எல்லைகளற்று எரியும் உலகு!

This entry is part [part not set] of 37 in the series 20071025_Issue

வ.ந.கிரிதரன்



எத்தனைமுறை பார்த்தாலும்
அலுக்கவில்லை.
இரவுவானும், மதியும்,
சுடரும், புள்ளும், பொழுதும்
மற்றும் இயற்கை வளமும்,
நிகழ்வும்தான்.

நோக்கும்பொழுதெல்லாம்
நினைவலைகளெழும்பும்.
நெஞ்சு தண்ணுணர்வில்
தளும்பும்..

விரிவெளியதில்
விரையும் வாயுக்குமிழி.
விந்தை! விந்தை!
விந்தையோ விந்தை!

உயிர்த்துடிப்புடனொரு
முட்டை!
இட்ட பட்சிதான் யாதோ?

காலமற்ற வெளியா?
வெளியற்ற காலமா?

காலம் தழுவிய
வெளியின் காதல்!
பிரிக்க முடிந்தவர்
உளரோ?

சித்து, அசித்து..

ஆதி, அந்தம்,.

சடம், சக்தி.

மீறிட முடியாப்
பரிமாணச் சிறை.

ஆயுட்கைதி.யாக
சிறகடிக்க அவாக்
கொண்டதொரு
பட்சியாக
நான்.

இருந்தும்,

விரியும் வெளி.
எல்லைகளற்று எரியும்
உலகு!


ngiri2704@rogers.com

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்