ஒருவீடும் விவாகரத்தும்

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

மாலதி


—-

கடலுப்பு வீச்சமும் மீன் நாற்றமும் கட்டியம் சொல்லிவிட்டன மசிலிப்பட்டணம் நெருங்கிவிட்டதை. அடுத்தடுத்து மசிலிப்பட்டிணம் வர வேண்டியதாகிவிட்டது. இந்த வருடத்துக்குள் மூன்றாவது டிரிப் இது. அப்பா காரியத்துக்காக வந்தது போன முறை. மகனின் விவாகரத்துக்கு நடையாய் நடக்கிறது சிரமமான விஷயம். கல்யாண காரியத்தில் எனக்கு இத்தனை அலைச்சல் இருக்கவில்லை.

மருமகள் கலா என் ஆப்த நண்பனின் மகள்.எல்லா விதத்திலும் அனுசரித்துப்போய் திருமணம் முடித்தோம். சின்னப் பெண்.உடை எதுவும் கச்சிதமாகப் பொருந்தும் கலாவுக்கு.என் வீட்டிலிருந்து பிறந்தகம் போகும்போது எத்தனை உற்சாகமாகக் கிளம்பினாள் ?தன் பொருட்களை எல்லாம் விட்டுத்தான் கிளம்பினாள் எங்களிடம்.போனவள் திரும்பவே போவதில்லை என்று யாருமே நினைக்கக்காரணம் வைக்கவில்லை.ஏனோ விவாகரத்துப் பேப்பர்கள் தாம் வீடு வந்து சேர்ந்தன.

நண்பன் முகம் கொடுக்கவில்லை. கடிதத்தில் குறிப்பிட்டிருந்தபடியே மீண்டும் மீண்டும் ‘என் பெண் சொல்வது தான் எனக்கு ஸ்திரம். அவள் சந்தோஷம் எனக்கு முக்கியம் ‘ என்றான்.

இருபது வயதுப் பெண்ணுக்குள் எத்தனை அழுத்தம் என்று கண்ணுக்கு முன்னால் பார்த்த

போது அதிர்ச்சியாயிருந்தது. என் மருமகளிடமும் நண்பனிடமும் எல்லாவிதமான பேச்சு வார்த்தைக்கும் தயாராயிருந்தேன்.என் மகனைக் கேட்டாலோ முடிவுகளுக்குத் தான் காரணமில்லை என்று மட்டுமே சொன்னான்.

குடும்பத்தலைவன் என்ற முறையில் எனக்குச் சொல்லத்தெரியும்,வீட்டுக்குள் சொல்லாலோ செயலாலோ வித்து விழவில்லை இந்த விபரீதத்துக்கு என்று. மகனாக இருந்து விட்டால் மட்டுமென்ன! உள்ளுக்குள் வேற்று மனிதன் தானே அவனும் ?என்னால் அவனை யார் ? என்று

கண்டுகொள்ள முடிந்ததில்லை. கலாவுக்குள் என்ன நடந்தது என்பதும் புதிர்.இத்தனைக்கும் ஒன்பது பக்கக் கடிதம் எழுதியிருந்தாள் எனக்கு. படித்ததில் எனக்குப் புரிந்தது ஒன்று.

அவளுக்குத் திருப்தியில்லை. கணவனிடம் ஏதோ குறையைக் கண்டு பிடித்திருந்தாள்.

மசிலிப் பட்டிணத்தில் பழைய போஸ்ட் ஆபீஸ் இருந்த தெரு என் இளமை நினைவுகளைப் பூட்டி வைத்திருக்கிற இடம்.அங்கு போய் நின்றால் என் பெட்டகம் திறந்து கொள்ளும்.

அங்கு தான் என் சொர்க்கம் இருந்தது. சொர்க்கத்துக்குச் சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள் உண்டு.நீண்ட ரயில் பெட்டி அமைப்புடைய வீடு அது.பாதி தளமும் பாதி ஓட்டுக் கட்டிடமுமாய் எளிய, சம்ப்ரதாய தெலுங்கர் வீடு.பின்னால் துளசி மாடம் ரெண்டு நாவல் மரம். அந்த வீட்டின் சுவர்களைக் கட்டிக் கொண்டு என் இரவுகள் கழிந்திருக்கின்றன. இன்றும் அதன் மூலைகள் என் கனவுகளின் முடிவுகளாகி விடுகின்றன.

தாய் மடியில் படுத்திருந்த இடம்,தந்தைக்கு பயந்து வராந்தாவில் பதுங்கியிருந்த இடம்,சின்னண்ணனிடம் சண்டையிட்டுப் பல் உதிர்ந்த இடம்,தங்கைக்குப் பூ முடித்த இடம்,அப்படி இப்படி என்றெலாம் அந்த வீட்டின் மீது ஆசைகள் என்று சொல்ல வரவில்லை எனக்கு. வயது ஏற ஏற என்னில் என் தகப்பனைப் புரிந்து உணர முடிந்தது;உடல் தழைத்த என் கூனலில்; வார்த்தை கொட்ட இயலாமல் பார்த்துக் கொண்டே நிற்பதில்; காலம் தவறாமல் என் காரியத்தை நானே செய்து கொள்வதில். எப்போதும் என் நிழலை மசிலிப்பட்டிணம் வீட்டுச் சூழலிலேயே அடையாளம் காண ஆரம்பித்திருந்தேன். தந்தை நடமாடிய வீடு எனக்கும் புகலாக வேண்டுமென்று எப்படியோ உள்ளுக்குள் வந்து விட்டது. எட்டு பிள்ளைகளைப் பெற்ற தகப்பனின் ஒற்றை வீட்டுக்கு எட்டாவது பிள்ளையான நான் எந்த விதத்தில் பாத்தியதை கொண்டாட முடியும் ?மசிலிப்பட்டிணம் வீட்டிலிருந்து பிய்த்தெடுக்க முடியாத ஒரு இருட்டும் இருந்தது.சொர்க்கத்துக்குள்ளே தானே நரகமும் ?ரெங்கையாவின் ஓங்கிய குரலும் உளுத்த பாஷையும் சதா சுவர்களில் மோதியவாறு…. அந்த வீடு.

வீட்டுப் பிள்ளையாய்ப் பிறந்தும் எப்போதும் வீட்டுக்கு வந்த விருந்தாளி போல எங்கள் எல்லாரையும் திருகிப் பிழிந்து எதையாவது கேட்டுப் பிடுங்குபவன். எல்லாரையும் போல வேலை வெட்டி பார்க்க வெளிக்கிளம்பாதே என்று யார் வற்புறுத்தியது அவனை ? அப்பாவுக்குப் பிரச்னையாகி விட்டான். ‘எனக்குச் செய்யவில்லை,என்னை அனுப்பவில்லை, என்னை மதிக்கவில்லை, நான் படிக்கவில்லை ‘ இதுவேயாகப் புலம்பல்.

நகை கவரிங் தொழில். பரம்பரை கம்சாலி வீட்டுத் தொழில். நடு முற்றத்தை அடைத்து ஆசாரி உலையும், துலாக்கோல் ஏறி உட்கார்ந்த ரைட்டர் டெஸ்க்கும் கிடந்தன என்பது தவிர தொழிலுக்குண்டான எந்த சுறுசுறுப்பும் மசிலிப்பட்டிணம் வீட்டுக்குள் வந்தது கிடையாது. ரெங்கையா ஊருக்குள் தரகு வேலைகள் செய்யும் நேரத்தைக் குடும்பத் தொழிலில் போட்டிருக்கலாம்.எத்து இல்லாத தொழில் கவரிங் தொழில். முழு அல்லாய் கம்பிக்குத் துளிப்

பொன்னால் பூச்சு செய்தால் போதும். பத்தரை மாற்றுத் தங்கம் போல நகை வருடக் கணக்கில் வரும்.பொய்க்காத தொழில்.

ரெங்கையாவின் சம்பாத்தியமும் குறைவில்லை. டி வி மிக்ஸி ரிப்பேர் வேலைகளைத் திறம்படச் செய்து சம்பாத்தியத்துக்கு வழி வைத்திருந்தான். என்ன உபயோகம் ?சேர்மானம் கரையும் வழிகள் இருந்தனவே!கெட்ட சகவாசம் தான். இன்னும் என்ன ? அப்பாவே உபத்திரவம் பொறுக்க மாட்டாமல் தம் கடைசி காலத்தில் பின்கட்டோடு ஒதுங்கி விட்டார்.

காவி வீட்டை எடுத்துக் கொண்டு[எப்போதோ காவிக் கலர் பூசியிருந்ததாலோ என்னவோ அந்தப் பெயர்]அதாவது வீட்டை நான் வாங்கிக் கொண்டு பணத்தை எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்து விடுவதாகப் பல முறை சொல்லியிருக்கிறேன் என் அண்ணன்மார்களிடம். ‘ரெங்கையாவை என்ன செய்யலாம்கிறே ? ‘ என்பதே எப்போதும் எல்லாருடைய எதிர்க் கேள்வியாய்

இருந்து வந்தது.

தொண்ணூற்றெட்டாம் வயதில் தகப்பனார் காலமாகி காரியத்துக்குக் கூடியிருந்தோம். கூடப் பிறந்தவர்கள்,பந்து ஜனம், பங்காளி,சம்பந்தக் காரன்,என்று ஏகக் கூட்டம். ‘இந்த வீட்டை விட்டுப் போகப் போக்கிடமில்லை எனக்கு. இது தான் என் பிழைப்பு ‘ என்று ரெங்கையா புலம்பியதில் வயசாளிகள் கண்ணை மூடிக் கொண்டு தீர்ப்பு சொல்லி விட்டார்கள்.வீட்டைச் சின்னண்ணன் ரெங்கையா பேருக்கு விட்டுக் கொடுத்துக் கையொப்பம் வைக்க முடிவாயிற்று.

மசிலிப் பட்டிணத்தில் பட்டை பட்டையாக இரும்புத் தகடுகள் அடிக்கப்பட்ட சைக்கிள் ரிக்ஷாக்கள் தாம் சுளுவான போக்குவரத்து. அடிக்கிற வெயிலில் மூன்றரை அடி உயரத்தில் காலை ஊன்றி ஏறி அமர்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.ஆர்த்தரிட்டிஸ் தொந்தரவால் எனக்கு நடக்கவும் இயலாமை வந்தாகி விட்டது. மீன் உலர்ந்த வீதிகளைத் தாண்டி என் நண்பன்….இல்லை, இல்லை, என் மாஜி சம்பந்தி வீட்டுக்குப் போகிறேன். அந்த அழி போட்ட திண்ணையில் நான் பெண் பார்த்த அனுபவத்தையும் முதல் குழந்தை பிறந்த செய்தியையும் கொண்டையாவுடன் பகிர்ந்திருந்த நேரங்களுண்டு.

கதவு பூட்டியிருந்தது. புழக்கத்தில் இல்லாத வீடு போல வலப் பக்கம் வேலிப் படல் கூட வளைத்துப் பூட்டப் பட்டிருந்தது. எதிர்க்கடை ரெட்டி என்னைப் பார்த்துக் கொண்டு வந்தார். ‘பொம்ம ராஜுவா ? வா,நானா, கொண்டையாவைப் பார்க்க வந்தியா ? ‘

முகமனுடன் வரவேற்றார். ‘வா,நானா, கடைசியிலே இப்படி ஆச்சு பாரு, நான் நெனைக்கலே,நானா, இப்படியாவும்னு, நேத்து உன் சகலையைப்பார்த்தேன், வருத்தப்பட்டான்,இந்தக்

கல்யாணத்தாலே நீயும் ஊரு,வாசல்னு வந்து போயிட்டிருப்பேன்னு நெனைச்சதென்ன, இந்தக் கருமாதிக்கு நீ நடையா நடக்குறதென்ன, எத்தைச் சொல்ல ? ‘ ஊருக்குள் தெரிந்தவன் எல்லாரும் பாடும் அதே பாட்டு. மெளனமாயிருந்தேன். ‘கொண்டையா வீட்டைக் காலி பண்ணி போஸ்ட் ஆபீஸ் தெருவுக்கே போய் விட்டான்.அதான் நானா,உங்க காவி வீடு தான்.ரெங்கையா வித்துப் போட்டான்,முடிஞ்சது கதை.சின்னப் பொண்ணுக்கு மஞ்சக் காணியா

எழுதிட்டானாம்,கொண்டையா.இப்ப போய் உக்காந்து மராமத்து செய்யறான். உன் மருமவ படிக்கப் போவுதாம்,விஜயவாடாவுலே. ‘ரெட்டி சொல்லிக்கொண்டே போனார்.

எனக்குள் பிராணன் பிசைந்து நொறுக்கப்பட்டது. துக்கப் படு நெஞ்சே! துக்கப்படு!தூங்கும்போது தவிர மீதி நேரமெல்லாம் கூடத் திரிந்து விளையாடிய நண்பனை சம்பந்தியாக்கிக் கொண்டு இழந்ததற்கு துக்கப்படு! ஒரு நல்ல நண்பன்,வெகுளியாய் அவன் மனைவி, விகல்பமே இல்லாமல் அவன் பெண் கலா, துள்ளுகிற சிறுமியாய் கலாவின் தங்கை, பாதத்தை அழுத்தி வைக்காத பட்டுப் போல் மனம் படித்த என் மனைவி, நான், வெளிப்படையான என் பிள்ளை -தெய்வமே! எங்கே தவறு ? எதனால் நேர்ந்தது இந்த இழப்பு ?

கொண்டையாவுக்குத் தெரியாததா ? போஸ்ட் ஆபீஸ் தெரு காவி வீட்டின் மீது என் பற்று ?

என்னைத் தோற்கடிப்பதில் அத்தனை பேருக்கும் ஆர்வமா ?உள்ளூரில் இருக்கும் என் அண்ணன்மாருமா அதில் சேர்த்தி ?இரட்டைப் பணம் கொடுத்து வீட்டை எடுத்துக் கொள்வதாக ஆறு வருடம் முன்பே சொன்னது நினைவிருந்தது எனக்கு.

சுரணையில்லாமல் ரெட்டி கடையில் டா குடித்து பஸ் ஸ்டாண்ட் போக சைக்கிள் ரிக்ஷா தேடினேன். ஏறியும் உட்கார்ந்தேன். கோர்ட் ஆர்டர் காப்பிகளைக் கொண்டையாவிடம் பெற்றுக் கொண்டாக வேண்டுமே! கலாவிடம் சேர்ப்பிக்க வேண்டிய சில வஸ்துக்கள் என் கைப்பெட்டியில் இருக்கின்றனவே! என் பழைய வீட்டுக்குப் போகும் ஆர்வமும் அவ்வளவு வேதனையும் மீறி வந்திருந்தது.சைக்கிள் ரிக்ஷாவை போஸ்ட் ஆபீஸ் தெருவுக்குத் துரத்தினேன்.

கடைசி முறையாக என்று நினைத்துக் காவி வீட்டைக் கண்ணில் எழுதிக் கொண்டேன்.

கம்பிக்கதவைத் திறந்து கொண்டு கொண்டையாவின் சின்னப் பெண் வந்தது. நிகு நிகுவென்று வளர்ந்திருந்தது.பாபுவின் நாகவல்லியில் இது என்ன அமர்க்களம் செய்தது ?

‘மாவையா,ரண்டி,ரண்டி ‘ என்றது.

கொண்டையாவின் மனைவியைக் காணோம்.சாயிபாபா ‘துனி ‘க்குப் போயிருந்தாளாம். கொண்டையா கலாவோடு விஜயவாடா கிளம்பிப் போயிருந்தானாம். எந்திரம் போல கொடுக்கவேண்டியவற்றைக் கொடுத்துவிட்டுப் பேப்பர்களை வாங்கிக் கொண்டேன்.

‘அம்மாயி, தாள் போட்டுக்கம்மா,.. ‘கால்களைத் தேய்த்து தேய்த்து பலவீனமாக வீதிக்கு வந்தேன். சின்னக் குட்டி தயங்கி நின்றது. ‘ஒரு நிமிடம் மாவையா! ‘ என்றது. ‘மாவையா!… ‘ கண்ணுக்குள் பார்த்தது. ‘ஒரு விஷயம் உங்க கிட்ட சொல்லணும் , மாவையா!பாவாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்,நேற்று தான் நயினாவுக்கும் சொன்னேன்,மாவையா! ‘

ஒரு கணத்தில் பெரிய மனுஷியாகி விட்ட பெண் என் முகத்தில் வைத்த கண்ணை

எடுக்காமலேயே தொடர்ந்தாள். ‘நீங்க எப்பவும் போல மோர் குடிக்க வரணும் எங்க வீட்டுக்கு.பாக்கு வாயிலே வெச்சுக்கிட்டே சிரிக்கணும்.மாவையா, நான் பாவாவைக் கல்யாணம்

பண்ணிக்கிறேன், என்னை உங்கள் மருமகளாக அழைத்துக்கொள்ள இஷ்டமா மாவையா, உங்களுக்கு ? ‘

என்ன பதிலைச் சொல்வதென்று தெரியாமல் நான் விடுவிடென்று நடந்தேன். திரும்பி காவி வீட்டை ஒரு முறை பார்க்க மனம் குறு குறுக்கவில்லை.

மாலதி

====

malti74@yahoo.com

Series Navigation