் வேலை.

தீம்தரிகிட ஜூலை 2003 dheemtharikida @hotmail.com

***

திண்ணைக் குழு குறிப்பு:

(தீம தரிகிட – இதழின் சந்தா விவரம் :

10 இதழ் சந்தா : ரூ 100

வெளி நாடு சந்தா : ரூ 1000 (அ) அமெரிக்க டாலர் 20.

இந்தக் கட்டுரை இல்லாமல் இந்த இதழில் வளவ துரையன், உமா மகேஸ்வரி, மு சத்யாவின் கவிதைகள் வெளியாகியுள்ளன. தலித்துகளுக்கு நிலம் பற்றி ஒரு முக்கியமான கட்டுரையை கெளதம சக்திவேல் எழுதியுள்ளார். தொடர்களாய் ச தமிழ்ச்செல்வன் (அறிவொளி இயக்க அனுபவங்கள் பற்றி) பாஸ்கர் சக்தி, ஆனந்தி ஆகியோர் எழுதியுள்ளனர். பெருமாள் முருகன், பாலு சத்யாவின் சிறுகதைகள் வெளியாகியுள்ளன. பால் பாட் = கெமெர் ரூஜ் கோர ஆட்சி பற்றிய புத்தகம் ஒன்றும் விரிவாக அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. வெளி நாட்டு வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் . நீங்கள் நேரடியாக உங்கள் இதழை தீம் தரிகிட அலுவலகத்திற்கு சந்தா செலுத்தி வரவழைத்துப் பெறுவது, பொருளாதார ரீதியாக தீம் தரிகிட இதழுக்கு உதவி சேர்க்கும்.

முகவரி : ஞான பானு பதிப்பகம், 22 பத்திரிகையாளர் குடியிருப்பு,

திருவான்மியூர், சென்னை 600 041)

Series Navigation

ஞாநி

ஞாநி