அல்லி-மல்லி அலசல் (பாகம் 4)

This entry is part [part not set] of 40 in the series 20030809_Issue

பவளமணி பிரகாசம்


அல்லி: என்ன மல்லி, முகமெல்லாம் வாடிக்கிடக்கு ? வீட்டுல சண்டையா ?

மல்லி: அதெப்படி அவ்வளவு சரியா கண்டுபிடிச்சிட்றே ?

அல்லி: இதுக்கு பெரிய திறமையெல்லாம் தேவையில்ல. குறி சொல்றவங்களும், கோடாங்கி அடிக்கிறவங்களும் கூட முகத்த பாத்து மனச படிக்கத் தெரிஞ்ச வித்தைக்காரங்கதான். அது சரி, சண்டை யாரோட, குழந்தைகளோடயா, வீட்டுக்காரரோடயா ?

மல்லி: ரெண்டுந்தான்.

அல்லி: போச்சுடா! மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் இடின்னு சொல்லு.

மல்லி: உனக்கு நக்கலா இருக்கு. நானே நொந்து போயிருக்கேன்.

அல்லி: உன் சந்தோஷத்த, நிம்மதிய உன் கைலதான வச்சிருக்கணும் ?

மல்லி: என்ன சொல்ற நீ ?

அல்லி: பிரச்சினை வெடிக்கும் போது, சூழ்நிலை இறுக்கமாயிருக்கும் போது இன்னும் அதிக உஷாராயிருந்து, பொறுமையா, புத்திசாலியா நடந்துக்கோன்னு சொல்றேன்.

மல்லி: நான் காச்மூச்சுனு கத்தினா ஒரு பிள்ளை கண்டுக்காம வெளியே போகுது, இன்னொன்னு மூலையில உக்காந்து அழுவுது. இரண்டுமே எனக்கு பிடிக்கல. பிள்ளைங்கள வழிக்கு கொண்டுவரவும் முடியல.

அல்லி: மல்லி, நீ முதல்ல புரிஞ்சிக்க வேண்டியது, ஒவ்வொரு குழந்தையோட சுபாவமும் ஒரு மாதிரி. ஒரு குழந்தைய நடத்துற மாதிரி இன்னொரு குழந்தைய நடத்த முடியாது. கையில இருக்கிற அஞ்சு விரலும் ஒரே மாதிரியாவா இருக்கு ?

மல்லி: ஆமா, நீ சொல்றதும் வாஸ்தவந்தான்.

அல்லி: மூளை ஆற்றலை விளக்குறதுக்கு மூணு உதாரணம் இருக்கில்லையா-கற்பூரம், கரித்துண்டு, வாழைமட்டைன்னு, கப்புன்னு பிடிச்சுக்கிறவங்க, ஊதி ஊதி பத்த வைக்க வேண்டியவங்க, பத்த வைக்கவே முடியாதோங்கறவங்கன்னு- அந்த மாதிரி பிள்ளைங்களும் வெவ்வேற மாதிரிதான் நடந்துக்குவாங்க. திட்டினா ஒரு பிள்ளை துடைச்சி போட்டுட்டு தெனாவட்டா திரியும், இன்னொன்னு தொட்டாசிணுங்கி மாதிரி சுருங்கிப் போயிரும். இதை விட விபரீதம் வெளிய காட்டாம மனசுக்குள்ள புழுங்கி வன்மத்த வளத்துக்கிற வகை.

மல்லி: இப்படியெல்லாம் நான் யோசிச்சே பாத்ததில்லையே!

அல்லி: அதுனாலதான் பிள்ளைங்களோட மல்லுக்கட்டி தோத்துப் போயி மருகுறே.

மல்லி: எப்படித்தான் சமாளிக்கிறதுன்னு நீயே சொல்லு, அல்லி.

அல்லி: உளவியல் நிபுணர்கள் என்ன சொல்றாங்கன்னா எதிர்மறை கட்டளைகளை விட நேரான உத்தரவுகள்தான் நல்ல பலன் தருமாம். உதாரணத்துக்கு, ‘புத்தகங்கள கீழே போடாதே, களைந்த துணியை மூலையில் வீசாதே ‘ அப்படின்னு சொல்லாம ‘புத்தகத்த எடுத்த இடத்துல வை, அழுக்குத் துணியை கூடையில் போடு ‘ அப்படின்னு சொல்லும் போது எதை செய்யக் கூடாதுன்னு வெறுமனே கத்தாம, என்ன செய்யணும்னு கறாரா ஒரு வழியும் சொன்ன மாதிரியில்லையா ? அத சொல்லும் போதும் குரல உசத்தாம ஆனா அழுத்தமா சொன்னோம்னா குழந்தைங்க கீழ்படியத்தான் செய்வாங்க.

மல்லி: திரும்ப திரும்ப ஒரே தப்பை, அறையை அலங்கோலமாக்குற மாதிரி தப்பை அவங்க செய்யும் போது பொறுமையே போயிருதே!

அல்லி: அவங்கள விட வயசிலயும், அனுபவத்திலயும் பெரியவளான நீ பொறுமையிழக்கலாமா ? கோபப்படாம, முதிர்ச்சியோட நடந்துகிட்டேன்னா தன்னையறியாம அவங்க உன்னை வழிகாட்டியா, பாதுகாப்பான கோட்டையா நினைப்பாங்க.

மல்லி: சரி, இனிமே அப்படியே நடந்து பாக்கிறேன்.

அல்லி: கண்டிப்பும் இருக்கணும். விதிமுறைகளை மீறினா அதுக்கான தண்டனைகளையும் வகுத்துகிட்டு அதையும் முன்கூட்டியே அவங்களுக்கு உணர்த்திடணும். இதை நடைமுறை படுத்துறதுல இளகவே கூடாது.

மல்லி: அப்போ கட்டுப்பாடோட நடந்துக்க பழகியிருவாங்க இல்லையா ?

அல்லி: சரி, இப்ப சொல்லு, வீட்டுக்காரரோட என்ன சண்டை ?

மல்லி: ஆபீஸ்லேர்ந்து வந்ததும் எரிஞ்சி எரிஞ்சி விழறாரு. எதுக்கெடுத்தாலும் குத்தம் சொல்றாரு.

அல்லி: வெளியுலகத்துல பலவித மனக்கஷ்டம், அழுத்தம்னு அலுப்போட வீட்டுக்கு வரும் போது வீடு துப்புரவா இருந்து, பெண்டாட்டி எண்ணெய் வழியிற மூஞ்சோட நிக்காம, நீட்டா டிரஸ் பண்ணிகிட்டு, பளிச்சினு முகத்த வச்சிருந்தாலே ஆம்பளைங்களுக்கு பாதி களைப்பு போயிரும்.

மல்லி: அப்புறம் ?

அல்லி: வந்தவுடனே அவங்ககிட்ட அன்றைய சங்கடமான சங்கதிகள கொட்டாம, அன்னிக்கு இரவுக்குள்ள செஞ்சி முடிக்க வேண்டிய வேலைகள அடுக்காம இருக்கணும்.

மல்லி: அப்புறம் ?

அல்லி: அவங்க ஆசுவாசப்படுத்திக்க டைம் கொடுத்துட்டு பசியடங்க உண்றதுக்கு, குடிக்கிறதுக்குன்னு குடுத்துட்டு அப்புறமா சாவகாசமா பேசினா சலிப்பில்லாம கேப்பாங்க, அனுசரணையா நடந்துக்குவாங்க.

மல்லி: அப்போ எம்மேல நிறைய தப்பு இருக்குன்னுதான் நீ சொல்றபடி பாத்தா தெரியுது.

அல்லி: ‘வீடா இது ? குப்பைத் தொட்டி மாதிரி இருக்கு ‘ அப்படின்னிருப்பாரு. ‘ஆமா, சம்பளமில்லாத இந்த இலவச வேலைக்காரிக்கு என்னக்கி பாராட்டும், மரியாதையும் கிடைச்சிருக்கு ‘ன்னு நீ பதிலுக்கு கத்தியிருப்பே.

மல்லி: அட! நேர்ல பாத்தது மாதிரி சொல்றியே!

அல்லி: மல்லி, வீட்டுக்கு வீடு வாசப்படின்னு தெரியாதா உனக்கு ? ஆனா இந்த நடைமுறையை வளக்காம புத்திசாலியா குடும்பம் நடத்துறதுதான் பொம்பளைங்க சாமர்த்தியம்.

மல்லி: அப்படின்னா ஆம்பளைங்க எப்படின்னாலும் நடந்துக்கலாம், என்னன்னாலும் பேசலாம், பொம்பளைங்க கொத்தடிமை மாதிரி அடங்கி கிடக்கணும்னு சொல்றியா ?

அல்லி: பாத்தியா! மறுபடியும் பொறுமையில்லாம பொங்குறியே! குடும்பத்துக்காக வெளியே போய் உழைச்சிட்டு வர்ற ஆம்பளைய அன்பா ஆதரவா நடத்த வேண்டியது பொம்பளையோட கடமை. ஒரு பெண்டாட்டிக்கு பல பதவி இருக்கு தெரியுமில்லையா ? தோழி, தாதி, மந்திரி, தாய் அப்படின்னு பல அவதாரம் எடுத்து சமயத்துக்கு தகுந்த மாதிரி நடந்துகிட்டு குடும்பத்தேருக்கு அச்சாணியா இருக்கணும்.

மல்லி: என்னதான் சொல்லு, இந்த ஆம்பளைங்க பண்ற அராஜகமும், அதிகாரமும், அநியாயமும் ரொம்ப அதிகந்தான்.

அல்லி: உடலளவுல அதிக பலசாலியா இருக்கோம்னு அவங்க உணர்த்திகிட்டே இருக்க ஆசைப்பட்றதுனோட விளைவுதான் அது. ரஜினிகாந்த் வேணா சினிமாவுல ‘என் வழி தனி வழி ‘ன்னு ஒரு வழியில போவாரு. பொம்பளைங்களுக்கு சாணக்கியர் சொன்ன சாம, தான, பேத, தண்ட நாலு வழியுமே உபயோகமாயிருக்கும் ஒவ்வொரு சமயத்துக்கும்.

மல்லி: எனக்கென்னவோ இப்படியே சண்டையும் சச்சரவுமா நோகுறதுதான் என் தலையெழுத்தோன்னு தோணுது.

அல்லி: சண்டையும் சச்சரவுமா இருந்தா நோகுறது உனக்கு மட்டுந்தானா ? அவருக்குந்தானே ? இரண்டு பேர் தலையெழுத்தையும் மாத்தி நல்லா எழுதிக்கிறதுக்கு இரண்டு பேருமே முயற்சி எடுக்கணும்.

மல்லி: நான் என்ன செய்யணும், சொல்லு.

அல்லி: முதல்ல, பதிலுக்கு பதில் கத்துறத நிறுத்து. அவர் ஒரு வார்த்தை சொன்னா ஒன்பது வார்த்தை சொன்னேன்னா அது சாமர்த்தியமில்ல. ஒன்னு நல்லா ஞாபகத்துல வச்சுக்கோ- எய்த அம்பு, கரந்த பால், சொன்ன சொல் இதெல்லாம் புறப்பட்ட இடத்துக்கு திரும்பி போக முடியாது. கடுப்பான வார்த்தைகள கொட்டி மனச ரணப்படுத்தி மாறாத வடுக்கள உண்டாக்குறது ரொம்ப தப்பு.

மல்லி: அவரு அபாண்டமா பேசும்போது சும்மாயிருக்கணுமா ?

அல்லி: இருக்கணும். காந்திக்கு பிடிச்ச குரங்கு பொம்மைகள் மாதிரி அவர் கோப நடவடிக்கைகளுக்கு கண், காது, வாயை பொத்திகிட்டு பொறுமையா இருக்கணும். இரண்டு கை தட்டினாத்தான் ஓசை வரும். பதிலுக்கு பதில் பேசிட்டா இரண்டு பக்கமும் நியாயம் கிடைச்ச மாதிரி ஆயிரும். முதல்ல தப்பா அவர் பேசினதுக்கு பதிலே சொல்லாத பட்சத்துலதான் அவருக்கு யோசிக்க வாய்ப்பு கிடைக்கும், உன் மெளனந்தான் அவர உறுத்தும், குத்தும், தப்பை உணர்த்தும். அதுக்கு நீ பொறுமையா காத்திருக்கணும். அவரோட ஒரு முதல் தப்போட பிரச்சினை முடிவுக்கு வந்துரும். நீ பதில் பேசினா பிரச்சினை பெரிசாகி, முடிவில்லாததாகி இரண்டு பேர் வாழ்க்கையும் நிம்மதியில்லாம போயிரும்.

மல்லி: பெண்ணா பிறந்த நீயே இப்படி பெண்களுக்கு பாதகமா ஆண்கள ஆதரிச்சி பேசலாமா ?

அல்லி: மல்லி, நல்லா ஆழமா யோசிச்சி பாத்தேன்னா இது பெண்களுக்கு ரொம்ப சாதகமான யுக்தின்னு புரியும். உன்கிட்ட அன்பா இருக்கணும், உன் பேச்சுக்கு மதிப்பு கொடுக்கணும், உன்கிட்ட உண்மையா நடந்துக்கணும் அப்படின்னு நீ உன் கண்வர்கிட்ட ஆசைபட்ற எல்லாத்தையும் நீ இப்படி நடந்துக்கிறது மூலமா அடைய வாய்ப்பு இருக்கும் போது சோடா நுரை மாதிரி பொங்கி வர்ற கோபத்தை அடக்க நீ பழகுறது அவசியமில்லையா ?

மல்லி: என் சுய கெளரவம் இடிக்குதே!

அல்லி: புருஷன் பெண்டாட்டிக்குள்ள கெளரவம் எங்கிருந்து வந்துச்சி ? யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுக்கணும்.

மல்லி: அது நானாத்தான் இருக்கணுமா ?

அல்லி: பெருந்தன்மையா நடந்துகிட்டு பெருமையை தட்டிக்கிட்டு போயேன். இயற்கையிலேயே அதிக உடல் உபாதைகளையெல்லாம் தாங்கி பழகிட்ட பொண்ணுக்கு இந்தப் பொறுமை காட்டுற சிரமம் ஒரு பொருட்டே இல்லைன்னு நான் நினைக்கிறேன்.

மல்லி: தந்திரமா பேசி என்னை தோக்குற கட்சியாக்கப் பாக்குற.

அல்லி: இல்லவே இல்ல. சின்ன மீன போட்டு பெரிய மீனப் பிடிக்கிறதுதான் ராஜ தந்திரம்.

***

pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்