கடிதம் அக்டோபர்,7 2004

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

நாக இளங்கோவன்


என் அபிமானத்திற்குரிய திரு.அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கு:

தமிழர் தெய்வங்கள், வடவர் தெய்வங்கள் பற்றிய பல ஆய்வுகளும்,

அவற்றில் உள்ள பல வேறுபாடுகளை நிறுவிய ஆய்வுகளும் நிறைய

உள்ளன. வரலாற்று அடிப்படைகள் தவறென்று நீங்கள் கூறுவது

நீங்கள் நம்பும் அடிப்படைகளைப் பொறுத்து என்று எடுத்துக் கொள்கிறேன்.

சங்கப் பாடல்களில் வேத வேள்விகளைப் பற்றிய குறிப்புகள் எத்தனையோ உண்டு.

ஆனால் அவையாவும் ஆரியம் இருந்ததற்கான அடையாளங்களே தவிர

இந்து மதம் இருந்ததற்கான அடையாளங்கள் அல்ல.

இதைப் பற்றி எழுதிக் கொண்டு போனால் ஓயாது.அது என் நோக்கமுமல்ல.

ஆனால் ஒன்று:நீங்கள் கூறியபடி, மக்கள் மனதில் பதிந்து போனவற்றை

மாற்றுவது கடினம். அதனாலேயே இந்த இந்து மதமே வேண்டாம் என்று

ஓடிப்போவோர் நிறைய. பகவத் கீதையையும் மனுதர்மத்தையும்

கையில் பிடித்துக் கொண்டு, அரைகுறையாக

வணிகம், மானகை, நிர்வாகம் என்று கண்ணில் பட்டவற்றோடு

ஒப்பிட்டு இந்து மதத்தில் உள்ள அழுக்குப் புறங்களை நிறுவ முயலுவோர்கள்

‘மனதில் பதிந்து போனவற்றை மாற்றுவது கடினம் ‘. இதற்கு சாதாரண மக்கள்

மட்டுமல்ல, கடந்த மாதம் 6-செப்-04 திகதியிட்ட பிசினசு வொர்ல்டு

இதழின் 56 ஆம் பக்கத்தையும் பாருங்கள். பொதினப் படிப்புக் கூடங்களை

ஆராய முற்பட்ட அந்த இதழின் ஒரு பெட்டிச் செய்தியாக இந்தியாவில் MBA படித்தவர்களை

அவர்களின் கல்லூரித் தகுதியை அடிப்படையாக வைத்து

பிராமணன், சத்ரியன், சூத்திரன், வைசியன் என்று ஒரு அருவெறுக்கத்தக்க

ஒப்புமையைப் போட்டிருக்கிறார்கள்.

இங்கு, வரதன் என்பார், நிர்வாகத்தின் புரிதல் குறைவோடும், ISO புரிதல்

குறைவோடும் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்று பிரித்து

புளகாங்கிதம் அடைந்தாரே, அதையே பிசினசு வொர்ல்டும் செய்துள்ளது.

போதாததற்கு ‘All corporate animals are equal; but some corporate

animals are more equal than others ‘ என்று ஒரு சொலவடையையும் சியார்ச்

ஆர்வெல் நடையில் எடுத்து விடுகிறது பிசினசு வொர்ல்டு.

இன்றைய காலச் சூழலில், முடிந்த வரை எல்லா வேலைகளையும் வெளியே கூலிக்குக் கொடுத்து

செய்து முடிக்கும் நிலை உள்ளது. வேலை/பொதினச் செலுத்தங்கள் எல்லாமே Outsourcing

என்ற வெளிஆதாரத்தைக் கொண்டு நிகழ்கிறது. இது எந்தத் துறையையும் விட்டு வைக்க வில்லை.

நெதர்லாண்டு, இசுபெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளில்

இறந்தவர்களைப் புதைக்கும் எல்லா சடங்குகளையும்

முழுக்க முழுக்க வெளிஆதாரத்துடன் செய்கிறார்கள்.

அதாவது, யாராவது செத்துப் போனால்,

காசோலையை அனுப்பி விட்டால் போதும்,

மற்ற எல்லா இழவு வேலைகளையும் அந்த நிறுவனம் செய்து விடும்.

நம்மூரில் ‘கூலிக்கு மாரடிப்பு ‘ என்பார்களே அதைப்போன்றதுதான் அது.

காலத்திற்கும் பொருந்தும் மனுதர்மக் கோட்பாடும் பகவத் கீதையும்

என்று சொல்லும் திரு.வரதனும், அதையே சுட்டிக் காட்டும் பிசினசு வொர்ல்டும்,

முழுக்க முழுக்க இழவு/சாவு வேலையை செய்யும் நிறுவனங்கள்

வரும்போது, அதில் யாரை பிராமணன் என்பார்கள், யாரை சத்திரியன்

என்பார்கள், யாரை சூத்திரன் என்பார்கள் என்று தெரியவில்லை.

ஆகையால்தான், இந்து மதமும் அதன் பிடிப்பாளர்களும் அருவெறுக்கத்தக்க

முறையில் தொடர்ந்து நடந்து கொண்டு, தங்கள் தலையில் மண்ணைப் போட்டுக்

கொண்டிருக்கிறார்கள் என்பது பொதுக் கருத்து. இதில் இந்து மதம் என்னவாகும்

என்ற கவலை இந்து மதப் பிடிப்பாளர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ,

வைதீகத்தை இணைத்துக் கொண்டு தம்மை இழந்திருக்கும்

சிவநெறிக்கும் விண்ணெறிக்கும் சிவமும் மாலியமும் என்னவாகுமோ என்ற

அச்சம் ஏற்படாமல் இருக்க முடியாது.

வைதீகத்தின் கொடுமை தாங்காது இந்து மதத்தை விட்டு பிற மதத்திற்கு

ஓடுகிறார்களே மக்கள், இந்த வைதீகத்தை தொலைத்து நம்மை நிலை நிறுத்திக்

கொள்ள வேண்டும் என்று சிவமும் மாலியமும் எண்ணுகின்ற புதிய சிந்தனைதான்

நான் எழுதிய கருத்துகள்.

இசுலாத்தையும், கிறித்துவத்தையும் சென்றடைய ஓடுகிறவர்களைத் தடுக்க

சட்டமே போட்டார்கள் என்ற நிலை வெட்கக் கேடு அல்லவா ?

அது இல்லாமல், ஓட விரும்புகிறவர்கள், நான் இந்து அல்ல, இந்து மதத்தில்

இருந்து விலகி என் சைவத்தோடு நின்று விட்டேன் – இன்று முதல் நான் ஒரு

சைவன் – அந்த சைவத்தில் இந்து மதத்தில் இருக்கும் வெட்கக் கேடுகள் கிடையாது;

அப்படி இருப்பினும் அது களையப்படும் என்று ஒருவர், இருவர், பலர் கூறி

விலகிப் போனால், அதைத் தடுக்க யாரால் முடியும் ? சிவனும் மாலும்

கூட மகிழக் கூடும்!!

இதை வலியுறுத்தவே என் பகவத் கீதை மற்றும் செம்மொழி குறித்த மடல்கள்.

கருணாநிதி மேல் அபிமானம் காட்ட மட்டும் அல்ல!

அன்புடன்

நாக.இளங்கோவன்

Series Navigation