எனக்குப் பிடித்த கதைகள் – 9 -சுந்தர ராமசாமியின் ‘பள்ளம் ‘ (மோகமும் மூர்க்கமும்)

This entry is part [part not set] of 30 in the series 20020414_Issue

பாவண்ணன்


கல்லுாரிக் காலம். நானும் நண்பர்களும் விரும்பிப் படித்த எழுத்தாளர்களுள் ஒருவர் ஜெயகாந்தன். அப்போதுதான் நுாலகத்துக்கு வந்திருந்த ‘சினிமாவுக்குப் போன சித்தாளு ‘ நாவலை எடுத்திருந்தோம். மாற்றி மாறற்ிப் படித்து விட்டு அதை எப்படி உள்வாங்கிக் கொள்வது என்று புரியாமலேயே திகைத்து உட்கார்ந்திருந்தோம். திரைப்படம் ஒருவரைப் பைத்தியமாக்கும் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. எதையோ மிகைப்படுத்திச் சொல்லப்பட்டதாக எண்ணிக் கொண்டோம்.

காலம் நகர்ந்தது. எங்கள் எண்ணங்கள் உண்மையல்ல என்பதை மெல்ல மெல்ல உணர்ந்து கொள்ளும் வகையில் பல விஷயங்களைப் பார்க்கவும் கேட்கவும் படிக்கவும் நேர்ந்தது. நடிகை சாவித்திரியைப் பார்ப்பதற்காகத் திருட்டு ரயிலேறிச் சென்னைக்குச் சென்று அவர் வீட்டு வாசலிலேயே மூன்று நாட்கள் தவமாய்த் தவமிருந்து கண்குளிர நான்கைந்து முறை பார்த்துவிட்டுத் திரும்பியதாக ஒரு பெரியவர் புல்லரிப்போடு சொன்னதைக் கேட்டேன். சிலைகள் செய்யக் கூடிய பொம்மைக்காரர் ஒருவர் தாம் உருவாக்கிய பெண்சிலைகளை-கடவுள் சிலை உட்பட-தனக்குப் பிடித்த நடிகையொருத்தியின் சாயலில் தொடர்ந்து வடித்ததைக் கண்ணாரப் பார்த்தேன். எங்கள் கிராமத்தில் முன்னணி நடிகர்களின் ரசிகர் கூட்டங்கள் தமக்குள் அடித்துக் கொண்டு காவல் நிலையம் சென்றதையும் கண்டேன். சுவரொட்டிகளில் சாணம் அடிப்பதையும் கட்-அவுட்டுகளுக்கு மாலைகள் போடுவதையும் பாலால் அபிஷேகம் செய்வதையும் நேருக்கு நேர் பார்த்தேன். ஜெயகாந்தன் மிகைப்படுத்தவில்லை என்பதைக் காலம் தாழ்ந்து புரிந்து கொண்டேன்.

திரைப்படத்தை ஒரு போதைப் பொருள் போல உட்கொள்ளும் மக்களைக் காணும் போதெல்லாம் என் அடிவயிறு கலங்குகிறது. கன்னட நடிகர் ராஜ்குமார் திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திய சமயத்தில் மைசூரிலிருந்து தரையில் உருண்டபடியே அவர் இல்லத்துக்குச் சென்று தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்த ஒரு ரசிகரைப் பற்றிய செய்தி துணுக்குற வைத்தது.

குறிப்பிட்ட திரைப்படம்தான் தன் கொலையுணர்வைத் துாண்டியது என்று குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சொன்னதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. ஏதோ ஒரு திரைப்படக்காட்சிதான் காதலித்தவளை அழைத்துக் கொண்டு ஊரைவிட்டு வெளியேறும் துணிச்சலைத் தந்தது என்றும் காதலர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

திரைப்படத்துக்கும் பொதுமக்களின் மனநிலைக்கும் உள்ள தொடர்பு முக்கியமான ஒன்றாகும். திரைப்படம் ஒரு பொழுது போக்கு என்ற நிலையிலிருந்து மனத்தை வடிவமைக்கிற ஒன்றாக வெகுகாலத்துக்கு முன்பே மாறிவிட்டது. நிற்பது, நடப்பது, சிரிப்பது,தலைாயக் கோதுவது என எல்லாமே தனக்குப் பிடித்த நடிக/நடிகையரின் சாயலுக்கு நெருக்கமாக அமையுமாறு பார்த்துக் கொள்ளும் அளவுக்கு மக்கள் நுட்பமான மாற்றத்துக்குள்ளாகி விட்டார்கள். தமக்குப் பிடித்த நடிக/நடிகையரின் ஒவ்வொரு வசன வரிகளும் வேத வரிகளாக மனத்தில் பதிந்து கிடக்கின்றன. மனம் என்பதைத் தம் பிரியத்துக்குரிய நடிக/நடிகையர் குடியிருக்க உருவான கோயிலாக மாற்றிக் கொண்டார்கள். சிந்தனை. பேச்சு எல்லாமே திரைப்படம்தான் என்று மாறிவிட்டது.

நாளுக்கு நாள் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள திரைத்துறையின் செல்வாக்கு அதிகரிக்கும் போதெல்லாம் என் கவலையு ம் அதிகரிக்கிறது. கிராமத்து வீடுகளில் கேபிள் இணைப்புகளில் நாள் முழுக்கத் திரைப்படங்கள் ஓடிக் கொண்டே இருக்கின்றன. சுய உணர்வுக்கத் திரும்பாதபடி தொடர்ந்து போதை ஊசிகள் ஏற்றிக் கொண்டே இருப்பதைப் போல எல்லா கேபிள் நிறுவனங்களும் இச்சேவையைத் தொடர்ந்து செய்தபடி உள்ளன. சமீபத்தில் ஊரில் கழனியில் மணிலாச்செடி பிடுங்கிகிறார்கள் என்று கேள்விப்பட்டு சென்றிருந்தேன். வேருடன் பிடுங்கப்பட்ட மணிலாச் செடிகள் ஒவ்வொருவர் பக்கத்திலும் அம்பாரமாகக் கிடந்தன. களத்தின் மையத்தில் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி. கேபிள் இணைப்பின் உதவியால் ஏதோ ஒரு திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. கண்கள் திரையில் பதிந்திருக்க, இடது கை தானாகக் கடலைச் செடியை எடுத்தது. வலது கை வேரிலிருந்து கடலைகளை உருவியெடுத்துக் கூடைக்குள் போட்டது. சக்கை வேகமாகத் தள்ளிப் போய் விழுந்தது. எதிர்பாராத விதமாக, கடலைச்செடிக்குப் பதிலாக, ஒரு பாம்பையே நீட்டினாலும் வாங்கிக் கச்சிதமாகத் திருகி முரித்து விடுவார்கள் என்று தோன்றியது. அந்த லயிப்பு. அந்த ஆனந்தம். அந்த சிலிர்ப்பு. ஒருகணம் அப்படியே உறைந்து போனேன் நான். மக்களை நினைத்து ஆழந்த கவலை ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

களத்திலிருந்த பெரியவரிடம் என் கவலையைச் சொன்னேன். ‘நீ நாலு எழுத்து படிச்சிட்டே. நாலு ஊருக்குப் போகவர ஆரம்பிச்சிட்ட. அந்தக் கெத்துலதான் ஒன் கண்ணுக்கு நாங்கள்ளாம் சாணிஉண்டயா தெரியறம் ‘ என்று கோபப்பட்டார். மறுத்துச் சொல்லத் தொடங்கிய போது வேகமாகத் தடுத்து ‘இங்க பாரு தம்பி, நீ நாலு புஸ்தகம் படிச்சி பொழுத போக்கிக்குவ. நாங்க பட்டிக்காட்டுல என்னத்த செஞ்சி பொழுத ஒட்டறது ? ஒங்கள மாதிரி கொட்டாய்க்கு போயி அம்பது நுாற கொடுத்தா படம் பாக்கறம் ? என்னமோ மவராசனுங்க கேபிள்ள போடறானுங்க. சவுரியமா பாக்கறம். ஏழை பாழைங்க சந்தோஷமா இருக்கறதுன்னா ஒங்க கண்ணுக்கு உறுத்துதா ? ‘ என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு போய் விட்டார்.

திரைப்படத்தின் மோசமான பாதிப்பைச் சார்ந்து என் சங்கடங்களைப் பகிர்ந்து கொள்ள ஆளில்லாமல் திரும்பி நடந்து கொண்டிருந்தேன். தாத்தா காலத்துக் கதையொன்று நினைவுக்கு வந்தது. வழிப்போக்கன் ஒருவனைப் பார்த்து ‘முன்னால பள்ளம் இருக்கு, பாத்துப் போ ‘ என்றானாம் ஒருவன். ‘ஓஹோ, ஒனக்கு மட்டும்தான் தெரியுமா அது பள்ளம்ன்னு ? எனக்கும்தான் தெரியும். நான் அந்தப் பள்ளத்துல உருண்டுகிட்டும் போவேன், உழுந்து பொரண்டுகிட்டும் போவேன். அதக் கேக்றதுக்கு நீ யாருய்யா ? ‘ என்றானாம் வழிப்போக்கன். தமிழ்த் திரைப்படத்தின் மயக்கம் சார்ந்தவர்கள் சொல்லும் பதில் அப்படித்தான் இருக்கிறது. மனமெங்கும் கசப்பு மிதந்தது. ஏபள்ளம் பள்ளம்ஏ என்று முணுமுணுத்துக் கொண்டேன். சிறிது நேரத்துக்குப் பிறகுதான் சுந்தர ராமசாமியின் ‘பள்ளம் ‘ கதை நினைவுக்கு வந்தது. தமிழ் மக்களின் திரைப்பட மோகத்தை இந்த அளவு வலிமையாகச் சொன்ன படைப்பு வேறில்லை.

விடுமுறை நாள். மகனைக் கடைக்கு அனுப்புகிறார் அப்பா. புதிதாக வந்து இறங்கிய துணிக்கட்டைப் பிரித்து விலை போடச் சொல்கிறார். ஊரே விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. சிரிக்கிறார்கள். ஓடுகிறார்கள். கைகோர்த்துத் திரிகிறார்கள். அங்குமிங்கும் இருக்கும் திரையரங்குகளில் நெரிபட்டுக் காலைக் காட்சிக்கு டிக்கட் வாங்குகிறார்கள். தனக்கு விதிக்கப்பட்ட வாழ்வை மனத்துக்குள் எண்ணி நொந்தபடி கடைக்குச் செல்கிறான் இளைஞன். வேலைக்காரன் மதுக்குஞ்சு உதவி செய்கிறான். வேலை எளிதில் முடிகிறது. மதுக்குஞ்சுவின் ஒரு கண் பொட்டையாக இருக்கிறது. அதன் காரணத்தைத் தயங்கித் தயங்கிக் கேட்கிறான் இளைஞன். தன் தாயார் அந்தக் காலத்துச் சினிமா பைத்தியம் என்றும் ஆற்று மணலில் உட் கார்ந்து திரைப்படம் பார்க்கும் போது மடியில் இருக்கும் குழந்தை கூழாங் கல்லை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும் போதெல்லாம் விரலைவிட்டு எடுத்து எடுத்துப் போட்டபடி படம் பார்த்தாள் என்றும் கூழாங்கல்லுக்குப் பதில் ஒருமுறை கண்ணைத் தோண்டி எடுத்து விட்டாள் என்றும் அதுதான் பள்ளத்துக்குக் காரணம் என்றும் சொல்கிறான் மதுக்குஞ்சு.

உறைய வைக்கிற முடிவு இது. மதுக்குஞ்சுவைத் தமிழ்நாடாகவும் அவன் தாயாரைத் தமிழ்த்தாயாகவும் படிமமாக்கிப் பார்த்தால் கதையின் தீவிரம் புரியும். தமிழ்த்தாய் திரைப்படத்தின் லயிப்பில் தன் மகனின் கண்ணையே பிடுங்கிப் பொட்டையாக்கி விட்டாள். இந்த அளவு கடுமையான முறையில் தமிழ்ச்சூழல் விமர்சனம் செய்யப்பட்ட பிறகும் எந்த மாற்றமும் எங்கும் ஏற்பட்டு விடவில்லை. மாற்றம் ஏற்படவில்லை என்பதற்காக, எந்தப் படைப்பாளியாலாவது விமர்சனம் செய்யாமல் இருக்க முடியுமா ?

***

Series Navigation