அர்ஜெண்டைனாவின் பிரச்னைகள்

This entry is part [part not set] of 21 in the series 20011229_Issue


அர்ஜெண்டைனா தென் அமெரிக்காவில் இருக்கும் ஒரு பெரிய நாடு. இந்த நாட்டில் சென்றவாரமும் இந்த வாரமும் நடந்த சாப்பாட்டுக் கலவரங்களால் ஜனாதிபதி ராஜினாமா செய்தார்.

ஏராளமான மக்கள் வேலைஇழந்ததாலும், திடாரென்று வந்த பண நெருக்கடியாலும், பொருளாதாரச் சிக்கலாலும் பொது மக்கள் நகரத்தின் கடைகளை உடைத்து அங்கிருக்கும் உணவுப்பொருள்களை திருட ஆரம்பித்து பலத்த கலவரத்திலும், நாடு பெரும் மக்கள் கலவரத்தில் இறங்கியது. ராணுவ வீரர்கள் பொதுமக்களை அமைதிப்படுத்தவும் கலவரங்களை நிறுத்தவும் தெருவுக்கு வந்ததில் பல மக்கள் உயிரிழந்தார்கள். இதனால் அரசியல் நெருக்கடியில் நிதி அமைச்சரும் ஜனாதிபதியும் பதவி விலகியும் போராட்டம் நிற்காததால், இன்று புதிய ஜனாதிபதியும் பதவி விலகினார்.

ஒரு காலத்தில் இருந்த வளமையை வெளிப்படுத்துவதாக அர்ஜெண்டைனாவின் பரந்த நகரங்களும், பெரும் கட்டடங்களும் நின்று கொண்டிருக்கின்றன. விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியால் வந்த வளமை அர்ஜெண்டைனா முழுவதும் காணக்கிடக்கிறது.

ஆனால், மோசமான பொருளாதாரக் கொள்கைகளாலும், நிலையான அரசாங்கங்கள் இல்லாததாலும், அவைகள் எடுத்த மோசமான பொருளாதார முடிவுகளாலும், அர்ஜெண்டைனா 1913ஆம் ஆண்டு 10ஆவது மிகப்பணக்கார நாடாக இருந்தது, 1998இல் 36ஆவது பணக்கார தேசமாக இழிந்தது.

அர்ஜெண்டைனாவின் 132பில்லியன் டாலர் கடன், எல்லா வளரும் நாடுகள் கடனையும் மொத்தமாக எடுத்தால், அதில் ஏழில் ஒரு பங்கு. உலக பண உதவி நிறுவனம் (The international Monetary fund IMF) 1983ஆம் ஆண்டிலிருந்து 9 தடவை இந்த தேசத்துக்கு அவசர பண உதவி செய்து இதன் நிதி நிலைமையை சரி செய்திருக்கிறது.

எப்படி அர்ஜெண்டைனா இப்படி ஒரு மோசமான நிலையை எட்டியது ? சமீபத்திய நெருக்கடியின் காரணம், பொருளாதார வளர்ச்சி குறையும் காலத்தில் அளவுக்கதிகமாக செலவு செய்ததால் வந்தது.

பெரும்பாலான பணம் மக்கள் நலத் திட்டங்களுக்கும், அரசாங்கத்தில் வேலை செய்பவர்களுக்கான சம்பளத்துக்கும் தான் சென்றது. ஆனால் பல ஆராய்ச்சியாளர்கள் அரசாங்கத்தில் இருந்தவர்கள் செய்த ஊழலைக் காரணமாகச் சொல்கிறார்கள்.

இதன் காரணமாக, நாட்டின் கடன் கட்டுக்கடங்காமல் போய் விட்டது. அர்ஜெண்டைனா தனது பொருளாதார குறிக்கோள்களை தொட முடியவில்லை. உலக பண உதவி நிறுவனத்திடமிருந்து சுமார் 22 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுக்கு ஏற்றாற்போல செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யவில்லை.

அர்ஜெண்டைனாவின் பணமான பெஸோ பணத்தை அமெரிக்க டாலரோடு இறுக்கமாகப் பிணைத்ததும் ஒரு காரணம். இதனால் பணவீக்கம் கட்டுக்குள் வந்தது உண்மைதான். இருப்பினும் வளைந்து கொடுக்க வேண்டிய நேரத்தில் வளைந்து கொடுக்க வில்லை. இதனால் பெஸோ பணத்தின் மதிப்பைக் குறைத்து உற்பத்தியையும் ஏற்றுமதியையும், அதன் மூலம் உள்ளே வரும் பணத்தையும் அதிகரிக்க முடியவில்லை.

விலைகள் ஏறாமல் சீராக இருந்தாலும், அரசாங்கம் எடுத்த சிக்கன நடவடிக்கைகளால், கூலி குறைந்து, பொதுமக்கள் பொருட்களைவாங்க செலவு செய்வதும் குறைந்தது.

இப்போதைக்கு அரசாங்கத்தின் திட்டங்களென, பணத்தை வங்கியிலிருந்து எடுப்பதை நிறுத்துவதும், நாட்டை விட்டு பணம் வெளியே செல்லாமல் தடுப்பதும், இன்னும் சிக்கன நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டு இதன் மூலம் பணம் கொடுப்பவர்களை வற்புறுத்தி மேலும் பணம் கொடுக்க வைக்க முயல்கிறது அரசாங்கம்.

வாங்கிய கடனை கட்ட புதிய கால அட்டவணையை அரசாங்கம் சென்றமாதம் அறிவித்தது. இதற்காக பணம் கொடுப்பவர்களை அரசாங்க பணப்பத்திரங்களை அதிக வட்டிக்கு பெற்றுக்கொள்ளவும் அனுமதித்தது.

அரசாங்கம் இந்த வட்டி மூன்று வருடத்துக்குப் பின்னர் வரும் என்று உறுதி கூறினாலும், பணம் கொடுக்கும் நிறுவனங்கள் கவலைப்படுகின்றன.

ஆனால் உலக பொருளாதாரமே கீழே போய்க்கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், வரவு செலவு திட்டத்தை (பட்ஜெட்டை) சரியாக சமப்படுத்துவதுகூட கடினமாகி விட்டது.

சென்ற வருடத்துக்கு இந்த வருடத்தை ஒப்பிட்டால், வரி மூலம் அரசாங்கத்துக்கு வரும் வருமானம் சுமார் 17 சதவீதம் குறைந்து போய்விட்டதும் தெரிகிறது.

அர்ஜெண்டைனாவின் பிரச்னைகள் இதன் போட்டியாளர்களுக்கு வசதியாகப் போய்விட்டதால், அர்ஜெண்டைனாவின் ஏற்றுமதிப் பொருள்களைக் குறைந்த விலையில் இவை தட்டிக்கொண்டு போய்விட்டன.

அமெரிக்கா உள்ளே புகுந்து 1995இல் மெக்ஸிகோவை பணநெருக்கடியிலிருந்து காப்பாற்றியது போல, அர்ஜெண்டைனாவையும் இப்போது காப்பாறினால் ஒழிய, நீண்டகால நோக்கில் அர்ஜெண்டைனாவைக் காப்பாற்ற முடியாது என பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பல நிபுணர்கள் பல வைத்தியங்களைக் கூறுகிறார்கள்.

அமெரிக்க டாலரை அப்படியே அர்ஜெண்டைனா பணமாக அங்கீகரித்தால் பிரச்னை தீர்ந்து விடும் என்று ஸ்டாவ் ஹாங்க் என்ற ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியர் கூறுகிறார்.

பணமாற்று பிரச்னையை அமைப்பிலிருந்து விலக்கிவிட்டால், வட்டி வீதங்கள் பல மடங்கு கீழே இறங்கிவிடும் என்று கூறுகிறார்.

மற்றவர்கள், டாலரை அப்படி ஒப்புக்கொண்டால், ஏற்றுமதி போட்டிக்கு அர்ஜெண்டைனா ஈடு கொடுக்க முடியாது என்றும், அதே நேரத்தில் அர்ஜெண்டைனா பணத்தை மதிப்பு குறைத்தால், டாலர் கணக்கில் வாங்கிய கடனை பெஸோவில் அடைக்க முடியாது என்றும் கூறுகிறார்கள்.

இரண்டையும் கலப்படமாகச் செய்தால் ஒரு வேளை பிரச்னை தீரலாம் என்றும் பலர் கூறுகிறார்கள்.

**

இடைக்கால ஜனாதிபதி பொறுப்பேற்ற பிறகும் சாப்பாட்டுக்கலவரங்களும் அர்ஜெண்டைன பாராளுமன்றக்கட்டடங்களும் பொதுமக்களால் சூறையாடப்பட்டன. அவர் மீதும் நம்பிக்கை இல்லாமல் மக்கள் தொடர்ந்து கலவரம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

இதற்கிடையில் இடைக்கால ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற அடால்ஃபோ ரோட்ரிகஸ் சா அவர்களும் தேவையான அரசியல் ஆதரவும் மக்கள் ஆதரவும் இல்லாததால் ஞாயிறன்று பதவி விலகினார்.

***

Series Navigation