இரு மிருகங்கள், ஒரு சமன்புள்ளி

0 minutes, 0 seconds Read
This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

கோநா


முதல் சந்திப்பிலேயே

தெரிந்துவிட்டது இருவருக்கும்

திறந்திருந்த

அத்தனை சாத்தியக்கூறுகளும்.

பின்வந்த ஒன்றிரண்டு

யதார்த்தச் சந்திப்புகளிலும்

திட்டமிட்ட சந்திப்புகளிலும்

சாத்தியக் கூறுகளனைத்தும்

ஒவ்வொன்றாய்ச் சாத்திக்கொள்ள

பின்னிரவுச் சந்திப்பொன்றில்

பயம்நீங்கி வெளிவந்து

சந்தித்துக் கொண்டன

வனப்பான வனத்துள்

நீ மறைத்து வைத்திருந்த

ஏக்கங்கொண்டலைந்த மிருகமும்,

வலிமையான வனத்துள்

நான் மறைத்து வைத்திருந்த

வெறிகொண்டலைந்த மிருகமும்.

விபத்தென்று முதல்முறையும்,

வயதென்றும், இயல்பென்றும்

பின்வந்த சந்திப்புகளில்

சொல்லிச் சொல்லி

சமன் புள்ளியொன்றை

அடைந்து விட்டபின்

இப்போதெல்லாம்

சமாதானங்கள் கூட

சொல்லிக்கொள்வதில்லை.

அத்தனை சாத்தியக் கூறுகளுமே

திறந்திருக்கும்

இன்னொரு வனச்சந்திப்பு

இருவருக்கும் நிகழும்வரை

இப்படியே இருப்போம்

இயல்பான விலங்குகளாய்

விழிகளை உற்றுப் பார்ப்பதை மட்டும்

வெளிச்சத்தில் தவிர்த்தபடி.

Series Navigation

author

கோநா

கோநா

Similar Posts