ஆட்டோகிராஃப்-20 – – “பூங்கதவே தாள் திறவாய்”

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

சித்ரா ரமேஷ்


வாசித்தல் என்பது சுவாசித்தல் மாதிரி நிகழ வேண்டும். கையில் பொட்டலம் கட்டி வந்த பேப்பர் கிடைத்தால் கூட படிப்பேன். சிறு வயதிலிருந்தே ‘விதரிங் ஹைட்ஸ் ‘, ‘டேல் ஆஃப் டூ சிடாஸ் ‘, ‘விக்கார் ஆஃப் தி வேக் ஃபீல்ட் ‘, ‘பிரைட் அண்ட் ப்ரெஜுடிஸ் ‘ போன்ற அற்புத இலக்கியங்களைப் படித்து மனதை மேன்மைப் படுத்திக் கொண்டேன்!!ஹீ!ஹீ!ஹீ!ஹீ! இப்படியெல்லாம் நான் எழுதி நீங்க நம்பத் தொடங்கினா இந்த ஆட்டோகிராஃப் படிப்பதைப் பற்றி கொஞ்சம் மறு பரிசீலனை செய்யுங்க! கபட வேடதாரிகள் நிறைந்த உலகம் இது! இதையெல்லாம் படிப்பதற்கு நான் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போர்டிங் ஸ்கூலில் கன்யாஸ்திரீகள் பொறுப்பில் வளர்ந்த கான்வெண்ட் பெண்ணா ? பக்கத்து வீட்டு தினத்தந்தியில் தினமும்

“பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையிலே படம் புடிச்சான்” என்று ஆண்டிப் பண்டாரம் ‘குறும்பாகப் ‘ பாடுவதையும், “லைலா என்ன இது ?” “வேண்டாம் சிந்துபாத்!” சிந்துபாத் கத்தியை உருவினான். தொடரும். சி10235. என்று படித்து

குட்டி லைலாவுக்கு என்ன ஆகுமோ என்று மனம் பதைத்தவள்! தினத்தந்தியில் ஆண்டிபண்டாரம் கிட்டத்தட்ட ஆயிரம் முறையாவது குளிக்கும் அழகிகளை பார்த்து பாடியிருப்பார். இது என்ன கலாச்சாரமோ ? கிரஹச்சாரம்! மேல் மட்ட வர்க்கத்தினரின்

கையில் இலக்கியம் இருக்கட்டும். செய்திகளாவது எல்லோருக்கும் போய் சேரட்டும் என்று தினத்தந்தி பாமரர்கள் கூட படிக்கும் வகையில் உருவாக்கியதை எல்லோரும் புகழட்டும். கூடவே கொஞ்சம் கொஞ்சமாவது ஒரு நல்ல ரசனையையும் வளர்த்து விட்டிருக்கலாம். இதையெல்லாம் எல்லோரும் படிக்க மாட்டார்கள் என்று யாரும் தீர்மானிக்க முடியாது. எப்படியோ நமக்குத் தேவையான அக்கப்போரை நம்பிக்கையான முறையில் கொடுத்து வந்த தினத்தந்தியின் வியாபாரத்தந்திரத்தை பாராட்டாமல் இருக்க முடியாதுதான்! ஒரு செய்தி! ஆளில்லா ரயில்பாதையில் பஸ் மோதி 22 பேர் சாவு! இதில் இறந்து போனவரில் ஒருவர் வசந்தி. வயது 32! குறிப்பு: இவர் ஒரு எழுத்தாளர் என்பது அனைவரும் அறிந்ததே! பின்குறிப்பு: இவர் எழுத்தாளர் வாசந்தி இல்லை! இப்படி ஒரு செய்தியை தினத்தந்தி மட்டுமே தர முடியும்!

சித்திரக் கதைகளை எழுத்துக் கூட்டி படிக்க ஆரம்பித்த போது கூட ‘வேதாளம் ‘ கதைகள் புரியாது! வேதாளம் முத்திரை எதற்கு இடுகிறார் ? ஆப்பிரிக்கக் காடுகளில் இருக்கும் ஆதிவாசிகளின் இங்கிலிஷ் மன்னரான ‘வேதாளம் ‘ கதை கொஞ்சம் நம்ப கலாச்சாரத்துக்கு மாறுபட்டதுதானே! “மரண அடி மல்லப்பா” “அஞ்சு பைசா அம்மு” போன்ற குமுதம் காமடி ஸ்ட்ரிப்! குமுதம் மாலைமதி இதழ் முதலில் குழந்தைகளுக்கான சித்திரக் கதைகள் தான் வெளியிட்டார்கள். ‘காதல் காவலர் அப்புசாமி, ரத்தினசாமிக்கு ஜே, குண்டுபூபதி போன்ற கதைகளை அண்ணன் அம்மாவை

அரித்து காசு வாங்கி வாங்கிக் கொண்டு வந்து விடுவான். யார் என்ன சொல்லிக் கொடுத்தார்களோ தெரியாது! நம்மிடம் அந்த புத்தகத்தைக் கண்ணில் கூட காட்டாமல் மறைத்து வைப்பதில் மன்னன். கெஞ்சிக் கூத்தாடி அம்மா வரைக்கும் போய் நாட்டாமைத் தீர்ப்புக்குக் கட்டுப் பட்டு ஒருமணி நேரத்துக்குள் தந்து விட வேண்டும் என்று பின்னாலேயே சுற்றிக் கொண்டிருப்பான். எப்படித்தான் இப்படி அல்பமாக இருக்கிறாயோ என்று என்ன திட்டினாலும் கண்டு கொள்ளாமல் புத்தகத்தை வாங்கி அவனுடைய பொக்கிஷக் கருவூலமான மர பீரோவில் வைத்துப் பூட்டினால்தான் ஜென்ம சாபல்யமடைவான். அந்த மர பீரோவுக்கு பூட்டு சாவியெல்லாம் கிடையாது. இவனே அதுக்கு பாட்லாக், சாவியெல்லாம் வாங்கி பொருத்தி பூட்டி சாவியை யார் கண்ணுக்கும் தெரியாமல் ஒளித்து வைத்துக் கொண்டு அலைவான். மெட்றாஸ் போகும் போது மூர் மார்க்கெட் என்று ஒரு நிதி நிறுவனம் இருக்கும். அதில் பழைய புத்தகங்கள், பழைய கண்ணன் இதழ்கள், ராணிமுத்து எல்லாம் வாங்கி பத்திரப் படுத்துவான். புத்தகம் வாங்குவது படிப்பதற்காகத்தான் என்று யாராவது அவனிடம் உரத்தக் குரலில் சொன்னால் தேவலை. அவன் வாங்கியப் புத்தகத்தை அவனே கூட சில சமயம் படிக்காமல் லைப்ரரியிலிருந்து எடுத்து படிக்கும் கூத்தெல்லாம் உண்டு!

எப்படியோ பெரியவன் என்று சலுகையில் இதைப் போன்ற கொடுங்கோலாட்சி செய்து

கொண்டிருந்தான். அவன் தராததால் நானும் புத்தகம் வாங்க வேண்டும் என்று தகறாறு செய்ய ஆரம்பித்ததும்தான் அமைதிக் குழு ஏற்பாட்டின் பேரில் எனக்கும் புத்தகங்கள் படிக்க வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. அப்படியும் புத்தகங்களை லேசில் எடுத்து யாருக்கும் கொடுத்து விட மாட்டான். அவனுடைய நெருங்கிய நண்பனுக்கு ஒரே ஒரு புத்தகம் இரவல் கொடுத்து விட்டு மறு நாளே அவன் வீட்டிலிருந்து அதை தூக்கிக் கொண்டு வந்து விட்டான். கேட்டதற்கு இவன் சொன்ன மாதிரி நடந்து கொள்ளவில்லை என்று பதில்! புத்தகத்தைக் கசக்கக் கூடாது. மடிக்கக் கூடாது. எச்சில் பண்ணி பக்கங்களைப் புரட்டக் கூடாது. படித்துக் கொண்டிருக்கும் போது வேறு ஏதாவது வேலை வந்து விட்டால் அதை அப்படியே மடக்கி போட்டு விட்டு போகக் கூடாது. புத்தகத்தின் ஓரம் மடித்து அடையாளம் வைக்கக் கூடாது. என்று அவன் சொன்ன கட்டளைகளுக்குக் கட்டுப் பட்டுத்தானே நடந்து கொண்டேன் என்று அந்த நண்பன் பரிதாபமாகக் கேட்க “நா வீட்டுக்கு வந்தப்ப உங்கக்கா இந்தப் புத்தகத்தை எடுத்து பாத்துக்கிட்டு இருந்தாங்களே ?” என்று சொன்னதும் நொந்து போய்விட்டான். ஆமாம் அவன் சொன்ன கட்டளைகள் அந்த அக்காவுக்கு எப்படித் தெரியும் ? அப்படியேத் தெரிந்தாலும் கட்டுப் பட்டு நடக்கவில்லையென்றால் அந்த அக்காவிடம் கேட்க முடியுமா ? இந்த விளக்கத்தைக் கேட்டு அந்த நண்பன் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாய் போய்விட்டான். ஆனால் எனக்கு என்னவோ அண்ணனின் கோபம் நியாயமாகத்தான் பட்டது! சொந்தத் தம்பி தங்கைக்கே தராதவன் அந்த நண்பனுக்கு கொடுத்தான் என்றால் அந்த நண்பன்தான் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்! இப்பொது கூட யார் வீட்டுக்காவது போய் அங்கே புத்தகங்கள் விரித்தபடி கவிழ்ந்து கிடந்தால் நான் எடுத்து “ ஏய்! நீ படிச்சிக்கிட்டு இருந்தது 235வது பக்கம் என்று சொல்லி புத்தகத்தை சரியாக வைத்துவிடுவேன். ஒருத்தி சாமர்த்தியமாக “புக் பாட்டுக்கு கிடக்கு! அதை ஏன் எடுத்து மூடறே! நீ சொல்ற பக்கமெல்லாம் எனக்கு ஞாபகம் இருக்காதுன்னு சொல்லப் போக படிக்கிற புத்தகத்தில் என்ன படிக்கிறோம்னு ஞாபகம் வெச்சுக்க முடியலைன்னா நீ புத்தகம் படிப்பதே வேஸ்ட் என்று பதில் சொல்லியதிலிருந்து அவள் என்னைப் பார்த்தாலே பதுங்குக் குழியில் இருக்கும் வீரனைப் போல் ஆகி விடுகிறாள். எல்லாம் அண்ணன் காட்டிய வழிதான்!

சோவியத் யூனியன் புத்தகக் கண்காட்சி வருடாவருடம் வரும். அதில் சிறுவர்களுக்கான புத்தகங்கள் பிரமாதமாக இருக்கும். நல்ல கெட்டியான அட்டையுடன் மழமழவென்ற ஆர்ட் பேப்பரில், வண்ணப் படங்களோடு எளிமையான ஆங்கிலம் இல்லை அழகான மொழிபெயர்ப்போடு புத்தகங்கள். எல்ல்லோருக்கும் காசு கொடுத்து ஏதாவது வாங்கிக் கொள்ளச் சொல்லும் அம்மா! இதற்கு மறுப்பேதும் சொல்லாத அண்ணன்! எப்படியும் படித்து முடித்தவுடன் அவனிடம் வந்து சேர்ந்து விடுமென்ற நம்பிக்கைதான்! “தூக்கம் பிடிக்கவில்லை சிறுமி மாஷாவுக்கு” கதைத் தலைப்பே கவிதை மாதிரி இல்லை! அழகான இளம்சிவப்பு நிற படுக்கையறை! இரவு உடையோடு ஒரு குட்டிப் பெண்! அவளுக்குக் கதை சொல்லி தூங்க வைக்கும் அம்மா! வரிசையாக கறுப்பு ஜமுக்காளத்தில் தலைகாணி போட்டுக் கொண்டு இன்னிக்கு யார் அம்மா பக்கத்தில் என்று சண்டை போட்டுக் கொண்டு படுக்கும் எங்களுக்கு யாரும் என் பக்கத்துலே வேண்டாம் எல்லாரும் உதைச்சே கொன்னுடுவீங்கன்னு அம்மா மறுப்பு சொன்னாலும் எதாவது ஒரு குழந்தை அருகிலாவது படுக்கத்தான் வேண்டியிருக்கும், இந்தக் கதைகள் ஆச்சரியமூட்ட வைத்தன. அம்மா கதை சொல்லி தூங்க வைத்தும் தூக்கம் வராமல் வீட்டைச் சுற்றி இருக்கும் தோட்டத்தில் போய் நின்று விடுகிறாள். அங்கே ஒரு ஆந்தை மரக்கிளையில் தன்னுடன் வந்து இருக்கும் படி கேட்கும். அப்புறம் ஒரு தவளை தன்னுடன் தண்ணீரில் வந்து படுத்துக் கொள்ளும் படிச் சொல்லும். இப்படி எல்லா இடத்திற்கும் போய் சுற்றி விட்டு உலகத்திலேயே சிறந்த இடம் என் பெட் ரூம்தானென்று முடிவுக்கு வந்து நிம்மதியாகத் தூங்குவாள் சிறுமி மாஷா! அதிசய ஏழு நிறப்பூ! என்ற கதை! இதைத் தழுவித்தான் சமீபத்தில் நம்ப சூப்பர் ஸ்டார் பாபா கூட வந்தது. ஏழு வண்ண இதழ்கள் கொண்ட பூ ஒன்று ஒறு சிறுமியிடம் கிடைக்கும். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு

இதழையும் பிய்த்து “பறப்பாய் பறப்பாய் பூவிதழே! கிழக்கிலிருந்து மேற்காய், மேற்கிலிருந்து வடக்காய், வடக்கிலிருந்து தெற்காய், மீண்டும் தெற்கிலிருந்து கிழக்காய்” என்று அற்புத மந்திரத்தைச் சொல்லி தனக்கு விருப்பப் படுவதைக் கேட்பாள். முதல் முறை ஐஸ்கிரீம், இரண்டாம் முறை வடதுருவத்துக்குப் போவதற்கு, மூன்றாம் முறை வடதுருவத்திலிருந்து வீடு திரும்புவதற்கு என்று எல்லாவற்றையும் வீணடித்து விட்டு கடைசி இதழ் இருக்கும் போது ஒரு கால் ஊனமான சிறுவனுக்கு

உதவுவாள். சிறுமி இப்படி விளையாட்டுத்தனமாக இருந்தால் ரசிக்க முடியும். ரிட்டயர் ஆகிற வயசில் ஒருவர் இப்படி விளையாட்டுத்தனமாக வீணடித்தால் ரசிக்க முடியுமா ?

“மறைந்த தந்தி” ‘சுக் ‘ ‘கெக் ‘ மாஸ்கோவில் இருக்கும் இரட்டைச் சிறுவர்கள். அப்பா சைபீரியக் காட்டில் வேலை செய்யும் ஆஃபிஸர். கிறிஸ்மஸ்ஸுக்கு அப்பா வேலை செய்யும் அந்த காட்டுப் பகுதிக்குப் போகலாம் என்று திட்டமிடும் அம்மா டிக்கட் வாங்கப் போயிருக்கும் போது ஒரு தந்தி வரும். அதை இருவரும் சண்டை போடும் மும்முரத்தில் தொலைத்து விடுவார்கள். “அம்மா வந்து தந்தி எங்கே என்று கேட்பாள்” என்று சுக் பயப்படுவான். கெக் கொஞ்சம் தைரியசாலி. அம்மாவிடம் தந்தி வரவேயில்லை என்று சொல்லிவிடலாம் என்று தைரியம் சொல்வான். பொய் சொன்னால் அம்மாவுக்குப் பிடிக்காதே! உலகத்தில் எல்லா அம்மாக்களும் ஒன்றுதான் போல இருக்கிறது! அம்மா வந்து தந்தி எங்கே என்று கேட்டால் உண்மையை சொல்லிவிடலாம் என்று இருவரும் தீர்மானிப்பார்கள். அம்மாவுக்குத்தான் தந்தி வந்ததே தெரியாதே! தெரிந்தால்தானே கேட்பாள்! கடைசியில் ரொம்ப கஷ்டப்பட்டு அப்பாயிருக்கும் அந்த பனி படர்ந்த காட்டுக்குள் போய் அங்கே அப்பா இல்லாமல் ஒரு காவல்காரன் மட்டும் இருப்பான். அப்பா கொடுத்த தந்தியைப் பற்றித் தெரிந்து கொண்டு அம்மா எப்படியோ நிலைமையைச் சமாளித்து அப்பாவும் அவர்களுடன் கிறிஸ்மஸ்ஸுக்கு வந்து சேர்ந்து விடுவார். இந்தக் கதைகள் நம்மைக் கதையோடு பயணம் செய்ய வைக்கும். சோவியத் யூனியன் உடைந்து சிதறிப் போனதில் இப்படி ஒரு இலக்கிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டதோ ? பாவம் ரஜனிக்கு கதை சொல்லி சொல்லி ஓய்ந்து போன கதாசிரியர்களுக்கு ஒரு டிப்ஸ்! இந்த “மறைந்ததந்தி” கதையை உல்ட்டாப் பண்ணி சூப்பராக் கதை சொல்லலாம். “சுக்” “கெக்” என்று இரட்டை வேஷங்களூம் ரஜனியே நடிக்கலாம். இரண்டு கதாநாயகிகள்! ஒரு காட்டுவாசிப் பெண்!

ஒரு நகரப் பெண்! இது இல்லாமல் முறைப் பெண் என்று மூன்றாவது கதாநாயகியைக் கூட சேர்த்துக் கொள்ளலாம். சைபிரியக் காடுகளில் லொகெஷன்! இதுவரை யாரும் படம் பிடிக்காத லொகெஷன்! டைட்டில் சாங் கூட பிரமாதமாக எழுதிவிடலாம்.

சினிமாப் பாட்டுப் புத்தகங்கள்! இசைத் தட்டு வடிவத்திலேயே ஒரு சினிமாப் பாட்டுப் புத்தகம் வந்ததே என்ன சினிமான்னு நினைவு இருக்கா ? கண்டு பிடியுங்க! திண்ணை ஆசிரியரிடம் சொல்லி அந்தப் பாட்டுகளை உங்கள் கணினியில் இலவசமாக

“இறக்குமதி” செய்யச் சொல்கிறேன். பாட்டுப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் கதைச் சுருக்கம் போட்டிருக்கும். சேகர் அந்த சுந்தரியைச் சந்தித்தானா ? காணாமல் போனக் குழந்தை என்ன ஆயிற்று ? ராஜூ இழந்த சொத்தை மீண்டும் பெற்றாரா ? விமாலாவுக்குப் பைத்தியம் தெளிந்ததா ? போன்ற கேள்விகளுக்கு வெள்ளித்திரையில் தெள்ளென பதில்! “மணாளனே மங்கையின் பாக்கியம்” படத்தின் கதையில் கதைச் சுருக்கத்தை விட இதைப் போன்ற கேள்விகள் நிறைய இருந்தது. படம் முடியுமா என்ற சந்தேகமே வந்து விட்டது! 18 ரீல் படத்தில் இப்படி முடிச்சு மேல் முடிச்சு போட்டுத் தெளிய வைப்பதுதானே சரியான டெக்னிக்! பாட்டு புத்தகத்தை வைத்துக் கொண்டு பாட்டுப் பாடுவதுக் கூட ஒரு கலை! பாடல் ஆரம்பத்தில் தொகையறா என்றெல்லாம் இருக்கும். அதை போய் தொகையறா என்று பாடினால்! ஹிந்தி படப் பாட்டு புத்தகமெல்லாம் வாங்கி வேறு பாடிப் பார்ப்போம். “மேரி சப்னேக்கி ராணி கப்பு ஆயே கித்தூ” முதல் வரி பழகி விட்டிருப்பதால் பாடிவிடலாம். அப்புறம் ஆயி கிஸ் மஸ்தானே என்று வாயில் நுழையாத வார்த்தையெல்லாம் வந்து பாடவிடாமல் செய்யும்.

பத்திரிகைகளில் வரும் தொடர்கதைகளை கிழித்து ‘பைண்ட் ‘ பண்ணி பீரோவுக்குள் வைப்பது, அந்த மர பீரோவில் புத்தகங்கள் மட்டுமில்லை. கோலிக் குண்டு, சீட்டுக் கட்டு, சோடாமூடி, சிகரெட் அட்டைகள், டுவைன் நூல்கண்டு, கோணிஊசி, பாட்டரி, கிரீட்டிங்ஸ் கார்ட்ஸ், பழைய பொம்மைகளின் உடைந்த சக்கரம், இன்னும் விளையாடக் கூடிய நிலையில் இருக்கும் தகரப்பொம்மைகள், முட்டை போடும் கோழி, கொக் கொக் என்று கொத்தும் கோழி, பம்பரம், நாங்களே செய்த கெலிடாஸ்கோப், கண்ணாடிக் கடையிலிருந்து நீளமான கண்ணாடித் துண்டுகளை எடுத்து வந்து முப்பட்டையாக்கிக் கட்டி உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகளைப் போட்டு ஒரு லென்ஸ் வைத்துப் பார்த்தால் கெலிடாஸ்கோப், எங்க குடும்பச் சொத்தான வியூ மாஸ்டர் இதில் முப்பரிமாணத்தில் படங்கள் தெரியும். நேரு வாழ்க்கை வரலாறு, தம்ப்லீனா, இந்திய நடனங்கள், ஸ்நோவொயிட் என்று வியூ மாஸ்டரில் பார்ப்பதற்கு சின்ன வட்ட வடிவமான புகைப்படங்கள். கலர்ல பார்ப்பதற்கு பிரமாதமாக இருக்கும். சின்ன சின்ன ஃபிலிம் துண்டுகள் எங்கிருந்தோ கொண்டு வருவான். அதை இருட்டில் சினிமா மாதிரி போட்டுக் காட்டுவான். அந்த வயதில் அண்ணன்தான் எங்களுக்குப் பெரியா ஹீரோ! இப்படி கையில் கிடைப்பதையெல்லாம் சேர்த்து உள்ளே வைத்துக்

கொள்ளும் பழக்கம் கொண்டவனின் பீரோ எனக்கும் என் தம்பிகளுக்கும் ஒரு கனவுப் பிரதேசமாக இருந்தது. அவன் வாரம் ஒருமுறை அதைத் திறக்கும் போது அதைச் சுற்றி உட்கார்ந்து கண்கள் விரியப் பார்த்துக் கொண்டிருப்போம். தீசல்! எதையும் தொட விட மாட்டான். இந்தக் காட்சியைப் பார்க்க சகிக்க்காமல் என் அம்மா

“ஏண்டா பெரியவனா இருந்துண்டு இப்படி இருக்கே! அதுங்கக் கையிலே எதையாவது கொடேன். நாளைக்குத் தம்பி தங்கைகளுக்கு நீ ஏதாவது பண்ணிடுவியா ? ‘ என்று வீராவேசமாகக் கேட்டால் கொஞ்சம் மனமிறங்கி வியூ மாஸ்டரைப் பார்ப்பதற்கு வாய்ப்புத் தருவான். இரண்டு மூன்று உடைந்த பம்பரத்தை எடுத்து ஆணி அடித்து தருவதாக வாக்குத் தருவான். எனக்குப் போனால் போகிறது என்று பெருந்தன்மையாக சேர்த்து தைத்து வைத்திருக்கும் பாட்டு புத்தகத்தையோ அல்லது அவனுக்குப் பிடிக்காத ராணிமுத்து புத்தகத்தையோ படிக்கத் தருவான். இப்படி மூன்றாம் முறையாக “பாரு பாரு பட்டணம் பாரு” என்ற குரும்பூர் குப்புசாமி எழுதிய ராணிமுத்துவைக் கொடுக்க ரோஷம் வந்து வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்து விட்டேன். அதுக்குப் பதிலா ‘படகு வீடு ‘ கொடுத்தால்தான் ஆச்சு என்று பிடிவாதம் செய்து வாங்கி விட்டேன். பிறகு இருவரும் சேர்ந்து ஒத்த அலை வரிசையாகி ‘படகு வீட்டை ‘ சினிமாவாக எடுக்க ஸ்க்ரிப்ட் எல்லாம் கூட எழுதினோம். சிவாஜி, வாணிஸ்ரீ, நாகேஷ், முத்துராமன், எஸ்விரங்காராவ் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளத்தையே நடிக்க வைத்திருந்தோம். அப்புறம் ஆண்டவன் கட்டளை பார்த்து விட்டு கிட்டத்தட்ட அதே கதையை எடுப்பதில் அர்த்தமில்லை என்று கைவிட்டு விட்டோம். இதேபோல் பிவிஆர் எழுதிய “தொடுவானம்” என்று ஒரு நாவல். அதில் நர்மதா என்ற செம அழகான கர்வமான பெண்! உன் அழகுக்கு நகை நட்டு ஏதுக்கடி என்ற வார்த்தை வரும். அதைக் கூட திரைப்படமாக எடுத்துப் பார்த்தோம். என் அண்ணன் சிவாஜியைத் தவிர வேறு யாரையும் ஹீரோவாக ஒத்துக் கொள்ளவே மாட்டான். தொடுவானம் ஹீரோயின் சப்ஜெக்ட். இதில் நடிக்க சிவாஜி ஒத்துக் கொள்ள மாட்டார் என்று நான் சொல்லி விட்டேன். லஷ்மி அப்போ இந்த கர்வம் பிடிச்ச கேரக்டரெல்லாம் பிரமாதமாதமாக நடிப்பாங்க! “புகுந்த வீடுன்னு ஒரு படம் நினைவிருக்கிறதா ? அதை பார்த்துவிட்டு லஷ்மியை ஹீரோயின்னா போடலாம்னு முடிவு எடுத்தோம். ஜாவர்ட் சீதாராமன் எழுதிய “உடல், பொருள், ஆனந்தி”, சாண்டில்யனோட ‘கடல் புறா ‘ அப்புசாமித் தாத்தாவைக் கூட திரைப் படமாக எடுப்பதற்கு நிறைய திட்டம் வைத்திருந்தோம். என் அண்ணன் மட்டும் திரைப்படத் துறையில் நுழைந்திருந்தால் நானும் ஒரு அட்லீஸ்ட் ஒரு அஸிஸ்டண்ட் டைரக்டர் ஆகியிருப்பேன். இப்போது கூடப் பார்க்கும் போதெல்லாம்

ஏதாவது ஒரு நல்ல கதையைப் பற்றிப் பேசி அதை சினிமாவாக எடுப்பது பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை. “மோகமுள்” எடுப்பதைப் பற்றி கூடப் பேசியிருக்கிறோம். எங்களுக்கு முன்பாகவே ஹீம்! அதை யாரோ எடுத்து விட்டார்கள்!

அந்தக் கதையை அவர்கள் எடுக்காமலேயே இருந்திருக்கலாம். ஜமுனாவையும் படத்தில் முதலில் வரும் அரை மணி நேரம் தவிர மற்ற எதுவுமே சரியில்லை என்று

படத்தைப் பார்த்து வருத்தமாகி விட்டது.

முதன் முதலில் சித்திரக் கதைகள் இல்லாமல் பெரிய கதை படித்தது தமிழ்வாணனின் ‘இரண்டுபேர் ‘. மன்னப்பன், நலம்விரும்பி என்று இரண்டு துப்பறிவாளர்கள். முதலிலேயே நலம்விரும்பி இறந்து விடுவான். “சிலையைத் தேடி” என்று வாண்டுமாமா கதை! ஒரு தங்க புத்தர் சிலையைத் தேடி ஷீலாவும் ரவியும் புறப்படுவார்கள். கடலுக்கு அடியில் அந்த தங்கப் புத்தர் சிலை இருக்கும். இந்த மாதிரி

வீர சாகசங்கள் நிறைந்த கதைகள்தான் ரொம்ப பிடிக்கும். “ஒளிவதற்கு இடமில்லை”

கதையில் வரும் குறுந்தாடி டிடெக்டிவ் ரமணன், கெளசிகன் எழுதிய “சுழிகாற்று” கதையில் வரும் லேசாக காலை விந்தியபடி வரும் ரிட்டயர்ட் மிலிட்டரி டிடெக்டிவ்

நம்ப சங்கர்லால், இன்ஸ்பெக்டர் வஹாப், கத்தரிக்காய் என்று கல்கண்டுக் கதைகள்.

சங்கர்லால் துப்பறிந்த வரை சுமாராப் போனக் கதை அப்புறம் தமிழ்வாணனே துப்பறிய ஆரம்பிச்சதும் போரடிக்க ஆரம்பிச்சுடுத்து. SS66 என்ற நீர்மூழ்கி கப்பலைப் பற்றியக் கதை, இன்னொரு செருப்பு எங்கே ? மலர்க்கொடி உன்னை மறப்பதெப்படி ? மனிமொழி என்னை மறந்து விடு, என்னுடன் பறந்து வா இப்படி எல்லாக் கதைகளும்

எதோ ஒரு இங்கிலிஷ் கதையையோ, ஜேம்ஸ்பாண்ட் படத்தையோ காப்பியடிச்சு வந்தாலும் நமக்குத் தெரிந்த மொழியில் படிக்கும் போது ஒரு திரில்தானே!

மரபீரோ கதை என்ன ஆச்சு ? இப்படி வாரம் ஒரு முறை மட்டும் வித்தை காட்டும் நிகழ்ச்சிக்கு ஒரு இக்கட்டு வந்தது. எப்படியோ ஒரு துரும்புக் கூட அதிலிருந்து வெளியேறாமல் பார்த்துக் கொண்டவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக

பீரோவையே காலியாகப் பார்த்தால் …. நானாவாது இன்னும் உரிமையாக எல்லாவற்றையும் எடுத்து ஆசை தீர படித்திருப்பேனே!

சித்ரா ரமேஷ்

சிங்கப்பூர்

kjramesh@pacific.net.sg

Series Navigation

சித்ரா ரமேஷ்

சித்ரா ரமேஷ்