காலச்சுவடு மலர் – ஒரு சுயமதிப்பீடு

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

சுந்தர ராமசாமி


காலச்சுவடில் வெளிவந்துள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை பதினைந்து. இவைகளில் இ . அண்ணாமலை, என் . பி . ராமானுஜம், ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன், க. பூரணச் சந்திரன், எம். ஏ. நுஃமான், ஜி. ஆர். பாலகிருஷ்ணன், ஹெப்சிபா ஜேசுதாசன் எல்லோருமே கல்வித் துறையைச் சார்ந்தவர்கள். இதில் மூன்று பேர் ஆங்கில ஆசிரியர்கள். ஐந்து பேர் தமிழாசிரியர்கள். இன்று தமிழகத்தில் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. நுஃமானைப் போன்ற புதுமையான படைப்புக்களிலும் புதுமையான சிந்தனைகளிலும் ஆர்வம் கொண்ட தமிழ்க் கலாச்சாரத்தின் தாழ்வை விமர்சிக்கிற தமிழாசிரியர்களைக் கால் நூற்றாண்டுகளுக்கு முன்னால் பார்த்திருக்க முடியாது.

1950 ஆரம்பத்தில் ரகுநாதனுடன் கைலாசபதியைப் போய்ப் பார்த்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆச்சரியத்திற்குக் காரணம் கைலாசபதி நாவல்களைப் பற்றிப் பேசியவை. புதுமைப்பித்தனைப் பற்றியும் அகிலனைப் பற்றியும், ஜானகிராமனைப் பற்றியும் பேசியது. தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றிப் பேசியது. தமிழாசிரியர் ஒருவர் நவீன இலக்கியத்தைப் பற்றி பேசியது அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது. அத்துடன் கைலாசபதி அகிலனைப் பற்றிக் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அகிலனின் படைப்புக்கள் சார்ந்த கனவுகள் மீது மிகுந்த கோபம் கொண்ட இளைஞனாக இருந்த எனக்கு கைலாசபதியின் பேச்சு மிகுந்த ஆசுவாசத்தைத் தந்தது. அவரை ஒத்த தமிழாசிரியர் ஒருவர் அப்போது தமிழில் இருக்கவில்லை.

அதன் பின் ஒரு சில வருடங்களுக்குப் பின் க. நா. சு. உடன் சி. கனகசபாபதியைப் போய்ப் பார்த்தேன். அப்போதுதான் புதுக்கவிதைகள் வளர்ந்து கொண்டு வந்தது. கனகசபாபதி புதுக் கவிதைகளை வரவேற்றுப் பேசினார். இது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தைத் தந்தது. என்னை விடவும் அதிக அளவில் ஆச்சரியப்பட்டார் க. நா. சு. அதன் பின் சி. கனகசபாபதிக்கும் எழுத்து பத்திரிகைக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதன் மூலம் எழுத்து பத்திரிகையில் கனகசபாபதி புதிய இலக்கியங்களை வரவேற்றுப் பரிசீலனை செய்தும் நிறைய கட்டுரைகள் எழுதினார். அவரைப் பின்பற்றி வேறு தமிழாசிரியர்கள் எழுத்து வில் எழுத முன்வரவில்லை.

கைலாசபதியின் பாதிப்பினாலும் சி.கனகசபாபதியின் பாதிப்பினாலும் தமிழாசிரியர்களின் கவனம் நவீன இலக்கியத்தின்பால் திரும்பியது. மு.வ.வும் பொதுவாக தமிழில் நவீன படைப்புக்களை வரவேற்பவராக இருந்தார். அத்துடன் அவர் நாவல் எழுத ஆரம்பித்ததும் அவருடைய நாவல்கள் தமிழ் வாசகர்களால் வரவேற்கப்பட்டதும் மிக முக்கியமான விஷயங்கள். தமிழ்ப் புலவர்கள் புதுமை இலக்கியங்களை அதற்கு முன்னும் முற்றாகச் செய்து பார்க்கவில்லை என்று சொல்ல முடியவில்லை. மறைமலையடிகள் நாவல் எழுதியிருக்கிறார். எஸ். வையாபுரிப்பிள்ளை நாவல் எழுதியிருக்கிறார். ஆனால் இவர்களுடைய படைப்பு இலக்கியங்கள் தமிழ் வாசகர்களின் கவனத்தைப் பெறவில்லை. படைப்பிலக்கியம் தமிழ் வாசகர்களுக்கு அன்னியப்பட்டது அல்ல என்ற எண்ணத்தை மு.வ. தமிழ் ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதேபோல் நவீன இலக்கியத்தில் விமர்சனமும் தமிழாசிரியர்களுக்கு சாத்தியமற்றதல்ல என்று நினைக்க வேண்டியது இல்லை என்பதை கைலாசபதியும் கனகசபாபதியும் ஏற்படுத்தியிருக்க வேண்டும். புதுமை இலக்கியம் பற்றி இன்று சிந்திக்கும் தமிழ் ஆசிரியர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவிட்டது. இவர்களில் ஒரு பகுதி மோஸ்தர் கருதி சிந்திப்பவர்களாக இருக்கிறார்கள். சிலர் பாவனைகள் கொண்டிருந்தாலும் உண்மையாகச் சிந்திப்பவர்களும் உள்ளனர். இவர்களுடைய சிந்தனை பற்றி காலச்சுவடு மிக அதிகளவு கவனம் எடுத்துக்கொண்டது.

கட்டுரையாளர்களிலும் மதிப்புரைகளிலும், வேதசகாயகுமார், ரவீந்திரன், ராஜ மார்த்தாண்டன் அ. கா. பெருமாள் ஆகியோர் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள். இவர்கள் எல்லோருமே வளர்ந்துவரும் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். ஆக, அத்துடன் இவர்கள் எல்லோருக்குமே பொதுவான குணம் தமிழில் நிலவும் கலாச்சாரப் போக்கை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவர்கள் என்பதுதான்.

தமிழாசிரியர்களையும் சரி எழுத்தாளர்களையும் சரி, இரண்டு விதமாகப் பிரித்து விடலாம். ஒன்று தமிழ்ச் சூழலில் இருக்கும் அவலத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடியவர்களின் பிரிவு. இரண்டாவது இந்த அவலத்திற்கு எதிராக ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு முனையில் தங்களால் இயன்ற அளவு போராடி வருகின்றவர்களின் பிரிவு. இந்த இரண்டாவது வகையைச் சார்ந்த தமிழாசிரியர்களைக் காலச்சுவடு கவனித்துக் கொண்டு வருமளவுக்குத் தமிழில் சிறுபத்திரிகைகளும் கவனிக்கின்றன. பேராசிரியர் லூர்து அல்லது பேராசிரியர் நாச்சிமுத்து போன்றோர் நிறுவன ஊழலுக்கு எதிராகப் பேசும்போது காலச்சுவடு அதை கவனித்துப் பதிவு செய்திருக்கிறது. பழமையில் இருந்து விடுதலை பெற்று புதுமையான படைப்புக்களிலும் புதுமையான சிந்தனைகளிலும் தமிழாசிரியர்களுக்கு ஆர்வம் ஏற்படும் பொழுது அந்த ஆர்வம் மாணவர்களைத் தொற்றிக் கொள்ளும் என காலச்சுவடு நம்புகிறது. ஒரு சில தமிழாசிரியர்கள் புதுமையான சிந்தனைகளில் ஆர்வம் கொண்டிருந்தவர்கள், புதுமையான படைப்புக்களில் ஆர்வம் கொண்டிருந்தவர்கள் முக்கியமாக திருவனந்தபுரத்தில் பேராசிரியர் ஜேசுதாசன் போன்றவர்கள் மூலம் புதுமையிலும் காலத்தைச் சேர்ந்த சிந்தனைகளிலும் நம்பிக்கை கொண்ட மாணவர்களை உருவாக்க முயன்றதும் ஆக தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் உலகத்தில் மாற்ற முயன்றால் தமிழ் நாட்டுக் கலாச்சாரத் தளத்தையே மாற்ற ஒரு வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறான மனப்பதிவை இவர்கள் கொண்டிருப்பதால் இவர்களுடைய எழுத்து ஒவ்வொரு பக்கத்திலும் மிக உயர்வாகத்தான் அமையும் என்பதற்கான உத்தரவாதம் ஒன்றும் இல்லை. பல காரணங்களை ஒட்டி இந்தக் கட்டுரைகள் மிக உயர்வாக இல்லாமல் சாதாரணமாகவோ அல்லது தரமற்றவையாகவோ அமைந்து இருக்கலாம்.

நான் காலச்சுவ டில் வெளியிட்டிருக்கும் கட்டுரைகள் எல்லாமே தமிழ்நாட்டில் நேற்று வந்து கொண்டிருந்த இன்று வந்து கொண்டிருக்கிற எல்லா சிற்றிதழ்களிலுமே வெளியாகக் கூடியவைதான். சிற்றிதழ் மொழிக்கு முரண்பட்ட கட்டுரை என்ற தோற்றத்தை ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களுடைய கட்டுரை தரலாம். தமிழில் ஒரு சிற்றிதழ் அவர்களுடைய கட்டுரையை வெளியிடாமல் இருக்கலாம். பாரதிதாசனைப் பற்றிய விமர்சனக் கருத்துக்கள் அடங்கிய ஒரு கட்டுரைதான் அது. ஆனால் அவர்கள் சொல்லுகிற முறை சிற்றிதழ் மரபைச் சாராத அந்த முறை அவருடைய கருத்துக்களைப் பலகீனமாகக் காட்சியளிக்க வைத்துவிடுகிறது. தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்களில் ஒரு பொது மொழி உருவாகி வந்துள்ளது. மாதவய்யா நடத்திக் கொண்டிருந்த பஞ்சாமிர்த த்திலிருந்து தொடர்ந்து பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தரத்தை முன்னிறுத்தும் பத்திரிகைகளின் போக்கு அது. மதிப்பீடுகளையும் இலட்சியத்தையும் முன் வைக்கும் போக்கு. உலகச் சிந்தனை களத்திற்கும், உலகப் படைப்புத் தரத்திற்கும், தமிழின் கலாச்சாரத் தளத்திற்கும் ஆன இடைவெளி, நூற்றாண்டுகள் கொண்ட இடைவெளி குறைய வேண்டுமென்ற நம்பிக்கை கொண்ட பத்திரிகைகள் தமிழில் நூறு வருடங்களாக வந்து கொண்டிருக்கின்றன. அந்தப் பத்திரிகைகளின் பொதுத்தரம் என்ன ? அந்தத் தரத்தோடு காலச்சுவ டின் தரம் எந்த அளவிற்கு மாறுபட்டுள்ளது ? தமிழில் இதுவரையிலும் உருவாகி வந்திருக்கும் சிறு பத்திரிகைகள் உருவாக்கியுள்ள ஆகச் சிறப்பான தரம் என்ன ? எந்தப் பத்திரிக்கை அதைத் தரும் ? அந்தப் பத்திரிகை எந்தக் கதை, எந்தக் கவிதைகள், எந்தக் கட்டுரைகள் ஆகியவற்றை வெளியிட்டு அதுபோன்ற ஒரு ஆகக் கூடிய தரத்தை நிறுவும் ? அவ்வாறு நிறுவப்பட்டுள்ள தரத்தோடு காலச்சுவ டை ஒப்பிடும்பொழுது அந்தத் தரத்தை விடவும் அது தாழ்ந்து நிற்கலாம். அந்தத் தரத்தை அனுசரித்து மேல் எடுத்துச் செல்ல முடியவில்லை என்றாலும் அது தாழாமலும் இருந்திருக்கலாம். அல்லது மேலெடுத்துச் சென்றும் இருக்கலாம். அல்லது மேலெடுத்துச் செல்ல முயன்றிருக்கலாம். ஆக தமிழ் பின்னணியில் இந்த உண்மைச் சார்ந்து காலச்சுவடு மீது ஒரு விமர்சனம் வைக்கப்படும் என்றால் அது பொருட்படுத்தப்பட வேண்டிய ஒரு விமர்சனம். காலச்சுவடு ஆசிரியருக்கு அந்த விமர்சனத்தைப் பொறுமையாகக் கேட்கும் மனப்பக்குவமும் புரிந்து கொள்வதற்கான அறிவும் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அது போன்ற ஒரு விமர்சனம் முன்வைக்கப்பட்டால் இன்று வந்து கொண்டிருக்கும் மற்றொரு பத்திரிகைக்கு, நாளை வரவிருக்கும் பத்திரிக்கைக்கு அது பயன்பட்டிருக்கும்.

காலச்சுவடை நிராகரிப்பதற்காகவோ தூற்றுவதற்காகவோ, போற்றுவதற்காகவோ தமிழ்ப் பின்னணியில் இல்லாத ஒரு கற்பனை உலையிலிருந்து கற்பனை அளவுகோலை உருவாக்கக்கூடாது என்று நான் கேட்டுக் கொள்கிறேன். யாருக்கேனும் தமிழ்ப் பின்னணியில் ஆகப் பெரிய சிந்தனையோடு, ஆகப் பெரிய சாதனையோடு காலச்சுவ டைப் பட்டவர்த்தனமாக மன ஆரோக்கியத்துடன் விமர்சிக்கத் தெம்பு இருக்குமென்றால் தன்னுடைய சாதகமான விமர்சனத்தையோ அல்லது எதிர்மறையான விமர்சனத்தையோ தமிழில் இன்று வரை நிகழ்ந்துள்ள சாதனைகளோடு காலச்சுவ டை ஒப்பிட்டுப் பேசும் போது உலகச் சிற்றிதழின் தரத்தைவிட காலச்சுவ டின் தரம் எந்தளவுக்குப் பின் தங்கி கிடக்கிறது என்பதைச் சொல்லலாம். தமிழ் சிற்றிதழ் சாதனைகளோடு ஒப்பிட்டுப் பேச யாருக்கு மன ஆரோக்கியம் இருக்கிறதோ, யாருக்கு நடுநிலைமைப் பார்வை இருக்கிறதோ, தமிழின் இன்றைய சாதனைகளை நிராகரிப்பதன் மூலம்தான் தன்னிருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்ற கோணல் தோன்றாமல் இருக்கிறதோ, அந்த நடுநிலையால் உலகத் தரத்தோடு ஒப்பிட்டு காலச்சுவ டின் தாழ்வைச் சொல்லலாம்.

பண்பாடு சம்பந்தமாக தமிழன் பெருங்குழப்பத்தில் இருக்கிறான். தங்களைப் பற்றியும் அந்நிய தேசத்தில் வாழும் மக்களைப் பற்றியும் கற்பனை ரீதியான எண்ணங்கள் அவனை அலைக்கழித்துக் கொண்டன. அரசியல்வாதி மேடையில் கொக்கரிப்பது முக்கியமல்ல. வேஷம் போடுகிறவன் பேசுகிற வசனங்களும் முக்கியமானவை அல்ல. தமிழன் ஒன்றாகக் கூடும்போது அவன் இங்கிதங்களை வெளிப்படுத்தக் கூடியவன். அவ்வாறு அவன் பேசும்போது ஜாதியைத் தாண்டி அவன் வந்து பல்லாயிரக்கணக்கான வருடங்கள் ஆகிவிட்டன என்று தோன்றக்கூடும். தன்னிடம் வண்டி வண்டியாகக் கிடைக்கும் மலினங்களுக்கு எதிராளி உருவம் கொடுக்கும் பொழுது அதற்கெதிராகச் சாடத் தொடங்குவான். தமிழன் மிகப்பெரிய நாகரிகத்தைக் கொண்டவன் என்று சொல்லலாம். ஆனால் அவனுடைய இன்றையத் தாழ்வும் முக்கியமானது. அச்சுக்கு வந்துவிட்ட எழுத்தும் மேடைக்கு வந்துவிட்ட பேச்சும் நாம் போடும் வேஷங்களைக் காட்டுகின்றன. சகல சமூக பலவீனங்களையும் தாண்டி மேலே சென்று விட்டோம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சாதாரண மக்களின் விமர்சனம் பிற்போக்கானது. எனக்கு யதார்த்தத் தளத்தின் மீது நடக்கும் எல்லாமே முக்கியமானவை. அங்கு நிகழ்பவற்றை ஆராயும் போது நமக்கு உண்மை என்று படுபவை எல்லாம் முற்போக்கானதுதான். உண்மையில் பண்பாட்டை நாம் விற்க முடியாது. பிறருடைய பார்வையில் நாம் கவனம் பெற பண்பாட்டுக் கூறுகள் மட்டுமே போதாது.

பண்பாட்டின் இந்தச் சாதனைகள் தமிழில் மிகக் குறைவாக இருக்கின்றன. எனவே நாகரிகம் உயர்வானது அல்லது தாழ்வானது என்று கூறலாம். எல்லாப் பண்பாடுகளுக்கும் பொதுவான அடிப்படையான கூறு வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வது. தமிழ்பண்பாடு, கட்டடக்கலை, நுண்கலைகள், நீர்ப்பாசனம், கடல் கடந்த வணிகம் முதலியவற்றில் முன் காலத்தில் படைத்த சாதனைகளை தமிழ் நாகரிகம் எனலாம். தமிழில் இலக்கியம் இருக்கிறது. இலக்கணம் இருக்கிறது. தத்துவ ஊடாடல்கள் இருக்கின்றன. இன்றைய தமிழ்ப் பண்பாட்டில் தமிழ் மொழியின் சாதனை என்ன என்ற கேள்விக்கு விடையில்லை. இதுகாறும் செய்திருப்பவை ஆங்கிலப் பண்பாட்டின் சாதனைகளின் நிழல்கள்தான். போற்றுவது ஒன்று. பின்பற்றுவது வேறொன்று. போற்றுவது தமிழ்ப் பற்று. பின்பற்றுவது ஆங்கிலம் சார்ந்த கனவுகள். இந்த இரட்டை நடத்தையால் கலை, அறிவியல், இலக்கியம் ஆகிய எல்லாத் துறைகளிலும் படைப்பாற்றல் முழு மலர்ச்சி அடையவில்லை.

நுஃமான் எழுதியுள்ள ?தோப்பில் முகமது மீரான் ? என்ற கட்டுரையைக் கவனிப்போம். மீரானின் ‘கடலோர கிராமத்துக் கதை ‘ என்ற நாவல் ஒரு விசேஷமான கவனத்தைப் பெற்ற பின்பு அதைப்பற்றி பல மதிப்புரைகளும் வந்திருக்கின்றன. இந்த மதிப்புரைகளை எத்தனை வாசகர்கள் கூர்மையாகப் படித்தார்கள் என்பதே தெரியவில்லை. படித்திருந்தால் ஒரு குறிப்பிட்ட கருத்து எல்லோராலும் வற்புறுத்தப்படுவது தெரிய வந்திருக்கும். விமர்சனத்தில் ஈடுபாடு காட்டும் தமிழ் ஆசிரியர்களும் இந்தக் கருத்தை முன்வைக்கிறார்கள். முற்போக்கு எழுத்தாளரான மார்க்சியவாதியும் இந்தக் கருத்தை வைக்கிறார். இந்தக் கருத்துக்களை நாம் தொகுத்தால் அதற்கு இரண்டு மையங்கள் இருக்கின்றன. ஒரு புதிய களம், ஒரு புதிய வாழ்க்கை முறை இவற்றை அவர் காட்டுவதுதான் மிக முக்கியமான விஷயம் என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்தப்படுகிறது. படிப்பாளிகள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், மார்க்சிய இயக்கங்கள் சார்ந்த விமர்சகர்கள் எல்லோரும் இக் கருத்துக்களை வற்புறுத்தும் போது இலக்கிய மாணவர்களும் வாசகர்களும் இக் கருத்துக்களையே பிரதிபலிக்கக்கூடிய சூழல் உருவாகிறது. இன்று இக்கருத்துக்கள் ஒரு தனிப்பட்ட விமர்சனக் கருத்துக்களாக இல்லாமல் தமிழ்ச் சூழலின் கருத்துக்களாகவே இருக்கின்றன. நுஃமானும் ஒரு ஆசிரியர்தான். அவரும் மார்க்சியவாதிதான். இலக்கியம் சமூக வாழ்க்கையைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர்தான். சமூக மாற்றங்களை நிகழ்த்தும் இயங்கியல் விதிகளை இலக்கியப் படைப்புகள், விமர்சனங்கள் துரிதப்படுத்தும் என்றால் அது வரவேற்கத் தக்கது என்ற எண்ணம் கொண்டவர்தான்.

ஒரு புதிய களத்தின் புதிய வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்துவதால் மட்டும் ஒரு நாவல் முக்கியத்துவம் பெற்றுவிடுவதில்லை. ஒரு படைப்பைப் பொறுத்தவரை உண்மையில் இவை இரண்டாம் பட்சமானவைதான். ஒரு படைப்பில் அடிப்படையான வெற்றி அது வாழ்க்கையை அணுகும் முறையிலும் அது காட்டும் வாழ்க்கை தரிசனத்திலும் அடங்கி உள்ளது. இத் தரிசனம் குறிப்பாக அப் படைப்பைச் சித்தரிக்கும் வாழ்க்கையைப் பற்றியதாக மட்டுமன்றி பொதுவாக மனித வாழ்க்கை முழுமையையும் தழுவி அமைகிறது. அவ்வகையில் ஒவ்வொரு சிறந்த படைப்புக்கும் ஓர் இரட்டைத்தன்மை இருக்கிறது எனலாம். அதாவது அப் படைப்பின் சித்தரிப்பு; சூழலின் ஒரு உண்மையான படிமத்தைத் தருவது. மற்றது ஒரு பொதுவான தன்மை; அதாவது ஒரு முழு மனித வாழ்வுக்கும் ஒரு பொதுக் குறியீடாக அமைய வேண்டும்.

ஒவ்வொரு சிறந்த நாவலாசிரியருக்கும் அவரது படைப்பு ஒரு சன்னலாக அமைகிறது. அவன் தன் படைப்பில் சித்தரிக்கின்ற அவன் காலம், சமூகம் என்னும் சன்னல் ஊடாக வெளியுலகம் முழுவதையும் பார்க்கிறான். முழு வாழ்க்கையையும் தரிசிக்கிறான். ஒரு பண்பட்ட வாசகனுக்கும் இந்தப் படைப்பு ஒரு சன்னலாகவே அமைகிறது. அதனூடே அவன் முழு வாழ்க்கையையும் காண்கிறான். வாழ்வு பற்றிய ஒரு தரிசனத்தைப் பெறுகிறான். இவ்வாறுதான் ஒரு படைப்பு கால, தேச வர்த்தமானங்களைக் கடந்து ஒரு குறிப்பிட்ட காலத்தில், இடத்தில், சமூகத்தில் தோன்றினாலும் உலகத்திற்கே பொது சொத்தாகி விடுகிறது. இவ்விரட்டைத்தன்மை இல்லாவிட்டால் ரஷ்ய நாவல் ரஷ்ய நாவலாகவும், ஆப்பிரிக்க நாவல் ஆப்பிரிக்க நாவலாகவும், இந்திய நாவல் இந்திய நாவலாகவும் இருக்கும். வட்டார எல்லைகளைக் கடந்து செல்லாது. ஆனால் டால்ஸ்டாயும், ஹெமிங்வேயும், மார்க்யூஸும், சிவராம கராந்தும் நம் மனங்களில் கரைய முடிகிறது என்றால் நான் குறிப்பிட்ட குணங்கள்தான் காரணம்.

‘தமிழ் சூழலும் போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிசமும் ‘ என்ற பூர்ணசந்திரனின் கட்டுரையும் முக்கியமானது.

கருத்துகள் மாறிக் கொண்டிருக்கின்றன. கருத்துகள் மனித மனங்களைத் தாக்குகின்றன. கருத்துகளைப் பரிசீலனை செய்கிறோம். நம்மால் முடிந்த அளவிற்கு ஏற்கிறோம் அல்லது புறக்கணிக்கிறோம். ஒரு கருத்தைப் புதிதாக ஏற்கும் நிலையில் இருக்கும் மனிதனுக்கும், ஏற்காத நிலையில் இருக்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாசம், விதைகள் வீழ்ந்து கொண்டேயிருக்கும் நிலத்திற்கும் விதைகளே விழாமல் இருக்கும் நிலத்திற்குமானதுதான். விதைகள் விழவில்லை என்றால் அதன்பின் முளை என்பதில்லை. முளை இல்லை என்றால் அதன்பின் எண்ணற்ற விஷயங்கள் இல்லை. ஆக மனித மனங்களில் எண்ணங்கள் என்ற விதைகள் தூவப்படுவதற்கு ஆன சாத்தியக்கூறு எப்போதும் திறந்தபடி இருக்க வேண்டும். தத்துவ வரலாற்றைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு கருத்துப் பிறக்கும் நிலையில் அது உண்மையா ? பொய்யா என்பது தீர்மானிக்க முடியாத நிலையில்தான் மனித மனம் நின்றுகொண்டிருக்கிறது. சில கருத்துகளை பிறந்த நிமிடத்திலேயே உண்மை என்று தீர்மானிக்கிறோமே என்று கேட்டால் அவை முற்றிலும் உண்மையான கருத்துகள் அல்ல. நீங்கள் ஏதோ விதத்தில் அறிந்திருக்கும் கருத்து அல்லது நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் கருத்து, நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அறியாமல் இருக்கும் கருத்து, உங்கள் முன் வரும்போது அநேகமாக அந்தக் கருத்து புதிய ஆடையைச் சுற்றிக் கொண்டு வரும். நாம் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வோம். புதிய கருத்து எப்போதும் திக்பிரமையைத் தருகிறது. அச்சத்தை உருவாக்குகிறது. அச்சம் நம்மீது விரோத பாவத்தை உருவாக்குகிறது. சாதாரண கருத்துகளை முன்கூட்டிச் சொன்னதற்காக உண்மைவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிறைகளில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நரக வாழ்க்கைக்கு ஆட்பட்டிருக்கிறார்கள். இப்போது இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், ஒரு புதிய கருத்து நம்மை நோக்கி வரும்போது ஏற்கனவே இருக்கும் நம் நிலை முழுமையானது என்ற கற்பனையில் ஆழ்ந்து அந்தக் கருத்தை உதாசீனப்படுத்தும் அதிகாரம் நம்மில் யாருக்கும் இல்லை என்பதுதான். மிக வக்கிரமானவை என்று கருதப்பட்ட கருத்துக்கள் பின்பு காலத்தை நேராக நிமிர்ந்து எதிர்கொள்கின்றன. முக்கியமாகக் கருதப்பட்டவை காலத்தின் அடுத்த கோலத்தில் பழசாகி தூக்கி எறியப்பட்டிருக்கின்றன. இப்படித்தான் காலம் போய்க் கொண்டிருக்கிறது.

ஸ்ட்ரக்சுரலிசம் தாண்டி போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிசம், நான் லீனியர் எழுத்து போன்றவை தோன்றி இருக்கின்றன. இது போன்ற அணுகுமுறைகளில் நம்பிக்கை வைத்திருப்போர் தங்கள் அணுகுமுறைகளைச் சார்ந்த சில படைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் வாசகர்கள் இவற்றைக் கவனிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இவற்றைப் பார்வையிட்ட பின் இவை உயர்வானவை என்றோ அல்லது தாழ்வானவை என்றோ உறுதி செய்துகொள்ளலாம். ஆக்க பூர்வமான காரியம் என்றோ ஆக்கபூர்வமற்ற காரியம் என்றோ, கோட்பாடு, அணுகுமுறை உயர்வானதாக இருக்கிறது; ஆனால் தமிழ்ப் பின்னணி சார்ந்து அது இணைக்கப்படவில்லை என்ற முடிவுக்கு வரலாம். ஒரு காரியம் அவர்கள் செய்ய வேண்டும். ஒன்றை அவர்கள் செய்யக்கூடாது. நாம் செய்ய வேண்டிய காரியம் பரிசீலனை செய்வதுதான். புதிய படைப்புகளுக்கு முனைந்து கொண்டிருக்கும் நேரத்திலேயே குறுக்கே நின்று தடுப்பதல்ல. பரிசீலனை செய்யாமலேயே புறக்கணிப்பதைத் தவிர்க்கவேண்டும். பரிசீலனை செய்யாமலேயே புறக்கணிப்பது ஒரு நோய்க்கூறு என்று சொல்லிவிடலாம்.

தமிழில் நான்கு விதமான வாசகர்கள் இருக்கிறார்கள் என்று கருதுகிறேன். வணிக எழுத்து என்று நாம் சொல்லுகிற எழுத்து வாசகர்களை இழுத்து மடக்குவதற்குத் தேவையான யுக்திகளைக் கொண்டது. இந்த யுக்திகள் உயர்வானவையாக இருக்கக்கூடும். தாழ்வானவையாகவும் இருக்கக்கூடும். தாழ்வான யுக்திகளையும் கூசாமல் அனுசரிப்பது வணிக எழுத்தின் ஒரு முக்கியமான அம்சமாக இருக்கும். அது கீழ்மையை அப்பட்டமாக முன்வைக்காது. ஏனெனில் அந்த இதழ்கள் நடத்துபவர்கள் சில மதிப்பீடுகளைத் தாங்களும் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்வார்கள். பணம் சேர்ப்பதுமட்டும்தான் எங்கள் நோக்கம்; அதைத் தாண்டி எதுவும் தங்களுக்குக் கிடையாது என்று சொல்லமாட்டார்கள். இந்து தர்மங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன; அதற்காகத்தான் பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிக்கொள்வார்கள். இல்லையென்றால் பரமாச்சாரியார்களின் பொன்மொழிகளை எதற்காக ஒவ்வொரு இதழும் தந்து வருகிறோம் என்று கேட்பார்கள். இல்லையென்றால் காந்தி உருவாக்கிய மேன்மையான கலாச்சாரம் அழிந்து கொண்டிருக்கிறது. அதை மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டும். அல்லது முடிந்த வரையிலும் முட்டுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறோம் என்பார்கள். நாம் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறோமோ அவர்கள் எந்தத் தரத்தில் பத்திரிகைகள் நடத்துகிறார்களோ அதைவிடவும் கீழான தரத்தைக் கொண்ட பத்திரிகைகளும் இருக்கின்றன. இந்த வாசகர்களை நாம் விட்டுவிடலாம்.

இந்த வணிக பத்திரிகைகளில் ஒரு பகுதியினருக்கு எப்போதும் தரமான இலக்கியத்தை தந்து கொண்டிருப்பதாக ஒரு எண்ணம் இப்போதும் இருக்கிறது. விதி விலக்காக என்று சொல்லவேண்டும். ஏனென்றால் தரமான எழுத்தாளர்கள் என்று சொல்லக்கூடிய சிலரும் வணிகப் பத்திரிகைகளில் எழுதிக் கொண்டு வருகிறார்கள். ஐம்பதுகளில் சுதேசமித்திரன் வார இதழில் தி. ஜானகிராமனின் ‘மோக முள் ‘ளை தொடர்கதையாக வெளியிட்டதில் ரொம்ப வாசகர்களுக்கு அந்த எழுத்து பிடித்திருந்தது. சுவாரஸ்யமாக இருக்கிறது, வித்தியாசமாக இருக்கிறது, விறுவிறுப்பாக இருக்கிறது, மொழியை அற்புதமாகக் கையாள்கிறார், பாத்திரங்கள் எங்கள் வீட்டிற்குள் வந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்றெல்லாம் சொன்னார்கள். அந்த எழுத்து தரமானது என்று க.நா.சு. சொன்னார். செல்லப்பாவும் அந்த அபிப்ராயத்தைச் சொன்னார். வெங்கட் சாமிநாதன் தமிழில் மட்டுமல்ல இந்தியாவிலேயே அதுதான் சிறந்த நாவல் என்று சொன்னதாக ஞாபகம். விமர்சனம் எதிர்பார்க்கும் தரமும் வணிகப் பத்திரிகைகளில் உள்ள வாசகர்கள் எதிர்பார்த்த ஒரு அம்சமும் அந்த எழுத்தில் கூடியிருந்தது. ஜானகிராமன் வழியாக தரமான எழுத்துக்கு வந்தவர்கள் பலர். அப்படி வந்தவர்களில் ஒருசில பேருக்கு வேறு சில எழுத்தாளர்களையும் அந்த எழுத்தாளர்களுடைய படைப்புகளையும் ஜானகிராமனுடைய எழுத்தை விடவும் பிடித்துப் போயிற்று.

ஐம்பதுக்களில் ஜானகிராமன் செய்த காரியத்தை அறுபதுகளில் ஜெயகாந்தன் செய்தார். நான் சந்திக்கிற பல வாசகர்களிடத்திலும் குமுத த்திலிருந்து இலக்கியத்திற்கு எப்படி வந்தீர்கள் என்று கேட்பேன். ஜெயகாந்தன் வழியாக வந்தோம் என்று சொல்வார்கள். ஜெயகாந்தன் நிறைய வாசகர்களைச் சேர்த்துத் தந்தார். ஜெயகாந்தனைப் போலவே அசோகமித்திரனும் கி. ராஜநாராயணணும் அழகிரிசாமியும் பல வாசகர்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். வணிக எழுத்தில் ஊறிப்போன வாசகர்களை ஒன்றும் செய்ய முடியாது. தமிழ் கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும் என்று கடவுளுக்கே அக்றை ஏற்பட்டால்தான் அவர்களைத் தீவிர வாசகர்களாக மாற்ற முடியும். இரண்டாவது வகையான வாசகர்கள் வணிக மரபில் ஆரம்பித்து, ஒரு தரமான படைப்பாளியின் தொடர்பு ஏற்பட்டு இலக்கிய அனுபவங்களை அறிந்து, தான் அறிந்த வாழ்க்கையைப் பற்றிய நுட்பம் மனதில் கூடும் மகிழ்ச்சியின் நிறைவில், புதிய படைப்புக்களைத் தேடி வரக்கூடியவர்கள். மற்றொரு வகையினர் வணிக சஞ்சிகைகளின் மூலம் வந்தவர்களல்லவர். வணிக சஞ்சிகைகளில் அவ்வப்போது எழுதும் தரமான படைப்பாளிகளின் தொடர்பு மூலம் வந்தவர்களும் அல்ல. தமிழ் இலக்கியத்தின் நவீன படைப்பில் தரமானவற்றைப் படித்து வந்தவர்கள். பாரதியைப் படித்திருப்பார்கள். புதுமைப்பித்தனைப் படித்திருப்பார்கள். அழகிரிசாமியைப் படித்திருப்பார்கள். மெளனியைப் படித்திருப்பார்கள்.

நாகர்கோவில் நெய்தல் அமைப்பில் பேசியது – 13.3.92

Series Navigation

சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி