ஒரு சொட்டு இரும்பு

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

கோ துக்காராம்


‘உன் பட்டுக் கைப்படப் பாடுகிறேன் ‘ என்று மெல்லிய குரலில் திருச்சி ரயில்நகர் சுரங்கரயில் நிலையத்தில் பாடிக்கொண்டிருந்ததை என் காது கேட்டுக்கொண்டிருந்தது. சத்தம் போடாமல் ‘பஸ்ஸ்ஸ் ‘ என்று பக்கத்தில் வந்து பொன்னகருக்குப் போகும் ரயில் வந்து நின்றது. திருச்சி மெயின்கார்டு கேட்டிலிருந்து வந்த ரயில் சிலரை துப்பிவிட்டுக் காத்திருந்தது.

நான் ஏறவென்று.

நான் ஏறினேன்.

பஸ்ஸென்று மூடிக்கொள்ள இருளில் விரைந்தது சுரங்கரயில்.

மெல்ல நடந்து இருக்கையை அடைந்து உட்கார்ந்தேன். எதிரே ஒரு முதியவர் படித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.

‘என்ன படிக்கிறீங்க ‘ என்றேன்.

அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்து, என் முகத்தைப் பார்த்து அமைதி அடைந்து, ‘அதுவா… பொன்னியின் செல்வன். பழங்காலத்து புத்தகம். மணியம்னு ஒருத்தர் எப்படி அழகா படம் போட்டிருக்கார் பார் ‘ என்று என்னிடம் கணினியை காட்டினார்.

‘ம்ம்ம்.. நல்லாத்தான் இருக்கு.. ‘ என்றேன்.

‘நீ படித்ததில்லையா… இந்த நாவல் நல்லா இருக்கும்… ஓய்வு நேரத்தில் படித்துப்பார் ‘ என்றார்.

ஓய்வு நேரம்தான். எனக்கு இனிமேல் எல்லாமும் ஓய்வு நேரந்தான். என் வாழ்நாளில் இவ்வளவு நாள் பார்த்து வந்த வேலை போய்விட்டது. இனி என்ன செய்ய ? வேலையை விட்டுத் தூக்கிவிட்டார்கள். தூக்கிய காரணம் தெரிந்தால் எவன் வேலை தருவான் ?

‘என்ன விழிக்கிறாய் ? படிக்கிறாயா ? ‘ என்று என்னிடம் கணினியை நீட்டினார்.

‘இல்லை படிக்க விருப்பமில்லை. படித்து என்ன நடக்கப்போகிறது ? ‘ என்றேன்.

பஸ்ஸென்று ரயில் நின்றது. திருச்சி தேசியக்கல்லூரி, பொன்னகர் என்று மெல்லிய பெண்குரலில் துல்லியமாக குரல் கேட்டது. ‘ஓ… பொன்னகர் வந்துவிட்டது ‘ என்று எழுந்த முதியவர், ‘பாப்பம் ‘ என்றவாறு கதவைக் கடந்து வெளியேறினார்.

நான் மல்லாந்து படுத்தேன்.

என்ன பெரிய பிரச்னை. நானே வலியை தாங்கிக்கொண்டேன். இவர்களுக்கு என்ன வந்தது ? என்னை தூக்கிவிட்டார்கள். கதவைத் திறந்து என்னுடைய அறைக்குச் சென்றிருக்க வேண்டும். வேலை போன வருத்தத்தில் இப்படிச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்.

என்ன அறை ? ஒரு நாலடி நீளமும் நாலடி அகலமும் உள்ள ஒரு படுக்கை. இதுதான் என் அறை. தொழிற்சாலைக்குப் போகவேண்டியது. செய் என்றால் செய்யவேண்டியது. நேரம் முடிந்ததும் கதவைத் திறந்து கொண்டு அறைக்குச் சென்று படுக்கவேண்டியது மோட்டு வளையைப் பார்த்துக்கொண்டு. எத்தனை வருடங்கள் இப்படியே ? இது என்ன எழவு வாழ்வு ?

இருந்தும் வேலை போனது உலகமகா வெறுப்பாக இருந்தது.

ஒரு பெண் அருகே வந்து உட்கார்ந்தாள்.

‘உங்கள் காலை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் ‘ என்று சொன்னாள்.

நான் அண்ணாந்து அவளைப் பார்த்தேன்.

‘முடியாது ‘ என்றேன்.

‘நான் போலீஸை கூப்பிட வேண்டிவரும் ‘ என்றாள்.

‘உனக்கு இங்கே நிறைய இடம் இருக்கிறது.. ஏன் என்னைப் படுத்துகிறாய் ? ‘ என்றேன்.

‘இதுதான் என் பழக்கமான இடம் ‘

‘அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது ‘

‘போலீஸ் ‘ என்று எழுதியிருந்த ஒரு பட்டனை அழுத்தினாள்.

‘வேண்டுமாயின் கூப்பிட்டுக்கொள். எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை ‘ என்றேன்.

சொல்லி வாய்மூடுவதற்குள் இரண்டு போலீஸார் என்னருகே வந்து நின்றிருந்தார்கள். முகத்தில் இரக்கமற்ற, ஈரமற்ற கண்கள்.

‘என்ன பிரச்னை இங்கே ‘

‘இவர் இந்த இடத்திலிருந்து எழ மாட்டேன் என்கிறார் ‘ என்று அந்தப் பெண் சொன்னாள்.

‘அதுவெல்லாம் ஒரு பிரச்னை கிடையாது.. நீ வேறெங்கும் போய் உட்கார்ந்து கொள் ‘ என்று நான் சொன்னேன்.

‘உனக்கு முன்னுரிமை கிடையாது. அந்தப் பெண் வந்து சொன்னால் நீ கேட்கவேண்டியதுதானே. மேலும் இது பெண்கள் முன்னுரிமை வண்டி ‘ என்றவாறு போலீஸார் என்னை தூக்கினார்கள்.

ஏதோ என் உடம்பில் செருகியது போலத் தோன்றியது. நான் நினைவிழந்தேன்.

***

நான் விழித்தபோது போலீஸ் நிலையத்தில் இருந்தேன்.

‘தொழிற்சாலைகள்ளேர்ந்து இப்படி ஓடுறது அதிகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. இது மூணாவது ஆள் இந்த போலீஸ் நிலையத்துக்கு ‘ என்று ஒருவன் பேசுவது கேட்டது.

எழுந்து உட்கார்ந்தேன்.

என் கண்ணில் பட்ட முதல் போலீஸிடம், ‘என்னை என்ன செய்யப்போகிறாய்.. நான் என் அறைக்கே போய்விடுகிறேன். என்னை விட்டுவிடு ‘ என்றேன்.

‘அம்பி. அப்படி விட்டுவிட முடியாது. நீ நிறையப் பிரச்னை பண்ணிக்கொண்டுவிட்டாய். ஒரு பெண்ணிடம் தகராறு செய்திருக்கிறாய். உன்னைத் தேடி உன் தொழிற்சாலை சொந்தக்காரர் வந்து கொண்டிருக்கிறார். நீ தொலைந்தாய். அவ்வளவுதான் ‘ என்றான் அவன்.

‘நான் வாயில்லாப்பூச்சி. என்னை விட்டுவிடு. நான் போய்விடுகிறேன் ‘ என்று எழுந்து நிற்க முயற்சி செய்தேன். அப்போதுதான் பார்த்தேன். என் முழங்காலை சுவற்றோடு வைத்து சங்கிலியால் கட்டியிருக்கிறார்கள்.

ஒன்றும் செய்யமுடியாமல் அப்படியே உட்கார்ந்தேன். ஜன்னலின் வழியே வெளியே தெரு தெரிந்தது. ஒரு ஆணும் பெண்ணும் கரம் கோர்த்து சென்று கொண்டிருந்தார்கள். எனக்கு அப்படி ஒரு நட்பு இல்லை. யாருடனும் இல்லை. தன்னந்தனியே வாழ்ந்து தன்னந்தனியே உழைத்து தன்னந்தனியே சிறைப்பட்டுக்கிடக்கிறேன்.

அப்படியே படுத்தேன். இரும்பு போன்ற தரை குளிர்ந்து இருந்தது. உணவு இல்லாமல் இன்னும் எவ்வளவு நேரம் தாங்குவேன். உணவின்றி ஒரு வேளை இருந்ததில்லை. ஒரு தொழிற்சாலையில் வேலை செய்வதில் ஒரே ஒரு லாபம் அதுதான். வேளாவேளைக்கு உணவு. தொழிற்சாலையை விட்டு இரண்டாம் முறை வெளியே வந்திருக்கிறேன். வெளியே வர தேவையும் இல்லை.

சற்று நேரத்தில் கதவைத் திறந்து கொண்டு மூன்று பேர்கள் உள்ளே வந்தார்கள். முதலில் வந்தவர் என் தொழிற்சாலை சொந்தக்காரர். கூட வந்த இருவரும் என் கூட வேலை செய்பவர்கள்.

‘நான் பத்திரக் கையெழுத்து போடுகிறேன். அவனை விட்டுவிடுங்கள் ‘ என்றார் போலீஸிடம்.

‘சரி நீங்கள் சொன்னால் சரிதான். இது மூன்றாவது தடவை. இது போல இனி நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் அடிமைகளை எப்படி நடத்தவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லித்தர வேண்டியதில்லை ‘

‘தவறு நடந்துவிட்டது. மன்னிக்க வேண்டும். இனி நடக்காமல் இருக்க நான் உத்திரவாதம் ‘ என்றார்.

‘இருந்தாலும் இது மூன்றாவது தடவை நடந்திருப்பதால் நான் இதனை மேலிடத்துக்குச் சொல்லவேண்டியவனாக இருக்கிறேன். ‘ என்றார் போலீஸ்.

‘நான் தான் உத்திரவாதம் தருகிறேனே. ஏன் அனாவசியமாகப் பயமுறுத்திக்கொண்டிருக்கிறீர்கள். எஃப்.ஐ.ஆர் பண்ணவில்லைதானே. ‘ என்றவாறு போலீஸின் கையை பிடித்து குலுக்கினார்.

போலீஸ் தன் கையை விரித்துப் பார்த்துக்கொண்டே.. ‘சரி சரி.. இனி நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் ‘ என்றார்.

ஒரு போலீஸ் குனிந்து என் முழங்காலில் இருந்த சங்கிலியை விடுவித்தார். நான் எழுந்து நின்றேன்.

‘வா போகலாம் ‘ என்று சொந்தக்காரர் சொன்னார்.

‘வருகிறேன் ‘ என்றேன்.

நால்வரும் வெளியே வந்தோம். உள்ளே இருந்த குளிர்காற்று போய், திருச்சியின் கந்தக பூமியிலிருந்து வெளிப்படும் வெக்கை என்னை அடித்தது.

மெளனமாக நாங்கள் நடந்தோம். சற்று நேரத்தில் எதிரே எங்கள் தொழிற்சாலை தோன்றியது. தொழிற்சாலைக்குள் நுழைந்ததும் என் அைறையை நோக்கித் திரும்பினேன்.

‘அங்கே இல்லை.. இந்தப்பக்கம் ‘ என்றார் என் தொழிற்சாலையின் சொந்தக்காரர்.

நான் திரும்பி, ‘இங்கேயா ? ‘ என்று குழறினேன்.

என் தொழிற்சாலையின் சொந்தக்காரர், என் முதலாளி, ‘ ஆமாம், சரி போ ‘ என்றார்.

அவர்கள் நின்று கொள்ள நான் மட்டும் நடந்தேன். மூடியிருந்த கதவைத் திறந்து குதித்தேன். ஒரு சொட்டு இரும்பு விழுந்ததால் பொசுங்கிப்போன என் கட்டைவிரல் என் கண்முன்னே நின்றது. கீழே சிதறிக்கிடந்த பாகங்களின் நடுவே என் உடலும் விழுந்தது. விழுந்த வேகத்தில் என்னுடைய உடலிருந்து மரைகளும் திருகாணிகளும் கம்பிகளும் வயர்களும் கழன்று தெறித்தன. மேலிருந்து ஒரு ராட்சத சுத்தியல் இறங்கி என்னை அணைத்தது.

அமைதி.

***

thukaram_g@yahoo.com

***

Series Navigation

கோ.துக்காராம்

கோ.துக்காராம்