குறிப்புகள் சில-24 ஜூலை 2003 பொது சிவில் சட்டம்-மழை நீர் சேகரிப்பு-சில இணையத்தளங்கள்-எண்டோசல்பான்,முன்னெச்சரிக்கைக்கோட்பாடு

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் கொடுத்த தீர்ப்பில் குறிப்பிட்டிருந்த கருத்துக்களையடுத்து பொது சிவில் சட்டம் குறித்து விவாதம் எழுந்துள்ளது.இது புதிதல்ல.பொது சிவில் சட்டம் குறித்து இடது சாரிகள் பல ஆண்டுகளாக பேசிவருகிறார்கள்.ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது ஷாபானு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடுத்து கொண்டுவரப்ப்ட்ட சட்ட திருத்ததை அவர்கள் ஏற்கவில்லை, அரிப் முகமது கானும் அதை எதிர்த்தார்.பொது சிவில் சட்டம்,பெண்கள்,சட்டம்,இந்திய அரசு குறித்து பெண்ணியவாதிகள்/இயக்கங்கள் கடந்த 15 ஆண்டுகளில் பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளனர் (அ) நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளன.உடனடியாக நினைவிற்கு வருகிற பெயர்கள் நிவேதிதா மேனன்,மது கிஷ்வார், பெளெவியா அக்னஸ்,இந்திரா ஜெய்சிங்,கல்பனா கண்ணபிரான்.அன்வேிஷி (anveshi) என்ற பெண்கள் அமைப்பு இது குறித்த ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டது.பெளெவியா அக்னஸின் கட்டுரைத்தொகுப்பு தமிழில் கிடைக்கிறது.காலனிய ஆட்சியின் போது இந்துப்பெண்களின் நிலைக்குறித்தும், இந்துசட்டங்களில் மாற்றத்தின் தேவை குறித்தும் பெரிய அளவில் விவாதமே நடந்தது.இதுவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.பார்த்தா சாட்டர்ஜி,ஜானகி நாயர் உட்பட பலர் இது குறித்து எழுதியுள்ளனர்.இந்து தேசியவாதமும்,பெண்கள் பிரச்சினைகளில் தேசியவாதிகளின் நிலைப்பாடுகள் குறித்தும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மேம்போக்காக ஊடகங்கள் இதை அரசியல் பிரச்னையாக சித்தரிக்கலாம் (பா.ஜ.க vs சமாஜ் வாதி கட்சி போன்றவை). ஆனால் இதை இன்று துவங்கிய பிரச்சினையாக காண்பது சரியல்ல.நேரு அன்று என்ன நிலைப்பாடு எடுத்தார், அரசியல் சட்ட வடிவமைப்பு குறித்த விவாதங்களில் முன்வைக்கப்பட்ட நிலைப்பாடுகள் என்ன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். 1950 களில் இந்து சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முயன்று தோற்றார் அம்பேத்கார்.அன்று என்ன நிகழ்ந்தது என்பதினை நாம் ஆராய்ந்தால் சில உண்மைகள் புலனாகும். அம்பேத்கார் குறித்த ஒரு கட்டுரையை உங்கள் கவனத்திற்கு தருகிறேன்

Ambedkar and the Example of the West-Eleanor Zelliot

http://www.macalester.edu/~icm9/zelliot.html

இருபதாம் நூற்றாண்டில் பெண்களின் திருமண வயது குறித்த சட்டம் (சாரதா சட்டம் என்று பரவலாக அறியப்பட்ட சட்டம்) இயற்றப்பட்ட போது அப்போதிருந்த காஞ்சி சங்கராச்சாரியார் என்ன கருத்து தெரிவித்தார் என்பதை தெய்வத்தின் குரல் தொகுப்பிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.அப்போது அச்சட்டம் பலத்த கண்டனத்திற்குள்ளானது.அன்று ஹிந்து சமூகத்தின் சட்டங்களில் அந்நியர் தலையீடு கூடாது என்றவர்கள் சாஸ்திரம்,சம்பிரதாயம் ஆகியவையே வழிகாட்டிகள்,எக்காலத்திற்கும் பொருந்துபவை அவை என்றார்கள்.இவர்களில் தேசியவாதிகளும் அடங்குவர்.எனவே இதை ஒரு வரலாற்றுப் பிண்ணனியில் புரிந்து கொள்ள வேண்டும். சிறுபான்மையினரிடம் இது குறித்து பல கருத்துக்கள் உள்ளன.ஆனால் சிறுபான்மை சமூகங்கள் இதை ஒட்டு மொத்தமாக எதிர்ப்பது போன்ற தோற்றமே ஊடகங்களால் பல சமயங்களில் முன்வைக்கப்படுகிறது. 1994ல் கத்தோலிக்க பிஷப்புகளின் கூட்டமைப்பு, கிறிஸ்துவ திருமணம்,வாரிசு,தத்தெடுத்தல் குறித்த சட்டங்களில் மாற்றம் வேண்டுமென மூன்று சட்ட முன்வடிவுகளை அரசிடம் அளித்தது.ஆனால் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படவிலை.2000ல் மத்திய அரசு முன்வைத்த, கிறிஸ்துவ திருமணம் குறித்த சட்ட முன்வடிவில் தங்கள் கோரிக்கைகள் இடம் பெறாததால் அதனை பல கிறிஸ்துவ அமைப்புகள் நிராகரித்தன.மாற்றத்தின் தேவையை கிறிஸ்துவ சமூகம் மறுக்கவில்லை.அதை எப்படி நிறைவேற்றுவது என்பதில்தான் சிக்கல் எழுகிறது.ஒற்றைத் தீர்வாக பொது சிவில் சட்டம் என்று ஒன்றை முன்வைப்பதில் சாதகங்களும் உள்ளன,பாதகங்களும் உள்ளன. அதற்கு பதிலாக இப்போதுள்ள சட்டங்களில் முதலில் மாறுதல்களை கொண்டுவரலாம், பொது சிவில் சட்டம் தொலை நோக்கு லட்சியமாக இருக்கலாம்.இவ்வாறு இதனை பல கோணங்களில் அணுகமுடியும்.அரசியல் சட்டத்தின் பிற வழிகாட்டு நெறிகள் முற்றிலுமாக அமுல் செய்யப்பட்டுவிட்டனவா என்ற கேள்வியும் எழுகிறது.பொது சிவில் சட்டம் கொண்டுவந்தால் இன்று உள்ள ஹிந்து சட்டத்திலும் மாற்றம் தேவைப்படும். .பொது சிவில் சட்டம் என்பது இங்கு ஒரு அரசியல் விவகாரமாக, ஒட்டு வங்கி சார்ந்த ஒன்றாக,சிறுபான்மையினருக்கு சவால் விடும்/அச்சுறுத்தல் தரும் விஷயமாக சித்தரிக்கப்படுகிறது.இதனையும் தாண்டிய ஒரு புரிதல் தேவை. பின்நவீனத்துவ கண்ணோட்டங்கள் இதில் ஒரு புதிய புரிதலைத் தருகின்றன.பின்னர் இதுபற்றி எழுதக்கூடும். திலீப் டிசெளஸாவின் கட்டுரையை வாசகர் கவனத்திற்கு தருகிறேன்.சாத்தேயின் கருத்தும், பெண்ணிய இயக்கங்கள் இது குறித்து முன் வைத்துள்ள கருத்துக்களும் ஆய்விற்குரியவை.

http://www.rediff.com/news/2003/jun/21dilip.htm


மழைநீர் சேகரிப்பு குறித்த சட்டம் வரவேறக்கப்பட வேண்டும்.அரசே இதில் வழிகாட்டியாகத் திகழ வேண்டும். இதை முனைப்புடன் முழுமையாக நிறைவேற்றுவோருக்கு கட்டிட வரியில் சலுகைகள் தரலாம். பொது நீர் நிலைகள், குட்டைகள், குளங்கள் இவையும் பராமரிக்கப்பட்டு நீர் சேகரிப்பதற்காக பயன்படுத்த்ப்பட வேண்டும். இவற்றை கட்டிடங்கள் கட்டும் இடங்களாக மாற்றக் கூடாது.அதே சமயம் தொழிற்சாலைகள் நிலத்தடி நீரை ஏராளமாக பயன்படுத்துவதால் எழும் சிக்கல்களையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.இது குறித்த ஒரு சர்ச்சையை http://www.pucl.org/Topics/Industries-envirn-resettlement/2003/coke-tn.htm ல்காணலாம். குஜராத்திலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும் தன்னார்வ அமைப்புகள் மழை நீர் சேகரிப்பின் மூலம் வறட்சியை ஒரளவேனும் தாக்கு பிடிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளன.இது மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டால் விரும்பத்தக்க மாறுதல்களை கொண்டுவர முடியும்.


மூன்று

இணையத்தளங்களை வாசகர்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்

www.indiatogether.org

www.thehoot.org

www.infochangeindia.org


எண்டோசல்பான் என்ற பூச்சிகொல்லி மருந்து பயன்படுத்தப்பட்டதால் காசர்கோடு பகுதியில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதை ஆராய்ந்த குழு,அரசு அமைத்தது, எண்டோசல்பான் அதற்கு காரணமல்ல என்கிறது. இதன் தலைவர்தான் சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு இதைப் பரிந்துரைத்தார், எனவே அவர் தலைமையிலான குழுவின் பரிந்துரை ஏற்புடையதல்ல என்கின்றன இது குறித்துப் போராடும் குழுக்கள்.எண்டோசல்பான் உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது அல்லது அதன் பயன்பாடு குறித்து பல கட்டுப்பாடுகள் உள்ளன. இந்நிலையில் அரசு முன்னெச்சரிக்கைக் கோட்பாட்டின் அடிப்படையில் அதனை அப்பகுதியில் பயன்படுத்தப்படுவதை தடை செய்ய வேண்டும்.அறிவியல் சான்றுகள் முரண்படும் போது, ஆபத்து என்று கருத இடமுள்ள போது உடல் நலம்,சூழல் பாதுகாப்பு கருதி இவ்வாறு செயல்படுவது நல்லது.

முன்னெச்சரிக்கைக் கோட்பாடு குறித்த ஒரு அறிக்கை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.

‘When an activity raises threats of harm to human health or environment, precautionary measures should be taken even if some causes and effects relationships are not fully established scientifically ‘ (wingspread statement on precautionary principle)

இது வலுவான முன்னெச்சரிக்கைக் கோட்பாடு என்று கருதப்படுகிறது.முன்னெச்சரிக்கைக் கோட்பாடு பல சர்வதேச ஒப்பந்தங்கள், குறிப்பாக சூழல்பாதுகாப்பு ஒப்பந்தங்களில் இடம் பெற்றுள்ளது/அங்கீகரிக்கப்பட்டுள்ளது.உயிரின மூலக்கூறு மாற்றப்பட்டுள்ள உயிரிகள்(GMO) குறித்த விவாதங்களில் இது தவிர்க்கமுடியாத ஒன்று..அறிவியல் மூலம் கிட்டும் முடிவுகளில் நிச்சயமற்றதன்மை(uncertainity) இருக்கும் போது முடிவெடுக்க இது பயன்படும். நிச்சயமற்ற தன்மை பல சமயங்களில் தவிர்க்கமுடியாத ஒன்று. அறிவியலாளர்கள் ஒத்த கருத்தினை முன்வைக்காத போது,அல்லது தற்போதுள்ள சான்றுகளிலிருந்து திட்டவட்டமான முடிவிற்கு வர முடியாது என்று அறிவிக்கும் போது முன்னெச்சரிக்கைக் கோட்பாட்டினை முடிவெடுக்க ஒரு காரணமாக பயன்படுத்தலாம்.எனவே இது குறித்து விரிவாகப் பேசுவதென்றால் Post Normal Science,Type I,Type II errors, risk and uncertainity குறித்தும் பேசவேண்டும்.(ஒரு முனைவர் பட்ட ஆய்விற்கான விஷயம் இது.).முன்னெச்சரிக்கைக் கோட்பாட்டை நிராகரிப்போரும் உண்டு.


வரும் குறிப்புகளில் – உலக சிவில் சமூகம்-சோரஸ்,உலகமயமாதல்

ravisrinivas@rediffmail.com

Series Navigation