ஒற்றை மீன்

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

இளங்கோ


*
எல்லையற்று நீளும் துயரச் சுவரில்
கரும்பாசி போல்
படிந்திருக்கிறாய்

தனிமைப் போக்கும் வழியற்று
அகன்ற கண்ணாடிக் குடுவையில்
நீந்தும்
என்
ஒற்றை மீனுக்கு

உன்னைக் கொஞ்சம்
சுரண்டி
உணவிடுகிறேன்

அது
குமிழ் குமிழாய்
உடைத்துக் கொண்டிருக்கிறது
தன் பெருமூச்சை

*****
2. கண்ணீர் குரல்
*
தொலைதூர
செல்போன் அழைப்பின்
வழியே
பிசுபிசுக்கும்..

உன்
கண்ணீர் குரலால்

ஆலங்கட்டிக் கொள்கிறது
இந்த
உரையாடல்..

******
–இளங்கோ

Series Navigation