எல்லையைக் கொஞ்சம் நீட்டுவது — குறித்து….!!!

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

அனந்த் நாகேஸ்வரன்


மு. இராமனாதன் கூறியது போல முத்துலிங்கத்தின் படைப்பு இலக்கியத்தரம் வாய்ந்தது என்றாலும், கருத்தளவில் உண்மையிலேயே எவ்வளவு நீள்கிறது என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.

நேர்காணலின் உச்சமாக ஆசிரியரின் கீழ்கண்ட கேள்வியும் அதற்கான பதிலும் முன்னிறுத்தப்படுகிறது.

“நீங்கள் எதற்காக உடம்பை இவ்வளவு வருத்திப் பிழிந்து இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்? உங்கள் பொழுதுபோக்குக்கு வேறு ஏதாவது தேர்வு செய்யலாமே?”
இந்தக் கேள்வி அவளை நிலைகுலைய வைத்துவிட்டது என்கிறார் ஆசிரியர். ஒரு கணம் என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பும் ஜெனிவீவ் கடைசியில் ஒருவாறு நிதானித்து ஒவ்வொரு வார்த்தையாகப் பொறுக்கி எடுத்துப் பேசுகிறாள்: “ஜவலின் எறிபவர்கள், நீச்சல் வீரர்கள் எடை தூக்குபவர்கள், இவர்கள் எல்லாரும் தினம் தினம் தங்களை வருத்திப் பயிற்சி எடுக்கிறார்கள். போட்டிகளில் பங்குபற்றுகிறார்கள். எதற்காக இதைச் செய்கிறார்கள்? மனித உடம்பை அறிவதுதான் நோக்கம். உடம்பின் எல்லையைக் கண்டுபிடிப்பது. அதைச் சிறிது நீட்டுவது. இதுவும் ஒரு சேவைதான். அடுத்தவருக்கு.”

இங்கு தமிழ் சினிமா Hero போன்று அளவுக்கு அதிகமாக புனிதப்படுத்தும் போக்கை காண்பதை தவிர்க்க முடியவில்லை. பதிலில் சாமார்த்யம் இருக்குமளவிற்கு சரக்கு இருப்பதாகத் தெரியவில்லை. பணம், புகழ் நிமித்தம் அநேகமாக வர்த்தகமாக்கப்பட்டுவிட்ட இன்றய விளயாட்டு வீரர்களின் நோக்கத்தை “உடம்பை அறிவது” என்பதன் கீழ் வகைபடுத்தியது நெருடலையே ஏற்படுத்துகிறது.

விளயாட்டு என்பது என்ன? ஏன் தோன்றியது? அதன் நோக்கம் என்ன? இன்றயதினம் உலக அரங்கில் விளையாட்டு என்ற பெயரில் நடந்துகொண்டிருப்பதற்கும் அதற்கும் என்ன சம்மந்தம் ?

உடம்பை, மனதை ஆரோக்யமாக, மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது, வெற்றி-தோல்விகளை இலகுவாகப் புரிந்து கொள்ள உதவுவது மற்றும் ஒரு குழுவாக செயல்பட்டு (team work) எப்படி வெற்றி ஈட்டுவது என்பதை புரிந்துகொள்தல் போன்றவை விளையாட்டின் பயன்கள். இதில் எதுவும் இன்றய விளையாட்டில் இருப்பதாய் தெரியவில்லை. குத்துச்சண்டை எப்படி ஒரு விளையாட்டாக இருக்க முடியும்?

இன்றய உலகில் அநேகமாக அனைத்து விளையாட்டு நட்சத்திரங்களும் உடல் நலத்தை விற்று பணமும் பதக்கங்களும் ஈட்டுபவர்களாகவே உள்ளனர். இவர்களின் “எல்லை நீட்டுகிற” முயற்சியில் எத்தனைமுறை “knee surgery” செய்து கொள்கிறார்கள் ? இது மேலும் நீண்டு ஊக்க மருந்து உட்கொள்தல், மற்றும் அரசியல்வாதிகளை மிஞ்சும் அளவிற்கு அரசியல் (Indian cricket)…… இதில் “உடம்பை அறிதல்” எங்கு நிகழ்கிறது? இதையும் தாண்டி “இதுவும் ஒரு சேவைதான். அடுத்தவருக்கு” என்பது நிஜமாகவே தொண்டையில் சிக்கிக்கொள்கிறது.

விளையாட்டு என்பது தன்னளவில் உன்னதமானது. தற்கால தொழிலதிபர்கள் அதை விளம்பரமாக்கி வியாபாரமாக்கிவிட்டனர். விளையாட்டு வீரர்களோ கண்ணை விற்று சித்திரம் வாங்குகின்றனர். ரசிகர்களோ நேரத்தையும் பணத்தையும் பாழ்படுத்துகின்றனர். இந்த பரிதாபமே விளையட்டு என்ற பெயரில் இங்கு அரங்கேருகின்றது.

சரி…இவையெல்லாம் கூட விட்டுவிடலாம், ஒரு மிக நேர்மையான விளையாட்டு வீரரையே எடுத்துக்கொள்வோம். அவருடைய அதிகபட்ச உன்னதமான நோக்கம் என்னதான் இருந்துவிட முடியும்? அவருடைய திறமையை நிரூபிக்க வேண்டும், அது பணமாகவோ, புகழாகவோ அவரை வந்து சேரவேண்டும் என்பதைத்தவிர? இதில் “உடம்பை அறிதல்” என்று ஒரு யோகியைப் போலவோ, சேவை என்ற அளவிற்கு புனிதப்படுத்துதலோ தேவையற்றது என்பது என் கருத்து.


(ananth333@gmail.com)

Series Navigation

அனந்த் நாகேஸ்வரன்

அனந்த் நாகேஸ்வரன்

எல்லையைக் கொஞ்சம் நீட்டுவது- முத்துலிங்கத்தின் வெளி

This entry is part [part not set] of 33 in the series 20071220_Issue

மு இராமனாதன்


எனக்குத் தெரிந்த பதின்மூன்று வயதுப் பையனொருவன் ஒரு ஞாயிறுக்கிழமை காலையில் சீருடை அணிந்து வெளிக்கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தான். ‘ஒரு project work இருக்கிறது’ என்றான். ஹாங்காங் பள்ளிக்கூடங்களில் பாடப் புத்தகங்களிலிருந்து கொடுக்கப்படும் வீட்டுப் பாடங்களைக்கால் திட்டப்பணிகள் அதிகம் என்று நான் தெரிந்து வைத்திருந்தேன். ‘என்ன project’ என்று விசாரித்தேன். ‘நகரின் பிராதான சுற்றுலாத் தலங்களுக்குப் போய் வெளிநாட்டுப் பயணிகளை நேர்காண வேண்டும்’ என்றான். சுற்றுலா, நகரின் பொருளாதாரக் கண்ணிகளுள் முக்கியமானது. அதனால், ‘என்ன கேட்பீர்கள்’ என்று வினவினேன். வசிப்பிடம் எப்படியிருக்கிறது, விரும்பும் உணவு கிடைக்கிறதா, மக்களின் விருந்தோம்பல் திருப்தியளிக்கிறதா என்கிற ரீதியில் ஒரு கேள்விகளின் பட்டியல் பையனிடம் இருந்தது. ‘மூன்று பேர் அடங்கிய குழு பயணிகளை நேர்காணும்’ என்றான். ‘எதற்கு மூன்று பேர்’ என்று கேட்டேன். பையன் பொறுமை இழப்பது மாதிரிப் பட்டது. என்றாலும் பதில் சொன்னான். கேள்விகள் கேட்பதும் ஒலிப்பதிவு செய்வதும் ஒருவன், படங்கள் எடுப்பதும் தேவைப்பட்டால் துணைக் கேள்விகள் கேட்பதும் ஒருவன், பயணியின் முகக்குறிப்பையும் உடல் மொழியையும் குறித்துக் கொள்ள ஒருவன். முகக்குறிப்பை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள் என்பது எனது அடுத்த கேள்வியாக இருந்தது. பதில் சொல்லத்தான் பையன் என் முன்னால் இல்லை. அந்தக் கேள்வி அவனுக்கு அபத்தமாகப் பட்டிருக்கலாம், எரிச்சல் ஏற்படுத்தி இருக்கலாம், அல்லது உள்ளபடியே அவனுக்கு நேரமாகி விட்டிருக்கலாம்.

மேற்படிச் சம்பவத்திற்குச் சில மாதங்கள் கழித்து அ.முத்துலிங்கத்தின் “வியத்தலும் இலமே” என்கிற நூலைப் படிக்க வாய்த்தது. மிகுதியும் ஆங்கில எழுத்தாளர்களின் நேர்காணல்கள் அடங்கிய இத்தொகுப்பில் மாரத்தான் ஓட்டப் பயிற்சி பெறும் ஓர் அமெரிக்கப் பெண்ணின் நேர்காணலும் இருக்கிறது. இந்த நேர்காணலை முன்னரே வாசித்திருந்தால் பையன் என் முன்பிருந்து ஓடும்படியான கேள்வியை ஒருவேளை நான் கேட்டிருக்க மாட்டேன். தமிழில் இதுவரை எனக்கு வாசிக்கக் கிடைத்திருக்கும் நேர்காணல்கள் எல்லாவற்றையும்விட இந்த நேர்காணல் வித்யாசமானது. தமிழ் நேர்காணல்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது.

தமிழில் வெகுஜனப் பத்திரிக்கைகள் நேர்காணத் தகுதியானவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அரசியல்வாதிகள் மற்றும் சினிமாக்காரர்கள். கேள்விகளையும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஜால்ரா சங்கீதம் ஒலிக்கும் கேள்விகள் முதல் வகை. எதிராளியை முழி பிதுங்க வைக்கும் அல்லது அவரது வாயிலிருந்து வார்த்தைகளைப் பிடுங்கும் கேள்விகள் அடுத்த வகை.

எண்பதுகளில் தமிழின் குறிப்பிடத்தக்க நேர்காணல்கள் சிறு பத்திரிக்கைகளில் அவ்வப்போது வெளிவந்தன. எனில், அதில் ஒரு போக்கை ஏற்படுத்தியது 90-களின் துவக்கம் முதல் ‘சுபமங்களா’வில் வெளியான நேர்காணல்கள் எனலாம். எழுத்தாளர்கள், இதழியலாளர்கள் மற்றும் விமர்சகர்களின் நேர்காணல்கள் படங்களுடன் வெளியாகின. நேர்காணல்களின் உள்ளடக்கமே அதன் அளவைத் தீர்மானித்தது. 90-களின் மத்தியில் தொடங்கி நாளது வரை தொடர்பவை ‘காலச்சுவ’டின் நேர்காணல்கள். பல அமர்வுகளில் மணிக்கணக்காகப் பதிவு செய்யப்பட்டு பெயர்த்தெழுதப்பட்டு செப்பனிடப் பட்டவை. ‘ஒருவரது கருதுக்களைப் போலவே அந்த இடங்களுக்கு அவர் வந்து சேர்ந்த வழிமுறைகளும்’ நேர்காணலில் வெளிப்பட வேண்டும் என்னும் நோக்கமுடையவை. அரசியல், சமூகம், திரைப்படம், மொழி என்று பலதளங்களில் இயங்குவோரின் நேர்காணல்கள் ‘தீராநதி’யிலும் ‘புதிய பார்வை’யிலும் இடம் பெறுகின்றன. பல சிற்றிதழ்கள் காத்திரமான நேர்காணல்களை வெளியிடுகின்றன. ‘சுபமங்களா’, ‘காலச்சுவடு’, ‘தீராநதி’, ‘புதிய பார்வை’ முதலான இதழ்களில் வெளியான குறிப்பிடத்தகுந்த நேர்காணல்கள் நூல்வடிவமும் பெற்றிருக்கின்றன. இந்த நூல்களின் வரிசையில் இணைந்திருக்கிறது ‘வியத்தலும் இலமே’.

இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் பெரும்பாலான நேர்காணல்கள் சம்பிரதாயமான கேள்வி-பதில் வடிவத்தில் அமைந்தவைதாம். என்றாலும் தமிழ் வாசகர்களுக்கு ஆளுமைகளை அறிமுகப்படுத்தும் விதமாக ஒரு முன்னுரையும், நேர்காணல் அனுபவத்தைக் குறித்து ஆசிரியரின் கருத்தாக ஒரு முடிவுரையும் பல நேர்காணல்களில் அமையப்பெற்று அவை வாசகனுக்கு நெருக்கமாகின்றன. எனில் மாரத்தான் ஓட்டக்காரியின் ‘உனக்கு எதிராக ஓடு’ எனும் இந்த நேர்காணல் ஒரு கட்டுரை வடிவத்திலேயே அமைந்திருக்கிறது. கேள்வி-பதில்கள் இடம் பெறுகின்றன. ஆனால் அவை உள்ளுக்குள் பொதிந்திருக்கின்றன, சீயத்திற்குள் இருக்கும் மதுரத்தைப் போல. இதனால் மொத்தக் கட்டுரையும் ஆசிரியரின் பார்வைக் கோணத்திலேயே விரிகிறது. கட்டுரையை எனக்குத் தெரிந்தவரை கீழே சுருக்கித் தருகிறேன்.

*********

டொராண்டோ விமான நிலையத்தில் கனடாவைச் சுற்றிப் பார்க்க வரும் ஜெனிவீவ் கைலி என்கிற அமெரிக்க இளம் பெண்ணை வரவேற்பதற்காக முத்துலிங்கம் தம்பதிகள் காத்திருப்பதிலிருந்து கட்டுரை தொடங்குகிறது. இரண்டு நாளில் ஊர் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பிவிடும் ஜெனிவீவ், 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கின் மாரத்தான் ஓட்டத்தில் பங்குபெற பயிற்சி பெறுகிறாள் என்பது தம்பதிகளுக்கு அவள் கனடாவிற்கு வந்த பிறகுதான் தெரிகிறது. ஜெனிவீவைப் பார்த்தால் பெரிய ஓட்டக்காரி மாதிரித் தெரியவில்லை. ‘சாம்பல் முடி, நீலக் கண்கள், இடையை இறுக்கிப் பிடிக்கும் ஜீன்ஸ், ஐந்து அடி உயரம், எடை 90 றாத்தல் மதிக்கலாம்’

ஒலிம்பிக் ஓட்டக்காரர் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பது தனக்குத் தெரியாது எனும் ஆசிரியர் தொடர்ந்து சொல்கிறார்: ‘கடைசியாக ஏதென்சில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 929 பதக்கங்கள் வழங்கப்பட்டன. அதில் அமெரிக்காவுக்கு 103 பதக்கங்கள், கனடாவுக்கு 12, இந்தியாவுக்கு ஒன்றே ஒன்று கிடைத்தது. இலங்கைக்கு அதுவுமில்லை. இந்த வெட்கம் கெட்ட நிலையில் ஒலிம்பிக் ஓட்டக்காரர் ஒருவர் நேரில் எப்படித் தோற்றமளிப்பார் என்பதை ஊகிக்க முடியும்’. முத்துலிங்கத்திற்குத் தெரிந்த ஓட்டக்காரர் அவர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகதாஸ் மட்டுமே. ஆறுமுகதாஸ் ஒரு-மைல் ஓட்டக்காரர். சுற்று வட்டாரத்தில் இவரை வெல்ல ஆளில்லை. பிற்பாடு ஆறுமுகதாஸ் முத்துலிங்கத்திடம் தன் வெற்றியின் ரகசியத்தைச் சொல்கிறார்: ‘போட்டியில் ஒரு மைல் ஓட வேண்டுமானால் இரண்டு மைல் தூரம் ஓடிப் பழக வேண்டும்’.

26.2 மைல்கள் தூரம் கொண்ட மாரத்தான் ஓட்டத்தின் பெயர்க் காரணமும் கட்டுரையின் இடையில் வருகிறது. ‘கி.மு 490இல் மரதன் என்னும் இடத்தில் கிரேக்கர்களின் படை பாரசீகப் பெரும்படையைப் போரில் தோற்கடித்தது. அந்த வெற்றியைச் சொல்வதற்கு ·பெய்டிப்பிடீஸ் என்ற வீரன் 26.2 மைல்கள் தூரத்தை நிற்காமல் ஓடி ஏதென்ஸ் நகரை அடைந்து ‘நாங்கள் வென்றுவிட்டோம். கொண்டாடுங்கள்’ என்று தகவல் சொல்லிவிட்டு அப்படியே சரிந்தான். அந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அவன் மட்டும் உயிரோடு இருக்கவில்லை.’

‘ஓட்டக்காரர்கள் உயரமாக இருக்க வேண்டாமா’ என்று ஜெனிவீவிடம் கேட்கிறார் முத்துலிங்கம். ‘மரதன் ஓட்டத்திற்கு எடை கூடாமலும் உயரம் குறைவாகவும் இருந்தால் நல்லது’ என்கிறாள் ஜெனிவீவ். அவள் ஒரு பயிற்சியாளரிடம் பயிற்சி பெறுகிறாள். பயிற்சி திருப்தியாக முடியும் பட்சத்தில் இறுதிப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுவாள். இதற்கு அமெரிக்கா முழுவதிலிமிருந்து 300பேர் வந்திருப்பார்கள். இந்தப் பயிற்சியின் முடிவில் தெரிவு செய்யப்படும் முதல் மூன்று ஓட்டக்காரர்களே ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவின் சார்பில் கலந்து கொள்வார்கள்.

பயிற்சியின்போது ஒரு போதும் முழுத் தூரமும் ஓடுவதில்லை என்கிறாள் ஜெனிவீவ். அது ஓட்டப் பயிற்சி மட்டுமில்லை. உடற்பயிற்சி, ஓட்டம், நடை, நீச்சல், சைக்கிள் என்று மாறி மாறி வரும். பயிற்சியின் அளவும் கூடிக் கொண்டே போகும். அடுத்த நாள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பது உடம்புக்குத் தெரியக் கூடாது. உடம்பின் வலிமையைக் கூட்டிக் கொண்டே போக வேண்டும். போட்டி நாள் அன்று சேமித்து வைத்த சக்தி அனைத்தும் வெளியேறத் துடிக்கும். அன்றுதான் முழுமையான 26.2 மைல்கள் ஓடி முடிப்பீர்கள்.

ஜெனிவீவ் நிறையச் சாப்பிடுகிறாள். ஓட்டக்காரர்கள் அளவாகச் சாப்பிட வேண்டாமோ? இல்லை. ‘ஒரு சராசரி மனிதனுக்கு நாளுக்கு 2000கலரி தேவை என்றால் ஒரு மரதன் ஓட்டக்காரர் 4000-5000 கலரி உணவைத் தினமும் சாப்பிட வேண்டும்…இல்லாவிட்டால் பயிற்சியைத் தாங்க முடியாமல் உடம்பு நலிந்துவிடும்.’

ஜெனிவீவின் பயிற்சி முறைகள் கடுமையானவை. அவள் உடம்பும் மனமும் 2008ஆம் ஆண்டிலேயே குவிந்திருக்கின்றன. இந்தப் பெண்னைப் பார்க்க ஆசிரியருக்குப் பரிதாபமாக இருக்கிறது. விமான நிலையத்தில் விடைபெறுமுன் அந்தக் கடைசிக் கேள்வியைக் கேட்கிறார்: “நீங்கள் எதற்காக உடம்பை இவ்வளவு வருத்திப் பிழிந்து இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்? உங்கள் பொழுதுபோக்குக்கு வேறு ஏதாவது தேர்வு செய்யலாமே?”

இந்தக் கேள்வி அவளை நிலைகுலைய வைத்துவிட்டது என்கிறார் ஆசிரியர். ஒரு கணம் என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பும் ஜெனிவீவ் கடைசியில் ஒருவாறு நிதானித்து ஒவ்வொரு வார்த்தையாகப் பொறுக்கி எடுத்துப் பேசுகிறாள்: “ஜவலின் எறிபவர்கள், நீச்சல் வீரர்கள் எடை தூக்குபவர்கள், இவர்கள் எல்லாரும் தினம் தினம் தங்களை வருத்திப் பயிற்சி எடுக்கிறார்கள். போட்டிகளில் பங்குபற்றுகிறார்கள். எதற்காக இதைச் செய்கிறார்கள்? மனித உடம்பை அறிவதுதான் நோக்கம். உடம்பின் எல்லையைக் கண்டுபிடிப்பது. அதைச் சிறிது நீட்டுவது. இதுவும் ஒரு சேவைதான். அடுத்தவருக்கு.”

சொல்லி முடித்ததும் அவள் முகம் சிவந்து போய்விடுகிறது. பிற்பாடு விடைபெறும் வரை அவள் முத்துலிங்கத்தோடு எதுவும் பேசுவதுமில்லை. ஆசிரியர் கட்டுரையை இப்படி முடிக்கிறார்:

‘2008ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் 202 நாடுகள் பங்குபற்றும் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான மரதன் ஓட்டத்தில் கலந்துகொள்ளும் 80-90 ஓட்டக்காரர்களில் மூன்று அமெரிக்கப் பெண்களும் இருப்பார்கள். அவர்களில் சாம்பல்முடி, நீலக்கண்கள், ஐந்தடி உயரம், 90 றாத்தல் எடைகொண்ட ஒரு பெண்ணும் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம். போட்டி முடிவு அறிவித்ததும் மேடை ஏறிய ஒரு பெண் தன் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டு, ஒரு கையால் அதைத் தூக்கிக் காட்டியபடி மறுகையை அசைத்துச் சுழலுவாள். அந்தக் கணம் அவளைக் கோடி சனங்கள் உலகம் முழுதும் தொலைக்காட்சித் திரைகளில் கண்டு களிப்பார்கள். அவளுடைய சாதனைக்கான சக்தியை அவள் தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் கசக்கி, வருத்தி, உறிஞ்சிப் பறித்திருப்பாள். அவள் கடந்து வந்த மைல்களை, செய்த தியாகங்களை, பட்ட இன்னல்களை, கெடுத்த தூக்கங்களை நான் நினைத்துப் பார்ப்பேன். அப்பொழுது அந்தப் பெண் மனித உடலின் எல்லையை மேலும் ஓர் அங்குலம் நகர்த்தியிருப்பாள்.’

************

இந்தக் கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்குபோதே எனக்கு ரத்தினம் நினைவுக்கு வந்தான். என்னுடன் உயர்நிலைப் பள்ளியில் படித்தவன். அப்போதெல்லாம் பத்தாம் வகுப்பில் விருப்பப் பாடம் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும். எங்கள் பள்ளியில் மூன்று பாடங்கள் இருந்தன. கணிதம், உயிரியில், வரலாறு. வருங்காலப் பொறியாளர்களும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் முதலிரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பார்கள். கணக்காளர்களும் அப்படியே. இதில் எதற்கும் லாயக்கில்லாதவர்களின் புகலிடம் வரலாறு. ஓர் எழுதப்படாத சாதிப்பிரிவினை போல இது இயங்கி வந்தது. ரத்தினத்திற்கு வரலாறுதான் கிடைத்தது. அவன் பத்தாம் வகுப்பிற்கு வர முடிந்ததே பழனியப்பன் சாரின் சிபாரிசில்தான் என்று ஒரு பேச்சு இருந்தது. பழனியப்பன் சார் விளையாட்டு ஆசிரியர். ரத்தினம் அவரின் செல்லப் பிள்ளை. ரத்தினமும் ஜெனிவீவைப் போல ஆறுமுகதாஸைப் போல ஒரு ஓட்டக்காரன்தான். ஆனால் அவர்களைப் போல நீண்டதூர ஓட்டக்காரன் இல்லை. 100மீட்டர் ஓட்டக்காரன். வாலில் பந்தம் கொளுத்திவிட்ட ராக்கெட்டைப் போல சீறி வருவான். 100×4 ரிலே ரேசில் நான்காவது ஓட்டக்காரன் எப்போதும் ரத்தினம்தான். பங்காளிகள் எப்படிச் சொதப்பினாலும் அவன் இறுகப் பற்றிவரும் குறுந்தடிதான் வெற்றிக்கோட்டை முதலில் கடக்கும்.

‘ரத்தினம் ஒரு நாள் 100மீட்டர் தூரத்தை 10 நொடிகளில் கடந்து விடுவான்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் பழனியப்பன் சார். அப்படி எதையும் ரத்தினம் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால் அந்த ஆண்டு அவனால் பத்தாம் வகுப்பைக் கடக்க முடியவில்லை. பழனியப்பன் சாரால்கூட அவனைக் காப்பாற்ற முடியவில்லை. பதினோரம் வகுப்பை (எஸ்.எஸ்.எல்.சி) அவன் கடக்கவேயில்லை என்று பின்னாளில் கேள்விப்பட்டேன்.

எல்லா சர்வதேசப் போட்டிகளின் முடிவிலும் இந்தியாவின் அவமானகரமான தோல்வி பரிசீலிக்கப்படுகிறது. பள்ளிக்கூடங்கள் தோறும் ஆங்கில மோகத்தையும் ஏட்டுக் கல்வியையும் விதைத்துவிட்டு, விளையாட்டில் வெற்றிகளை எப்படி அறுக்க முடியும் என்று யாரும் கேட்பதாகத் தெரியவில்லை.

விளையாட்டைக் குறித்த அக்கறையின்மையும் குறைபட்ட அறிவும் நிலவும் இந்திய-இலங்கைச் சூழலில் வளர்ந்த தமிழ் வாசகர்களை நோக்கித்தான் இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. மாரத்தான் ஓட்டம், அதன் பின்னணி, பயிற்சிமுறை போன்றவை குறித்து சராசரித் தமிழ் வாசகன் அதிகம் அறிந்திருக்க வழியில்லை. இந்தத் தகவல்களை தனது மேதாவிலாசம் வெளிப்பட உயர்ந்த தளத்தில் அமர்ந்து கொண்டு முத்துலிங்கம் பிரசங்கிக்கவில்லை. மாறாக வாசகனின் தோள் மீது கைபோட்டபடி, மாரத்தான் ஓட்டத்தைப்பற்றித் தான் அறிந்து வைத்திருந்ததெல்லாம் தவறானவை என்பது இந்தப் பெண்ணைப் பார்த்த பிற்பாடுதான் தெரிய வந்தது என்று சொல்லிக் கொள்கிறார். இந்த எளிமையும் அவையடக்கமும் அவர் வலிந்து உருவாக்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. அது பதினாயிரம் பாட்டெழுதியவன் ‘ஆசை பற்றி அறையலுற்றேன்’ என்ற மரபிலிருந்து வந்திருக்க வேண்டும்.

ஓட்டக்காரர்கள் உயரமாக இருக்கவேண்டும்; நீண்ட கால்கள் கொண்டவராக இருக்க வேண்டும்; 26மைல் ஓட வேண்டுமானால் அதனிலும் கூடிய தூரம் ஓடிப் பழகவேண்டும்; ஓட்டக்காரர்கள் அளவாகச் சாப்பிட வேண்டும்- இப்படியெல்லாம் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இவையே ஆசிரியரின் கேள்விகளாக உருவெடுக்கின்றன. ஆனால் உண்மை பொதுப்புத்தியில் பதிந்து கிடக்கும் கருத்துகளுக்கு ‘எதிர்த் திசை’யில் இருக்கிறது. அவை ஜெனிவீவின் பதில்களில் வெளிப்படுகின்றன. பாடு பொருளும் புதிது; பாட்டுடைத் தலைவியும் புதியவள். என்றாலும் கட்டுரையின் ஒரு வாக்கியம் போலும் அலுப்பூட்டவில்லை.

கேள்வி-பதில்களை பிரசுரிப்பதில் பல வழிமுறைகள் நடப்பில் உள்ளன. கேள்விக்கு முன்னால் நேர்காண்பவரின் பெயரையும் பதிலுக்கு முன்னால் விடையளிப்பவரின் பெயரையும் எழுதுவது ஒரு முறை. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் நேர்காணும்போதோ காணப்படும்போதோ இது பயன்படலாம். நேருக்கு நேர் ஒற்றைக்கு ஒற்றை நேர்காணலிலும் சிலர் இதைப் பயன்படுத்துகின்றனர். நேர்காணலைப் படித்து முடிக்கிற வாசகனுக்கு இரண்டு பெயர்களும் காணாப்பாடமாக வேண்டும் என்பது நோக்கமாக இருக்கலாம். கேள்விகளைத் தடித்த எழுத்தில் எழுதுவது இன்னொரு முறை. ‘வியத்தலும் இலமே’ நூலின் பல பேட்டிகளில் இந்த முறையே கடைப்பிடிக்கப்படுகிறது. எனில், ஒரு கட்டுரை வடிவத்தில் அமைந்திருக்கிற மாரத்தான் ஓட்டக்காரியின் நேர்காணலில் முத்துலிங்கம் இந்த இரண்டு வழிகளையும் கைக்கொள்ளவில்லை. ஆசிரியர் கூற்றாகப் பல தகவல்கள் வருகின்றன; இவை நேராகச் சொல்லப்படுகின்றன. அடுத்து ஜெனிவீவைப் பார்த்து ஆசிரியர் கேள்விகள் கேட்கிறார்; வினாக்களுக்கு முன்னும் பின்னும் மேற்கோள் குறிகள் நிற்கின்றன. ஜெனிவீவின் பதில்கள் தனிப்பத்தியில் வருகின்றன. ஒரே பத்தியில் வரும் கேள்விகளும் பதில்களும் ‘நான் கேட்டேன்’, ‘அவள் சொன்னாள்’ என்று அடையாளப் படுத்தப்படுகின்றன. இப்போது கட்டுரையில் மூன்று குரல்கள் ஒலிக்கின்றன. ஆசிரியர் தாமாகச் சொல்வது, ஆசிரியர் ஜெனிவீவிடம் கேட்பது, ஜெனிவீவ் பதிலளிப்பது. இவை மூன்றும் கட்டுரையில் ஒன்றன் மீது ஒன்று கவிந்து வருகின்றன. எனில் அடையாளப் படுத்தப்படுகின்றன. வாசகன் மூன்று குரல்களுக்கும் மெல்லப் பழகிவிடுகிறான். அப்போது முத்துலிங்கத்திற்கு அடையாளங்கள் தேவைப்படுவதில்லை. மாராத்தான் போட்டியின்போதுதான் முழுத்தூரத்தையும் முதன் முதலாக ஓடுவோம் என்கிறாள் ஜெனிவீவ். ஆசிரியர், ‘களைப்பு ஏற்படாதா’ என்று கேட்கிறார். அடுத்த பத்தி வருமாறு:

எப்படி வரும். ஆறு மாத காலப் பயிற்சி அதற்குத்தானே. இந்தப் பயிற்சி இருந்திருந்தால் ·பெய்டிப்பிடீஸ் பாவம் விழுந்து இறந்திருக்கமாட்டானே.

இந்தப் பத்தியில் மூன்று வாக்கியங்கள் உள்ளன. முதலிரண்டையும் சொல்வது ஜெனிவீவ். மூன்றாவது வாக்கியம் ஆசிரியர் கூற்று. மேற்கோள் குறிகளும் விளக்கவுரைகளும் இல்லாமல் வாசகனால் எது யாருடைய குரல் என இனங்காண முடிகிறது.

கட்டுரையின் உள்ளடக்கத்தில் மூன்று குரல்கள் உள்ளது போல் அதன் உருவத்திலும் மூன்று வடிவங்கள் ஒன்றன் மீது ஒன்றாகக் கவிந்து கிடக்கின்றன. கேள்வி-பதில்களைக் கொண்ட நேர்காணல், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் கட்டுரை, இவற்றுடன் முத்துலிங்கத்தின் புனைவு மொழியும் சேர்ந்து கொள்கிறது. எடுத்துக்காட்டாக ஜெனிவீவை யாழ்ப்பாணத்து அப்பம் சாப்பிடுவதற்காக உணவகத்துக்கு அழைத்துப் போகிற இடத்தைச் சொல்லலாம். அதிலிருந்து ஒரு பகுதி: ‘உணவுக்கு ஓடர் பண்ணி அப்பம் சுடச்சுட வந்து கொண்டேயிருந்தது. எனக்கு முன் சாப்பிட்டவர் என்னுடைய பிளேட்டில் நண்டு சாப்பிட்டிருக்க வேண்டும். இவள் இடம் வலம் பார்க்கவில்லை. சாப்பிட்டுக் கொண்டேயிருந்தாள். ஒரு மரதன் ஓடியது போல பரிசாரகர்தான் களைத்துப்போனார். இந்தச் சிறிய பெண்ணின் உடம்பில் எங்கே அது போய்ச் சேர்கிறது என்று நாங்கள் வியப்படைந்தோம். ஓட்டக்காரர்கள் அளவாகச் சாப்பிட வேண்டுமல்லவா? அல்லது அவர்களுடைய எடை எக்கச்சக்கமாக ஏறி ஓட முடியாமல் போய்விடுமே.’

நேர்காணலும் கட்டுரையும் கதையும் பிணைந்த இந்த வடிவம் சம்பிரதாயமான நேர்காணல்களின் இறுக்கத்தை வெகுவாகத் தளர்த்திவிடுகிறது. ‘காலச்சுவடு’ நேர்காணல் ஒன்றின் முகவுரையில் பேட்டி கண்டவர் இப்படிச் சொல்லியிருந்தார்: “மிகுந்த தோழமையுணர்சியுடனும் அங்கதத்துடனும் நிகழ்ந்த இந்த உரையாடல் எழுத்துப் பிரதியாக மாற்றப்பட்டபோது பேச்சின் தாள கதிகளையும் சூட்சுமங்களையும் இழந்து விட்டிருக்கிறது.” முத்துலிங்கத்திற்கும் இப்படித் தோன்றியிருக்க வேண்டும். அவர் உரையாடலின் தாளகதிகளை இழக்க விரும்பவில்லை. வார்த்தைகளுக்கு அப்பால் பதிலளிப்பவரின் உடல் மொழியையும் அதன் சூட்சுமங்களையும் வாசகன் உணர வேண்டும் என்று விழைகிறார். கேள்வி-பதில் அரங்கத்திற்கு வெளியிலும் வட்டாட விரும்புகிறார். அதற்கு அவரே உருவாக்கி வரும் கட்டுரை-நேர்காணல்-கதை என்கிற வெளி உதவுகிறது. ஹாங்காங்கின் மூன்று பையன்களின் வேலையையும் இவர் ஒருவரே செய்து விடுகிறார்.

இந்த நூலில் முத்துலிங்கம் நேர்காணும் டேவிட் செடாரிஸ் எனும் ஆங்கில எழுத்தாளர் தனது எழுத்தில் தன்னை மீறிச் சில தேய்வழக்குகள் நழுவிவிடுவதாக வருத்தப்படுகிறார். ஆனால் முத்துலிங்கம் தேய் வழக்குகளை அனுமதிப்பதில்லை. ஆறுமுகதாஸின் எட்டுச் சுற்றுக்கள் கொண்ட ஒரு மைல் ஓட்டத்தை ஆசிரியர் இப்படி வருணிக்கிறர்: ‘ஓட்டம் தொடங்கியதும் ஆறுமுகதாஸ் ஆற அமரப் புறப்படுவார்….எல்லோரையும் முன்னால் விட்டு தனக்குப் பின்னால் யாரும் வராமல் பார்த்துக் கொள்வார். ஏழாவது சுற்று முடிந்ததும் மனுசன் அம்பு போலப் புறப்படுவார். ஒவ்வொருவராகத் தாண்டி முன்னேறி வருவார். முதலாவதாக ஓடுபவரை ஒரு டிராமா காட்டுவதற்காகக் கடைசி பத்து செகண்டில் முந்தி வெற்றியீட்டுவார். சனங்களின் ஆரவாரம் அப்போது செவ்வாய் கிரகத்தை எட்டும்.’

ஆரவாரம் எப்போதும் விண்ணை எட்டித்தான் அல்லது முட்டித்தான் நமக்குப் பழக்கம். அப்படிச் சொல்லியிருந்தால் கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன ஒரு சொற்றொடரை, ஒரு Cliche-ஐ நாம் வாசிக்க நேர்ந்திருக்கும். ஆரவாரம் விண்ணையும் பூமிக்கோளத்தையும் தாண்டி பக்கத்துக் கிரகத்தை எட்டுவதால் அந்த வாக்கியத்தின் தரம் உயர்ந்துவிடுகிறது. ‘கடந்து வந்த பாதை’ என்பது இன்னொரு தேய்வழக்கு. கடைசிப் பத்தியில் தங்கம் பெறும் பெண் ‘கடந்து வந்த மைல்களை’ தான் நினைத்துப் பார்ப்பேன் என்கிறார். மைல்கள் என்று வெகு பொருத்தமாக வந்து விழுந்திருக்கிறது. அது மாரத்தான் பயிற்சிக்காக அவள் ஓடிய நூற்றுக் கணக்கான மைல்களையும் அதற்காக அவள் பட்ட பாடுகளையும் ஒரு சேரக் குறிக்கிறது.

தேய்வழக்குகளைத் தவிர்க்கும் அதே வேளையில் புதிய வழக்குகளைப் பயன் படுத்தவும் செய்கிறார். ஓரிடத்தில், “அவள் முகம் பளிச்சென்று உள்ளுக்கு இருந்து யாரோ வெளிச்சம் அடிப்பது போல் பிரகாசமாக இருந்தது” என்கிறார். பிறிதொரு இடத்தில், ” (அவள்) ஒவ்வொரு வார்த்தையையும் நாக்கினால் தடவி விடுவதால் அந்த வார்த்தையில் ஈரப்பசை இருந்தது” என்கிறார்.

இந்தக் கட்டுரை முழுதும் ஜெனிவீவின் கடைசிப் பதிலை நோக்கியே நகர்த்தப்படுகிறது. எல்லாப் பயிற்சிகளும் விளையாட்டுகளும் அந்த இலக்கை நோக்கியே நகர்கின்றன. “உடம்பின் எல்லையைக் கண்டு பிடிப்பது. அதைச் சிறிது நீட்டுவது. இதுவும் ஒரு சேவைதான். அடுத்தவருக்கு”. பழனியப்பன் சார் முயற்சித்ததும் அதுதான். 1896இல் நவீன ஒலிம்பிக் முதன் முதலாக ஏதென்ஸில் நடந்தபோது அமெரிக்கரான டாம் புர்கே 100மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். நேரம்: 12 நொடிகள். இது 1904-இல் 11 நொடிகளாகக் குறைந்தது. 1908இல் 10.8 நொடிகளாக இருந்த ஒலிம்பிக்கின் 100மீட்டர் சாதனை நேரம், 1972இல் 10.06 ஆனது. மனித உடம்பை இன்னும் நீட்ட முடியும் என்பது பழனியப்பன் சாருக்குத் தெரிந்திருந்தது. 100மீட்டர் தூரத்தை 10 நொடிகளுக்குக் குறைவான நேரத்தில் கடக்க முடியும் என்று நம்பினார் அவர். அது நடந்தது. 1984இல். லாஸ் ஏஞ்சலீஸில் நடந்த ஒலிம்பிக்கில் காரல் லீவிஸ் 100மீட்டரைக் கடக்க எடுத்துக் கொண்ட நேரம்: 9.99 நொடிகள். இந்தச் சாதனையை ரத்தினம் நிகழ்த்த வேண்டும் என்ற சாரின் விருப்பம்தான் நடக்கவில்லை.

விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமில்லை, எல்லாத் துறைகளிலும் இந்த முயற்சி நடந்து கொண்டே இருக்கிறது. எல்லையைச் சிறிது நீட்டுவது. தாண்டத் தாண்ட கோடுகளைத் தள்ளிப் போட்டுக் கொண்டே போவது. தமிழ் மொழியின் படைப்பிலக்கியத் துறையிலும் இது நடக்கிறது. நான்கு வரிகளில் பாடப்பட்டு வந்த வெண்பாவை இரண்டு வரிகளில் குறுக்கினார் வள்ளுவர். அகவலும் வெண்பாவும் மிகுந்திருந்த காலத்தில் புதிய செய்யுள் வடிவங்களைப் பயன்படுத்தினார் இளங்கோ. உலகெங்கும் காப்பிய நாயகர்கள் அரச குலத்தவராக இருந்தபோது ஒரு வணிகனை நாயகனாக்குகிற துணிவும் அவருக்கு இருந்தது. “ஓரிரண்டு வருஷத்து நூற் பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும்” எழுதினார் பாரதி. அன்றைய இலக்கியக் காவலர்களின் பாதுகாப்பு அரண்களை மீறி சாமானிய மனிதர்களின் கதையை எழுதினார் புதுமைப்பித்தன். கனவுகள் கடைபரப்பப் பட்டிருக்கும் தமிழ்ச் சூழலில் நவீனத்துவத்தின் வாசலை வாசகனுக்காக ஒருக்களித்து வைத்தார் சுந்தர ராமசமி.

இவர்கள் செய்ததெல்லாம் படைப்பு மொழியின் எல்லையைக் கொஞ்சம் நீட்டியது. முத்துலிங்கமும் இந்த வரிசையில் சேர்கிறார். இவரது நேர்காணல்களின் பொருள் புதிது, சொல் புதிது, வடிவம் புதிது. முத்துலிங்கம் நேர்காணலை இலக்கியமாக்குகிறார். தமிழின் எல்லையை கொஞ்சம் நீட்டுகிறார்.

******
“வியத்தலும் இலமே”(நேர்காணல்கள்)
அ. முத்துலிங்கம்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பபகம்
669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629 001
முதல் பதிப்பு: டிசம்பர் 2006
பக் 237, விலை ரூ.125

******

(இந்தக் கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் ‘புதிய பார்வை’ டிசம்பர் 1-15 இதழில் வெளியானது)
____________________________________________________________________________________________

மின்னஞ்சல்: mu.ramanathan@gmail.com
இணையதளம்: http://www.muramanathan.com/

Series Navigation

மு இராமனாதன்

மு இராமனாதன்