கவனமுடன் படிக்க வேண்டிய நூல்…- விடுதலை -இஸ்லாமியப் பெண்ணியம் நூல்

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

ஹெச்.ஜி.ரசூல்


இஸ்லாமியத்தை ஆன்மிக அடிப்படையில் அறிந்து கொள்ள திருக்குரான், நபி வழி தொகுப்பான அதீஸ் ஆகியவை உதவுகின்றன. இவை ஆண்சார்ந்த நலன்களின் அடிப்படையிலேயே அர்த்தப்படுத்தப்பட்டுள்ளன. புனித நூல்களில் பெண்ணிய கோட்பாட்டை விளக்க மறைக்கப்பட்ட பகுதிகளை மறுவாசிப்பு செய்ய ஹெச்.ஜி.ரசூல் எழுதிய “இஸ்லாமியப் பெண்ணியம்” என்கிற இந்த நூல் பயன்படும்.

இஸ்லாமியத்தில் பெண்ணிய வாசிப்பின் மூலம் பெண்கள் மீதான ஒடுக்குமுறை சார்ந்த கருத்துக்களை ஓரளவு தகர்க்க முடியும். தலாக், நான்கு திருமணம், சுன்னத் ( ஆண்குறி நுனி சீரமைப்பு ) குறித்தவை பொது விவாதமாக இருந்து வருகிறது. மனித உயிர் தோற்றத்திலேயே ஆணாதிக்க கருத்தை ஆழப்பதித்தே இஸ்லாம் துவங்குகிறது. அல்லா தனது சாயலில் ஆதாம் என்ற ஆணைப்படைத்து அவனிலிருந்து பெண் என்பவள் படைக்கப்பட்டாள் என்ற கருத்தை விதைத்துவிட்டது. ஆணில் பெண் அடக்கம் என்ற புரிதலிலிருந்து குரா னும், ஹதீசும் போதிக்கப் பட்டுவிட்டது. இருப்பினும் அதில் பெண்ணியம் சார்ந்த கருத்துக்களும் சொல்லப்படு வது மறுப்பதற்கில்லை. ஆண், பெண் என்ற உயிரியல் அடையாளத்தை ஆணுக்கு சாதகமாக மாற்றியுள்ளது. இஸ்லாமிய பெண்ணியம் என்ற இச்சிறு நூலின் மூலம் பெண் ஒடுக்குமுறை சார்ந்த கருத்துக்களை நொறுக்கும் பணியை ஹெச்.ஜி.ரசூல் துவக்கியுள்ளார்.

குரான், ஹதீஸ் நூல்களை அவர் நியாயப்படுத்தவில்லை என்றாலும் அதில் உள்ள நியாயத்தை தேடி அறிந்து விளக்கியுள்ளார். பெரும் பகுதி இஸ்லாமியர்களே அறியாத பண் பாட்டு சொற்களுக்கு அர்த்தத்தை விளக்கியுள்ளார். இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் என்பது 7ம் நூற்றாண்டில் வானவர் மூலம் அரபி மொழியில் இறக்கப்பட்டதெனவும்; அதீஸ் என்பது நபிகள் நாயகம் (வரஹ்) மறைந்து 200 ஆண்டுகளுக்கு பிறகு சுன்னி முஸ்லிம்களால் துவக்கப்பட்ட தெனவும் இந்நூலில் தகவல் உள்ளது. இஸ்லாம் பலதாரமணத்தை அங்கீ கரிக்கிறது. ஆண்கள் நினைத்த நேரத் தில் முத்தலாக் சொல்லி மனைவியின் உறவை துண்டித்துக் கொள்ளலாம். அறிவியல் வளர்ச்சியில் தொலைபேசி, தந்தி, இணைய தளத்தில் கூட தாம்பத்ய பந்தத்தை முறித்துக்கொள்ள முடியும் என்று ஆண்கள் தங்கள் மேலாதிக்க கருத்தை வலுப்படுத்திக் கொண்டுள்ளனர். மனைவிக்கு தகாத உறவு இருப் பதாக கணவர் குற்றச்சாட்டு வைத்தால் தலாக் பஞ்சு மிட்டாய் வாங்குவது போல் எளிதாகிவிடும். ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்யவே சிலர் இஸ்லாத்திற்கு மாறும் அபாயம் உண்டு.

பலதார மணத்திற்கு அடிப்படை வாதிகள் சொல்லும் நியாயம் யாதெ னில் போர்க் காலத்தில் மாண்டவர்களின் மனைவியருக்கு வாழ்க்கை கொடுப்பது அடிமை, அனாதை ஆகியோரையும் ஒரு சேர மணக்கலாம் என்பதாகும். இந்த மனைவிமார்களை சமமாகவும், திருப்தி கரமாக வைத்திருக்க வேண்டுமென்பது இறை கட்டளையாக உள்ளது. – ( அன் னிஸா அத்தியாயம் 4. வசனம் 3 )

நான்கு திருமணம் என்பது முஸ்லிம்களின் வாழ்வில் யுத்தச் சூழலில் எடுக்கப்பட்ட கருத்தாகும். ஆனால் போரற்ற அமைதியான இந்த சூழல்க ளில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் களின் மீது இதை திணிப்பது சரியன்று என ஆசிரியர் சாடுகிறார்.

தலாக் முறைக்கு முன்னர் முத்ஆ, ஈலா, ழிஹார், லீஆன் ஆகிய நடை முறைகள் பின்பற்றப்பட்டிருந்தது. முத்ஆ என்ற முறை வாணிபத்திற்காகவும், போருக்காகவும் வெளியூர் செல்லும் ஆண்கள் தற்காலிகமாக குடும்பம் நடத்தும் முறையாக இருந்தது. இதற்கு தலாக் சொல்ல வேண்டியதில்லை. ஈலா: மனைவியை நான்கு மாதங்கள் வரை தள்ளி வைக்கும் கணவனின் சத்திய வாக்காகும்.

ழிஹார்: மனைவியை தாயைப் போல் பாவித்து உடல் உறவு கொள்ளாமல் இருப்பது இதை நீக்க இரண்டு மாதம் நோன்பிருக்க வேண்டும்.

லீஆன்: தான் நடத்தை கெட்டவள் அல்ல என அல்லா மீது சத்தியம் செய்வது ( 4 நபர் சாட்சிகள் இல்லா பட் சத் தில் ) இந்த முறைகளுக்கு பின்னரே தலாக் வந்தது. நபிக்கு பிடிக்காத வார்த்தை தலாக் என்றும் கூறப்படு கிறது. தலாக் செய்யப் படுவதை தவிர்க்க சில வழிமுறைகள் உண்டு. மனைவிக்கு அறிவுரை சொல்வது, படுக்கையிலி ருந்து தள்ளி வைப்பது, அடித்து திருத் துவது. இறுதியாக இரு குடும்பத்தார் முன்னிலையில் சமாதானம் என்ற ஜன நாயக ( ? ) முறைகள் பின்பற்றப்படும். ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்ல இஸ்லாம் போதிக்க வில்லை. மூன்று தவணைகளில் மூன்று மாத விடாய் பருவங்கள் பொறுத்திருக்க வழிகாட்டியது. ஆயினும் நடைமுறை யில் ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்வதே உள்ளது. தலாக் செய்து பிரிந்த பின்னர் சேர்ந்து வாழ நினைத்தால் மனைவியை வேறொருவருக்கு திருமணம் செய்து, அவர்களுக்குள் உடலுறவு கொண்ட பின் தலாக் செய்ய வைத்து மறுபடியும் திரு மணம் செய்து கொள்ளலாம்.

பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட திருமணமாகாத பெண்களுக்கு பிரம்படி தண்டனை கொடுக்கப்படும். கணவ னுக்கு துரோகம் செய்யும் மனைவிக்கு கல்லடி என்ற கடினமான தண்டனை உண்டு. இதில் பெரும்பாலும் மரணம் நிகழும். மனைவிக்கு துரோகம் செய்யும் கணவனுக்கு தண்டனை குறித்து தகவல் இல்லை.

குலாஅ: திருமணத்தின் போது வழங்கப்பட்ட மகர் தொகையை ஒப் படைத்துவிட்டு பெண்ணே விடுதலை கோரலாம். ஆனால், ஆண் சம்மதித் தால்தான் விவாகரத்து கிடைக்கும். 1973ல் ஷாபானு வழக்கில் ஜீவனாம்சம் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை இஸ்லாம் தலைவர்கள் ஏற்கவில்லை. ஆனால், தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு நல்ல முறையில் வாழ்வாதாரம் வழங் கப்பட வேண்டுமென குரான் வசனம் அல்பகறா அத்தியாயம் 2 : வசனம் 241ல் கூறப்படுகிறது.

அகீகா (தானம்) : அகீகா என்பது குழந்தை பிறந்தால் பிராணிகளை தானம் கொடுக்கும் வழக்கமாகும். அரபு பழங்குடியின மக்களின் வழக்கமாக கொண்ட இந்த முறையில் ஆண் குழந்தைக்கு 2 ஆடுகளும் பெண் குழந்தைக்கு 1 ஆடும் தானம் கொடுக்க வேண்டும். பெண்சிசுக் கொலையை தடுக்கவே ஒரு ஆடு கொடுத்தால் போதும். குழந்தைகளில் ஆண் பெண் வேறுபாடு காண்பதை களைந்தால் சொர்க்கம் கிடைக்கும் என ஹதீசு கூறுகிறது.

ஹைளு (தீட்டு) பெண்களின் மாதவிடாய் காலத்தை ஹைளு என்பார்கள். இந்த நாட்களில் குரானை தொடுவதும் நோன்பு வைப்பதும் பாவம் என்ற கூற்றை புகாரி ஹதீஸ் மறுக்கிறது. தாயின் காலடியில் சொர்க் கம் உள்ளது எனும் நபியின் கூற்றுக்கு தீட்டு கோட்பாடு முரணாக உள்ளது.

“பெண்ணுக்கு எதிராக வலுவான ஒடுக்கு முறைகள் இருந்தாலும் பல பெண் அறிஞர்கள் தடம்பதித்துள்ளனர்.

சமய ஆய்வாளர்கள் சுலேமி, ராபியா, பஸ்ரிய்யா, நஃபீஸ்த்துல் மிஸ்ரிய்யா, ஆயிஷா, அல்மன் ரபியா, பீஅம்மா, செய்யதலி, பாத்திமா, கீழக்கரை நாச்சியா, செய்யது ஆசியா உம்மாள், தென்காசி ரசூல் பீவி, கச்சி பிள்ளையம்மாள் உட்பட பல பெண் அறிஞர்கள் வாழ்ந்துள் ளனர்.

அரபி மொழி என்பது தேவ பாஷை அல்ல. அரபி மக்கள் அறியும் வண்ணம் தொகுக்கப்பட்டுள்ளது “அரபிகளே நீங்கள் நன்கு அறிந்து கொள்ளும் பொருட்டு குர்ஆனை அரபி மொழியில் இறக்கி வைத்தோம்” (யூசுப் அத்தியாயம் 12: வசனம் 2 ) என்று ஹதீசு கூறுகிறது.

அல்லா ஆணுமில்லை, பெண்ணு மில்லை என்று கூறும் இஸ்லாம் இறை வன் அருள்வான், தருவான், பார்க் கிறான் என்று அன் விதி இட்டு கூறுவது முரணாக உள்ளது.

இஸ்லாம் மதத்தில் நிலவும் பெண் களுக்கு எதிரான கருத்துகளையும் வன்கொடுமைகளையும் முற்போக்கு சக்திகள் இணைந்து முறியடிக்க வேண்டும். அதற்கு முன்னதாக இஸ்லாமியர்கள் தங்களுக்குள்ளே பெண் அடிமைத்தன கருத்தை சாடி விடுதலைக்கான வழியை காண வேண்டும் என்கிறார் நூலாசிரியர். இந்நூலை மிகக் கவனமாக வாசிப்பது அவசியம்.

இஸ்லாமியப் பெண்ணியம்

ஹெச்.சி. ரசூல்,

பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ தெரு, சென்னை-18. பக். 48, விலை ரூ.10

நன்றி
மாற்று
டிசம்பர் 14 – 2010

Series Navigation