கலைச்சொற்களைப்பற்றி

This entry is part [part not set] of 40 in the series 20030809_Issue

ஜெயமோகன்


ரவி சீனிவாஸ் என் கட்டுரையைப்பற்றி எழுதியிருந்த எதிர்வினையை படித்தேன். அவர் பயன்படுத்தும் அபத்தம், அசட்டுத்தனம் போன்ற வார்த்தைகளை நானும் பயன்படுத்த முடியாதென்பதனால் பதிலளிப்பது சிரமமானது. ஆனால் அந்த கட்டுரைக்கு ஒரு பிரதிநிதித்துவ குணம் உண்டு. தமிழில் கடந்த பதினைத்துவருடங்களாக நான் எதிர்கொண்டுவரும் குரல் அது. ஆகவே சலிப்பூட்டுவது. படைப்பியக்கம் சார்ந்த எந்த விவாதத்திலும் ‘அறிவார்ந்த ஆழமான வினாக்கள் ‘ என்ற பேரில் இவை எழுப்படுகின்றன. இக்கேள்விகளை எதிர்கொண்டமையினாலேயே என் கட்டுரையில்கூட அதன் ஓட்டத்தின் உள்ளேயே இதற்கான பதில்களும் உறைவதுண்டு . இவ்வகையில் பல அடிப்படையான ஐயங்களை எனக்கு தீர்த்துவைத்த கன்னட எழுத்தாளர் மறைந்த டி.ஆர்.நாகராஜ் அவர்களை இப்போது நன்றியுடன் நினைவுகூர வேண்டியுள்ளது.

ரவி சீனிவாஸ் அவரது புரிதலில் உள்ள எல்லைகளை என் கட்டுரைமீது ஏற்ற விரும்புகிறார் . கி.ராஜநாராயணன் மீதான என் கட்டுரையை படிக்கும் எவருக்கும் இத்தகைய குழப்பங்களேதும் வர வாய்ப்பில்லை . வாசகர்கள் முயன்று பார்க்கலாம்.

இந்த குறிப்பில் இலக்கிய விமரிசனம் சம்பந்தமான சில அடிப்படை விஷயங்களை பதிவு செய்துவைப்பது பிற்பாடு பயன்படுமென்பதனால் இக்குறிப்பு.

இலக்கிய விமரிசனம் எப்போதுமே மாற்று அறிவுத்துறைகளில் உள்ள கலைச்சொற்களை பயன்படுத்துகிறது. இருவகைகளில்

அ] அந்த துறையை சேர்ந்த விமரிசனமாக தன்னை அடையாளம் காட்டியபடி செயல்படும்போது முதல் முறையாக. அதை நாம் கோட்பாட்டு விமரிசனமாக அடையாளம் காண்கிறோம். உதாரணமாக Text என்ற சொல்லை பிரதி என்று தமிழாக்கம் செய்து தமிழவன் பயன்படுத்துகிறார். அது என்ன என்று அவர் அக்கட்டுரையில் வகுக்கவும் செய்கிறார். அந்த வரையறையை ஏற்று நாம் அதை பயன்படுத்துகிறோம். டெக்ஸ்ட்என்ற சொல் வேறு பொருளில் வேறு தளத்தில் பயன்படுத்தப்படுவது என்றும் டெக்ச்சர் என்ற பொருளுக்கு நெருக்கமாக அது வருவதனால்தான் அச்சொல் பயன்படுத்தப்படுகிறது என்றும் தமிழில் நூல் என்பதே அதற்கு நெருக்கமானது என்றும் க.பூரணசந்திரன் சொன்னார். பிரதி என்றால் நகல் என்ற பொருள் வருகிறது என்றும் சொல்லப்பட்டது . முன்னவர் பிரதி என்றும் பின்னவர் நூல் என்றும் எம் டி முத்துக்குமாரசாமி பனுவல் என்றும் சொன்னார்கள் .

ஆனால் பிரதி என்ற அச்சொல் தமிழவனால் தன் கட்டுரையில் வரையறுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட பிறகு அவரைப் படிக்க அதைபயன்படுத்தித்தான் ஆகவேண்டும். அவரது கட்டுரை ஒட்டுமொத்தமாக அதற்கு அளிக்கும் பொருள்தான் அதற்கு. அப்படித்தான் நாம் தெரிதாவை அல்லது பார்த்தை படிக்க முடியும். இருபது வருடங்களாக நவீன மொழியியல் இதைப்பற்றியே சொல்லி வருகிறது.முதல்முடிவான பொருள் [Absolute meaning ] எச்சொல்லுக்கும் இருக்கமுடியாது பேசுதளம் அல்லது சொற்களன் .[Discourse ] சார்ந்து அச்சொல் வரையறுக்கப்பட்டபடியே விரிந்து போகிறது. சொல்லின் இறுதிப்பொருள் குறித்து இன்று யாரும் வலியுறுத்துவதில்லை. ஒரு கட்டுரை சொல்லவருவதென்ன என்பதே அதன் சொற்களை தீர்மானிக்கிறது. [ஒரு சொல் அச்சொற்றொடரின் இறுதியில் மறுவரையறைக்கு உள்ளாகிறது. அப்பக்க இறுதியில் வரையறை மாறுகிறது. கட்டுரை இறுதியில் மீண்டும் மாறுகிறது. தெரிதாவின் பிரபல கூற்று இது.]

இலக்கியத்தில் அப்படி பல கலைச்சொற்கள் பிற துறைகளில் இருந்து எடுக்கப்பட்டு பேசுதளம் சார்ந்து மறுவரையறை செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. மேலே சொன்ன Text என்ற சொல்லே மொழியியலில் இருந்து பெறப்பட்டு மறு ஆக்கம் செய்யப்பட்டதுதான். மொழியியலில் அது பயன்படுத்தப்படுவதற்கும் இலக்கியத்தில் பயன்படுத்தப்படுவதற்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. மொழியியல் அகராதியை வைத்து இலக்கிய விமரிசனத்தை புரிந்துகொள்ள முடியாது.

தத்துவக் கலைச்சொற்களை இலக்கியம் பயன்படுத்தியுள்ள விதமே வேறு . உதாரணமாக Modernism என்ற சொல்லை இறையியலில் பைபிள் நவீனமயமாக்கும் இயக்கத்துடன் சம்பந்தமான கலைச்சொல்லாக காணலாம். தத்துவ அகராதியில் ஐரோப்பிய அறிவொளிக்காலகட்டத்துக்கு பிந்தைய காலகட்டமாக. இலக்கியத்தில் அது எலியட் எஸ்ராபெளண்ட் துவங்கி காஃப்கா காம்யூ வரை வந்த குறிப்பிட்ட வகையான இலக்கிய அழகியல் .

ஆகவேதான் இலக்கியக் கலைச்சொல் அகராதி என்பது தேவையாகிறது. இலக்கியக் கலைச்சொல் என்றால் என்ன ? எந்த சொல் வேறு அகராதிப்பொருளில் இருந்து வேறுபட்டு இலக்கியத்தில் பயன்படுத்தப்படுகிறதோ அதுவே. உதாரணமாக படிமம். அகராதியில் அது செம்பாலோ மண்ணாலோ செய்யப்படும் சிற்பம் என்றே பொருள் இருக்கும். இலக்கியத்தில் அது Image, Poetic image என்ற இரு பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது.

தமிழில் அப்படி ஒரு அகராதி தயாரிக்கும் நோக்கத்துடன் 2100 சொற்களை நான் சேகரித்துள்ளேன். நூலாக்க மேலும் உழைப்பு தேவைப்படுகிறது.

அப்படி அகராதி சொல்லும்பொருள்கூட ஒரு கட்டுரையில் அதன் ஒட்டுமொத்த சொற்களனுக்கு ஏற்ப சிறிது மாறுபட்ட வடிவிலேயே பயன்படுத்தப்பட முடியும். நூல் என்று அகராதி சுட்டுவதல்ல க.பூரணசந்திரன் சுட்டுவது. பின்னது ஒரு அமைப்பியல் கலைச்சொல். அதாவது சொல்லை தீர்மானிப்பது சொல்பவனும் கேட்பவனும் பரிமாறிக்கொள்ளும் சொல்லாடல்தான்.

கேட்பவன் சொல்லாடலை நிராகரித்துவிட்டால் சொற்கள் எல்லாமே பொருளிழந்துவிடும். சாதாரண சொற்கள் கூட! ரவி சீனிவாஸ் சொல்லும் எல்லா சொல்லையும் நான் தத்துவார்த்தமான அர்த்தம்தேடி குழப்பமுடியும். சிக்கலாக்க முடியும். அவர் அகாராதி பொருளை சுட்டினார் என்றால் நான் அகராதி அளிக்கும் பல பொருள்களில் ஒன்றை எடுத்து அவரை நிராகரிக்க முடியும்.

சொல்லாடலை நிராகரிப்பது காதைப்பொத்திக் கொள்வதுபோல . அது அறிவார்ந்த விவாதமே அல்ல. ஆனால் மிகுந்த அறிவார்ந்த தோரணையில் நம் சூழலில் அது நிகழ்த்தப்படுகிறது. உதாரணமாக எஸ் என் நாகராஜன் ஒரு கூட்டத்தில் அன்பு குறித்து பேசிய போது சாரு நிவேதிதா எழுந்து அன்பு என்றால் என்ன என்று விளக்கமுடியுமா என்று கேட்டதாகவும் எஸ் என் உடனே பேச்சை நிறுத்தி இறங்கி போனதாகவும் எண்பதுகளில் சிலாகிப்புடன் பேசப்பட்டதுண்டு. எஸ் என்னுக்கு பொறுமை இல்லை .தர்க்கவியலில் எளிய அறிமுகம் உடைய ஒருவன் ‘சரி, அதற்கு முன் விளக்குவது என்றால் என்ன என்று நீ சொல் ‘ என்று கேட்டு சர்ச்சையை விடியும்வரை கொண்டு போகமுடியும். இதெல்லாம் அர்த்தமற்றவேலை. ரவி சீனிவாஸை விடுவோம், பிறராவது இம்மாதிரி விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்கலாமே என்பதற்காகவே இக்கட்டுரை.

ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த கலைச்சொல்லை இலக்கியத்தில் எடுத்தாளும்போது முக்கியமாக நிகழும் மாற்றம் , நான் ஏற்கனவே சொன்னபடி அது ஓர் அகவய உருவகமாக மாறிவிடுகிறதே என்பதுதான். மற்ற அறிவுத்துறைகளில் உள்ள புறவயமான கச்சிதத்தன்மை அதற்கு இருக்கமுடியாது. காரணம் இலக்கியம் என்பது ஓர் அகவய நிகழ்வு என்பதே. நனவிலி இலக்கியத்தில் செயல்படுகிறது என்று சொல்லும் விமரிசகன் இந்தவரி நனவிலியின் வெளிப்பாடு என்று தன் வாசிப்பை சமானமான மனம் கொண்ட ஒரு நல்ல வாசகனுக்கு சுட்டிக் காட்டலாம். ஒருபோதும் அதை சம்பந்தமில்லாத ஒருவருக்கு சொல்லி நிரூபிக்க முடியாது. [ரவி சீனிவாஸுக்கும் எனக்கும் இடையேயான பிரச்சினையே இதுதான். இது எப்போதுமே தமிழில் பிரச்சினை]

இலக்கியவிமரிசனத்தில் உள்ள ‘எல்லா சொல்லுமே ‘ வேறு துறைகளில் இருந்து பெறப்பட்டவைதான். மனம் , சாரம் , மெய்மை , அறம் போன்ற சொற்கள் மதமெய்யியல் சார்ந்தவை. பல சொற்கள் பயன்பாடுமூலம் பொருள் கொள்ளப்பட்டவை — ஆழம் , அழுத்தம், மையம் போல. இவை ஒவ்வொன்றையும் ஒரு கட்டுரையில் தனியாக வரையறை செய்துகொண்டு பேசவேண்டும் என்ற கோரிக்கைக்கு என்ன பொருள் ?அகராதியில் ஆழம் என்று போட்டிருக்கும் பொருளை எடுத்துக்கொண்டு இலக்கியப்படைப்பில் குச்சியை விட்டு காண்பிக்க விமரிசகனிடம் சொல்ல முடியுமா என்ன ?

இனக்குழு என்ற சொல் சாதிக்கு சமானமான சொல்லாகவே மானுடவியலில் பயன்படுத்தப்படுகிறது. உதிர உறவினாலான ஒரு பெரிய வட்டம் ஒரே உதிரத்தின் மிக விரிந்த நிலை என்று அதை சொல்லலாம். நமது சாதிகளை இனக்குழு என்ற பொருளில் சோவியத் நூல்களில் குறிப்பிட்டிருகின்றனர். சாதி என்பது இந்திய கருத்தாக்கம் . அச்சொல்லை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பது கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. பல்வேறு சமான சாதிகளின் தொகையை சொல்ல இனக்குழு என்ற சொல்லை பலர் பயன்படுத்தியதுண்டு. நமது நாட்டர் மரபு இனக்குழு அடையாளங்களுடன் நேரடியாக தொடர்புள்ளது என்பதும் எளிமையான அடிப்படை விஷயம்தான். சொல்லுக்கு ஒலிசார்ந்த, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட தளங்கள் சார்ந்த அர்த்தங்கள் உண்டு. சிலவற்றை ஏற்கவேண்டியிருக்கும். சிலவற்றை மறுக்க வேண்டியிருக்கும் அச்சொல்லை நிராகரிக்கும் ஒருவர் வேறு சொல்லைப் பயன்படுத்தலாம். அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்னென்ன பொருள் அதற்கு வரலாம் என்று சொல்ல வாசகனுக்கு உரிமையில்லை. அச்சொல்லாடலே அதைத் தீர்மானிக்கும். கட்டுரையில் இனக்குழு என்ற சொல்லாட்சி தெளிவாகவே பொருள்கொள்கிறது. கி.ராஜநாராயணன் முதன்மைப்படுத்தி எழுதியது கரிசல்நில மக்களைப்பற்றியல்ல – நாயக்கர்களைப்பற்றித்தான் .

ஆ] ஒரு கலைச்சொல் தொடர்ந்துஇலக்கிய விமரிசனத்தில் பல்வேறு உரையாடல்களில் பயன்படுத்தப்படும்போது அது கலைச்சொல் என்ற தன்மையை இழந்து ஒரு சூழலில் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட குறைந்த பட்சப் பொருளை இயல்பாகவே ஏற்று செயல்பட ஆரம்பிக்கிறது . பிரதி என்ற சொல்லை இன்று பெரும்பாலும் எல்லாருமே பயன்படுத்துகிறார்கள். அதற்கும் அமைப்பியலுக்கும் நேரடியான உறவு இல்லை .மொழியில் எழுதப்பட்ட எல்லா அர்த்த அமைப்புகளுக்கும் பொதுவான சொல்லாக அது மாறிவிட்டது. மனம் , ஆழ்மனம் போன்ற சொற்களும் அப்படித்தான். என் கட்டுரையிலெயே தெளிவான பொருள் அதற்கு உள்ளது. அதை உணர முடியாத ஒருவருக்கு விளக்கி புரிந்துகொள்ள வைக்கமுடியாது. ஆழ்மனம் கூட்டுமனம் போன்ற சொற்கள் ஃப்ராய்டோ யுங்கோ இல்லாமல்போனாலும் இருக்கும் . அவர்கள் பயன்படுத்திய கறாரான பொருளை அவை மீறிச்சென்றிருக்கும்.

டி ஆர் நாகராஜிடம் நான் கேட்ட கேள்வியை மீண்டும் நினைவுக்கூர்கிறேன் ‘ தரம் என்ற சொல்லை பயன்படுத்திவீர்களா ? ‘ என்றேன் ‘ஆம். ஆனால் வரையறை செய்யமாட்டேன். என் சொல்லாடல் அதற்கு இயல்பாக வரையறை அளிக்கவேண்டும். நான் சொல்கிறேன் உனக்கு புரிகிறது அது போதும் ‘ .வரையறை செய்யும்போதே அதை சொல்லாடலின் தளம் மீறிசெல்லும் என்பதே இதற்கு பொருள்.

என் கட்டுரைகளில் எப்போதுமே கோட்பாடுகளை சட்டகங்களாக பயன்படுத்துவது இல்லை . வாசிப்பு என்பது படைப்பின் முன் தன்னை திறந்து வைப்பதுமட்டுமே. அங்கே ஒருவனின் எதிர்வினை விளக்குதல், ஆராய்தல் என்ற தளங்களில் அல்ல. விமரிசனம் என்பது அவ்வாசிப்பு மீதான அவதானிப்பு . அங்கே அவனது பிற வாசிப்புகள் எல்லாமே பயன்படுகின்றன. அப்படிப் பயன்படுகையில் கோட்பாடுகள் அவனது ஆயுதங்களாகும். ஆனால் கோட்பாடுகளை வைத்து படைப்புகளை அளவிடுவது வேறு விசயம். ஒரு புதிய சொல்லாட்சியை பயன்படுத்தும்போது நான் அதை விளக்குவது வழக்கம். சூழலில் உள்ள பொருளை மட்டுமே அதற்கு அளிக்கும்போது விளக்குவது இல்லை.

**

மற்றபடி படைப்பு செயல்படும் விதம், படைப்புக்கும் சமூக மனதுக்கும் உள்ள தொடர்பு பற்றியெல்லாம் ரவி சீனிவாசுக்கு விளக்கி சொல்ல முடியாது. அவை நீண்ட விவாதங்களின் தொடர்ச்சிகள் . அத்துடன் இலக்கியம் செயல்படும் தளம் குறித்த ஓர் அடிப்படைப் புரிதலும் இதற்கு அவசியம். ஆயிரம் நூல் பயின்றாலும் நூற்சுவை அறியாதவர்கள் எல்லாக் காலகட்டத்திலும் உண்டு.

இந்த விவாதங்கள் நிகழும் தளத்துக்கு மிக அடியில் எங்கேயோ இருக்கிறார் ரவி சீனிவாஸ்.றைருவேறு படைப்புக் கூறுகளின் ற்றணியக்கம் பற்றிய சாதாரண கருத்துக்களைக்கூட அவரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆழ்மனம், சொல்லை வரையறை செய்தல் பற்றிய கேள்விகள் எல்லாமே அதையே உணர்த்துகின்றன . இருந்தும் அவரில் இருக்கும் தன்னம்பிக்கையும் , அதீதமான சொல்லாட்சிகளும் ஆச்சரியம் அளிக்கின்றன. அவரிடம் எப்படி விவாதிப்பது என்ற அடிப்படைக்கு அப்பால் எதையுமே விவாதிக்க முடியவில்லை என்பதை அவர் கவனத்தில் கொள்வார் என்று எண்ணுகிறேன்.

***

jeyamohanb@rediffmail.com

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்