அறிவியல் மேதைகள் – அலெக்சாண்டர் கிரகம் பெல் (Alexander Graham Bell)

This entry is part [part not set] of 30 in the series 20020414_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


அலெக்சாண்டர் கிரகம் பெல், ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள எடின்பர்க் நகரில் 1847 ஆம் ஆண்டு மார்ச்சு 3 ஆம் நாள் தோன்றினார். இவரது பாட்டனார் பெயர் அலெக்சாண்டர்; தந்தையார் பெயர் மெல்வில் பெல் (Melville Bell) என்பதாகும். இருவரும் பேச்சுக்கலைப் பயிற்சியில் வல்லவர்கள். குறிப்பாக கிரகம் பெல் அவர்களின் தந்தையார், ஒலிப் பிறப்பியல் துறையில் மிகுந்த ஆர்வம் காட்டினார்; ஒலியுண்டாவதற்குக் காரணமான குரல்வளை, நா, தொண்டை, உதடுகள் ஆகியவற்றின் பங்கு பற்றி விளக்கும் ஒலிப் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றியவர். கிரகம் அவர்களின் தாயார் எலிசா கிரேஸ் சைமண்ட்ஸ் (Elisa Grace Symonds) இசையில் ஆர்வம் கொண்டவர்; ஓர் ஓவியரும் கூட. இளம் வயதில், கிரகம் வீட்டிலேயே கல்வி கற்று வந்தார். அப்போது தன் தாயாரிடம் இசை பயிலும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. இந்நிலையில் அவரது தாயார் எலிசா கேட்கும் திறனை இழக்க நேரிட்டது; அதனால் கிரகம் அவர்களின் இசைப் பயிற்சியும் தடைபட்டது. மேலும் பேச்சுப் பயிற்சியில் முழுமையாக ஈடுபட்டிருந்த தமது குடும்பத்தில், தன் தாய்க்கே இந்நிலை ஏற்பட்டது குறித்து, கிரகம் பெரிதும் வருந்தினார். அடுத்து, பியானோ இசையில் பெரும் புலமை பெறவேண்டும், புகழ் பெறவேண்டும் என்றெல்லாம் கனவு கண்டுகொண்டிருந்த கிரகமின் ஆசை அவரது தாயாரின் மறைவால் நிறைவேறாமலே போய்விட்டது.

எடின்பர்கில் உள்ள ராயல் உயர்நிலைப் பள்ளியில் கிரகம் பெல் தனது படிப்பைத் தொடர்ந்தார்; தாவரவியல் முதற்கொண்டு தொழில்நுட்பவியல் வரை அனைத்து அறிவியல் பாடங்களிலும் ஆர்வம் காட்டிய அவருக்கு, பேச்சுப்போட்டி, நாடகம், இசை ஆகியவற்றிலும் பெரும் ஈடுபாடு இருந்ததில் வியப்பேதுமில்லை. பள்ளியில் படிக்கும்போதே மற்றவர்களுக்குப் பேச்சுப் பயிற்சி அளித்தல், இசை கற்பித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுப் பொருளீட்டவும் செய்தார். தனது பாட்டனார் மற்றும் தந்தையார் ஆகியோரது வழிகாட்டுதலில், பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பல வென்றார்.

1865 ஆம் ஆண்டு மின்சாரத்தின் வழி, இடம் விட்டு இடம் பேச்சொலியைச் செலுத்தும் எண்ணம் அவருக்குத் தோன்றியது. இதற்குக் காரணமாய் அமைந்தது அவர் படிக்க நேர்ந்த ஹெர்மன் ஹேய்ம்ஹோல்ட்ஸ் (Herman Heimholtz) என்பவர் எழுதிய ‘வியப்பூட்டும் குரலொலி (The Sensation of Tone) ‘ என்ற நூலே. அதே ஆண்டு கிரகம் அவர்களின் குடும்பம் லண்டனுக்குக் குடி பெயர்ந்தது; காசநோயால் அவரது தம்பி எட்வர்ட் மறைந்து, குடும்பமே துயரத்தில் மூழ்கியது. 1866 ஆம் ஆண்டு முதற்கொண்டு பல்வேறு ஆய்வுகளில் கிரகம் பெல் ஈடுபட்டார்; இவையே பின்னாளில் அவர் தொலைபேசியைக் கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்தன எனலாம். 1870 இல் அவரது அண்ணனும் காச நோய்க்கு இரையானபோது, மருத்துவர்கள் இந்நோய் கிரகம் பெல் அவர்களையும் தாக்கக்கூடும் என்று எச்சரித்தனர். இதனால் அவர் தந்தையார், குடும்பத்தைக் கனடா நாட்டிலுள்ள ஒண்டோரியோவுக்கு அருகில் பிராண்ட் ஃபோர்ட் எனும் இடத்திற்கு மாற்றினார். விரைவில் கிரகம் பெல் பாஸ்டன் (Boston) நகருக்கு இடம் பெயர்ந்தார்; அங்கு 1872 இல் காது கேளாதோருக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பள்ளி ஒன்றைத் துவக்கினார். அந்நகரில் தங்குவதற்கு இடமின்றித் தவித்த கிரகம் பெல்லுக்கு, அவரது மாணவரான ஜார்ஜ் சாண்டர்ஸ் என்பவர் தனது வீட்டில் ஓர் பெரிய அறையைக் கொடுத்து உதவினார்; அந்த அறை பல்வேறு ஆய்வுப் பணிகளையும் மேற்கொள்ள வசதியாக இருந்தது. பாஸ்டன் நகரின் பெரும் பணக்காரர்களுள் ஒருவரான வழக்குரைஞர் காரிண்டர் கிரீன் ஹப்பர்ட் (Garinder Green Hubbard) என்பவரின் மகள் மேபெல் (Mabel) செவிக்குறையுடன் இருந்து வந்தார்; அப்பெண்ணுக்குப் பேச்சுப் பயிற்சி அளிக்கும் பொறுப்பை மேற்கொண்ட கிரகம் பெல் பின்னர் அவளையே 1875 இல் திருமணமும் செய்து கொண்டார்.

1873 இல் பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் குரலுறுப்புகள் பற்றிய பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு கிரகம் பெல்லுக்குக் கிடைத்தது. கற்பிக்கும் பணி மற்றும் பேச்சுப் பயிற்சி அளிக்கும் பணி ஆகியவற்றோடு ஒலியியல் துறையிலும் அவர் பல ஆய்வுகளை அங்கு மேற்கொண்டார். ஒரே கம்பியில் ஆறேழு செய்திகளை அனுப்பக்கூடிய ஒத்திசைவான தந்திப்பொறி (Harmonic Telegraph) ஒன்றைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமையை 1874 இல் கிரகம் பெல் பெற்றார். இத்தந்திப் பொறியில் அவ்வப்போது சில சிக்கல்கள் எழவும், அதை நீக்குவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டபோது மின்சாரத்தின் வலிமைக்கும், காற்றின் ஒலி அலைகளுக்கும் தொடர்பு இருப்பதை அவர் கண்டறிந்தார். தனது உதவியாளர் தாமஸ் வாட்சன் என்ற மின் தொழில் வல்லுநரின் ஒத்துழைப்புடன் தனது ஆய்வைக் கிரகம் பெல் தொடர்ந்தார்; மனிதக் குரல்களை வேறோர் இடத்திற்கு அனுப்ப இயலும் என்ற முடிவுக்கு வந்தார்; இதுவே தொலைபேசியை வடிவமைப்பதற்கு வழி வகுத்தது. தொலைபேசியைக் கண்டுபிடிப்பதில் அமெரிக்காவைச் சேர்ந்த எலிஷா கிரே (Elisha Grey) மற்றும் தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோரும், ஸ்காட்லாந்து நாட்டவரான கிரகம் பெல், ஜெர்மனியின் பிலிப் ஆகிய நால்வரும் தனித்தனியே முனைந்து பணியாற்றி வந்தனர். இறுதியில் கிரகம் பெல் வெற்றி பெற்றார்; 1876 ஆம் ஆண்டு மார்ச்சு 10 ஆம் நாள் அமெரிக்க அரசு கிரகம் பெல் அவர்களின் கண்டுபிடிப்பை ஏற்றுக்கொண்டு தொலைபேசிக்கான காப்புரிமையை வழங்கியது. 1876 ஜூன் திங்களில் அமெரிக்காவிலுள்ள பிலெடெல்பியா என்னும் நகரில், அறிஞர்கள் முன்னிலையில் தொலைபேசி எவ்வாறு பணி புரிகிறது என்பதைச் செயல் முறையில் விளக்கிக் காட்டினார். அனைவரும் பாராட்டிப் போற்றினர்; கிரகம் பெல்லுக்குத் தங்கப் பதக்கம் வழங்கப் பெற்றது. அதே ஆண்டு செப்டெம்பர் திங்களில், ஸ்காட்லாந்தில் இரண்டாம் முறை, தனது கண்டுபிடிப்பைப் பற்றி செய்முறை விளக்கம் செய்தார். முதல் முறையாக நீண்ட தூரத் தொலைபேசிக் கம்பி இணைப்பு, குயின்ஸ் தியேட்டருக்கும் கேண்டர்பரிக்கும் இடையில் நிறுவப்பெற்றது. 1877 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 9 ஆம் நாள் ‘பெல் தொலைபேசி நிறுவனம் ‘ உருவாக்கப்பட்டது. கிரகம் பெல் தனது கண்டுபிடிப்பால் முப்பதாவது வயதில் பெரும் புகழுக்கும், செல்வத்திற்கும் சொந்தக்காரரானார். 1880 ஆம் ஆண்டு, பிரெஞ்சு அரசு அவருக்கு 50,000 பிராங்கு தொகையைப் பரிசாக அளித்தது; அப்பணத்தைக் கொண்டு வாஷிங்டனில் ஓர் ஆய்வுக்கூடத்தை பெல் நிறுவினார். ஒளிக்கற்றை வாயிலாக ஒலி அலைகளை அனுப்புவதற்கான ஆய்வு இங்கு மேற்கொள்ளப்பட்டது. கம்பியில்லாமலே செய்திகளை அனுப்புவதற்கான முயற்சியின் தொடக்கம் என இதனைக் கருதலாம். 1880 இல் கிரகம் பெல் ஒளிபேசியைக் (photophone) கண்டுபிடித்தார்; அவரது கருத்துப்படி இது தொலைபேசியை விடவும் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாகும்.

1882 இல் பெல் அமெரிக்ககக் குடியுரிமை பெற்றார். தொலைபேசியைக் கண்டுபிடித்த பிறகு கிரகம் பெல் ஏறக்குறைய 45 ஆண்டுகள் தனது அறிவியல் வாழ்க்கையை ஓய்வின்றி மேற்கொண்டார். அவரது அறிவுப் பசியும், புதுமை காணும் வேட்கையும் சிறிதும் குறையவில்லை. காற்றிலுள்ள நீரின் ஆவியைக் கொண்டு தூய நீரைப் பெறும் வழியைக் கண்டுபிடித்தார்; இது படகில் பயணம் செய்யும் கடல் பயணிகளின் நீர் வேட்கையைத் தணிக்க உதவியது. கிரகம் பெல் அவர்களுக்கு விமானம் ஓட்டுவதிலும் ஆர்வமுண்டு; காற்றாடியைப் பயன்படுத்திப் பல ஆய்வுகளை மேற்கொண்டு, மனிதனை உயரே தூக்ககூடிய எந்திரத்தை வடிவமைத்தார்.

அலெக்சாண்டர் கிரகம் பெல் சிறந்த அறிவியல் மேதை மட்டுமல்ல; மிகச் சிறந்த நிர்வாகியும் ஆவார். 1907 இல் வான் பயண ஆய்வுக் கழகம் (Aerial Experiment Association) ஒன்றை நிறுவத் துணை நின்றார். “அறிவியல் (Science)” என்ற பெயரில் ஓர் இதழ் உருவாவதற்கு கிரகம் பெல்லின் முயற்சி மிகப் பெரிதாகும்; இவ்வறிவியல் இதழ் இன்றும் வெளியாகிறது. அமெரிக்காவில், தேசியப் புவியியல் நிறுவனம் (National Geographic Society) என்னும் அமைப்பைத் தோற்றுவிக்கத் துணை புரிந்தார்; அவ்வமைப்பின் தலைவராக 1898-1904 வரை பணியாற்றினார். “குறைகளை நீக்கி முழுமையடையலாம்; ஆனால் முழுமையில் குறை என்பதே கிடையாது” – இதுவே கிரகம் பெல் அவர்களின் குறிக்கோள். அளவற்ற புகழும் செல்வமும் இளமையிலேயே அடைந்தபோதும் மனிதத் தன்மையிலிருந்து அவர் விலகியதே இல்லை; இயற்கையை மிகவும் நேசித்தார். 1922 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 2 ஆம் நாள் அவர் மறைந்தபோது அமெரிக்காவில் எல்லாத் தொலைபேசிகளும் ஒரு நிமிட நேரம் நிறுத்தப்பட்டு அவருக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று தொலைபேசியை எடுத்து ‘ஹலோ ‘ சொல்லும் நாம் அனைவரும் நம்மை அறியாமலே கிரகம் பெல்லுக்கு நன்றி சொல்லுகிறோம் என்றால் அது மிகையல்ல.

****************************************

முனைவர் இரா விஜயராகவன்

பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

மொழிக் கல்வித்துறை (தமிழ்)

வட்டாரக் கல்வியியல் நிறுவனம்

மைசூர் 570006

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர