உயிர்த்திருத்தலுக்கான போர்களின் பாதையில் ( அம்மன் நெசவு – நாவல் அறிமுகம்)

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

பாவண்ணன்


( அம்மன் நெசவு – சூத்ரதாரி. நாவல். தமிழினி வெளியீடு, 342, டி.டி.கே.சாலை, சென்னை – 14. விலை3ரு70 )

மனிதர்களால் தவிர்க்கவே முடியாத விஷயமாக காலம்காலமாகத் தொடர்வது உயிர்த்திருத்தலுக்கான போராட்டம். ஆதிக்காலத்தில் நெருப்பையும் பொங்கியெழும் கடலலைகளையும் சூறாவளிக்காற்றையும் கண்டு மனிதர்கள் அடைந்த அச்சத்துக்கு அளவே இருந்திருக்காது. அவற்றால் பாதிக்காத வண்ணம் அச்சூழலை எதிர்கொண்டு அவர்கள் உயிர்வாழப் பழகுவதற்குள் பல நுாற்றாண்டுகள் கடந்திருக்கலாம். காடுகளில் ஒரு பகுதியில் மனிதர்களும் மறுபகுதியில் விலங்குகளுமாக வாழ்ந்த சூழலிலும் அச்சம் ஆட்டிப்படைத்திருக்கும். வரலாற்றின் மற்றொரு காலகட்டத்தில் ராஜ்ஜியத்தை விஸ்தரிக்கும்பொருட்டுப் படையெடுத்து வந்தவர்களாலும் இனக்குழுக்களாலும் உட்பகையாலும் எனக் காலம்காலமாகத் தொடர்ந்து ஏதாவது ஒரு கரிய சக்தி வாழ்வின் அமைதியைக் குலைத்து அலைக்கழித்தபடியேதான் வந்திருக்கிறது. குலைவுக்கு ஆளான மனிதக்கூட்டங்களும் குலைக்க முற்பட்ட சக்திகளும் வரலாற்றின் பாதைகளில் மாறிமாறி வந்திருக்கிறதே தவிர பூமிப்பரப்பை ரத்தக்களறியாக்கிய குலைவுகளுக்கு ஒரு முடிவு நேர்ந்ததே இல்லை. இந்த மானுடக் குலைவை விரிவான வாழ்க்கைப் பின்னணியில் அமைத்துப் பேசுபவையே மிகப்பெரிய இலக்கியங்களாக மதிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ராமாயணமும் மகாபாரதமும் நம் முன் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாக அமைந்துள்ளன. இக்குலைவைச் சித்தரிப்பதன் வழியாக இறுதியில் வாழ்வில் எஞ்சுவது என்ன, எதை அடைய மனிதர்களிடையே இத்தகு ஓயாத போராட்டம் நிகழ்ந்தவண்ணம் இருக்கிறது என்கிற அடிப்படையான கேள்விகளை ஒட்டி ஒரு மாபெரும் விவாதத்தை உருவாக்குகின்றன இப்படைப்புகள். இவற்றின் தொடர்ச்சியாக நெசவாளர்களின் குலைவை மையப்பொருளாக்கி சூத்ரதாரியின் அம்மன் நெசவு என்னும் நாவல் வெளியாகியுள்ளது.

நாவலின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சித்தரிப்பு கதைக்கு ஒரு வரலாற்றுத் தன்மையை வழங்குகிறது. செல்வத்துக்காக படையெடுத்து வந்த முகலாயர்களின் காலத்தில் நடந்ததாக் கருதப்படுகிற ஒரு சம்பவமொன்று உயிரோட்டத்துடன் முன்வைக்கப்படுகிறது. கோயில் செல்வம் கொள்ளையடிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் காலம் காலமாக வழிபட்டு வரும் அம்மன் பங்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் இரவோடு இரவாக இடம்மாற்றிவிடும் முயற்சியில் இறங்குகிறார்கள் சாதி முக்கியஸ்தர்கள். பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீடுகளையும் தோட்டங்களையும் கால்நடைகளையும் துறந்து எல்லாரையும் ஆற்றைத் தாண்டி வேறொரு புகலிடத்தை நோக்கி மூட்டை முடிச்சுகளோடு நடந்துபோகத் துாண்டுகிறார்கள் அவர்கள். உயிர்த்திருப்பதற்கான நெருக்கடிப்பயணம் அது. ஆனால் ஆற்றைக் கடந்துகொண்டிருக்கும்போதே ஆபத்து நேர்ந்து விடுகிறது. வழியெங்கும் சூறையாடியபடி ஊரை நெருங்கிய முகலாயப்படை வெறிச்சோடிய ஊரையும் வெற்றுக் கோயிலையும் கண்டு வெறிகொள்கிறது. எல்லாவற்றையும் சிதைத்தபடி குதிரைகளில் தேடிவருகிறார்கள். ஆற்றைத் தாண்டுபவர்களைக் கண்டதும் வெறியோடு தாக்குகிறார்கள். தாக்குதலால் தடுமாறுகிறார்கள் சாதி முக்கியஸ்தர்கள். செல்வம் முழுக்க ஆற்றில் சரிய அம்மனுடன் கரையேறி ஓடுகின்றனர். அது ஒரு கட்டம். பல நுாற்றாண்டுகளுக்குப் பின்னர் மற்றொரு கட்டத்தையும் காட்டுகிறார் நாவலாசிரியர். வலிய சக்தியாக இருக்கிற கவுண்டர்களின் ஒடுக்குமுறைகளைத் தாங்க முடியாமல் எளிய நெசவுச் செட்டியார்கள் மீண்டும் அம்மனுடன் வேறொரு நகரை நோக்கிக் குடியேறுகிறார்கள்.

துரத்தப்படுவதற்கான காரணங்கள் ஒரு கட்டத்தில் செல்வத்துக்கான மோகம், ராஜ்ஜிய விஸ்தரிப்புக்கான தாகம், மதம் எனப் பலவாக இருக்கின்றன. இன்னொரு கட்டத்தில் அது சாதிய ஆதிக்க மனநிலையாக இருக்கிறது. துரத்தலுக்கான காரணங்கள் மாறிக்கொண்டே இருக்கிறதே தவிர உயிர்த்திருத்தலுக்கான போராட்டமும் ஓட்டமும் மாறாததாக இருக்கிறது. நம் சமூகத்தில் படர்ந்துவிட்ட இந்த நோயின் கூறு நம்மை ஆயாசமுற வைக்கிறது. காலம் இன்று எவ்வளவோ மாறிவிட்டது. கல்வி நிலைகளில் நாம் உயர்ந்திருப்பதாக மார்தட்டிக்கொள்கிறோம். பல உயர் பதவிகளும் அந்தஸ்துகளும் நம்மைத் தேடி வந்திருக்கின்றன. ஆனால் மனிதர்களை மனிதர்கள் குலைத்துத் துரத்துகிற விஷயத்தில் பெரிய மாறுதல் எதுவும் நிகழவில்லை என்பது அதிர்ச்சியாகவே இருக்கிறது. தலைமுறை தலைமுறையாக இந்த அதிர்ச்சி தொடர்ந்தபடியே இருக்கிறது. இதன் கண்ணியை காலம் எப்போது அழித்தொழிக்கப்போகிறது என்னும் கேள்வியை ஒவ்வொருவருமே கேட்டுக்கொள்கிறார்கள்.

இக்கேள்வியையே தனக்கு நன்றாகத் தெரிந்த ஒரு பின்னணியில் இந்த நாவலில் முன்வைக்கிறார் சூத்ரதாரி. இது நாவலின் மிகப்பெரிய பலம். பலவீனமான அம்சங்களும் சில உள்ளன. இந்தக் கோர ஆட்டத்தில் மானுட வாழ்வில் எஞ்சுவது என்ன என்கிற அடிப்படைக் கேள்வியை நெருங்கிவந்து, அதன் வழியாக எது வாழ்க்கை என்கிற மையப்புள்ளியைநோக்கி நெருங்கிவர வாய்ப்புகள் உள்ள ஒரு சாத்தியப்பாடு நாவலில் பயன்படுத்திக்கொள்ளப் படவில்லை. வலிய சாதியினர்களின் ஆக்கிரமிப்பு, அழிப்பு நடவடிக்கைகள் என்றும் அவற்றுக்கு நேர்எதிராக எளிய சாதியினரின் தற்காப்பு எதிர்நடவடிக்கைகள் என்றும் மாறிமாறி அமையும் காட்சிகளுக்கு நடுவே எளிய சாதியினரின் மீது பரிவு கொண்ட ஒரு வலிய சாதிக்காரரையும் வலிய சாதிக்காரனோடு நட்பு பூண்டு சொந்தச் சாதிக்காரர்களுக்கே துரோகம் செய்கிற எளிய சாதிக்காரனொருவனையும் படைத்திருந்த போதும் அவர்களின் அகப்போராட்டங்கள் போதிய அளவு கவனப்படுத்தப்படவில்லை. அடுத்த சாதிக்காரனை வெளிப்படையாக ஆதரிக்கிற ஒற்றை ஆள் எஞ்சிய தொண்ணுாற்றியொன்பது சாதிக்காரர்களுக்கு நடுவில் உறுதி குைலுயாமல் வாழ்வது எளிதான விஷயமல்ல. எடுத்துக்காட்டாக ஒன்றை நினைக்கலாம். ஒரு திருமணம் அல்லது ஒரு மரணம் நிகழ்வதாக வைத்துக்கொள்வோம். தொண்ணுாற்றியொன்பது பேரும் ஒதுங்கிப்போய் ‘போடா, காலம் பூரா அந்தச் சாதிக்காரங்க கூடதானே கொஞ்சிக் குலாவிக்கிட்டிருந்தே, இப்ப அவனையே கூட்டு வச்சி நடத்திக்கோ போ ‘ என்று சொல்லும் நிலையில் ஒற்றை ஆளின் மனத்தில் நிகழும் கொந்தளிப்புகள் ஏராளம். இத்தகு அகப்போராட்டங்கள் வழியே மனம் நகர்ந்து சென்று நிற்கிற புள்ளி எதுவென்று கற்பனையால் துழாவிக் கண்டறிவதே நாவல் கலையின் சவால். இச்சவாலை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகளிருந்தும் இந்நாவல் போதுமான அளவு எதிர்கொள்ளவில்லை என்பதே மிகப்பெரிய பலவீனம்.

மனத்தில் மாறிமாறிப் புரளும் பாசாங்குகளையும் வெறி நிலைகளையும் இறுதிக்காட்சிகள் துல்லியமாகச் சித்தரிக்கின்றன. தேர்தல் அறிவிப்பு வந்ததும் எளிய சாதிக்காரர்களின் வாக்குகளுக்காக பெரிய சாதிக்காரர் குழைந்து நெளிந்து நிற்பதும் வலிய வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் புதுசாகத் தோண்டப்பட்ட கிணற்றுக்குச் சுற்றுச்சுவர் கட்டுத்தருமாறு எளிய சாதிக்காரர்கள் கோருவதும் தோற்றதும் ஏறிய வெறியால் அச்சுவர் இடித்துத் தரைமட்டமாக்கப்படுவதும் கூரைகள் நெருப்பிடப்படுவதும் மாறிமாறிக் காட்டப்படுகின்றன. வெற்றிக்காகக் கையேந்தி வரவும் தயக்கம் காட்டாத மனம் தோல்வியைக் கண்டதும் வெறிகொண்ட விலங்காக மாறிவிடுகிறது.

சித்தரிப்பினுாடாக நிகழும் சில தற்செயல்களைப் பதிவு செய்வதில் படைப்பாளியின் கலைமனம் விழித்திருப்பதை அறியமுடிகிறது. சாணம் எடுக்க வெள்ளத்தோட்டத்துக்கு அவசரம் அவசரமாக விரைகிற உண்ணம்மாள் வழியில் ஒற்றையடிப்பாதையின் இருபுறமும் அடர்ந்திருந்த கொளுஞ்சிகளுக்கு நடுவில் அங்கங்கே காணப்பட்ட தொட்டாச்சிணுங்கிச் செடிகளைக் குனிந்து தொட்டு அவை சுருங்குவதைப் பார்த்து உற்சாகப்படுவது ஒரு காட்சி. கண்ணாடியைப்போல முகம் காட்டும் கிணற்றுத் தண்ணீர்ப்பரப்பைப் பார்த்த பரவசத்தில் தன் உடலின் பிம்பத்தைக் காணும் ஆவலில் ஜாக்கெட் பட்டன்களைக் களைந்து தோளோடு தளர்த்தி நிறுத்தி பிரதிபலிக்கும் நிழலை ஆசையோடு ஆராயி காண்பது மற்றொரு காட்சி. இப்படி நிறையச் சொல்லலாம்.

paavannan@hotmail.com

Series Navigation