குமரி உலா 3

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

ஜெயமோகன்


ஏறத்தாழ மூன்று வருடம் நான் பத்மநாபபுரத்தில்தான் குடியிருந்தேன். அன்று என்னைத்தேடிவந்த பெரும்பாலான நண்பர்களுக்கு அந்த ஊர் மிகவும் பிடித்திருந்தது என்பதை நினைவுகூர்கிறேன். அழகிய ஊர் . பல தமிழ் சினிமாக்களில் அதை பலரும் பார்த்திருக்கக் கூடும். திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட அகன்ற தெருக்களும் பெரிய வீடுகளும் கொண்டது. பொதுவாக இப்படிப்பட்ட பழைமையான ஊர்களில் ஓர் இருள், சிதைவு எங்கும் காணப்படும். பத்மநாபபுரம் அப்படியல்ல, அது தன்னை தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டு நவீனகாலகட்டத்துக்கு வந்துவிட்ட ஊர் அது .ஆனால் மக்களுக்கு தங்கள் பழைமைமீது ஆழமான பிடிப்பும் உண்டு.

பத்மநாப புரம் என்பது கடைசியான பெயர். அதற்கு முன் இந்த ஊர் கல்குளம் என்றும் , இதன் மையமாக உள்ள அரண்மனை கல்குளம் அரண்மனை என்றும் அழைக்கப்பட்டது. அதற்கும் முன்பு இந்த பகுதி திருப்பாப்பூர் ஸ்வரூபம் என்றழைக்கப்பட்டது, இவ்வூர் அப்பெயரில் வழங்கப்பட்டிருக்கலாம். குமரி மாவட்ட வரலாற்றை ஆராயும்போது சங்ககால ஆய்மன்னர்களின் பிராமி கல்வெட்டுகள் கிடைக்கின்றன. அவை பெரும்பாலும் சமண மதம் சார்ந்தவை. அஞினான் புகலிடம் அமைக்க ஆய் கருந்தடக்கண் நிலம் அளித்தது குறித்த கல்வெட்டு முக்கியமானது. பிறகுள்ள சேரர்களின் ஆட்சிபற்றி அதிக தகவல்கள் இல்லை. பின்பு சோழர் படையெடுப்பு . சோழர்கள் முந்நூறுவருடம் இப்பகுதியை ஆண்டனர். அதன் பிறகு ஒரு பெரிய இடைவெளி. அதன் பிறகு நாம் காண்பது நான்கு சிறிய பகுதிகளாக சிதைந்து போன நிலப்பகுதியை ஆளும் நான்கு குடும்பங்களைத்தான். இவர்களுக்கும் சேர அரசகுலத்துக்கும் என்ன தொடர்பு என்பது புகைமூட்டமானதே. பிற்கால ‘அதிகாரபூர்வ ‘ திருவிதாங்கூர் வரலாறுகளில் இவ்வரச வம்சம் நேரடியாக சேரர் பழைமையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது . மார்த்தாண்டவர்மாவின் காலம்வரை இவர்களுக்கு வரம்பற்ற அதிகாரமும் குலப்பெருமையும் அளிக்கபடவில்லை என்பதில் இருந்தே இவர்கள் ஒரு சிறு பிரபுகுடும்பம் மட்டுமே என்று தெரிகிறது. திருவாழும்கோடு என்பதன் மரூஉ தான் திருவிதாங்கோடு ஆகி மெல்ல திருவிதாங்கூர் ஆகியது.

திருப்பாப்ப்புர் ஸ்வரூபம் திருவிதாங்கூர் என்ற நாடாக மாறியதன் வரலாறு சமீபத்தையது. பல குட்டிக் குட்டி மன்னர் பெயர்கள் அகப்படுகின்றன. முதல் முக்கிய மன்னர் மார்த்தாண்டவர்மா . உண்மையில் திருவிதாங்கூரின் சரித்திரமே அந்த வலிமை மிக்க மன்னருடன் தான் துவங்குகிறது. 1729ல் ஆட்சிப் பொறுப்பேற்ற போது இவருக்கு வயது 23 தான். அவர் காலம்வரை திருவிதாங்கூர் உண்மையில் மதுரைக்கு கப்பம் கட்டும் ஒரு சிறு ‘ஜமீன் ‘ ஆகவே இருந்தது [ மதுரை ஆவணங்களில் அப்படித்தான் சொல்லப்பட்டுள்ளது ] மார்த்தாண்டவர்மா தன் முப்பதுவருடக்கால ஆட்சியில் மற்ற மன்னர்களை வென்று திருவிதாங்க்கூரை வடக்கே கொல்லம் வரை விரிவுபடுத்தி வலிமையான நாடாக ஆக்கினார். அவர் கேரள சரித்திரத்தின் மிகப் புகழ்பெற்ற மன்னர். அவரைப்பற்றி சி வி ராமன் பிள்ளை எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘மார்த்தாண்ட வர்மா ‘ அவரை ஓர் ஐதீகபுருஷனாக மாற்றியது.

மார்த்தாண்டவர்மாவின் சாதனைகளைப் புரிந்துகொள்ள முதலில் அவர் கால சூழலை தெரிந்துகொள்ளவேண்டும். அப்போது திருவிதாங்கூரில் வலிமையான மைய அரசு இல்லை. அவரது தாய்மாமாவான ராமவர்மா காலம் வரை உண்மையான அதிகாரம் பல சிறு ஊர்களில் ஆதிக்கம் செய்துவந்த நிலபிரபுக்களுக்குத்தான் இருந்தது. அவர்களால்தான் முடிவுகள் எடுக்கப்படும். நிலையான ராணுவம் இருக்கவில்லை. நிலக்கிழார்கள் அந்தந்த தேவைக்கு ஏற்ப திரட்டியளிக்கும் படைதான். வரிவசூல் இல்லை, நிலப்பிரபுக்கள் அளிக்கும் காணிக்கைதான் மன்னரின் வருமானம். நிலப்பிரபுக்கள் மன்னரை ஆட்டிப்படைத்தனர்.

ராமவர்மாவுக்கு தமிழ் மனைவியில் பிறந்தவர்கள் பப்புத்தம்பி ராமன்தம்பி மற்றும் உம்மிணித்தங்கை ஆகியோர். கேரள முறைப்படி தாய்வழி உடைமை அடிப்படையில் மருமகனே வாரிசு. ஆனால் நிலக்கிழார்கள் பப்புத்தம்பி ராமன் தம்பிகளை ஆதரித்தார்கள். அச்சதியை முறியடித்து மார்த்தாண்ட வர்மா முடிசூட்டினார். நிலப்பிரபுக்களை முழுமையாக ஒழித்தார். அவரை ஏற்காத நம்பூதிரிகளை முழுமையாக நாட்டை விட்டு துரத்தி வடக்கே உடுப்பியில் இருந்து துளுபிராமணர்களை குடியேற்றினார். [ துளுபிராமணர்கள் வடக்கே பாக்கு விவசாயம் செய்தவர்கள் அவர்களுக்கு மந்திரம் சொல்ல நாக்கு வளையாததனால் குமரிமாவட்ட கோவில்களில் தாந்திரிக பூசைமுறை கொண்டுவரப்பட்டது என்பார் என் அப்பா. சைகை, முத்திரைகள் மட்டுமே வழிபாடு . அதாவது குலையிலிருந்து பாக்கு பிடுங்கி கூடையில் போடும்அசைவு ] மார்த்தாண்ட வர்மாதான் மையராணுவம் மைய நீதியமைப்பு ஆகியவற்றை உருவாக்கினார்.

இதில் அவருக்கு உதவிய தளபதிகள் இருவர். ஒருவர் ஸ்மார்த்த பிராமணர், ராமய்யன். சிறுவயதிலேயே இவரை மன்னர் அடையாளம் கண்டதாகச் சொல்வார்கள். மிக ஏழையான தாயாருடன் பஞ்சம் பிழைக்க தஞ்சையில் இருந்து வந்தவர் ராமய்யன் . நாகர்கோவில் நாகராஜா கோவிலில் மகாராஜா தங்கியிருக்கையில் குத்துவிளக்கு அணையப்போக அதை எண்ணையிட்டு தூண்டும்படி மன்னர் சொன்னார். ராமய்யன் வந்து ஒரு சிறு திரியில் சுடரை கொளுத்தி இடக்கையில் வைத்துக் கொண்டு வலக்கையால் எண்ணைவிட்டு தூண்டினாராம். அந்த முன்னெச்சரிக்கையைக் கண்ட மன்னர் அவரை படிக்க வைத்து பிறகு அமைச்சராக்கியதாக கதை உண்டு. ராமய்யன் நேரடியாக படைநடத்தி களம் இறங்கிய பிராமண தளபதி. எதிரிகளை கொடூரமாக ஒழித்துக்கட்டுவார் என இவரைப்பற்றி ஏராளமான கதைகள் உண்டு. அவர் சுசீந்திரம் நம்பூதிரிகள் வீடுகளை எரித்து துரத்தும்போது அவருக்கு குடிக்க நீரும் படுக்க இடமும் தந்த ஒரே ஒரு வீட்டைமட்டும் இடிக்கவில்லை , அந்த வீடும் அவர் படுத்த திண்ணையும் இன்றும் உள்ளது என்று சொல்வார்கள்.

இன்னிருவர் பெனடிக்ட் டிலனாய். இவர் ஒரு டச்சுக்காரர். இவரை 1741ல் குளச்சலில் நடந்த போரில் தோற்கடித்து போர்க்கைதியாக பிடித்தார் மன்னர். ஆனால் இவரது ஆளுமைத்திறன் கண்டு இவரை நண்பராக்கிக் கொண்டார். இவருக்கு திருவிதாங்கூர் மீது பெரும்பிரியம் உருவாகி இங்கேயே வாழ்ந்து மறைந்தார். மன்னரின் தளபதியாக அமைச்சராக வாழ்ந்தார். இங்கே கிறித்தவ மதத்துக்கு வலுவான அடிப்படை ஊன்றியவர் டிலனாய்தான். பெருமாள் அவர்களின் நூலில் மிக விரிவாக இந்த வரலாறுகள் சொல்லப்பட்டுள்ளன.

பத்மநாப புரத்துக்குள் நுழைந்தோம். கோட்டையை ஒட்டி உட்புறமாக பீரங்கிகள் கொண்டு செல்ல அமைக்கப்பட்ட பாதை இப்போது சாலையாக உள்ளது. நீலகண்டசாமி கோவிலில் தெப்பக்குளத்தில் பலர் குளித்துக் கொண்டிருந்தார்கள். அச்சூழலே காலை ஒளியில் அழகாக இருந்தது

நான் வசந்தகுமாரிடம் அந்த குளத்தில் நானும் அவரும் குளித்தது நினைவுள்ளதா என்றேன் . ஆமாம் என்றார். ‘ தமிழ்நாட்டிலும் இதேபோல நல்ல குளங்கள் இருந்தன ஜெயன். இன்றைக்கு ஒரு குளம்கூட பராமரிக்கப்படவில்லை. ஊருக்குள் உள்ள சக்கடை முழுக்க குளங்களில்தான் வந்து சேரும்… ‘ என்றார்.

‘எனக்கு நம் இன்றைய நாகரீகம் பற்றி உள்ள விமரிசனங்களில் முக்கியமானது சாதாரணமனிதர்களுக்கு அழகு, ஓய்வு எதுவுமே தேவையில்லை என்று நாம் முடிவு செய்துவிட்டிருப்பதுதான் ‘ என்றேன். ‘இந்த பத்மநாபபுரத்தில் அழகிய குளங்கள், படிக்கட்டுகள், மரத்தடிகள், மண்டபங்கள் என எத்தனையோ உண்டு. எல்லாமே சாமானியர்களும் பயன்படுத்தியவை. நிதானமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கலாம். படுத்து தூங்கலாம். குளிக்கலாம். மகிழ்ச்சி என்பது இதெல்லாம்தானே. நமது நகரங்களில் ஒரு சாமானியன் கண்ணில் அழகான ஒரு பொருள் படுவதற்கே வழி இல்லை. தீப்பெட்டிக் குடியிருப்புகள். குப்பைக் கூளம் மண்டிய பொது இடங்கள். அவசரமான வாழ்க்கை..,, பணக்காரர்களுக்கு மட்டுமே அழகும் நிதானமும் இன்றைக்கு கிடைக்கின்றன. மகிழ்ச்சி ஒரு பெரிய ஆடம்பரப்பொருளாக மாறிவிட்டது… இதேபோன்ற ஒரு குளத்தில் குளிக்க மதுரை அல்லது சென்னைவாசி எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும் .. ‘ என்றேன்

‘பழைய ஊர்களில் எல்லாம் உட்கார்ந்து பேச அருமையான இடங்கள் இருக்கும் ‘ என்றார் அ.கா.பெருமாள்

‘சென்னையில் நானும் ஜெகதீஷும் எல்லாம் உட்கார்ந்து பேச இடமில்லாமல் அலைவோம். ஜெகதீஷ் வீடு சிறியது . எங்களால் பணம் செலவழிக்கவும் முடியாது. குப்பை மண்டிய தெருக்களில் உட்கார்ந்து இலக்கியம் பேசுவோம். அழகியல் அழகியல் என்று அங்கே உட்கார்ந்து மூக்கடைக்கப் பேசுவதே அபத்தமாக இருக்கும்….. ‘ என்றேன்

பெருமாள்குளத்துக்கு போனோம். குளத்துக்கு அப்பால் ஒரு குன்றின் மீது சிறிய பிள்ளையார் கோவில் யானைமீது அம்பாரி போல உண்டு. அந்தபாறை ஒரு காலத்தில் முக்கியமான இடமாக இருந்திருக்க வெண்டும். அதன் அடியில் குளத்துக்குள் பாதி மூழ்கிய சில சமண சிற்பங்கள் உண்டு.

தொலைவில் டிலனாய் வெடிமருந்து தயாரித்த வெடிக்கோட்டை அல்லது மருந்துக்கோட்டை தெரிந்தது. டிலனாய் திருவிதாங்கூர் முழுக்க பல கோட்டைகளை கட்டினார். அவை எல்லாமே டச்சு பாணி கோட்டைகள். அதற்கு முன் இருந்தவை சிறிய மண் கோட்டைகள் .

‘பத்மநாபபுரம் கோட்டைக்கு ஓலைக்கூரை வேய ஓலை அளிக்கும்படி கோரி நிலப்பிரபுக்களுக்கு மன்னர் அளித்த நீட்டோலை பற்றி முதலியார் ஓலைச்சுவடிகளில் உள்ளது ‘ என்றார் பெருமாள்.

கோட்டையில் பீரங்கி எற்ற, துப்பாக்கிவீரகள் மறைந்திருந்து சுட இடங்கள் இருந்தன. ‘அப்பா இதில் எப்படி துப்பாக்கியுடன் ஏறமுடியும் ? ‘ என்றான் அஜிதன்

‘வீரர்கள் ஏறுவார்கள் ‘

‘நானும் வீரன்தான் , ஏறிக்காட்டவா ? ‘

‘சரி ‘என்றேன்

தொற்றி ஏறிவிட்டு இறக்கிவடும்படி கெஞ்சினான்.

‘நீ பாதி வீரன்தான் ‘என்று சொல்லியபடி இறக்கிவிட்டேன்

‘அந்தக்கால வீரர்கள் இறங்க மாட்டார்கள் அப்பா. அம்பு பட்டு ஆ என்று விழுவார்கள். பிரேவ் ஹார்ட் சினிமாவிலே காட்டினார்களே ‘

‘டிலனாய் திருவிதாங்கூர் ராணுவத்தை நவீனப்படுத்தியவர் ‘ என்றார் பெருமாள் ‘ அவன் முதலில் சொல்லிக் கொடுத்தது லெஃப்ட் ரைட் . அது நம் ஆட்களுக்கு பழகி வரவில்லை. ஒரு காலில் ஓலையும் மறுகாலில் சீலையும் கட்டி ‘ஓலைக்கால் சீலைக்கால் ‘என்று சொல்லிக் கொடுத்தான் .படித்துக் கொண்டார்கள் ..இன்றைக்கும் நமது வாய்மொழிமரபில் இது உள்ளது.. ‘

‘தாய்மொழிவழிக்கல்வி! ‘ என்றேன் .

பத்மநாபபுரம் அரண்மனை ஒரு சுற்றுலாத்தலம் . கேரள பாணி கட்டிடக்கலையில் சிறந்த உதாரணம் அது. கோட்டை முகப்புவழியாகவே அங்கே போக முடியும். அரண்மனையைப்பார்க்க சென்றோம்

[தொடரும்]

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்