கண்டதைச் சொல்லுகிறேன்

This entry is part [part not set] of 33 in the series 20091119_Issue

நாவிஷ் செந்தில்குமார்


இருவருக்கிடையேயான
வாள்வீச்சு
காயமின்றி முடிந்ததெனச்
சொல்கிறார்கள்…
பிரபஞ்சத்தின் வெளிகள்
வெட்டப்பட்டு
வழிந்துகொண்டிருக்கிறது
இரத்தம்
00
தன்னையுரசிச் சென்ற
பசுமாட்டை
‘எருமைமாடு’ எனத்
திட்டியவனைப் பார்த்து
‘ம்ம்ம்ர்ரூ’ என்றவாறு
நகர்ந்தது மாடு…
அவ்வார்த்தையை
குருடனென மொழிபெயர்த்தேன்
00
அடுக்குமாடி குடியிருப்பில்
விரகதாபத்தைக்
கொத்தித்தின்கின்றன
அருகிலுள்ள வீடுகளின்
கலவிச்சப்தங்கள்…
விரிசலடைகின்றன
விதவையொருத்தியின்
படுக்கையறைச்சுவர்கள்
00
நூற்றியிருபது கேட்ட
கடைக்காரனிடம்
நூறு தருவதாகச் சொல்கிறான்
வாங்க வந்தவன்…
பேரம்படியாமையின் கணங்களில்
நீள்கிறது
கறிக்கோழியொன்றின்
வாழ்க்கை
00
பெண்ணொருத்தியின்
ஜாக்கெட்டிலிருந்த
ஜன்னலின் வடிவம்
இந்திய வரைபடம்போலிருந்தது…
தமிழகமிருக்கிற
பகுதியிலிருந்த மச்சத்தை
சென்னையெனக் குறித்ததும்
மீள்கிறது பார்வை
–நாவிஷ் செந்தில்குமார்

Series Navigation