காந்தியின் குரங்குகளும் தலித்திய – கறுப்பு அடையாளங்களும். ( ‘மகாத்மாவின் பொம்மைகள் ‘ சிறுகதை விமர்சனம்)

This entry is part [part not set] of 30 in the series 20020414_Issue

காளிதாஸ்


ஒரு முன்மாதிரி வாழ்வியல் தொடர்பாக ஒவ்வொரு மனிதனுருக்குள்ளும் ஒரு கனவு, ஒரு தேடல் இருந்துவிட்டுப் போகிறது. அது இலட்சிய வகைப்ப்பட்டதாகவோ அல்லது ஏதோ வகையில் சிறப்புக் கொண்டதாகவோ இருந்து விடுகிறது. வாழும் வாழ்வு வேறாகிப் போயினும் வாழ்வை நகர்த்திச் செல்ல அல்லது திருப்தி கொள்ள இந்தக் கனவு கழுதை முன் கட்டித் தொங்க விட்ட கிழங்காக வாழ்வில் தொடர்ந் து ஓட வைக்கிறது. அந்த இலட்சியக் கனவு சிலவோர் பொழுதுகளில் சமய வழிப் பட்டும் அல்லது வாழ்ந்த – வாழும் மனிதர்களின் குறியீடாக அவர்களையும் அவர்களின் வாழ் முறையையும் முன்மாதிரியாகவோ அல்லது ஒரு சித்தாந்தத்தைச் சார்ந்ததாகவோ இருக்கும்.

முன் மாதிரியான வாழ்வியலில் ஒரு உண்மையான பிடிப்பு ஏற்பட்டால் அந்த நபரின் எழுத்தில் அவரின் நம்பிக்கையும் ஆத்மார்த்தமும் புலப்படும்- அவர் சார்ந்த நம்பிக்கையில் மொழி அவர் வசமாகும். படிமங்களைக் கையாளும் உத்தி துலங்கும். அது அவர் கொண்ட நம்பிக்கையுடன் தொடர்புடைய விடயம்.

மைக்கேல் எழுதிய “மகாத்மாவின் பொம்மைகள்” கதையில் மொழி நடையும் படிமங்களும் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கின்றன. காந்தியும் அவரது வாழ்வும், ஒவ்வொரு அசைவும் துாய்மையும் இலட்சியக் கனவு வகைப்பட்ட புனிதக் குறியீடுகளாக கதையெங்கும் வியாபித்திருக்கிறது. மனித எல்லைகளைத் தாண்டிய ஊமானு‘ய விம்பம் காந்திக்குக் கொடுக்கப் படுகின்றது. மைக்கலுக்குக் கைவசமாகும் மொழியால் ஒரு “புனிதனை”, அவனது காலத்தை யமுனைக் கரையிலிருந்து காந்தி சென்று வந்த இடமெல்லாம் புனிதப் பூக்கள் மலரும் புனித இடங்களாக நிலை நிறுத்தும் அழகியல் முயற்சி கைகூடுகின்றது. இப்புனித பிம்பம் எல்லோராலும் பொதுவான பிம்பமாகவே உள்வாங்கப்படுமா என்ற கேள்வியுடன் மைக்கலின் எழுத்துவழி பயணப்பட முனைகையில் கட்டப்படும் புனிதத்தை மீறி மொழியற்ற மெளனத்தில் கோபத்தொனியில் கேட்கும் குரல்களை உற்றுக் கேட்கிறேன். மைக்கல் அழைத்துச் செல்ல முயலும் திசை வழியில் மனம் பயணம் செய்கையில் காந்தியின் சமாதியை அடைய முன்னமே வழவழியெல்லாம் கால்களை இடறும் காந்தி அரசியல் தாழ்த்தப்பட்டவர்க்குச் செய்த நம்பிக்கைத் துரோகத்தின் சமாதிகள். புனிதத்தின் தனிச் சிறப்பே அது உண்மைகளின் உரிமைகளின் சமாதிகளில் கட்டப்படுவதுதானே. தாழ்த்தப்பட்டவர்களின் அரசியலை முன்வைத்த காந்தி அந்த மக்களின் நம்பிக்கை மேல் போட்ட கல்லை, சென்ற நுாற்றாண்டுகளில் மனித இனத்தின் மேலும் மனித நேசத்தின் மீதும் வன்முறையால், வெறுப்பால் வீசப்பட்ட கற்களிலே வன்முறை கூடிய கல்லென்பேன்.

அந்த வரலாற்றுத் துரோகத்தின் சுவடுகள் வழி பயணப்படுகையில் என்ன புரிகிறதென்றால் காந்தியின் புனிதத்தை பொதுப் பிம்பமாக எடுத்துக் கொள்ளச் சொல்வது ஒரு கறுப்பினத்தவளுக்கோ அல்லது இனத்தவனுக்கோ “அப்பாதயிட்”ஜ ஏற்றுக் கொள் என்று சொல்வதற்கு எந்தவகையிலும் குறைவானதாகாது என்பதே.

“தாழ்த்தப்பட்டவர்களைப் பொறுத்த மட்டில் காந்தி என்றும் எதிராகத்தான் நின்றார். மீண்டும் மீண்டும் இவர் இடையூறு தருவார். தாழ்த்தப்பட்டவர்கள் தங்களைக் காத்துக் கொள்வதற்கான சிறந்த வழி காந்தியிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்பதைத் தொடர்ந்து உயர்த்திப் பிடிப்பதே” என்ற அம்பேத் கரின் குரல் கேட்டு காந்தியின் புனித உலகே அழைக்கும் மைக்கலின் கரங்களை மெல்ல விடுவித்துத் திரும்பிப் பார்க்கிறேன். அறிவும் ஆத்மாவும் ஒன்றாக ஒலித்த அந்த மனிதனின் குரல் வழி என் மனம் பயணப்படுகின்றது.

காந்தி தம் கொள்கையில் பற்றுறுதியோடு இருந்ததாகத் தாழ்த்தப் பட்டவர்கள் கருதுகிறார்களா ? இல்லை என்பதே இதற்குப் பதிலாகும். காந்தி பற்றுறுதியோடு இருந்ததாக அவர்கள் கருதுவதில்லை. எப்படி அவர்களால் அவ்வாறு கருத முடியும்.

1921இல் பர்த்தோலித் திட்டத்தைச் செயற்படுத்தும்படி நாடே கிளர்ந்தெழுந்த போது அதன் ஒரு பகுதியான தீண்டாமை ஒழிப்பில் முழு அலட்சியம் காட்டிய ஒரு மனிதனைப் பற்றுறுதியோடு இருந்ததாக அவர்களால் எப்படிக் கருதமுடியும் ?

ஒரு கோடியே இருபத்திஜந்து இலட்சம் உள்ள சுயராகய நிதியிலிருந்து வெறும் நாற்பத்திமூன்றாயிரத்தை மட்டுமே தாழ்த்தப்பட்டவர்கள் நலனுக்கு ஒதுக்கிய போது நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வந்த இந்த இலட்சியத்திற்கு ஒதுக்கப்பட்ட அந்த அற்ப தொகையை அதிகரிக்க எந்த எதிர்ப்பையும் காட்டாத ஒரு மனிதனை பற்றுறுதியாளனாக எப்படி இவர்களால் கருத முடியும். 1924இல் தீண்டாமை ஒழிப்புக் கடமையை இந்துக்கள் மீது சுமத்த ஒரு வாய்ப்பு இருந்த போதிலும் அவ்வாறு செய்யாத, அதற்கான அதிகாரமும் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பும் இருந்த போதிலும் அவ்வாறு செய்யாத ஒரு மனிதனை எப்படி இவர்களால் பற்றுறுதியாளனாகக் கருத முடியும் ? காந்தி இந்த நடவடிக்கையை எடுத்திருந்தால் தீண்டாமை ஒழிப்பிற்கு அது உதவியாக இருந்திருக்கும் என்பதுடன் தீண்டாமை ஒரு பாவம், அது இந்துத்தத்துவத்தின் மீதுள்ள ஒரு கறை என்றெல்லாம் தீண்டாமையின் தீமை குறித்துப் பேசிய பேச்சுக்களுக்கு நேர்மையானவராகக் காந்தியிருந்தார் – என்பதற்கு ஆதாரமாக இருந்திருக்கலாம்.

காந்தி ஏன் இவ்வாறு செய்யவில்லை ?

தீண்டாமையை ஒழிப்பதைக்காட்டிலும் இராட்டையில் நுால் நுாற்பதில்தான் காந்தி மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.

காந்தியின் திட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு இறுதி அம்சமாகக் கூட இடம் பெறவில்லை. மாறாக அற்ப பங்கையே வகித்து வந்தது என்பதைத்தானே இது காட்டுகிறது.

காந்தி தாம் விரும்பிய பல் வேறு இலட்சியங்களுக்காக பல தடவை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் நலனுக்காக ஏன் காந்தி ஒரு முறை கூட உண்ணாவிரதம் இருந்ததில்லை ?

காந்தி தீமைகளை ஒழிக்கும் ஓர் ஆயுதமாக சத்தியாக்கிரகத்தை வடிவமைத்தார். சுதந்திரம் பெறுவதற்காக ஆங்கில அரசிற்கெதிராக இந்த ஆயுதத்தை நடைமுறைப் படுத்தினார். பொதுக் கிணறுகள், கோயில்கள் மற்றும் பொது இடங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைவதை தடுக்கும் இந்துக்களுக்கு எதிராக காந்தி ஏன் இந்த சத்தியாக்கிரகத்தை ஒரு முறை கூடப் பயன்படுத்தவில்லை.

காந்தியின் வழியைப் பின்பற்றி 1929இல் தாழ்த்தப்பட்டவர்களும் பொதுக்கிணறுகள், கோயில்கள் ஆகியவற்றில் உரிமைகள் கோரி இந்துக்களுக்கெதிராக சத்தியாக்கிரகத்தை நடத்தினர். இதை ஏன் கண்டித்தார் ?

உண்மையும் நேர்மையும் மிக்கவராக காந்தியைத் தாழ்த்தப்பட்டவர்கள் கருதுகிறார்களா ? இல்லை என்பதே பதிலாகும்.

தாழ்த்தப்பட்டவர்களின் அரசியல் பாதுகாப்புக் கோரிக்கையை வட்ட மேசை

மகாநாட்டில் காந்தி எதிர்த்தார். தாழ்த்தப்பட்டவர்களின்

இலட்சியங்களைத் தோற்கடிக்கத் தம்மாலான அனைத்தையும் செய்தார். இவர்களின் கோரிக்கைகளுக்குப் பின்னுள்ள சக்தியைப் பலவீனமாக்கவும், இவர்களைப் தனிமைப்படுத்தவும, முஸ்லிம்களின் பதினான்கு கோரிக்கைகளையும் ஒத்துக் கொள்வதன் மூலம் முஸ்லிம்களை விலைக்கு வாங்கவும் முயன்றார்.

முஸ்லிம்களின் பதின்நான்கு கோரிக்கைகளுக்கும் தான் ஆதரவு அளிப்பதாகவும் அதற்குக் கைம்மாறாக முஸ்லீம்கள் தாழ்த்தப்பட்டவரின் கோரிக்கைகளை எதிர்க்க ஒப்புக் கொள்ள வேண்டும் எனவும் காந்தி செய்த முயற்சி கேடானது. இது மிகவும் நுண்ணிய தந்திரமாகும். முஸ்லிம்கள் தங்கள் கோரிக்கைகளைப் பெற்றுக் கொண்டு தாழ்த்தப்பட்டவர்களின் கோரிக்கைகளை விலக்கிக் கொள்வது அல்லது தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் தங்களது பதின்நான்கு கோரிக்கைகளை இழப்பது என்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையைக் காந்தி முஸ்லிம்களின் முன் வைத்தார்.

இறுதியாக காந்தியின் தந்திரம் தோல்வியுற்றது. முஸ்லிம்கள் தங்களின் கோரிக்கைகளில் வெற்றி பெற்றார்கள். தாழ்த்தப்பட்டவர்களும் தங்கள் கோரிக்கைகளில் வெற்றி பெற்றார்கள். ஆனால் நடந்த விசயங்களோ காந்தியின் “துரோகத்திற்கு” சாட்சியாக இன்றும் இருந்து வருகிறது.

ஒருவனை அவனுடைய நிலைப்பாட்டிலிந்து பின்வாங்கச் செய்து அவனை மோசடியான நேர்மையற்ற முறையில் துாண்டியவனும் நண்பனை முதுகில் குத்தியவனுமான ஒருவனின் நடத்தையை விளக்க “துரோகம்” என்ற சொல்லைத்தவிர வேறு சொல் என்ன இருக்க முடியும் ? இம்மாதிரியான ஒரு நபரை தாழ்த்தப்பட்டவர்கள் உண்மையான நேர்மையான நபராக எப்படிக் கருத முடியும் ?

தமது சாகும் வரை உண்ணாவிரதத்தின் மூலம் இந்தியாவையும் உலகத்தையும் காந்தி உலுப்பினார். புதிய அரசியல் அமைப்புச்சட்டத்தின் கீழ் தாழ்த்தப் பட்டவர்களின் பாதுகாப்பிற்கென பிரிட்டன் பிரதம மந்திரி தன்னுடைய தீர்ப்பில் அளித்த அரசியல் அமைப்புப் பாதுகாப்புக்களை ஆங்கில அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்பதே உண்ணா விரதத்தின் நோக்கமாகும்.

சாதியைத் தக்க வைத்துக் கொண்டே தீண்டாமையை ஒழிக்க நினைத்த அவரை தங்களின் நண்பனாக தாழ்த்தப்பட்டவர்களால் எப்படிக் கருத முடியும் ?

சமூகப் போக்கை அரசியல் வளர்ச்சிப் போக்குகள் பாழ்படுத்த முடியாது. அது சமூகப் பிரச்சனையின் தீர்வுக்கு உதவுவதோடு அதை விரைவுபடுத்தவும் செய்யும் என்பதை அனைவரும் ஒப்புக்கொண்ட ஒரு சூழலில் அரசியல் வளர்ச்சிப் போக்குகளிற்கு மூர்க்கத்தனமான, வெறிகொண்ட எதிர்ப்பைக் காட்டியவர் காந்தி.

அரச அதிகாரத்திலும் நிர்வாகத்திலும் தாழ்த்தப்பட்டவர்கள் இடம் பெறுவதை விரும்பாத ஒரு நபரை எப்படி நண்பனாக அம்மக்கள் கருத முடியும் ?

வட்டமேசை மாநாடு தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கோரிக்கைகளைத் தர முன் வந்தபோது அதற்கு உதவாமலோ அல்லது அதைத் தடுக்காமலோ இருந்திருக்கலாம். இந்த நடு நிலையான வாய்ப்புகளையும் கைவிட்டு தாழ்த்தப்பட்டவர்களின வெளிப்படையான எதிரியாக காந்தி தம்மைக் காட்டிக் கொண்டார்.

அமெரிக்க சனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை சொன்னான்

“ எந்த ஒரு அடிமையையும் விடுதலை செய்யாது நாட்டின் ஒற்றுமையைக் காப்பாற்ற முடியும் என்றால: அதை நான் செய்வேன். எல்லா அடிமைகளையும் விடுதலை செய்து நாட்டின் ஒற்றுமையைக் காப்பாற்ற முடியும் என்றால் அதையும் நான் செய்வேன். சிலரை விடுதலை செய்து சிலரை அப்படி வைப்பதன் மூலம் நாட்டின் ஒற்றுமையைக் காப்பாற்ற முடியும் என்றால் அதையும் நான் செய்வேன்.” என்று. நாட்டின் ஒற்றுமையைக் காப்பாற்றுவதற்கு கருப்பர்களை விடுதலை செய்வது அவசியமானால், லிங்கன் அவர்களை விடுதலை செய்யத் தயாராக இருந்தான். ஆனால் காந்தியின் அணுகு முறையோ இதற்கு நேர் எதிரானது. தாழ்த்தப்பட்டவர்கள் அரசியல விடுதலை பெறுவது நாட்டு விடுதலைக்கு அவசியமானது என்ற சூழ்நிலையிலும் கூட காந்தி இதற்குத் தயாரகவில்லை. தாழ்த்தப்பட்டவர்களின் அரசியல் விடுதலையின் மீதுதான் நாட்டின் விடுதலை கிடைக்கும் என்றால் நாசமாகப் போகட்டும் என்பதே காந்தியின் அணுகுமுறையாகும்.

கதை ஒரு இலக்கிய வடிவம். அதற்கு இவ்வளவு துாரம் அரசியல் பின்னணி விமரசனங்கள் தேவையா ? என்ற கேள்விகள் எழலாம். எனது விமர்சனம் கதை தொடர்பானதல்ல, அது கட்ட முனையும் விம்பம் தொடர்பானதே. காந்தியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு, வெகுஐனங்களைத் திரட்டுவதில் அவருக்கிருந்த அனுபவத்திறன1தீண்டாமை பற்றி சிறுபிராயம் தொட்டே அவருக்கிருந்த விழிப்புணர்வு இவற்றுடன் இன்றுங்கூட ஜரோப்பிய அமெரிக்க வெள்ளைக் கருத்தியல் போர் தொடுப்பிற் கெதிரான “ஆசியப் பெறுமானங்களின்” முக்கியத்துவம் பற்றி யோசிக்கையில் மறுக்க முடியாத காந்தியின் குறியீடு. இவற்றையெல்லாம் நான் மறுக்கவில்லை.

மீண்டும் கொஞ்சம் கதைக்குள் போக முனைகின்றேன்.

பெளத்தத்தின் காற்று வீசும் இலங்கைக்கு வரும் காந்தியின் பொம்மைகள் பெளத்தம் பொய்யாக்கப்பட்ட போர் மண்ணில் அதிர்கின்றன, அலைக்கழிகின்றன.

1948க்குப்பின் இந்தியாவில் ஏற்பட்ட எந்த அதிர்வும் பாதகமும் பொம்மைகளின் துாக்கத்தைக் கலைக்கவில்லை என்பது அதிசயமே.

வங்காளத்தில் இந்திய இராணுவத்தின் கொலை நடவடிக்கைகள், எமஐன்சிக்காலம், முஸ்லிம்கள் கொலை, சாதிக் கலவரங்கள், தென்திசையில் கீழ்வெண்மணிப்படுகொலைகள், ………. இன்னும் இன்னும் என்று தோன்றினாலும் பிறகு இதில் அதிசயப்படத்தான் என்ன இருக்கிறது என்றும் தோன்றுகிறது. காந்தி உயிருடன் இருந்த போதே எத்தனையோ விசயங்களை கண்டும் காணமல் விட்டார், பேச இருந்தும் பேசாமல் இருந்தார், சிலசம்பவங்களைப் பார்க்காதே பேசாதே கேட்காதே என்று பொம்மைகளுக்கும் பழக்கியிருப்பார். காந்தித்தாத்தா வளர்த்த வளர்ப்பு அப்படி. பாவம் அவைகளைச் சொல்லி என்ன ?

காந்தியின் விழுமியங்கள் மறக்கப்பட்டு விட்டன என்று கதை நெடுகிலும் சொல்லப்படுகின்றது. இதை மேலும் அழுத்தும் விதத்தில் ெஐனிவாவில் இருந்து வரும் ஆவண ஆய்வாளரான கறுப்பு அறிஞருக்குக் கூட காந்தியைத் தெரியவில்லை என்பதன் மூலம் அதாவது மனித உரிமை சர்வதேச மட்டத்திற்கே இந்த நிலமை எனச் சொல்ல முனைகிறார்.

கறுப்பு அறிஞர் இதில் ஒரு குறியீடாக வருவது கதாசியருக்குத் தற்செயலாக இருந்திருக்கலாம் அல்லது வேண்டுமென்றே புனைந்திருக்கலாம் அல்லது டூடுவோ கோபிஅன்னனோ நினைவுப் பிரதிப்பிம்பங்களாக எதேச்சையாக வந்து விழுந்திருக்கலாம்.

எது எப்படியோ.

கதாசிரியருக்கு எப்படி காந்தியின் ஒவ்வொரு அசைவும் மானிட விடிவின் இலட்சிய புனித பிம்பமாகத் தெரிகிறதோ அப்படி கறுப்புக் குறியீடு என்பது ஒரு போராட்டத்தின், எதிர்ப்பின் தனித்துவத்தின் குறியீடாகும். அப்படி ஒரு குறியீட்டை சும்மா போடு தடியாகப் போட முடியாது. அதுவும் காந்தியின் புனிதம் போற்றும் கதை ஒன்றில் அப்படிப் பயன்படுத்துவது நெருடல் தருகிறது.

வரலாற்றில் கறுப்பின குறியீடாக இருக்கும் ஒருவருக்கு ஒரு பெறுமானம் இருக்கிறது. தனித்துவம் இருக்கிறது அது மனித குல வரலாற்றுடனும் அடிமைத்தன விடுதலையுடன் தொடர்புடையது. எவ்வளவு மிதவாதியாக இருந்துவிட்டுப் போகட்டும். ஒரு வெள்ளையினக் குறியீட்டுக்கும் கறுப்புக்குறியீட்டுக்கும் அடிப்படைப் பெறுமான வித்தியாசங்கள் உண்டு. ஒரே தட்டில் வைத்துக் காட்டி நாம் சொல்ல வரும் கருவிற்கு வலு சேர்க்க முடியாது.

மாட்டின் லுாதர் கிங், நெல்சன் மண்டேலா, போன்றவர்கள் கறுப்பின மக்களின் உணர்வுகளை பிரதிபலித்தவர்கள். மக்களை அணுகும் அணிதிரட்டும் பல சந்தர்ப்பங்களில் காந்தியை முன்மாதிரியாக விதந்துரைத்தவர்கள். மிதவாதிகளாயினும் தாழ்த்தப்பட்டவருக்கும் ஏழைகளிற்கும் காந்திசெய்த துரோகம் போல் தம் மக்களுக்குச் செய்யாதவர்கள்.

ெஐனிவாவிற்கு ஆய்வாளராக வரும் ஆபிரிக்கக் கருப்பினத்தவர் ஒருவருக்கு மண்டேலா, லுாதர்கிங், மல்கம் எக்ஸ் மூலமாக ஆவது காந்தியைத் தெரிந்திருக்கும் கதாசிரியரே.

ஒரு வேளை ெஐனிவாவில் பதவி வகிக்கும் ஒரு வெள்ளையருக்கு காந்தியைத் தெரியாமல், பென்கிங்ஸிலியை மாத்திரம் தெரிந்திருந்தாலும் அதிசயமில்லை. அப்படி பதவிவகிக்கும் ஒரு கருப்பருக்கு தெரியாது என்ற மிகைப்படுத்தல் அலட்சியத்தில் இருந்து எழுகிறதா ?

அப்படியாயின் அது காந்தியின் புனிதம் பற்றிய கதாசிரியரின் மிகைப்படுத்தலைவிட கொடுமையான மிகைப்படுத்தல் என்பேன்.

மனதில் படும் இன்னுமொரு உண்மையையும் சொல்லட்டுமா. காந்தியென்ற புனித விம்பத்தைவிடவும் உயர்வான இடத்திலேயே ஒரு கறுப்புக் குறியீட்டை தலித்துக்களும் உலகெங்கும் ஒடுக்கப்படும் கறுப்பு மக்களும் மற்றைய மனிதரும் வைப்பார்கள் என்பதுதான் அது.

Series Navigation