காலம் தோறும் பெண்கள்

This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue

முனைவர் துரை. மணிகண்டன்


விரிவுரையாளர், தமிழ்த்துறை,
தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.

உலகை உருவாக்கியவன் கடவுள் என்றால் அந்த கடவுளையே உருவாக்கியவள் தாய் என்ற பெண்தான். ‘தாயிற் சிறந்த கோயிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை’ என்று ஆன்றோர் வாக்கிற்கும், மாதா, பிதா. குரு, தெய்வம் என்ற தோணியில் தாய், மாதா என்று பெண்ணை முன்னிலைப்படுத்தி அவர்களின் சிறப்பையும் மேன்மையும் சமுதாயம் அவ்வப்பொழுது எடுத்துக்காட்டுகிறது.
பெண் என்பவள் அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, பரிவு, பாசம் என அனைத்துக் கூறுகளையும் ஒருங்கே பெற்ற முப்பட்டக கண்ணாடி போன்றவள். அவர்களின் வாழ்க்கை ஆதாரம் தொடக்க காலம் தொடங்கி இன்று நாம் வாழும் காலம் வரை அவர்களின் முன்னேற்றம், பின்னே ஏற்றமும் இறக்கமும் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்ற செய்தியை இக்கட்டுரையில் காண்போம்.
வகைப்படுத்துதல்
ஓர் இலக்கியத்தையோ அல்லது ஒரு நாட்டைப் பற்றிய வரலாற்றையோ அறிந்து கொள்ள நாம் காலத்தைப் பகுத்துப் பிரித்து அதனடிப்படையில் செய்திகளைச் சேகரித்து வெளியிடுவார்கள். அந்த வகையில் பெண்களின் வாழ்க்கை ஆதாரங்களையும், அவர்களின் செல்வாக்கையும் அறிந்து கொள்ள காலம் மிக முக்கியமாகின்றன. எனவே கால வரிசைப்படுத்தப்பட்டு நான்கு காலங்களாக பிரிக்கலாம்.
அவை,
ஆதிகாலம் (தொடக்க காலம்)
வேத காலம்
இடைக்காலம்
இக்காலம்
எனப்படும்.
ஆதிகாலம்
ப+மியில் உயிரினம் தோன்றியது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு என்று பல ஆராய்ச்சி அறிஞர்கள் கூறுகின்றனர். இதில் முதன்மையாகப் பெண் என்பவள் எவ்வாறு தோன்றியிருப்பாள் என்று பைபிள் ஒரு விளக்கம் தருகிறது. மனிதனின் (ஆணின்) விலா எலும்பில் ஒன்றை பிடிங்கி அதற்கு மனுசி (பெண்) என்று பெயர் அழைத்தனர் என்றும் இன்றிலிருந்து நீயும் நானும் ஒரே சமமானவர்கள் என்று கூறியதாக விவிலியம் கூறுகிறது.
பெண் என்பவள் இன்று மதிக்கப்படும் நிலையிலிருந்து மிக உயர்ந்த நிலையிலேயே ஆதிகாலத்தில் இருந்துள்ளனர். இக் காலத்தில் பெண் வழிச் சமூகமே தலைசிறந்து விளங்கியுள்ளது.
தொடக்க காலத்தில் சீனாவில் பெண்களே முதன்மையானவர்களாக இருந்துள்ளனர். கணவன் இறந்து 18 வயது அடையாமல் ஆண் மகன் இருந்தால் பெண்ணே ஆட்சி புரிய வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் ஒன்று இருந்துள்ளது. எனவே பெண் தான் ஆட்சி புரிந்துள்ளாள். இடைக்காலத்தில் அரசன் இறந்தவுடன் இளவயது மகன் கரிகாற் சோழன் அரச பொறுப்பை ஏற்றான் என்ற செய்தியை இதனோடு ஒப்பு நோக்கினால் பெண்களின் வளர்ச்சி வீழ்ச்சி நிலை புலப்பட்டுவிடும்.
சீனாவில் பெண்களுக்கு இருந்த நிலையெ ஆதிகாலத்தில் ய+தர்களும், அரேபியர்களும் பின்பற்றியுள்ளனர்.
தொன்மையான மொழிகளுள், மக்களுள் ஹீப்ரு இனத்தவர்களில் ஒரு பெண்ணே தலைமைத் தாங்கி நடத்திச் சென்றுள்ளாள் என்ற செய்தி அவர்களின் இலக்கியத்தின் மூலம் தெரியவருகின்றது.
ஆதிகாலத்தில் அரேபிய நாட்டில் நீதி வழங்குவதும் பெண்ணே வழங்கியுள்ளாள். பண்டைய அரேபியர்களிடையே ஏழு சான்றோர்கள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவருமே பெண்கள்தான் என்பது வியப்பாக உள்ளது.
பண்டைய எகிப்தியத்தில் தாய்வழி முறையே குடும்ப அமைப்பின் ஆதாரமாகத் திகழ்ந்துள்ளது. இங்கு சொத்துக்கள் அனைத்தும் பெண்களுக்கே உரியதாக அமைந்திருந்தன. இன்றும் சேரநாடு என்ற கேரளாவில் பெண்களுக்கே சொத்துரிமை என்பது ஒப்பு நோக்கிக் காணலாம். எனவேதான் எகிப்த், கிரேக்கத்தில் பெண்கள் தன் உடன்பிறந்த சகோதரர்களை திருமணம் செய்யும் வழக்கம் இருந்திருக்கின்றன.
தமிழ்ச் சமுதாயத்தைப் பொருத்தவரையில் பெண்கள் சுதந்திரமாக இருந்துள்ளனர். கல்வி கேள்விகளில் பெண்கள் மேன்மையற்று விளங்கியுள்ளனர். ஆதிமந்தி, ஒளவையார், பொன்முடியார் காக்கைபாடினி, காவற்பெண்டு, ஒக்கூர் மாசாத்தியார் போன்ற பெண்பாற் புலவர்கள் ஆண் புலவர்களுக்கு நிகராக பாடல்பாடி வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
இவ்வாறாக ஆதிகாலத்தில் பெண்கள்தான் முதன்மை இடம் பெற்றிருக்கின்றனர். நல்ல நிலையிலும் பெண்கள் இருந்துள்ளனர்.
வேதகாலம் (கி.மு. 2300-கி.மு. 200)
பெண்ணினத்தைச் சூறையாட வந்த சூறாவளி காலம் இந்த வேதகாலமே என்றால் மிகையாகாது. வேதகாலம் பெண்களுக்கு ஒரு துன்பக் காலம் எனலாம். இங்குதான் இதுவரை இரண்டாம் மூன்றாம் இடத்தில் இருந்த ஆண் மேலே உயர்த்தப்படுகின்றான். பெண் தெய்வமாக்கப் படுகிறாள். ‘ருக்’ வேதத்தில் ‘அதிதி, ப்ருத்வி’ என்பவர்கள் தெய்வமாக்கப் படுகின்றனர்.
இக்காலத்தில்தான் பெண்மையின் நல்லியல்புகள் சிதைக்கப்படுகின்றன. சகோதரி, அன்னை என்ற உறவு நிலையில் பிரிக்கப்பட்டனர் என்று ‘மாக்ஸ் முல்லர்’ குறிப்பிடுகிறார்.
பெண்கள் கோலொச்சிய நிலை மனுநீதியும், கௌடில்யரின் பொருளியல் நூலும் தோன்றிய பின்னர் பெரும் அளவில் மாற்றம் உருவாகியது. நிலவுடைமை ஆதிக்க உணர்வால் தம் உடைமையான பெண்கள் வேறோர் இனத்தைப் பெருக்கி விடக்கூடாது என்ற நோக்கில் குழந்தை மணம், உடன்கட்டை ஏறுதல், விதவை, மறுமண மறுப்பு, கைம்மைக் கோலம் போன்றவை வழக்கில் இடம் பெறலாயின. ஆணுக்குச் சமயம் சார்ந்த சிறப்புகள் உருவாக்கப்படுகின்றன. மகள், மனைவி, தாய் என்ற ஒவ்வொரு நிலையிலும் பெண் ஆணைச் சார்ந்து நிற்கும் நிலை இக்காலத்தில்தான் வழக்கில் வருகிறது. பொது வாழ்விலிருந்து பெண்கள் அறவே ஒதுக்கப்படுகின்றனர். இவ்வாறு பெண் இனம் தமது உரிமையை மெல்ல மெல்ல இழக்கத் தொடங்கி ஆண் இனம் மேன்மையுறுகிறது.
ஆரியர்கள் போரில் வெற்றி பெற்றுவிட்டால் அவர்கள் பக்கம் பெண்கள் அனைவரும் சென்று விடவேண்டும். அவ்வாறு வந்தவர்களை ‘வதுக்கள்’ என்று அழைத்தனர். வதுக்களுக்கு ஆண் குழந்தைப்; பிறந்தால் ஆரியர் மனைவிக்கு நிகராக அவர்கள் நடத்தப்பட்டார்கள். இங்குதான் ஆணாதிக்க சமுதாயம் தலை தூக்குகிறது. மனுநீதியில் பெண்கள் ஆண்களுக்கு வாழ்நாள் முழுவதும் அடங்கியே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது.
சித்தர்கள் பாடல்களிலும் பெண்களை வெறுத்து ஒதுக்கியுள்ளனர். பெண்கள் ஒரு போகப் பொருள் என்றும், பெண்ணை நம்பியவர்கள் முட்டாள்கள் எனவும், சதைப்பிண்டம் என்றும் ஒரு சில இடங்களில் பதிவு செய்துள்ளனர். ஆனால் பெண்ணின் பெருமைகளையும் இச்சித்தர் பாடல்களில் காணமுடிகின்றது.
‘‘ஐயிரண்டு திங்களால் அங்கபெலா நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்யவிரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தத்தாளை
எப்பிறப்பிற் காண்பேன் இனி”
என்று தாயின் உன்னத தன்மையையும் எடுத்தியம்புகிறது.
பெண்கள் கோலொச்சிய காலம் சென்று வேதகாலத்தில் பெண்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர். அவர்களின் உரிமைகள் இங்குதான் ஒவ்வொன்றாய் கழற்றப்படுகின்றன.
இடைக்காலம் கி.மு. 200-கி.பி 15
வேதகாலத்தில் இருந்த பெண்ணடிமைத்தனம் சற்று குறைவாக இருந்தாலும் இடைக்காலத்தில் அது மரமாக வளர்ந்து நின்றது. பெண்ணடிமைக்குப் புது விளக்கம் தரப்பட்டது. இங்குதான் கற்பு என்ற கண்ணுக்குத் தெரியாத ஒரு நோய் பெண்ணினத்தை விழுங்கியது. இஃது ஆனால் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட ஏமாற்று நாவல்கனி என்பது பின்புதான் தெரியவந்தது.
ஆண் என்பவன் உயர்ந்தவனாகவும், பெண் என்பவளை அடக்க முயன்றவனாக வெளிவருகின்றான். அதன் பயனாகப் பெண்ணுக்குப் கொடுக்கப்பட்ட பரிசுதான் ‘கற்பு’ என்பதாகும். இது பெண்ணுக்கும் பெண்ணினத்திற்குமே கொடுக்கப்பட்டது. ஆணுக்கு இவ்விதி தளர்த்தப்பட்டது. எனவேதான் ஒரு கவிஞன்
நாங்கள்
மன்மத அச்சகத்தின்
மலிவுப் பதிப்புகள்
கற்பு சிறையை
உடைப்பதால்
கைது செய்யப்படுகிறோம் என்றார். (நா. காமராசன், கவிதைத்தொகுதி)
சதிகள்
சதிகள் என்ற உடன்கட்டை ஏறுதல் என்ற பழக்கம் ஆண் வர்க்கத்தின் மற்றொரு ஆயுதமாகக் கொண்டு வந்தனர். கணவன் இறந்தால் மனைவி தீயில் இறங்கி உயிர்விட வேண்டும். கணவன் மனைவி மீது சந்தேகப்பட்டால் தீயில் இறங்கி உயிரோடு வரவேண்டும் (சீதை) என்ற கொள்கை பெண்களுக்கெதிராக நடைமுறைக்கு வந்தது.
உடன்கட்டை ஏறுவதற்குத் தக்க கட்டுக்கதைகளையும், கட்டி வைத்திருந்தனர்.
தீ புகுந்தால் அருந்ததிக்கு நிகரானவள்
3½ கோடி ஆண்டுகள் அவளுக்கும் அவள் கணவனுக்கும் சொர்க்கம் கிட்டும்.
கணவனின் கொடிய பாவம் களையப்படும்
என்று மூன்று தத்துவக் கருத்துக்களையும் முன்வைத்தது அறிவார்ந்த ஆண் வர்க்கம் ஏற்றுக்கொண்டது இடைக்காலத்தில் ஆற்றல் இல்லாத பெண் வர்க்கம்.
மேலும், கணவனுடன் உடன்கட்டை ஏறி உயிர்விட்டால் மூன்று தலைமுறை பாவங்கள், கழுவப்பட்டுவிடும். தன் தாய்வழி, தந்தை வழி, புகுந்த வீட்டுவழி என்ற மூன்று மரபு பரம்பரையும் இந்நிகழ்வால் தூய்மையடைவர் என்ற வேற்று நாட்;டில் கணவன் இருந்தால், இறந்தால் அவனது செருப்பை நெஞ்சில் வைத்துக்கொண்டு சதியில் இறங்க வேண்டும் என்ற நிலையும் இக்காலத்தில் இருந்துள்ளது. பெண் கல்வி அறவே ஒதுக்கப்பட்டது என்ற போக்கைக் கருத்தை விதைத்திருந்தனர்.
இக்காலக்கட்டத்தில்தான் பெண்ணுக்குப் பொருள் கொடுத்துத் திருமணம் நடத்தி வைக்கும் பழக்கம் தோன்றியுள்ளது. இது ‘வரதட்சணை’ என்ற பெயரில் இன்னும் எத்தனையோ அப்பாவி குடும்பங்களைப் புதைகுழியில் தள்ளுகின்றன. இதனை புது கவிஞன்
“அக்கா
புதுவீடு புகுந்தால்
நாங்கள்
வாடகை வீடு புகுந்தோம்”
என்று வரதட்சணையைக் குறியீடாக விளக்குகிறான்.
தேவர்களுக்குத் தொண்டு செய்தவர்கள் பின்னாளில் வேறுபெயர்களில் அழைக்கப்பட்டனர். அறிவுள்ள ஆண் வர்க்கத்தினரால் இதுவும் இடைக் காலத்தில் தோன்றிய பெண்ணின் ஒட்டுண்ணிதான்.
நீ
உன்னை விற்றால்
அது விபச்சாரம்
நாம்
எங்களை விற்றால்
அது திருமணம்
என்று கவிஞன் இதற்கும் விளக்கம் தருகின்றான்.
இவ்வாறு இடைக்காலத்தில் பெண்களுக்குச் சொல்ல முடியாத இன்னல்களை ஏற்படுத்தினர். கல்வியறிவு மறுக்கப்பட்டன. பொது இடங்களில் பெண்கள் பேசுவது கூடாது. ‘கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்’ என்ற தத்துவம் பறைசாற்றப்பட்டது. மேலும் கணவன் சொல்படி மனைவி நடக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த காலம் இதனைப் பெண்களின் இருண்ட காலம் என்றே அழைக்கலாம்.
இக்காலம் கி.பி. 16-இன்று வரை
இடைக்காலத்தில் முடங்கிக் கிடந்த பெண் சமுதாயம் இக்காலத்தில் முற்றிலும் பீனிக்ஸ் பறவைபோல மேலேழுந்தன.
என்று சமையலறையில்
கடுகும் வெந்தயமும்
வெடிக்க ஆரம்பித்ததோ
அன்றே வெடிக்க ஆரம்பித்தவள்
பெண்ணினம்
என்றால் அஃது உண்மையே.
உடன்கட்டை ஏறுதலை ராஜராம் மோகன்ராய் தடைசெய்து சட்டம் கொண்டு வந்தார். அதனை நடைமுறைப்படுத்தியும் காண்பித்தார்.
பெண்களுக்கெனவும் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பல பெண்கள், ஆண்கள் இக்காலகட்டங்களில் முன்வந்தனர். இவர்களில் இலண்டன். மாநகரில் பிறந்து ஆங்கில இலக்கியக் களத்தில் வீறுடன் எழுந்து நின்ற மேரி உல்ஸ்டன் கிராப்ட் எனும் பெண்மணி ஆவார். (1759-1797) இவரையே பெண்ணுரிமை பேரிகை என அழைத்தனர்.
பெண்ணுரிமை மாநாடுகள்
பெண்களின் உரிமைகளையும், அவர்களின் சுதந்திரத்தையும் பெற வேண்டுமானால் அவர்களுக்குக்கென்று ஓர் இயக்கம் தோன்ற வேண்டும் என்று எண்ணி தோற்றுவித்தார். இதனைத் தொடர்ந்து இவர் மறைவிற்குப் பிறகு ஒரு நூற்றாண்டுக்குப் பின்புதான் 1909-ல் அமெரிக்காவில் பிப்ரவரி 28-ஆம் நாள் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.
1911-மார்ச் 19- ஜெர்மனி, ஆஸ்டிரியா, டென்மார்க் போன்ற நாடுகளில் பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. 1920-இரண்டாம் உலகப்போருக்குப் பின்புதான் பல நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.
ஐ.நா.வின் மனித உரிமைப் பிரகடனம் டிசம்பர் 10, 1948ல் பெண்களுக்கான உரிமையும் இடம் பெற்றிருந்தன. இதன் தொடர்ச்சியாக பெண்கள் மாநாடுகளும் நடத்தப்பட்டன.
மெக்ஸிக்கோவில் 1975-ல் முதல் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இரண்டாவதாக 1980-ல் டென்மார்க்கிலும், மூன்றாவதாக 1985-ல் நைரோபியாவிலும், நான்காவதாக 1995-ல் பீஜிங்கிலும் நடைபெற்றது.
இதன் மூலம் பெண்கள் தங்களது பல உரிமைகளையும், சுதந்திரத்தையும் பெற்றனர். கல்வியறிவில் முதன்மை, பணிகளில் முன்னேற்றம் அயல்நாட்டுக் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்களைவிட பெண்களுக்கு அறிவு, புத்திக்கூர்மை அதிகம் என யுகோஸ்லிவியா பல்கலைக்கழக ஆய்வு வெளியிட்டுள்ளது.
பெண் எழுத்தாளர்கள்
இன்று அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகர பெண்கள் திறம்பட பணிமேற்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் எழுத்தாளர்களும் சரிசமமாக இருக்கின்றனர். தமிழ் பெண் எழுத்தாளர்களில் திருமதி. வை.மு. கோதைநாயகி, திருமதி. இராஜம் கிருஷ்ணன், திருமதி.குகப்பிரியா, குமுதினி, கி.சாவித்திரி அம்மாள், கொரி அம்பாள், வசுமதி ராமசாமி, கு.ப. சேது அம்மாள், அனுத்தமா, ஹெப்சிபா ஜேசுதாசன், சூடாமணி, கே. ஜெயலஷ்மி, கோமகள், கஸ்தூரி பஞ்சு, கிருத்திகா, விமலாரமணி, ஜோதிர்லதா கிரிஜா, கமலா சடகோபன், வாஸந்தி, சிவசங்கரி, இந்துமதி, அனுராதா ரமணன், லட்சுமி போன்றோர்கள் புதின இலக்கிய ஆசிரியைகள்.
திருமதி. ரொக்கையா மாலிக் (சல்மா) வைகைச் செல்வி, மும்பை புதிய மாதவி, திலகபாமா, குட்டி ரேவதி, தமிழச்சி தங்க பாண்டியன், சுகிர்தராணி, கனிமொழி கருணாநிதி, தாமரை, ரஞ்சனி போன்ற தமிழ் பெண் கவிஞர்களும் இன்று ஆண்களுக்குச் சமமாக எழுதும் பெண் எழுத்தாளர்கள் இருந்தும் எழுதியும் கொண்டிருக்கின்றனர்.
எனவே இக்காலத்தில்தான் பெண்களின் அறிவு, செயல்பாடு உலக அளவில் ஓங்கியுள்ளன. உலக அரங்கில் பேசப்படுகின்றன எழுத்தாளர்களில் ஜே.கே. ரௌலிங், தஸ்லீமா நஸ்ரீன் போன்றோர் எழுதும் காலம் இக்காலம் ஆகும்.
மாற்றம் ஒற்றே மாறாதது என்ற கருத்துக்கு ஒப்ப பெண்கள் தொடக்கக் காலங்களில் இருந்த செல்வாக்கை வேதகாலத்தில் தொலைத்தார்கள். இடைக்காலத்தில் மறந்தார்கள் இக்காலத்தில் பழைய நிலையைவிட புதிய அசுர வளர்ச்சிப் பெற்று முன்னேறியுள்ளனர். இது காலந்தோறும் நடந்த அரசியல், சமயம், சமுதாய மாற்றத்தினால் நிகழ்ந்த நிகழ்வுகளே என்பது உண்மை. இனி பெண் சமுகம் முன்னேறிய பாதையில் செல்லும் என்பது தின்னம்.


பயன்பட்ட நூல்கள்
சங்க இலக்கியத்தில் பொதுமக்கள், கு.இராசரெத்தினம், குகன் பதிப்பகம், மன்னார்குடி, 2004.
இலக்கியத்தில் மனித உரிமைகள், இராஜமுத்திருளாண்டி, சூர்யா பதிப்பகம், திருச்சி. 2000.
மனித உரிமைகள், திருமதி. சிவகாமி பரமசிவம், ஸ்ரீராம் பணினி வெளியீடு, சேலம், 2000.
பெண்ணியம், சு. சண்முகசுந்தரம், காவ்யா வெளியீடு, பெங்களுர், 1994.
மாறிவரும் மங்கையர் உலகம், இரகுபதி சாமிநாதன், தமிழ்த்துறை வெளியீடு, மதுரை, 1981.
இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை, ராஜம் கிருஷ்ணன், தாகம் வெளியீடு, சென்னை, 2000.
பெண்ணியம், ராஜம் கிருஷ்ணன், தாகம் வெளியீடு, சென்னை, 2000.
இராஜம் கிருஷ்ணன் புதினங்களில் மனித உரிமைச் சிந்தனைகள், முனைவர். துரை.மணிகண்டன், நல்நிலம் பதிப்பகம், சென்னை, 2008.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர், மனித உரிமைகள் மையம், ஜெனிவா வெளியீடு, 1996.
Women’s Rights, M.J. Antony, Hind Pocket Books, 1996.
Thoughts of the Education of Daughters, Mary Woolston Karpeet, 1787.
Women and Social change in India, Jana Maltson Everett, Heritage Publishers, New Delhi, 1979.

இணையதளம்

1. www.thinnai.com
2. www.pathivugal.com


mkduraimani@gmail.com

Series Navigation