கருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

பி.ஏ. ஷேக் தாவூத்


ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாதவரை அவர் வேறு; இவர் வேறு. – பாரசீகக் கவிதை.

மதங்களிலேயே மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மதம் இஸ்லாமே என்பது மிகையான ஒரு கூற்றல்ல. இத்தகைய தவறான புரிதல்களை களைவதற்காக எழுதுதல் என்பது எவருடைய வாயையும் அடைப்பதாகாது. இஸ்லாத்தைப் பற்றிய தவறான புரிதல்கள் மலர்மன்னனிடத்தில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவை நாகூர் ரூமியிடத்திலும் அல்லது முகம்மது அமீனிடத்திலும் கூட இருக்கலாம். உண்மையை அறிய வேண்டும் என்ற மெய்யான தேடல் உள்ளவர்களுக்கு தீர்வை அடைய கருத்துப் பரிமாற்றமே சரியான வழியாகும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எமக்கிருப்பதாலேயே இந்த மறுப்புரையை எழுதுகிறேன்.

நாம் முன்னரே குறிப்பிட்டது போல மலர்மன்னன் போன்ற நண்பர்களின் பிரச்சனையே என்னவெனில் எந்த ஒரு விடயத்திற்கும் தீர்வை முன்கூட்டியே தீர்மானித்து விடுவது. இதை அவருடைய கட்டுரை தலைப்பான “தாவூத் பாய்க்கோ குஸ்ஸா கியூன் ஆத்தா ஹை?” என்னும் வார்த்தையே உறுதிபடுத்துகிறது. எமக்கு உருது தாய்மொழியும் இல்லை. அந்த மொழியை பேசவும் தெரியாது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன் நான். சுட்டுப்போட்டாலும் உருது வராது. மலர்மன்னன் கட்டுரை தலைப்பின் அர்த்தத்தையே வேறொரு உருது தெரிந்த நண்பரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொண்டேன். (மலர்மன்னன் கூற்றுப்படியே) இஸ்லாமியப் பெண்டிர், ஆண்களுடன் உரையாடி உண்மை கண்டறியும் வாய்ப்பு மிகுதியாகவே உள்ள நண்பர் மலர்மன்னனுக்கு தமிழகத்தில் எண்பது சதவிகதத்திற்கும் அதிகமான முஸ்லிம்களுக்கு உருது தெரியாது என்ற ஒரு அடிப்படையான உண்மை கூட தெரியாமல் போனது வினோதமே!

நீதி நெறிகள் எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்னர் சொல்லப்பட்டிருந்தாலும் அவை நீதி நெறிகளே. திருக்குறள் இரண்டாயிரம் வருடத்திற்கு முற்பட்டது என்பதற்காக அவற்றைத் தூக்கி எறிந்து விடச் சொல்வாரா மலர்மன்னன்? எதுவாக இருப்பினும் அதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் இந்தக் காலத்திற்கும் பொருந்துகிறதா என்ற வரையறையைத்தான் அளவுகோலாக வைக்க வேண்டுமேயொழிய அது சொல்லப்பட்ட காலத்தையல்ல. அந்த வகையில் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இறைவனிடமிருந்து அருளப்பட்ட குர்ஆனில் சொல்லப்பட்ட எந்தக் கருத்து இன்றைய உலகிற்கு பொருந்தி வரவில்லை என்பதை ஆதாரத்துடன் நண்பர் மலர்மன்னன் சொன்னால் அவருக்கு நம்முடைய விளக்கத்தை அளிப்போம். அவருடைய தவறான புரிதல்களை களையவும் செய்வோம்.

தனியொரு இஸ்லாமியப் பெயர் தாங்கியோ அல்லது இஸ்லாமியப் பெயர் தாங்கிய அரசுகளோ செய்வதற்கெல்லாம் இஸ்லாம் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்? உதாரணமாக தென் தமிழகத்தில் பெண் சிசுக் கொலைகள் சர்வசாதாரணமாக நடைபெற்று வந்த காலம் ஒன்று உண்டு. இன்று வரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டுதானிருக்கின்றன. நண்பர் மலர்மன்னன் இத்தகைய பெண் சிசுக் கொலைகளை அறிவில்லாத மூட மக்கள் செய்கின்றனர் என்று சொல்வாரா அல்லது அம்மக்கள் சார்ந்திருக்கும் மதம் செய்யச் சொன்னது என்று சொல்வாரா? எனவே குர்ஆன், ஹதீஸில் இருக்கின்ற விடயத்திலிருந்து நண்பர் மலர்மன்னன் கேள்வி எழுப்பினால் அவருக்கு விளக்கமளிப்போம். இதை விடுத்து இஸ்லாம் அனுமதிக்காத ஒன்றை இஸ்லாமியப் பெயர்தாங்கிகளோ அல்லது இஸ்லாமியப் பெயர்தாங்கி அரசாங்கமோ செய்யும் பொழுது அவை தனியொரு மனிதனின் தவறாகவோ அல்லது ஒரு அரசாங்கத்தின் தவறாகவோ மட்டுமேதான் எடுத்துக் கொள்ளப்படல் வேண்டும்.

இஸ்லாம் வன்முறையின் மூலம் பரவியது என்ற கூற்றை நிரூபிக்க நாம் ஆதாரப்பூர்வமான வரலாற்று சான்றுகளை கேட்டால் யூடியூபில் இருந்து ஆதாரங்களை அள்ளி தருகிறார் நண்பர் மலர்மன்னன். அதுவும் நிகழ்காலத்தில் தனியொரு இஸ்லாமியர் அல்லது இஸ்லாமியப் பெயர்தாங்கி அரசுகள் செய்யும் தவறுகளை அதுவும் இஸ்லாம் மறுக்கின்ற செயல்களை இஸ்லாத்தின் பெயரால் பட்டியலிடுகின்றார். யூடியுப் என்றிலிருந்து அங்கிகரீக்கப்பட்ட வரலாற்று ஆவணமாகியது என்று எமக்கு தெரியவில்லை. உலகத்தின் எந்த மூலையில் வாழுகின்ற எவராலும் யூடியூபில் வீடியோக்களை உலவ விட முடியும் என்ற நிலை இருக்கும்போது அது எப்படி வரலாற்று உண்மை ஆவணமாக இருக்க முடியும்? எந்த வரலாற்று அறிஞர்கள் இத்தகைய வீடியோக்களை ஆய்வு செய்து உண்மைப்படுத்தியிருக்கின்றார்கள் என்பதை நண்பர் மலர்மன்னன் விளக்கினால் நன்றாக இருக்கும்.

வன்முறையின் மூலம் அல்லது நிர்ப்பந்தத்தின் மூலம் நிலை நிறுத்தப்படுகிற எந்த ஒன்றும் நிலைத்து நின்றதாக சரித்திரமே கிடையாது என்பதை உலக வரலாற்றை அறிந்த எவரும் உறுதியாக கூறிவிடலாம். ஆனால் பதினான்கு நூற்றாண்டுகளாக இஸ்லாம் தன்னளவில் வளர்ந்து வருகிறதேயன்றி அதை பின்பற்றுவோர் எண்ணிக்கை குறைந்து விடவில்லை. ஒரு வாதத்திற்காக நண்பர் மலர்மன்னன் கூறுவது போல வன்முறையின் மூலம் இஸ்லாம் பரவியது என்று வைத்துக் கொண்டால் அமைதியான சூழலில், நிர்பந்தத்தால் இஸ்லாத்தை தழுவியவர்கள் விலகி விட வேண்டும். அது தான் உலக நியதி. நிர்பந்தத்தால் இஸ்லாத்தை ஏற்றவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறியிருக்க வேண்டுமல்லவா? அப்படி எவ்வளவு மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை விட்டு வெளியேறியிருக்கின்றனர் என்பதை நண்பர் மலர்மன்னன் ஆதாரத்துடன் விளக்க வேண்டும். அதற்கும் யூடியூபை ஆதாரமாகக் காட்டி விடாதீர்கள் நண்பரே.

மருமகள்கள் மட்டுமே இறக்கும் ஸ்டவ் அல்லது கேஸ் அடுப்புக்கள் வெடிப்பது இஸ்லாமியக் குடும்பங்களில் இல்லாமல் போனது ஏன் என்று நண்பர் மலர்மன்னன் சிந்தித்து பார்த்தாரா? பெண்களுக்கு அவர்களின் கணவன்மார்கள் மணக்கொடைகளைக் கொடுத்து மணமுடிக்கச் சொல்லுவது தூய்மையான இஸ்லாம். வரதட்சணை வாங்குவது விலக்கப்பட்டது (ஹராம்) என்று சொல்லும் ஒரே மதம் இஸ்லாம்தானே. பெண்கள் எத்தகைய போராட்டங்களுமின்றி தம்முடைய சொத்துரிமையை அடைந்தது இஸ்லாமிய சமுதாயத்தில் மட்டுமே. தன்னுடைய கணவனை அவளே தெரிவு செய்ய வேண்டும் என்றல்லவா இஸ்லாம் கூறுகிறது. தூய்மையான இஸ்லாத்தில் ஆண்கள் தம்முடைய மனைவியை விவாகரத்து செய்ய வேண்டுமெனில் குறைந்தது ஆறு மாதங்களாவது காத்திருத்தல் வேண்டும். ஆனால் பெண்களோ தம்முடைய கணவனைப் பிடிக்கவில்லையெனில் அடுத்த நிமிடமே விவாகரத்து செய்து விடலாம். இதற்கு “குலா” என்று பெயர். இத்தனை உரிமைகளையும் பெண்களுக்கு ஆன்மா என்ற ஒன்று இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த காலகட்டத்தில், இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியது என்பதை நண்பர் மலர்மன்னன் உணர வேண்டும். பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே எவரும் கற்பனை கூட செய்து பார்த்திராத வகையில் பெண்ணுரிமையை பேணிக்காத்தது இஸ்லாம் மட்டுமே.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பர் முன்னோர்கள். ஆம் எட்டாவது நாளிலேயே நண்பர் மலர்மன்னனின் புளுகும் புனைவுகளும் நாம் எடுத்த வைத்த இந்த வாதங்களின் மூலம் களையப்பட்டு விட்டது என்றே நம்புகிறேன். சமஸ்கிருதம் வழக்கொழிந்த மொழி என்ற உண்மையை மொழியியல் வல்லுனர்கள் சொன்னால் கூட சினம் கொண்டு அவ்வாறு சொல்லக் கூடாது என்று பக்கம் பக்கமாய் கட்டுரை எழுதும் நண்பர் மலர்மன்னன் அவர்களே, இஸ்லாத்தின் மீது அபாண்டமாய் பழி போடும் புனைவுக் கட்டுரைகளைக் கண்டு அதற்கு பதில் சொல்லும் விதமாய் மறுப்புரை எழுதுவது கோபத்தினால் அல்ல. மாறாக உண்மையை விளக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே இத்தகைய மறுப்புரைகள் எழுதப்படுகின்றன என்ற உண்மையை எப்பொழுது உணர்வீர்கள்?

“சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி”

வள்ளுவன் சொன்னது போல நடுநிலைமை தவறாது எந்த ஒன்றையும் விவாதிப்போமேயானால் தீர்வுகள் நிச்சயம் கிடைக்கும். கருத்துப் பரிமாற்றம் விருப்பு வெறுப்புகளால் மூடிக்கிடக்கும் மனக் கதவுகளை திறக்கும்.

– பி.ஏ. ஷேக் தாவூத்

Series Navigation