கடவுள் வழிபாடும், தனிநபர் வழிபாடும்

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

அருளடியான்


தமிழ் நாட்டில் கடவுள் மறுப்புக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த பொியார் தனிநபர் வழிபாட்டை ஒருபோதும் ஆதாிக்கவில்லை. பொியார் மேடையில் பேசும் போது, எதிரே நாற்காலியில் அமர்ந்திருந்தவர் கால் மேல் கால் போட்டுக் கொண்டும், காலை ஆட்டிக் கொண்டும் இருந்தார். அதனைத் தொண்டர்கள் தடுக்கச் சென்ற போது, அவர்களைத் தடுத்து கண்டிக்கவும் செய்தார். ‘அவனுடைய கால் அவன் ஆட்டுகிறான். அதை ஏன் தடுக்கிறீர்கள் ? ‘ என்று கேட்டார். பொியாருக்குப் பின் அறிஞர் அண்ணா, தனிக்கட்சி தொடங்கிய காலகட்டத்தில் இருந்து தான் தனி நபர் வழிபாடு தொடங்கியது. கட்சித் தலைவர்களுக்கு, அறிஞர், கலைஞர், நாவலர் என்று சிறப்புப் பெயர் கொடுக்கும் பழக்கமும், அவர்களது பெயரைக் குறிப்பிட்டால் அவமாியாதை போலக் கருதும் நிலையும் ஏற்பட்டது. இதனை ஈ.வெ.கி. சம்பத்தும், கவிஞர் கண்ணதாசனும் அப்போதே கண்டித்தனர். அரசியலிலும் இந்து மதம், இஸ்லாம், கிறித்துவம் ஆகிய மதங்களிலும் நிகழும் தனி நபர் வழிபாட்டை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். என் கட்டுரையில், தகவல் பிழை இருப்பின் அன்புடன் சுட்டிக் காட்டுமாறு திண்ணை வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

அரசியல்

தி.மு.கவில் தேர்தல்கள் நடந்தாலும் மு. கருணாநிதி தான், அண்ணாவுக்குப் பிறகு தலைவராக இருக்கிறார். அஇஅதிமுகவில் ஜெயலலிதா தான் எம்.ஜி.ஆருக்குப் பிறகு மிக நீண்ட காலத்துக்குப் பொதுச் செயலாளராக இருக்கிறார். காலில் விழும் கலாச்சாரத்தை பரப்பி, தமிழர் மானத்தை கப்பலேற்றி வருகிறார். பா.ம.கவில் தலைவராக இருப்பவர் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் தான். நிறுவனரான டாக்டர் ராமதாஸுக்குத் தான் அனைத்து அதிகாரமும் உள்ளது. ம.தி.மு.க தொடங்கப் பட்டதில் இருந்து வைகோ தான் பொதுச் செயலாளர். இவையெல்லாம் தனி நபர் வழிபாடு இல்லாமல் வேறென்ன ? உள்கட்சி ஜன நாயகத்தைப் பேணுவதில் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு அடுத்து பா.ஜ.க தான் வருகிறது. காங்கிரஸில் இருப்பது உள் கட்சி ஜனநாயகமா ? அல்லது கோஷ்டிப் பூசலா என்று பட்டிமன்றம் நடத்த வேண்டும்.

இந்து மதம்

இந்து மதத்தில் தனி நபர் வழிபாட்டை கண்டித்து குரல் எழுப்பும் இந்துமதப் பேச்சாளர் சுகி. சிவத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். இவர் தொடர்ந்து, தமிழ் நாட்டில் மிகச்செல்வாக்குள்ள ஒரு மடத்தின் தமிழின விரோதப் போக்கையும், தனிநபர் வழிபாட்டு ஊக்குவிப்பையும், பிற முறைகேடுகளையும் கண்டித்து வருகிறார். சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் குட்டி சாமியாரையும், இந்து மத நூல்களின் மேற்கோள்களுடன் கண்டித்து சன் டிவியில் பேசினார்.

இஸ்லாம்

இஸ்லாத்தின் அடிப்படை ஓாிறைக் கொள்கையாகும். தமிழ் நாட்டில் இதனைப் பிரச்சாரம் செய்த ஆலிம்கள் 80களின் இறுதியில் பல சோதனைகளைச் சந்தித்தனர். இப்போது அவர்கள், மிகச்சுலபமாக தமிழ் நாடு முழுதும் சுற்றிப் பிரச்சாரம் செய்ய முடிகிறது. தனியார் தொலைக்காட்சிகளில் பிரச்சாரம் செய்ய முடிகிறது. இது அவர்களுக்கு வெற்றி தான். விடுவானா ஷைத்தான் ? அவர்களை வென்று விட்டான். ஏகத்துவப் பிரச்சாரம் செய்த ஆலிம்கள், தங்களை வழிபட ஒரு கூட்டத்தை உருவாக்கி, இஸ்லாமிய சமுதாயத்தில் பிாிவினையை உண்டாக்கி விட்டனர். தனிநபர் வழிபாட்டைக் கண்டித்து தெருத்தெருவாக முழங்கியவர்கள் தங்களை வழிபட ஒரு கூட்டத்தை உருவாக்கி விட்டனர். உருவான கூட்டமோ, ரசிகர் மன்றங்களை விட மோசமாக சுய சிந்தனை இல்லாமல் உருவாகி விட்டது.

கிறித்துவம்

கிறித்துவ மதத்தில் கூட்டு நிர்வாகம் இருப்பினும், நடைமுறையில் ஒரு சில பாதிாியார்களின் சர்வாதிகாரம் தான் உள்ளது. திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தீண்டாமைக்கு பாதிாிகள் துணை போகின்றனர். பாதிாிகளைப் பற்றி வரும் வேறு செய்திகளும் மோசமாக உள்ளது.

தீர்வு

தமிழன் எப்போதுமே பாராட்டுவதில் அளவு கடந்து விடுவான். இதுவே தனிநபர் வழிபாட்டுக்கு காரணம். தமிழ் நாட்டில் தனி நபர் வழி பாட்டில் உச்சியில் இருப்பது ரசிகர் மன்றங்கள். அவற்றைப் பற்றி பல கட்டுரைகள் வந்துள்ளதால், அதனை இங்கு குறிப்பிடவில்லை. அரசியலில் உள்கட்சி ஜனநாயகம் இல்லாத கட்சிகளை வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும். உள்கட்சி ஜனநாயகம் இல்லாத கட்சிகளில் இருந்து அதன் இரண்டாம் மட்டத் தலைவர்களும், உறுப்பினர்களும் கூண்டோடு விலக வேன்டும். கடவுள் நம்பிக்கையாளர்கள், தங்கள் சாமியார் சொல்வதை, ஆலிம் சொல்வதை, பாதிாி சொல்வதை தங்கள் வேத நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இதனால் அவர்களும் தங்கள் சுயகருத்தை வெளியிடுவதை நிறுத்துவர். தனிநபர் வழிபாடு படிப்படியாக ஒழியும்.

—-

aruladiyan@netscape.net

Series Navigation

அருளடியான்

அருளடியான்