ஆட்டோகிராஃப் 16-ஒரு கதாநாயகி கதை சொன்னாள்

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

சித்ரா ரமேஷ்


நான் ஏற்கெனவே சொல்லியிருந்த மாதிரி உடையலங்காரம் கேபிசுந்தராம்பாளை ஒத்திருந்தாலும் ஒருத்தி மட்டும் ஷெரீன் ஸ்டைலில் வருவாள். எட்டாவது வரைக்கும் அவரவர் வளர்ச்சியைப் பொறுத்து முட்டிக்கு கீழ் வரை ஸ்கர்ட்,கொஞ்சம் உயரமாக வளர்ந்து விட்டால் முழுப் பாவாடை. ஒன்பதாம் வகுப்பு வந்து விட்டால் தாவணி கம்பல்ஸரி. ஸ்கர்ட், பாவாடைத் துணியில் வித்தியாசம் காட்ட முடியாது. தடியான சாக்குப்பை போன்ற துணி மட்டும்தான் கிடைக்கும். விலை குறைவு, நீடித்து உழைக்கும் போன்றவற்றால் இந்த வகைத் துணியையே பெரும்பாலானோர் விரும்பிப் பாவிப்பர். கிரீம் கலர் சட்டையில்தான் கொஞ்சம் விளையாடுவார்கள். கிரீம் கலர் என்பது அடிக்க வரும் கோவிந்தா மஞ்சள் கலரிலிருந்து நல்ல சொட்டு நீல வெண்மை வரை வித வித வண்ணங்கள் மாறும். மெலிதாக உள்ளேயிருக்கும் உள்ளாடைத் தெரிய லோ கட் நெக் பிளவுஸ் போட்டுக் கொண்டு காலையில் அஸெம்பிளி முடியும் வரை முன்னால் இரண்டு மூன்று மடிப்புகள் வைத்து தாவணியின் ஒற்றைத் தலைப்பை இழுத்துச் சொருகிக் கொண்டு பதவிசாக பண்டரிபாய் மாதிரி நின்று கொண்டிருப்பார்கள். அஸெம்பிளி முடிந்து வகுப்புக்குப் போகும் போதே தாவணியை இழுத்து பின் பக்கம் ‘வி ‘ வடிவம் கொண்டு வந்து லோ நெக் தெரியாத வண்ணம் இழுத்து சொருகியிருந்த முந்தானையை தளர்த்தி விதி முறைகள் மீறப்படுவதற்குத்தான் என்று கவர்ச்சிக் காட்டும் புதுமை விரும்பிகள்.

இவர்களைக் காட்டிக் கொடுப்பதையே கலாச்சாரமாகக் கொண்டிருந்த பழமைவாதிகள். நன்றாக உடை உடுத்துவது என்பது அதிகத் தன்னம்பிக்கைத் தரும்

விஷயம் என்பதெல்லாம் அப்போது கிடையாது. நன்றாக அலங்காரம் பண்ணிக் கொண்டுப் போனால் நம் குடும்பத்தையே சந்தேகிப்பார்கள். சின்னப் பெண்களையாவது

மன்னித்து விடுவார்கள். பெண் பெரிய பெண்ணாகி விட்டால் அம்மா பின்னித் தொங்க விட்டுக் கொண்டு பூ வைத்துக் கொண்டு விட்டால் அவ்வளவுதான். கண்டிப்பாக அவர்கள் நடத்தைப் பற்றி விமர்சனம் நடக்கும். நகர்ப் புறங்களுக்கும் கிராமப் புறங்களுக்கும் என்ன வித்தியாசம் இருந்ததோ இல்லையோ இந்த ஆடை விஷயத்தில்

கண்டிப்பாக நிறைய இருந்தது. பாம்பே, டெல்லி, அருகிலிருக்கும் சென்னையிலிருந்து யாராவது வந்தாலே வித்தியாசத்தைக் கண்டு பிடித்து விடலாம். இவ்வளவுக் கட்டுப்பாடுகளுக்கும் நடுவில் ஷெரீன் மாதிரி குட்டி ஸ்கர்ட் போட்டுக் கொண்டு, முன் பக்க முடியெல்லாம் கத்தரித்து விட்டுக் கொண்டு கழுத்தில், கையில், காதில், எல்லாம் விதவிதமாக அணிந்து கொண்டு வருவாள். அந்த சிற்றன்னை டாச்சருக்கு எதாவது அப்ஸெஸிவ் டிஸ்ஆர்டர் இருந்ததோ என்று ஒரு நிமிடம் யோசிக்க வைக்கிறார்.

எங்களையெல்லாம் எவ்வளவு வெறுத்தாரோ அவ்வளவுகவ்வளவு இந்தப் பெண் மீது விருப்பு. தலையை லூசாக பின்னிக் கொண்டு வரும் ராணிகிரிஜாவுக்குத் தினம் தண்டனை. அவள் தலையை விரித்துக் கொண்டு மோகினி மாதிரி வந்தால் எங்க டாச்சர் ரவிவர்மா ஆகிவிடுவாங்க! வீட்டுப் பாடம் செய்து வரவில்லையென்பதையும்

அலட்சியமாகச் சொல்லிவிட்டு ஒரு மகாராணியின் கர்வத்தோடு நடந்து வருவாள்.

டாச்சருக்கு இவ்வளவு ‘பெட்டாக ‘ அவள் இருந்தது எதிர்க்கட்சியினரான எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லாமலிருந்த காரணம் அவள் எங்களுக்கும் நல்ல தோழியாக

இருந்ததுதான். வகுப்பில் மற்ற பெண்களெல்லாம் டாச்சருக்குப் பயந்து சுயநலவாதிகளாக இருந்தபோதும் இவள் மட்டும் எங்களிடம் நட்பு பாராட்டியது தென்றாலாக வீசியது.ஒருமுறை அந்த டாச்சரே பெருந்தன்மையாக ‘ஸ்நோவொயிட் ‘

நாடகத்தில் சித்தி வேஷம் எனக்குக் கொடுத்தாங்க! என்னை சிறுமைப் படுத்துவதாக

நினைத்துக் கொண்டு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அப்புறம் இவள் அந்த வேஷத்தை ஏற்று நடித்த போதுதான் ‘ஸ்நோவொயிட் ‘ நாடகத்தில் உண்மையான கதாநாயகி அந்த சித்தி கதாப் பாத்திரம்தான் என்பது புரிந்தது. ‘ஸ்நோவொயிட் ‘ அளவிற்கு அழகுப் படைத்தவள். நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு. பிரமாதமாக நடித்தாள். இதைப் பார்த்து விட்டுதான் வில்லன், வில்லி கதாபாத்திரங்களை விரும்பி ஏற்று நடிக்க ஆரம்பித்தேன். அண்ணனுக்கு முடிசூட்டுவிழா என்று பொறாமைப் படும் தம்பி! “ அங்கே அண்ணனுக்கு மகாராஜாப் பட்டம். இங்கே எனக்கு படைத்தளபதி வேலை! அவமானம்!” என்று வளை இடுப்பிலிருந்து உருவி வலது காலை பக்கத்திலிருக்கும் முக்காலி மீது கோபத்துடன் வைத்து வசனம் பேச வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு முக்காலி மீது காலை வைப்பதற்குப் பதில் இடறி விட ஸ்டூல் உருண்டு உணர்ச்சிவசப் பட்ட நடிப்பு என்ற பாராட்டு அந்த முக்காலிக்கு!! முக்காலிக்கும் எனக்கும் எப்பவுமே கொஞ்சம் பிரச்சனைதான்! இதை யார் டிசைன் செய்தது ? முதன் முதலாக என் கலைப் பயணத்தைத் தொடங்கிய போதே முக்காலியால் சின்ன இடையூறுதான்! ‘பூம்பூம் மாட்டுகாரன் ‘ பாட்டில் வரும் குட்டி ‘பூம்பூம் மாட்டுகாரனாக நடிப்பதற்குத்தான் மேக்கப் டெஸ்ட் எடுத்தார்கள். குட்டியா ஒரு மத்தளத்தை வைத்துக் கொண்டு ஆடுவது நன்றாகத்தான் இருந்தது. இன்னொரு நடனத்தை கொரியோகிராஃப் பண்ணிய டாச்சர் அதில் கிருஷ்ணனாக வந்தால் நன்றாக இருக்கும் என்று ‘நீல வண்ணக் கண்ணனே ‘ பாட்டுக்கு கிருஷ்ணனாக கோபிகைகளுக்கு நடுவில் நிற்பதற்கு தேர்வு செய்து விட்டார்கள். டுவிங்கிளிங் நைலக்ஸ் புடவையை முக்காலி மீது மடித்துப் போட்டுவிட்டு அதன் மேல் கையில் புல்லாங்குழலுடன் ஏறி நிற்க வேண்டும். டுவிங்லிங் நைலக்ஸ் புடவை இடுப்பில் நிற்பதே கஷ்டம். அதில் ஏறி நிற்கும் போதே கால் வழுக்கி வழுக்கி விளிம்புக்கு வந்து விட்டேன். கிளிஃப் ஹாங்கர் மாதிரி எத்தனை நேரம் நிற்க முடியும். கோபிகைகள் அப்போதுதான் சுற்றி வந்து பூ போட ஆரம்பித்திருந்தார்கள். இனிமேல் சமாளிக்க முடியாது என்று நிலைமை வந்ததும் மெள்ள முக்காலியை விட்டு கீழே இறங்கி எல்லாவற்றையும் சரி செய்து திரும்பவும் குழலூதும் கண்ணனாகப் போஸ். எல்லாரும் சிரித்தவுடன் மகிழ்ச்சியாகி விட்டது. கண்ணன் என்றால் இதைப் போல் குறும்புகள் செய்யவேண்டாமா ?

ஷெரீன் என்ன செய்தாள் என்று பார்ப்போம். உலகிலேயே அவளுக்கு பிடித்த ஒன்று சினிமா. இலட்சியம் சினிமா நடிகையாவது. சினிமாக் கதையைப் பேசுவதற்கும், கோடம்பாக்க நட்சத்திரமாக மின்னுவதைப் பற்றி பேசுவதற்கு அவளுக்குக் கிடைத்த நம்பிக்கைக்குரிய நபர்களாக நாங்கள் இருந்தோம். அந்தப் அடத்துலே ஆரஞ்சுக் கலர் டிரஸ், கையில் ஆராதனா வளையல் போட்டுக் கொண்டுப் பாடுவாளே என்று பேச ஆரம்பித்தால் போதும்! ஒரு கனவு சாராஜ்ஜியம் கண்களில் விரியும். திடாரென்று ஒரு நாள் ஸ்கூலுக்கு வரவில்லை. ஒருநாள், ஒரு வாரம், ஒரு மாதமாயிற்று வரவேயில்லை.

தன் வீட்டு வேலைக்காரப் பெண்ணுடன் மெட்ராஸ் கிளம்பிப் போவதற்குத் திட்டம் போட்டு வீட்டை விட்டு கிளம்பி ரயில்வேஸ்டேஷனிலேயே பிடித்துவிட்டார்கள். வழக்கம் போல் திட்டு, அடி, உதை எல்லாம் முடிந்த பிறகு அத்தை வீட்டுக்கு அனுப்பப்பட்டாள்.

ஒரு வருடம் பள்ளிப் படிப்பைத் தொடராமல் அடுத்த வருடம் போர்டிங் ஸ்கூலில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தாள். அவளது வீட்டைச் சுற்றி எங்கள் வகுப்பில் படித்த பெண்களே எட்டுப் பேர் இருந்ததால் அவர்களை சந்திக்க நேரிடுமோ என்ற பயத்தில் விடுமுறைக்குக் கூட எங்க ஊருக்கு வராமல் அப்படியே வந்தாலும் யார் கண்ணிலும் படாமல் வீட்டோட வீடா முடங்கிக் கிடந்து விட்டுப் போவாள். இதெல்லாம் பிறகு நான் சேகரித்தத் தகவல். அவள் போர்டிங் ஸ்கூலோட சேர்ந்து இருந்த காலேஜில்

படித்த என் வகுப்புத் தோழிகள் அவளை ஹாஸ்டலில் சந்திக்க நேர்ந்த போது கூட அவள் அவர்களைப் பார்க்காத்தது போல் தவிர்த்துவிட்டு ஓடியதாகக் கூறிய போது

அவளை நினைத்துப் பரிதாபப் பட்டோம். பாவம் அவள் என்ன அப்படிப் பெரிய தப்பு செய்து விட்டாள் ? தப்பு சரி என்பதுகூட ஊருக்கு ஊர் மாறுபடும். இதே அவள் சென்னையிலேயே இருந்துக் கொண்டு கோடம்பாக்க ஸ்டூடியோக்க்களுக்கு விஜயம் செய்திருந்தால் அது ஒரு பெரிய விஷயமாகக் கூட பேசப்பட்டிருக்காது. அவள் துரத்தியக் கனவுகளை ஜெயித்துக் காட்டியிருந்தால் பிரபலமாயிருப்பாள். இப்போது நம் மெகாத் தொடர்களில் அக்கா, அண்ணி, அம்மா வேஷங்களில் வந்து கொடிகட்டிப் பறந்திருப்பாளோ ? அவள் அப்பா அம்மா எதற்காக அவளை அப்படி அவமானப் படுத்தி வேதனையடையச் செய்ய வேண்டும் ? அவள் அலட்சியத்தோடு நடந்து செல்வதே தனி அழகுதான். எவ்வளவு இனிமையானப் பெண்! நடுத்தரவர்க்கதினருக்கே உரிய மதிப்பீடுகள், மனத்தடைகள் இவற்றையெல்லாம் மீறுவது கஷ்டம்தான். இப்போழுது எல்லாப் பெண்களையும் எந்த வேலைக்கும் எந்த வித மனத்தடையும் இல்லாமல் பெற்றோரே அனுப்பும் அளவிற்கு காலம் மாறும் என்று யாரும் அப்போது நினைக்கவில்லையா ? ஒரு கற்பனை பள்ளிக் கூடம்! அதில் வெறும் குமாஸ்தா வேலைக்கும், கூட்டல் கழித்தல் போடும் வேலைக்கும் மட்டும் பயிற்சி கொடுக்கும்

பாடத்திட்டங்கள் இருக்கக் கூடாது. டாக்டர், எஞ்சினியர், பாங்க் ஆபிஸர், டாச்சர்,

போன்ற வேலைகளை மட்டும் பெரியதாக நினைக்கக் கூடாது. ஒரு பெரிய இசைக் கூடம், தோட்டம், படம் வரையப் பெரியக் கூடம், நாடக அரங்கம், நடிப்புப் பயிற்சி நினைத்தால் கணித வகுப்பிலிருந்து புறப்பட்டு தோட்டத்தில் உட்கார்ந்து கவிதை எழுதலாம். படம் வரையலாம் பியானோ வாசிக்கலாம் என்று எந்தவிதக் நேரக் கட்டுப்பாடுகளும் இல்லாத ஒரு பள்ளி!சாயங்காலம் இரண்டு மணி நேரம் விளையாடுவது மட்டும்தான் கட்டாயம்! நினைத்தாலே இனிக்கிறது. அதற்காக அடிப்படைக் கல்வி எதையும் மாற்ற வேண்டும் என்பதில்லை. நேரத்துக்கு வருவது, டைம் டேபிள் போட்டுப் படிப்பது, மனப்பாடம் செய்வது என்பதெல்லாம்

யார் போட்டச் சட்டம் ? இந்த கல்வி முறையால் வெறும் பள்ளித் தேர்வை மட்டுமே

கடக்க முடியும். ஒரு பாங்க் பரீட்சை எழுதி பாஸ் செய்வதற்குக் கூட முடியாதுதானே ?

அதெல்லாம் சரி சாப்பாட்டுக்கு ? விளையாடரீங்களா ? எது படித்தாலும் ஒரு நல்ல வேலை கிடப்பதற்கு வாய்ப்பிருக்க வேண்டும். வயிற்றில் பசி இருக்கும் போது பியானோவாவது பாட்டாவது! ‘தேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் துன்பம் மிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடி கிழப் பருவமெய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலெ நான் வீழ்வெனென்று நினைத்தாயோ ? ‘ பாரதியைப் படிக்கும் போது வயிற்றுப் பாட்டுக்கு வாழ்வது தேவையா ? என்று நினைக்கத்தான் தோன்றுகிறது. பாவம் அவர் இப்போது வாழ்ந்திருந்தால் சாகித்ய அகாடெமி பரிசு கூட கிடைக்காமல் யாராவது இலக்கிய ஆர்வலர்கள் வாழ்நாள் சாதனை விருது கொடுத்து அதற்குக் கூட நீங்கதான் செலவழிச்சு வந்து பரிசை வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லியிருப்பார்கள்!

அதனால் வயிற்றுக்குச் சோறு போடாத எந்த இலக்கியமும், கலைகளும் வேண்டாமே ?

சித்ரா ரமேஷ்

சிங்கப்பூர்

kjramesh@pacific.net.sg

Series Navigation