அன்புடன் இதயம் – 23 – சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

புகாரி


.

சித்திரையே எழில்
முத்திரையே
சொல்லிவிடு உன்
சூட்சுமத்தை

எத்தனையோ தமிழ்
மாதங்களும்
இன்னமுதத் தேன்
அளந்தாலும்

முத்தொளிரும் தமிழ்ப்
புத்தாண்டில்
முரசொலித்தே உன்
முகமெடுத்து

முத்தமிழர் ஏன்
முன்வைத்தார்
மொழிவாயே என்
சித்திரையே
.

அத்தைமகள் விழி
மார்கழியும்
அமுதளக்கும் நிலத்
தைமகளும்

முத்தமிடும் பொற்
கார்த்திகையும்
முகிலவனின் நல்
ஐப்பசியும்

எத்தனையோ இம்
மாதிரியாய்
முத்தமிழர் தம்
மாதங்களும்

சித்திரமாய்ப் பண்
பாடிவர
சித்திரையே நீ
ஏனடியோ
.

கத்தரியாய்த் துயர்
துண்டாடி
கவிபாடும் தீப்
பிழம்பரசி

எத்தனையோ இருள்
எழுந்தாலும்
எரிப்பாயே அருள்
நிறைப்பாயே

சித்திரையே தவப்
பொற்கொடியே
சூரியனும் உன்
சொற்படியே

முத்தெடுக்கும் நீள்
மூச்சழகே
முறைதானே நீ
தலைமகளே
.

முத்துரதம் மண்
ஊர்ந்துவர
மேற்தளத்தில் தமிழ்
வீற்றிருக்க

எத்திசையும் வளர்த்
தூயதமிழ்
எழுந்தோங்க வளம்
விண்முட்ட

புத்தாண்டின் புது
நல்வாழ்த்தாய்
புவியெங்கும் தமிழ்ச்
சுரம்பாட

சித்திரையே நீ
வந்துவிட்டாய்
செந்தமிழின் தேன்
தந்துவிட்டாய்

*
அன்புடன் புகாரி
buhari2000@hotmail.com

Series Navigation

புகாரி

புகாரி