அறிவியல் துளிகள்-16

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


61. கிணற்றுத் தண்ணீர் கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெது வெதுப்பாகவும் இருப்பது ஏன் ?

தரைமட்டத்திற்குக் கிழே சுமார் 50 – 60 அடி ஆழத்தில் கிணற்று நீர் கிடைக்கிறது. மண் அரிதில் வெப்பக்கடத்தி; எனவே கிணற்றின் ஆழத்தில் உள்ள நீர், ஏறக்குறைய 20 – 25 செ.கி. வெப்பநிலையில் எப்போதும் இருக்கிறது எனலாம். கிணற்றின் வெளிப்புற வெப்பம் பருவ காலங்களுக்கு ஏற்ப மாறுதல் அடையும். குளிர் காலத்தில் சில பகுதிகளின் சுற்றுச்சூழல் வெப்பநிலை 4 – 5 செ. கி. அளவுக்கும் செல்வதுண்டு; அந்நிலையில் கிணற்றுநீர் 20 – 25 செ.கி. அளவில் இருப்பதால், அது வெதுவெதுப்பான நீராக உணரப் பெறுகிறது. இதற்கு நேர்மாறான நிலை கோடைக்காலத்தில் உண்டாகிறது. கோடையில் சில பகுதிகளின் வெப்பநிலை 40 – 45 செ.கி. அளவில் இருப்பதை நாம் அறிவோம். அக்காலங்களிலும் கிணற்றுநீர் 20 – 25 செ.கி அளவில் இருப்பதால், சுற்றுச்சூழல் வெப்பநிலையோடு ஒப்பிடுகையில், கிணற்றுநீர் குளிர்ந்த நீராக நம்மால் உணரப் பெறுகிறது.

62. பொதுவாக மரங்களின் தண்டுப்பகுதி உருளை வடிவத்தில் (cylindrical trunk) அமைந்திருப்பது ஏன் ?

மரத்தின் தண்டுப்பகுதி பொதுவாக உருளை வடிவத்தில் இருக்கிறது என்றாலும், எல்லாத் தாவரங்களுக்கும் இது பொருந்தும் எனக் கூறுவதற்கில்லை. புல் வகைகளின் தண்டுகள் முக்கோண வடிவிலும், துளசிச் செடி போன்றவற்றின் தண்டுகள் நாற்கோண அல்லது சதுர வடிவிலும் அமைந்திருக்கும். தாவரங்கள் நுண்ணிய உயிரணுக்களால் (cells) ஆனவை; அவ்வுயிரணுக்கள் கோள வடிவில் (spherical) அல்லது திருகு சுருள் (helical) வடிவில் ஒருங்கிணைந்து இருக்கும். தனிப்பட்ட உயிரணுவின் அமைப்பு மற்றும் உயிரணுக்கள் ஒருங்கிணைந்து உருவாகும் அமைப்பு ஆகிய இரண்டையும் பொறுத்துத் தாவரத்தின் உருவம் அமையும். தாவரத்தின் தண்டுப் பகுதியில் இரு குறுகிய குழாயமைப்பிலான திசுப் (tissues) பகுதிகள் உள்ளன. அவை முறையே மரவியம் (Xylem), பட்டையம் (Phloem) என்பன. மரவியம் தண்டின் நடுப்பகுதியில் உள்ளது. பட்டையம் மரவியத்தின் புறப் பகுதியில் அதாவது மரத்தின் சுவர்ப் பகுதியில் அமைந்துள்ளது. மரத்தின் தண்டுப்பகுதி வெளிப்புறமாக ஆரவாட்டில் (radial) ஒவ்வொரு அடுக்காக வளர்வதால் பொதுவாக உருளை வடிவில் அமைகிறது.

63. மின்மாற்றி (transformer) அல்லது மின்கட்டுப்படுத்தி (electric choke) ஆகியவற்றிலிருந்து சில சமயம் ஒலி உண்டாவது ஏன் ?

மின்மாற்றி, மின்கட்டுப்படுத்தி ஆகிய இரண்டும் அடிப்படையில் ஓர் இரும்பு உள்ளகத்தைச் (Iron core) சுற்றி அமைக்கப்பட்ட கம்பிச் சுருள்களே. உள்ளகம் என்பது மின்காப்புப் பெற்ற மெல்லிய இரும்புத் தகடுகளாலானது. சாதாரண நிலையில் மின்மாற்றி அல்லது மின்கட்டுப் படுத்தியில் மாறுதிசை மின்னோட்டம் (AC) செல்லும்போது ஒலி ஏதும் உண்டாவதில்லை. ஆனால் உள்ளகத்தின் மெல்லிய தகடுகள் உறுதியாக இணைக்கப்படாத நிலையிலும், உள்ளகத்தைச் சுற்றியுள்ள கம்பிச் சுருள் அழுத்தமாகச் சுற்றப்படாதபோதும், தகடுகளுக்கிடையேயான மின்காப்புப் பொருள் உலர்ந்து விட்டாலும் மெல்லிய ஒலி உண்டாகிறது. முக்கியமாக கம்பிச்சுருள் ஊடே செல்லும் மாறுதிசை மின்னோட்டத்தின் அதிர்வெண்ணும் (Frequency), தளர்ந்த நிலையிலுள்ள தகடுகளின் இயல்பான அதிர்வும் ஒத்திருக்கையல் இவ்வொலி கட்டாயம் உண்டாகிறது. தகடுகளின் ஒத்ததிர்வே (Resonance) இதற்குக் காரணம்.

64. சோப்புக் கட்டிகள் பல நிறங்களில் இருப்பினும், அவற்றின் நுரை மட்டும் வெண்மையாகவே இருப்பது ஏன் ?

சோப்பு நுரை என்பது நுண்ணிய சோப்புக் குமிழ்களின் கூட்டமே. சோப்புக் குமிழ் என்பதோ சிறு அளவு காற்றை உள்ளடக்கி அமைந்திருக்கும் சோப்புக் கரைசலின் மெல்லிய படலம். சோப்புக் கரைசலின் பரப்பு இழுவிசையின் (surface tension) காரணமாக, அதன் படலம் நீண்டு பரவிட முடிகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள நுரையினால் கவரப்படும் பரப்பு, அதே கன அளவுள்ள நீரினால் கவரப்படும் பரப்பைவிட மிகுதி எனலாம். சோப்பு நுரை இவ்வாறு பரவுவதன் காரணமாக அதில் ஏதேனும் சிறு அளவு வண்ணம் இருப்பினும் அது மங்கிப்போகிறது. மேலும் சோப்புப்படலம் ஒளி புகக்கூடியது; சோப்புக்குமிழ்களின் கூட்டமான நுரையை அடையும் ஒளி பல்வேறு திசைகளில் சிதறிப்பரவுவதால் நுரை வெண்மையாக மட்டுமே காட்சியளிக்கிறது. பல்வேறு நிறம் கொண்ட சோப்புகளின் நுரைக்கும் இது பொருந்தும்.

Dr R Vijayaraghavan முனைவர் இரா விஜயராகவன்

BTech MIE MA MEd PhD பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

2193 V Cross K Block 2193 5ஆவது கிராஸ் கே பிளாக்

Kuvempu Nagar, Mysore 570023, India குவெம்பு நகர், மைசூர் 570023, இந்தியா

Email ragha2193van@yahoo.com தொ.பேசி: 91-0821-561863

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர