அன்புடன் இதயம் – 1

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

அன்புடன் புகாரி


(அன்புடன் இதயம் கவிதைத் தொகுப்பின் 30 கவிதைகளும்
வாரம் ஒன்றாக வெளிவருகின்றன)

தமிழ்
————————

இதயத்தில் இனிக்கின்ற
மொழி – தமிழ்
மொழியினுள் துடிக்கின்ற
இதயம்

கவிதைக்குள் விளைகின்ற
வைரம் – தமிழ்
வைரத்துள் ஒளிர்கின்ற
கவிதை

விரலுக்குள் ஊறிவரும்
எழுத்து – தமிழ்
எழுத்தினில் நிமிர்கின்ற
விரல்

ஓசைக்குள் கூடுகட்டும்
சுகம் – தமிழ்
சுகங்களில் வெடிக்கின்ற
ஓசை

காற்றுக்குள் சிறகோட்டும்
வாசம் – தமிழ்
வாசத்தால் எழுந்தாடும்
காற்று

பார்வைக்குள் விரிகின்ற
வானம் – தமிழ்
வானத்துள் மிளிர்கின்ற
பார்வை

மண்ணுக்குள் கருவான
வளம் – தமிழ்
வளத்தினில் கொழிக்கின்ற
மண்

இயற்கைக்குள் முத்தாடும்
மழை – தமிழ்
மழையினில் தழைக்கின்ற
இயற்கை

மனசுக்குள் எழுகின்ற
உணர்வு – தமிழ்
உணர்வினுள் கசிகின்ற
மனசு

மூச்சுக்குள் உள்ளாடும்
தாகம் – தமிழ்
தாகத்தில் தீயாகும்
மூச்சு

மோகத்துள் கமழ்கின்ற
இளமை – தமிழ்
இளமையில் திரள்கின்ற
மோகம்

முயற்சிக்குள் முளைவிடும்
சிறகு – தமிழ்
சிறகினில் தெறிக்கின்ற
முயற்சி

மனிதத்துள் செழித்தோங்கும்
கருணை – தமிழ்
கருணையால் வேர்பாயும்
மனிதம்

உயிருக்குள் குடிகொண்ட
மானம் – தமிழ்
மானத்தில் துடிக்கின்ற
உயிர்

தீபத்துள் வாழ்கின்ற
புனிதம் – தமிழ்
புனிதத்தில் நிமிர்கின்ற
தீபம்
*
buhari@rogers.com

Series Navigation