கீதாஞ்சலி (28) எங்கே உன் பாதை ? மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்

This entry is part [part not set] of 32 in the series 20050623_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


புயல் வீசிக் கொந்தளிக்கும்
கடலில்
பயங்கர இரவு வேளையில்,
படகில் ஏறி விட்டாயா,
காதல் யாத்திரைக்கு ?
என்னரும் நண்பா!
நம்பிக்கை யற்று வான மண்டலம்
வெம்பிப் புலம்புகிறது,
இடி முழக்கி!
இன்றைய
இரவுப் பொழுதில்
உறக்கம் வாரா தெனக்கு!
கதவைப் பன்முறைத் திறந்து
காரிருளில்
தேடிப் பார்க்கிறேன்
மீண்டும் மீண்டும்,
என்னரும் நண்பா!

என் கண்களின் முன்பாக
எதுவும்
தென்பட வில்லை!
எங்கே
இருக்கிறது உன் பாதை என்று
தெரியாமல்
விந்தை யுறும் எந்தன் நெஞ்சம்!
காரிருள் நீர் ஆறாய் ஓடும்
மங்கிய கரையின்
அருகிலா உன் பாதை ?
அன்றி
அதற்கும் அப்பால்
ஆரவாரம் புரியும் கானகத்தின்
ஓரத்திலா உன் பாதை ?
மர்மமான இருள் படர்ந்த ஆழத்தின்
ஊடேயா உன் பாதை ?
எந்த வழியைத் தொடர்ந்து
உந்தன்
பயண நூற் கண்டின் கயிறு
முனை திரிக்கப்பட்டு
எனைக் காண
வருகிறாய் ?

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (June 19, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா