அல்லி-மல்லி அலசல்- பாகம் 5

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

பவளமணி பிரகாசம்


அல்லி: என்ன மல்லி, ஆளையே பாக்கமுடியலையே ?

மல்லி: ஏதேதோ அடுத்தடுத்து வேலையா போச்சி, அல்லி.

அல்லி: உன்ன பாக்காம, உன்னோட பேசாம எவ்வளவு தவிச்சிப் போயிட்டேன் தெரியுமா ?

மல்லி: எனக்கு மட்டும் என்னவாம் ? எத்தனை நவீன பொழுதுபோக்குகள் வந்தாலும், இணையதளம் இழுத்தாலும், டிவி சீரியல்கள் அழைச்சாலும் நேர்ல மனசு விட்டு பேசுற மாதிரி ஒரு சுகமான அனுபவம் இருக்கா சொல்லு.

அல்லி: ரொம்ப சரியா சொன்னே, மல்லி. டிவி அழுவாச்சி சீரியல்கள், அரைவேக்காட்டு புரோகிராம்களுக்கு நடுவுல ஒன்னு ரெண்டு உருப்படியான நிகழ்ச்சிகளும் வரத்தான் செய்யுது.

மல்லி: ம்! அதப்பத்தி சொல்லு அல்லி.

அல்லி: ஒரு பட்டிமன்றம், பெரியவங்க பாத்து பண்ணிவைக்கிற கல்யாணம் நல்லதா காதல் கல்யாணம் சிறந்ததான்னு. நகைச்சுவையாவும், சிந்திக்கவைக்கிற மாதிரியும் நிறைய விஷயம் சொன்னாங்க.

மல்லி: அப்படியா ? கேக்காமப் போனேனே!

அல்லி: பெரியவங்க செஞ்சி வைக்கிற கல்யாணத்துல ஆடம்பரமும், வீண் செலவும் அதிகம், சர்க்கரைசத்துக்காரங்க இலையில 4,5 இனிப்புகள பரப்பி வைச்சி அவங்க கவலையோட அதை பாக்குறதும் சாப்பிட முடியாம வீணாக்கி குப்பைல போட்றதும்னு நடக்குறத சுட்டிக் காட்டினாங்க. நகைச்சுவைக்காக மிகையா சொன்னாலும் அதுலயும் உண்மை இருக்கத்தானே செய்யுது ?

மல்லி: அடடா! சரியாத்தான் சொல்லியிருக்காங்க.

அல்லி: செலவேயில்லாம சிக்கனமா ரெஜிஸ்ட்ரார் ஆபீஸிலே கல்யாணம் முடிஞ்சிரும்னு காதல் கல்யாணத்த ஆதரிக்கிறவங்க சொன்னாங்க.

மல்லி: எதிரணிக்காரங்க என்ன சொன்னாங்க ?

அல்லி: கல்யாணத்துக்கப்புறம் ஒரு பிரச்சினைன்னா பெரியவங்க செஞ்சி வச்ச கல்யாணத்துல ஒரு புத்தி சொல்ல, பஞ்சாயத்து பண்ணி சேத்து வைக்க உறவு இருக்கு. உதாரணத்துக்கு தங்கச்சிய கை நீட்டி அடிச்ச மாப்பிள்ளைய மச்சான்காரன், “என் தங்கச்சிக்கு வாய் கொஞ்சம் நீளந்தான், அதுக்காக உங்க கை நீளலாமா ? ஒரு நாள் நான் உங்கக்காகிட்ட அப்படி நடந்திருப்பேனா ?”ன்னு உரிமையோட கேட்க முடியும். ஆனா உறவை பகைச்சிகிட்டு- காதல் கல்யாணங்கள் பெரும்பான்மையா அப்படித்தானே நடக்குது- காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களுக்குள்ள மோதல், கருத்து வேறுபாடெல்லாம் வந்தா குறுக்கே வந்து சாந்தப்படுத்த ஆளில்லாம பிரச்சினை முத்தி நிம்மதி தொலைஞ்சி விபரீதமா முடியவும் வாய்ப்பிருக்கு.

மல்லி: ரொம்ப முக்கியமான பாயிண்டுதான், அல்லி. ஆனா பாரு, போறபோக்குல இனிமே வருங்காலத்துல இப்படி பட்டிமன்றம் வச்சி பெரியவங்க பண்ணி வைக்கிற கல்யாணத்துக்கும் காதல் கல்யாணத்துக்கும் வித்தியாசத்த ஆராய்கிற வேலையெல்லாம் இருக்கப் போறதில்லைன்னு நினைக்கிறேன்.

அல்லி: என்ன மல்லி சொல்றே ? ஏன் உனக்கு அப்படி தோணுது ?

மல்லி: பின்னே என்ன அல்லி ? சர்வதேச அளவில கல்யாணம்ங்கிற சடங்கே காட்டுமிராண்டித்தனம், பெண்கள அடிமை சங்கிலியால கட்டிப் போடற சதின்னு ஒரு கருத்து உருவாகுது.

அல்லி: அடக் கடவுளே!

மல்லி: ஜன்னல் வழியா அடுத்த விட்டு அக்கப்போரை ரசிக்கிற மாதிரி அந்நிய நாட்டுல சட்டைய மாத்துற மாதிரி சுலபமா ஜோடிய மாத்துறத பாத்துக்கிட்டிருந்தோம், அடுத்து நாமளும் அந்த மாதிரி செய்யப் பழகிட்டோம்.

அல்லி: ஆமாமா. கல்யாணம் முன்னாலயா, பிள்ளபெத்த பின்னாலாயாங்கிறதும் தேவையில்லாத கவலைன்னும் தெரிஞ்சிகிட்டோம்.

மல்லி: இப்ப கல்யாணமாகி சில மணி நேரத்துல விவாகரத்து செய்றது கூட சகஜமான விசயம். பொது மேடையில ரெண்டு பொண்ணுங்க உதட்டுல முத்தம் கொடுத்து கொஞ்சுறதும் ஜாலியான சமாச்சாரம். அரசு அங்கீகாரத்தோட ஆணும் ஆணும், பொண்ணும் பொண்ணும் கல்யாணம் பண்ணிகிட்டு குடித்தனம் பண்றதும் ரொம்ப சாதாரண விசயம்.

அல்லி: மல்லி, அதெந்த விதத்தில கல்யாணம், அது என்ன மாதிரி குடித்தனம் ?

மல்லி: அப்படியெல்லாம் பத்தாம்பசலித்தனமா கேக்கக்கூடாது, அல்லி.

அல்லி: ஓஹோ! தனி மனித சுதந்திரம்னு ஒரு கோஷம் ஒலிக்கிறது கேக்குது!

மல்லி: சமூகங்கிறது வாசப்படியோட நிறுத்தப்பட வேண்டிய சங்கதியாம். வீட்டுக்குள்ள ஆணும் பொண்ணுமோ, அல்லது யாரோ இரண்டு மனுசப்பிறவிகளுமோ என்ன செஞ்சாலும் யாரும் அக்கரைப்படலாமோ ? யாரை அது என்ன விதத்துல பாதிக்குதுன்னு கேக்குறாங்க.

அல்லி: கொடுமைடா சாமி. யாரோட நாட்டாமைல இதெல்லாம் அரங்கேறுது, மல்லி ?

மல்லி: வேற யாரு ? திருவாளர் மீடியாதான்! பிரபல பத்திரிக்கைகள்ல, டிவியில, சினிமாவுல கேக்குறாங்க, “பெண்களே! எதுக்காக கற்புங்கிற சிறைக்குள்ள அடைபட்டு உங்கள் சுய சந்தோஷங்களை இழந்துகிட்டிருக்கீங்க ?”ன்னு. தாலியென்ன வேலி வேண்டிக்கிடக்கு ? மாடா, சூடு போட்டு இன்னார்தான் உரிமையாளர்னு சொல்றதுக்கு ?

அல்லி: அவ்வளவுதானா, இன்னும் இருக்கா ?

மல்லி: வருஷம் ஆக ஆக ஆறாவது அறிவு நல்லா வளர்ச்சி அடையும், அப்பப்ப ஆசைப்பட்ட ஆள் இவரில்லைன்னு புரியும்.

அல்லி: பேஷ்! பேஷ்!

மல்லி: அதனால முதல் வேலையா கல்யாணம் கட்டிக்கிற பழக்கத்த ஒழிச்சிரணும்.

அல்லி: அது சரி! கல்யாணம் கட்டிகிட்டு பிள்ளகுட்டி பெத்துகிட்டு ஆயுசு முழுக்க ஒரே மூஞ்சியவே பாத்துட்டு சாகுற பழம்பஞ்சாங்கத்துக்கெல்லாம் சமாதி கட்டிடணும்னு தீர்மானம் போடப்பட்டிருக்குன்னு சொல்லு.

மல்லி: ஆமா. சத்தம் அதிகம் போட சக்தியுள்ளவங்க, வசதிவாய்ப்புள்ளவங்க உற்சாகமா கூவிக்கிட்டிருக்காங்க.

அல்லி: அப்பாவியா, கன்னத்துல கை வச்சிகிட்டு கொஞ்சப்பேர் கவலைபட்டுகிட்டும் இருக்காங்க, சரியா ?

மல்லி: அதுவேதான். காதலை சைவம், அசைவம்னு வகைப்படுத்தி ருசிச்சாச்சி, வெள்ளைக்கார முத்தத்துக்கும் ஏங்கலாச்சி, விடலை பசங்கள வேலை வெட்டியில்லாம மன்மத ராசாக்களா அலைய விட்டாச்சி, மொத்தத்துல கட்டுப்பாடுங்கிற வார்த்தைய அகராதியிலேர்ந்து எடுத்தாச்சி.

அல்லி: கலி முத்திருச்சின்னு சுருக்கமா சொல்லு. புதுசா கிடைச்சிருக்கிற சுதந்திரம் தந்த போதையினால புத்தியால தெளிவா சிந்திக்க முடியலியோ ?

மல்லி: ஆமா, பாட்டனார் ஒரொரு செங்கலா அடுக்கி, பாத்துப் பாத்துக் கட்டின மாளிகை பேராண்டிக்கு பிடிக்கல. வெயில் மழைக்கு பாதுகாப்பா, காட்டு விலங்கு தாக்காம வசிக்கிறதுக்காக உறுதியா கட்டின வீடு பழசாத் தோணுனா ஒரு எமல்ஷன் பெயிண்டோ, எனாமல் பெயிண்டோ அடிச்சி, பளிங்குக் கல்லும், சலவைக்கல்லும் பதிச்சி புதுப்பிக்க வேண்டியதுதானே ? ஓலை விசிறியை கடாசிட்டு ஃபேனை மாட்டி, அதுக்கும் மேல போயி ஏசியை பொருத்தி சுகப்பட வழியிருக்க, குளிருக்கு இதமா மின்சார ஹீட்டர் இருக்க, எத்தனையோ யுத்திகள் இருக்க கட்டிடத்தை பீரங்கியால தகர்த்து தரைமட்டமாக்கிட்டு வானமே கூரைன்னு ஆதிவாசிகளா கற்காலத்துக்கு திரும்பறதுக்கு ரொம்ப பிரயத்தனப்பட்டுக்கிட்டிருக்காங்க.

அல்லி: ரொம்ப அழகா சொல்லிட்டே, மல்லி. மனிதனோட நாகரிக பயணத்துல முக்கியமான மைல்கல்லான திருமண முறையில ஆரம்பத்துல இருந்த குறைகளெல்லாம் அருமையான சிந்தனையாளர்களால, சமூகச்சிற்பிகளால படிப்படியா நீக்கப்பட்டுச்சி. பால்ய விவாகம் தவறுன்னு புரிஞ்சிது. சதி ஒரு கொடூரமான பழக்கங்கிற விழிப்புணர்ச்சி ஏற்பட்டுச்சி. விதவைகளுக்கு மறுமணம் மூலம் புது வசந்தம் கிடைக்க வழி பிறந்திச்சி. மிக நியாயமான காரணங்களுக்கு விவாகரத்து மட்டுமே நிவாரணம்னு ஏற்றுக்கொள்ளப்பட்டுச்சி. கணவன், மனைவி, குழந்தைகள்ங்கிற அருமையான தேன்கூட்ட சிரத்தையா கட்டி மனித வாழ்வின் சாரத்த தித்திப்பா உணரணும்கிறதுல மாற்றுச்சிந்தனைக்கு இடமிருக்கா ? “தான்”ங்ற தீவுக்கும் “தன் சுகம்”ங்கிற சுயநலமான குறுகிய சிந்தனைக்கும் அனுமதி அதிகரிச்சிட்டு வர்றது ஆரோக்கியமான அறிகுறியே இல்ல.

மல்லி: எப்படி அல்லி இந்த சரிவுமுகத்தை நிறுத்தப்போறோம் ? தலையை நிமிர்த்தப்போறோம் ?

அல்லி: அதுதான் இப்ப மில்லியன் டாலர் கேள்வி!

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்