ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது.

This entry is part [part not set] of 35 in the series 20101219_Issue

ஜெயமோகன்



மூத்த எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படுகிறது. ரூ 5000 மும் நினைவுச்சின்னமும் அடங்கியது இவ்விருது. விருதுடன் விருதுபெறும் ஆசிரியரைப்பற்றி எழுதப்பட்ட நூலும் வெளியிடப்படும். கோவையை மையமாக்கி செயல்பட்டுவரும் விஷ்ணுபுரம் வாசகர்வட்டத்தால் 2010 முதல் வழங்கப்படவிருக்கும் இந்த விருது தமிழ் புனைகதை இலக்கியத்தில் சாதனை புரிந்த மூத்த எழுத்தாளர்களுக்கு அவர்களின் இளம் வாசகர்களால் வழங்கப்படுகிறது.

வரும் டிசம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை கோவை அரங்கில் மாலை ஐந்து மணிக்கு விருது வழங்கும் விழா நடைபெறும். விருதை புகழ்பெற்ற மலையாள நாவலாசிரியர் புனத்தில் குஞ்ஞப்துல்லா அவர்கள் வழங்குவார்கள். ஆ.மாதவன் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘ கடைத்தெருவின் கலைஞன்’ என்ற நூலை இயக்குநர் மணிரத்னம் வெலியிடுவார். மார்க்ஸிய ஆய்வாலர் ஞானி தலைமை தாங்குவார். விழாவில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன், விமர்சகர் வேதசகாயகுமா ஆகியோர் வாழ்த்தி பேசுவார்கள்.

ஆ.மாதவன் திருவனந்தபுரம் சாலைத்தெருவில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக வணிகம் செய்துவருகிறார். தொடக்கத்தில் திராவிட இயக்க இதழ்களில் எழுதிவந்த மாதவன் பின்னர் சாலைத்தெருவைப்பற்றிய யதார்த்தவாத கதைகளை எழுத ஆரம்பித்தார். அவரது கதைகள் தமிழின் முக்கியமான இலக்கிய சாதனைகளாக விமர்சகர்களால் முன்வைக்கப்படுகின்றன. இப்போது 74 வயதாகும் மாதவன் தமிழிலக்கிய முன்னோடிகளில் ஒருவர்.

தமிழில் மாதவனுக்கு மட்டும் ஒரு சிறப்பு உண்டு, அவரது பெரும்பாலான கதைகள் சாலைக்கடைத்தெரு என்ற ஒரே தெருவைப்பற்றியவை. கடைத்தெரு கதைகள், மோகபல்லவி, ஆ.மாதவன் கதைகள், அரேபியக்குதிரை போன்ற சிறுகதை தொகுதிகளும் புனலும் மணலும், கிருஷ்ணபருந்து, தூவானம் ஆகிய நாவல்களும் மாதவன் எழுத்தில் வெளியாகியுள்ளன

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் எழுத்தாளர் ஜெயமோகனின் வாசக நண்பர்களால் 2009ல் அமைக்கப்பட்ட இலக்கிய அமைப்பு. இலக்கிய அரங்குகளையும் கருத்தரங்குகளையும் நிகழ்த்தி வருகிறது. இவ்வருடம் முதல் விருதுகள் வழங்கப்படுகின்றன என்று அதன் அமைப்பாளர் கெ.வி.அரங்கசாமி தெரிவித்தார்


ஜெயமோகன்

Series Navigation