கவிதைப் புனைப்பில் கையாளும் காவிய நயங்கள்

This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

சி. ஜெயபாரதன், கனடா


காவியப் படைப்புகளில் கவிதை ‘கலைத்துவ இளவரசி ‘ என்று புகழப்படுகிறது. எழுத்தாளர், ஓவியர், இசைஞர், நர்த்தகி, நடிகர், சிற்பிகள், சிந்தனா மேதைகள் யாவரும் கவிதைகளில் தமது மனதைப் பறி கொடுத்தவரே! கவிதைப் போதையில் மூழ்காத கலைஞரைக் காண்பது மிக அபூர்வம்! கவிதைகள், அவற்றின் கிளைப் படைப்பான பாடல்கள் ஆகிய இரண்டும் இசைக் கலைக்கு வடிவம் தருபவை. கலைகளில் சிறந்த நாட்டியக் கலைக்குப் புத்துயிர் அளிப்பவை, இசையும் பாடல்களும். கீதங்களைக் கேட்டு கற்கள் கூட உருகிவிடும் என்று பல உலக இலக்கியங்கள் மொழிகின்றன!

கவிச் சக்ரவர்த்தி கம்பன் இராமாயணம் முழுவதையும் கவிதை மாலையில் கோர்த்துத் தமிழ் உலகுக்கு அளித்தான். அதுபோல் வில்லிபுத்தூரார் மகாபாரதத்தைக் கவிதையில் வடித்தார். சிலப்பதிகாரத்தை கவிதையில் எழுதி, கண்ணகியின் வரலாற்றைக் கூறினார், இளங்கோவடிகள். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் பல அரிய நாடகங்களைக் கவிதையில் புனைந்தார். மகாகவி காளிதாஸ் சகுந்தலையின் கதையைக் கவிதைக் காவியமாகப் படைத்தார். தமிழ் வேதஞானி திருவள்ளுவர் திருக்குறள் அறநூலைத் தமிழ் மக்களுக்கு ஈரடிக் கவிதைகளில் அளித்தார். அவர்களைப் போல் ஆத்திச்சூடி ஒளவையாரும், திருப்பாவை ஆண்டாளும் தமது காவியங்களைக் கவிதா வழியில் வடித்தார்கள். சுதந்திரச் சிற்பி சுப்ரமணிய பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் ஆகியோர் தமிழகம் பெற்றெடுத்த கவி மேதைகளில் சிறந்த காவியப் படைப்பாளிகள்.

மரபுக் கவிதைகள் யாப்பிலணக்கண அமைப்பாடில் உருவெடுப்பவை. விடுதலை வரிகளாக யாப்பிலணக்கத்தைப் புறக்கணித்து, புதுக் கவிதைகள் ஆக்கப் படுகின்றன. புதுக் கவிதை ஒரு டென்னிஸ் கன்னி! வலையில்லாமல், வரம்பில்லாமல் டென்னிஸ் பந்து விளையாடுவது போல் புதுக் கவிதை பின்னப் படுகிறது! கவித்துவம் மிளிரும் படைப்புகள், யாப்பிலக்கண நெறிகளில் படைத்தால் என்ன ? விடுதலை வசனத்தில் படைத்தால் என்ன ? அவற்றில் கவித்துவ மணம் வீசுகிறதா என்று நுகர்வதே ஞானமாகும்.

கவிதைகளின் தனித்துவப் பண்பு சுருங்கச் சொல்லி சுவையை அளிப்பது. அவசியமற்ற சொற்களையோ பகுதிகளையோ நீக்குவது, தொளதொள வென்று அணியும் சட்டையை அளவாகக் கத்தரித்து, உடம்புக்கு ஏற்க கச்சிதமாய்த் தைப்பதை ஒத்தது! யாப்பிலக்கணப் பூர்த்திக்கு இடைச் செறுகளாக எப்போதாவது சில சொற்கள் பயன்படுத்த நேராலாம். அதே சமயத்தில் போதிய சொற்கள் பயன்படாமல் போனாலும், துணி பற்றாமல் தைத்த இறுக்கிய சட்டையை அணிவதுபோல், கவிதையைப் படிப்போருக்கு அருவருப்பு உண்டாகும்! சில புதுக் கவிதைகள் சிக்கலாகப் படைக்கப் பட்டு, என்ன கருத்தைக் கூறுகின்றன என்பதே நமக்குப் புரியாமல் போகிறது!

கவிதைப் புனைப்பு நான்கு தொகுப்பு நயங்களால் நளினம் பெறுகிறது. முதலாவது கவிதையின் அடிப்படை அதன் ‘கருத்தழகு ‘ [Theme]. கருத்தழகு இல்லாவிடின் கவிதை உயிரற்ற வெறும் உடலாகி விடுகிறது. ஒரு கவிதையின் ஆத்மாவே அதற்கு உள்ளொளியாய் இருந்து வெளியே சுடர்வீசும் அதன் ஆழ்ந்த கருத்துதான்! அக்கருத்துக்கு உருவம் தந்து கவிதையக் கட்டுபவை, செங்கல் போன்ற அதன் சொற்கள். எதுகை, மோனை, மற்றும் சீர், தளை ஆகியவற்றைக் கொண்டு யாப்பிலக்கணத்தைப் பயன்படுத்திப் பாக்களை அமைப்பதைச் ‘சொல்லழகு ‘ என்று நான் குறிப்பிடுகிறேன். அவை வடிவம் பெற்ற பின், கவிஞனின் சிந்தனையில் உதயமான கருத்து எழுத்துருவில் பதிவாகிறது! அடுத்து வாசகர் நெஞ்சில் நடனமிட கவிதையின் உடலுக்கு வனப்பூட்டுவது, அதன் ‘நடையழகு ‘ [Style]! நான்காவது கவிதையின் இயற்கை மேனிக்கு ஒளி ஊட்டக் கவிஞர் கையாளும் ‘அணியழகு ‘ [Figure of Speech: Similie, Metaphor, Personification etc]! இவை நான்கையும் ஏற்ற அளவில் குழைத்துத் தூரிகையில் வரையக் கவிஞனின் கற்பனா சக்தியே, கவித்துவ ஆக்க சக்தியாகப் பயன்படுகிறது!

ஒரு கவிதையில் கருத்தாட்சி, சொல்லாட்சி, நடையாட்சி, அணியாட்சி ஆகிய நான்கும் பொருத்தமான அளவில் கலந்து பின்னப் பட்டிருந்தால்தான், ஒருவர் அதைப் படித்துச் சுவைக்க முடிகிறது. எந்தக் கோணத்தில் கருத்தழகைக் காட்டுவது, மற்ற மூன்று நயங்களையும் எந்த அளவில் கலப்பது, எப்படிக் கையாளுவது என்பதில்தான், கவிஞனின் ‘கலைத்துவத் திறமையே ‘ [Artistic Talent] அடங்கி உள்ளது. பாரதியார், கவிதைக்கு இந்த நான்கு நயங்களுடன் திறமையாக ‘இசையழகும் ‘ கொடுத்து, சில கவிதைகளைக் காதுக்கினிய பாட்டாக ஆக்கி விட்டார். பாரதியாரின் சில பாட்டுகள் கண்ணுக்கினிய நாட்டியமாகப் பலமுறை அரங்கேறப் பட்டுள்ளன!

ஒரு கவிதைத் தனது கருத்தைத் தானாக எதிரொலிக்க வேண்டும். வாசகர் சிந்தனையைத் தூண்டி விடும் ஒரு கவிதை தரத்தில் உயர்ந்தது. வாசகர் உணரப் போகும் உணர்ச்சியை, கவிதையே சொல்லி விடக் கூடாது! திரைப்படம் போன்று ஓர் அனுபவத்தைக் காட்ட வேண்டியது, கவிதையின் கடமை. வாசகரின் இதயத்தை அது பளிச்செனப் பற்ற வேண்டும்! படிப்போரின் மனதில் கவிதை ஓர் உணர்ச்சியோ, புரட்சியோ, எதிரொலியோ, பூரிப்போ, சோகமோ ஏதாவது ஒன்றை எழுப்பினால், அது ஆக்கப் பட்டதின் பலன் நிறைவேறுகிறது!

கவிதை சில சமயம் வெறும் ‘சொல்லாட்சியே ‘ மிகுந்து வாக்கியமாகக் காணப்படுகிறது! ஒருவரின் முதல் ஆக்கத்தில் உரைநடை போல் அமையும் வாக்கியத்தை மடக்கிச், சொற்களை முன்னுக்குப்பின் இடம் மாற்றி அமைத்து, அதை ஒரு கவிநடை யாக்கலாம். அடுத்துத் தொகுக்கும் போது நளின நடையழகும், போதிய அணியழகும் கவிதைகளில் சேர்க்க முயல வேண்டும். கவிஞர் ஒருவரின் தனித்துவ நடையழகை அவர் ஒருவர்தான் படைக்க முடியும். ஒரு நாடகத்தைக் கவிஞன் ஒரு கவிதையில் காட்ட முடியும்! ஒரு கதையைக் கவிஞன் ஒரு கவிதையில் காட்ட முடியும்!

பாரதியாரின் கவிதை: ‘வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே ‘. ‘உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்ச மில்லை! அச்ச மில்லை! அச்ச மென்ப தில்லையே! ‘ நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை எழுதிய, ‘கத்தியின்றி, ரத்தமின்றி யுத்த மொன்று வருகுது ‘ இப்பாடல்களில் உள்ள வல்லினச் சொற்களின் ஓசையே நிகழ்ச்சியைப் பறைசாற்றுகின்றன. இதை ஆங்கிலத்தில் ‘The Sound echoing the Sense ‘ என்று கூறுவார்கள்!

பாரதியார் எழுதிய ‘சோலை மலரொளியோ, உனது சுந்தரப் புன்னகைதான்! நீலக்கடல் அலையோ, உனது நெஞ்சின் அலைகளடா ‘ என்ற வரிகளில் ஓர் நளின ஒப்பணியைக் [Metaphor] காணலாம்! அதுபோல் ‘வீணையடி நீயெனக்கு, மேவும் விரல் நானுனக்கு! பூணும் வடம் நீயெனக்கு, புது வயிரம் நானுனக்கு! பாயுமொளி நீயெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு! தோயுமது நீயெனக்கு, தும்பியடி நானுனக்கு! வானமழை நீயெனக்கு, வண்ண மயில் நானுனக்கு! பானமடி நீயெனக்கு, பாண்டமடி நானுனக்கு! ‘ போன்ற வரிகளிலும் பாரதியார் கையாண்ட ஒப்பணி நயங்களைச் சுவைக்கலாம்.

திண்ணையில் 1999-2000 ஆண்டுகளில் ‘ரேகா ராகவன் ‘ என்பர் பல கவிதைகள் எழுதியுள்ளார். அவை யாவும் தரத்தில் உயர்ந்தவை. அவர் கையாளும் சொல்லாட்சி, கருத்தாட்சி, நடையாட்சி, அணியாட்சி யாவும் சுவைத்து இன்புறத் தக்கவை! அவரது ‘மரம் ‘ என்னும் புதுக் கவிதையில், ‘வெள்ளைச் சுவற்றில் கறுப்புக் கோலங்கலாய், அந்த இலையுதிர்ந்த மரத்தின் நிழல் அமாவாசை நாளின் விதவை வானம் போலப் பொலிவிழந்து நிற்கிறது! அந்த விருட்சம் இலையுதிர்ந்தாலும், பொலிவிழந்தாலும், வேரூன்றி, நாளை வரப்போகும் சூரிய உதயத்துக்காக உயிர் பிடித்து நிற்கிறது! ‘ மேலும் அவர் எழுதிய ‘மழை ‘, ‘கடவுள் ‘, ‘இருத்தல் ‘, ‘நீ ‘ யாவும் படித்து மகிழத் தக்கவை.

****************

jayabar@bmts.com

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா