ஆட்டோகிராஃப் ‘ஓடி வரும் நாடி வரும் உறவு கொள்ள தேடி வரும் ‘

This entry is part [part not set] of 41 in the series 20040708_Issue

சித்ரா ரமேஷ்


பரீட்சை, பிறகு விடுமுறை என்று வருடத்திற்கு மூன்று முறை வந்தாலும் எல்லோருக்கும் பிடித்த லீவ் சித்திரை மாதத்து விடுமுறை தான். காலாண்டு, அரையாண்டு முடிந்து வரும் விடுமுறைகள் கண்மூடி திறப்பதற்குள் முடிந்து விடும். முடிந்த பரீட்சையின் கேள்விதாள்களுக்கு விடை எழுதிக் கொண்டு வரவேண்டும் என்று வீட்டுப் பாடம் வேறு கொடுத்து விடுவார்கள். சாய்ஸ் கொடுத்த கேள்விகளுக்கு அப்போது சாய்ஸ் கிடையாது. இதில் ரொம்ப திடுக்கிட வைக்கும் விஷயம் என்னவென்றால் கணக்குத் தேர்வுத்தாள்தான். பரீட்சையில் திரு திரு வென்று விடை தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த கேள்விகளுக்கெல்லாம் லட்டு மாதிரி பதில் கிடைத்து விடும். ஸ்கூல் திறந்ததும் கொடுக்கும் பேப்பரில் என்ன மார்க் வந்திருக்கும் என்று குத்து மதிப்பாய் தெரிந்து போய் செமையாக மூட் அவுட் ஆகி விடும். எல்லாப் பாடங்களுக்கும் மாங்கு மாங்கு என்று உட்கார்ந்து விடை தேடி எழுதியே பொழுது கழிந்து விடும். முழுப் பரீட்சை லீவில் இந்த மாதிரி தொந்தரவு கிடையாது. ஸ்கூல் திறந்ததும் மார்க் கிடைக்கும் என்ற வம்பெல்லாம் கிடையாது. புது கிளாஸ் போய் விடலாம். பழைய டாச்சரை ரொம்ப கண்டுக்க வேண்டாம். அப்புறம் கிட்டத்தட்ட ஐம்பது நாள் லீவு. படி படி என்று தப்பித் தவறிக் கூட யாரும் சொல்லிவிட முடியாது. சில சமயம் அம்மா மட்டும் அடுத்த வருஷத்துப் புக்ஸ் எல்லாம் வாங்கியாச்சே! சும்மா எடுத்துப் புரட்டக் கூடாதா ? என்று செல்லமாக சொல்லிப் பார்ப்பாள். நாங்கள்தான் பெரிய மேதாவியாச்சே! அதெல்லாம் லீவுலேயெ படிச்சுட்டா அடுத்த வருஷம் ஸ்கூல் போய் என்ன பண்ணுவது போர் அடிக்குமே என்று ரொம்ப நம்பகத்தனமான பொய் சொல்லி விடுவோம். நம் வீட்டு அட்ரஸ் எழுதிதரச் சொல்லி ஒரு போஸ்ட் கார்டை டாச்சர் வாங்கி வைத்துக் கொள்வார்கள். பரீட்சை, படிப்பு, ஸ்கூல் எல்லாவற்றையும் மறந்து குதித்துக் கொண்டிருக்கும் போது ‘பிரமோட்டட் ‘ என்று போட்டு போஸ்ட் கார்ட் வீட்டுக்கு வரும். பாவம் சிலருக்கு மட்டும் வேறு மாதிரி வந்து விடும். இவர்கள் மட்டும் எப்போ ரிஸல்ட் வரும் என்று எதிர் பார்த்து போஸ்ட்மேனை வழியிலேயே மடக்கி லெட்டரைக் கேட்பார்கள்.போஸ்ட்மேன் விவரமான ஆள். இதற்கெல்லாம் மசியாமல் நேரா வீட்டில் கொண்டு போய் கொடுத்து விடுவார். ஒரு நாள் இரண்டு நாள் அடிதடியாக இருக்கும். ‘புத்தகத்தை தூக்கிப் போடாதே இந்த வருடமாவது ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ற வழியைப் பாரு ‘ என்று பொது மன்னிப்பு வழங்கப்பட்டு திரும்பவும் விளையாடுவதற்கு வந்து விடுவார்கள். சின்ன கிளாஸ்ல என்ன பாஸ், ஃபெயில் ? அப்படியெல்லாம் ஒரு குழந்தையை தரம் பிரித்து பார்ப்பதற்கு என்ன ரொம்ப நடுநிலையான கல்வி முறையா இருந்தது ? தன்னிடம் டியூஷன் படிக்க வரும் மாணவர்களை ‘எப்பாடு ‘ பட்டாவது பாஸ் பண்ண வைக்கும் ஆசிரியர்கள்! நாங்களும் முதல் ராங்க் வாங்குகிற பெண்ணும் ஒரே கோனார் நோட்ஸிலிருந்து படித்து வரிக்கு வரி ஒரே மாதிரி பதில் எழுதினாலும் அவளுக்கு எட்டு மார்கென்றால் எனக்கு ஆறு மார்க்! ஒப்பிட்டுப் பார்த்துக் கேட்டால் ‘கம்பேர் பண்ணியா மார்க் கேக்கற ‘ என்று அதற்கு இரண்டு மார்க் குறைத்து விடுவார்கள். அந்த டாச்சருக்கு கையெழுத்தைப் பார்த்தவுடனேயே எங்கள் முகம் தெரிந்து விடும்! இப்படியெல்லாம் மிரட்டியே ஒருத்தியை பெரிய ஆள் ஆக்கி விடுவது!மற்றொருத்தியை மட்டம் தட்டி விடுவது! (இதைப் பற்றி அப்புறம்) இப்போதெல்லாம் இந்த அநியாயம் கிடையாது போலிருக்கிறது. ஆனாலும் இன்னும் 99.3% எடுத்தால் மருத்துவ கல்லூரியில் இடம். 99.2% எடுத்தால் கிடையாது. இந்த அமைப்பை கொஞ்சம் மாற்றினால்தேவலை. 0.1% வித்தியாசத்தில் திறமைசாலிகளுக்குத் தகுந்த அங்கீகாரம் தராமல் விட்டு விடுகிறோமா ?

விடுமுறை ஆரம்பித்ததும் உடம்பெல்லாம் லேசாக ஆகி காற்றில் பறப்பது போல் உணரலாம். மார்ச் மாதம் தீயைப் போல் பூக்கும் மஞ்சள் நிறப் பூவுக்கு எக்ஸாம் பூ என்று பெயர் வைத்திருந்தாள் என் தோழி. அந்த பூவைப் பார்த்தாலே பரவசம்தான்! பொங்கல் விடுமுறையின் போதே மனம் பூக்கத் தொடங்கி விடும். அந்த டெர்ம்தான் ஸ்கூல்டே, ஸ்போர்ட்ஸ்டே எஸ்எஸ்எல்சி முடித்து விட்டு ஸ்கூலை விட்டுப் போகும் அக்காக்களுக்கு சென்ட் ஆஃப் பார்ட்டி என்று நிறைய கொண்டாட்டங்கள்! இதை ஒட்டி கிளாஸில் இருக்காமல் டான்ஸ், டிராமா, மாஸ்டிரில் என்று எக்கச் சக்க ஒத்திகைகள்! இந்த கொண்டாட்டங்களுக்கு நடுவில் படிப்பை மறந்து விடக் கூடாது. முழுப் பரீட்சை வரப் போகிறது என்று அப்பப்ப மிரட்டும் ஆசிரியைகள்! செண்ட் ஆஃப் பார்ட்டி அன்று பிழியப் பிழிய அழுது ‘பசுமை நிறந்த நினைவுகளே ‘ என்று தவறாமல் பாடும் பாட்டு! எங்கள் வகுப்பில் அனைவரும் அப்போதே முடிவு செய்து விட்டோம்.நம்ப சென்ட் ஆஃப் பார்ட்டி அன்று யாரும் அழக் கூடாது. அப்புறம் ‘பசுமை நிறைந்த நினைவுகளே ‘ பாட்டு பாடக் கூடாது என்று! இதனால் முழுப் பரீட்சையை ரொம்ப ரசித்து எழுதுவோம்! எஸ்எஸ்எல்சி பரீட்சை எழுதி விட்டு காத்திருக்கும் நாட்கள்! பெரிய மனிதர்கள் ஆகி விட்டது போல் தோன்றும். அப்பாடி! இனிமேல் ஸ்கூல், ஹோம் வொர்க், மிரட்டல் எதுவும் கிடையாது. இனிமேல் காலேஜ் தான் என்று கற்பனைகளோடு காத்திருக்கும் காலம்! இதைப் பற்றி வண்ண நிலவன் ‘ரெயினிஸ் ஐயர் தெரு ‘வில் விவரிச்சு இருப்பார். படிச்சுப் பாருங்க! வாரா வாரம் என்னோட எழுத்தை படிச்சு ரசிக்கறவங்க இருப்பாங்கன்னு நினைக்கிறேன். அதே போல் இதையும் ரசிச்சு படிக்கலாமே! என்னால் முடிந்த இலக்கிய சேவை!

காலையில் சாப்பிட்டு விட்டு விளையாட ஆரம்பித்தால் அப்புறம் பசி, தாகம், தூக்கம் எதுவுமே இருக்காது. இருட்டிய பிறகு நாமாகவே பசி உணர்ந்து வீடு திரும்பினால் உண்டு. காலையில் தூங்கி எழுந்ததும் பரபரக்கத் தொடங்கி விடும். ‘சீக்கிரம் சாதம் போடுபசிக்கிறது ‘ என்று அம்மாவை குடைந்து எடுத்து விடுவோம். ‘ஸ்கூல் தான் கிடையாதே கொஞ்சம் நிதானமா பண்ணலாம்னா இப்படியா பறக்கறது ‘ அம்மா அலுத்துக் கொண்டே சாப்பாடு போட்ட அடுத்த நிமிஷம் விளையாடுமிடத்தில் கூடி விடுவோம். மரத்தடியில், பாலத்துக்கு கீழ், ஸ்கூல் மைதானம் என்று நிறைய இடங்கள் இருந்தாலும் ‘ஐஸ் பாய்ஸ் ‘ விளையாட வீடும் வீட்டைச் சார்ந்த இடங்களும் தான் வசதி. ஒளிந்து கொள்ள தோதாக இண்டு, இடுக்கு, மாடி, தண்ணீர் தொட்டி, மல்லிகைப் புதர், மரங்கள் என்று எக்கச்சக்க இடங்கள்! ஆனால் எல்லார் வீட்டிலும் வீட்டு வாசலிலோ, வீட்டைச் சுற்றியோ விளையாட அனுமதி தரமாட்டார்கள்.வீட்டு வாசலில் கச்சா முச்சா என்று சத்தம், சாப்பிட்டு விட்டு சற்று நேரம் கண்ணயரலாம் என்று நினைக்கும் நேரத்தில் தலை மாட்டில் நின்று கொண்டு ‘ஐஸ் பாய்ஸ் ‘ என்ற கூப்பாடு, செடி கொடியெல்லாம் துவம்சம் செய்து கொண்டு ஓடுதல், தண்ணீர் குடிக்க வருகிறேன் என்று வீட்டுக்குள் புகுந்து கலாட்டா என்ற சில பல காரணங்களால் அனுமதி மறுக்கப் பட்டு விடும். சில பேர் மனமிரங்கி விடுவார்கள்.அதில் என் அம்மாவும் ஒருத்தி. ஒரு சமயம் இந்த கூச்சல் பொறுக்க முடியாமல் ‘ ஏண்டா! உங்க வீட்டிலே போய் விளயாடுவதுதானே ‘என்று அம்மா கேட்டு விட்டாள். ‘எங்காத்துலே அம்மா தூங்கும் போது சத்தம் போட்டா அம்மாக்கு தலைவலி வந்துடும் அதான் மாமி

அங்க போய் விளையாட முடியாது ‘ என்று தாய்ப் பாசத்தோடு உண்மையை உளறி விட இந்த கத்தல் கலாட்டாவை வ்ிட இந்த விஷயம்அம்மாவை உறுத்தி விடும். ‘அந்தப் பசங்களுக்குத்தான் அம்மாக் கிட்ட என்ன கரிசனம் ? நம்ப வீட்டிலேயும் தான் இருக்கே ‘ என்று துக்கத்துடன் சொல்வாள். இந்த அசட்டுப் பையன்களை சமாளித்து ‘தாய் பாசத்தைக் ‘ காட்ட ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். ஐஸ் பாய்ஸ் விளையாடுவதற்கு சரியான மறைவிடம் மொட்டை மாடிதான். வீட்டின் பின் பக்கம் ஏறி முன் பக்கமாககுதித்து தப்பித்து விடலாம். மாடி என்றதும் வசதியாக முன்பக்கம் பின்பக்கம் இரண்டு வழிகளிலும் படிக்கட்டு அமைந்து பெரிய பங்களா மாதிரி இருக்கும் என்று நினைத்து விட வேண்டாம். பின்பக்கம் வழியாக என்றால் துணி தோய்க்கிற கல்லில் ஏறி ஒரு ஜம்ப் செய்து ஒத்தைக்கல் சுவரில் கை தேர்ந்த கழைகூத்தாடி போல் பாலன்ஸ் செய்து நடந்து சன்ஷேடில் தொங்கி மொட்டைமாடிக்குப் போய்விடலாம்.முன்பக்க வழி என்றால் ‘ஜாக் அண்ட் தி பீன் ஸ்டாக் ‘ கதையில் வரும் ஜாக் ஏறுவானே அதே போல் ஒரு போகன் வில்லா மரக்கிளை வழியாக சன்ஷேடில் ஏறி அப்படியே மொட்டை மாடி. மழைக் காலத்தில் மட்டும் ஏறும் போது வழுக்கி விடும். அப்போது மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக ஏற வேண்டும். மற்ற சமயங்களில் சாதாரணமாக படிக்கட்டில் ஏறுவது போல் ஏறி விடலாம். பலவீன இதயம் இருப்பவர்கள் பார்த்தால் படபடப்பு அதிகமாகி விடும். விளையாட வருகின்ற அனைவருக்கும் இந்த தொழில் நுட்பமெல்லாம் தெரிந்து இருக்கும்.

பொதுவாகவே விளையாடும் போது ஏற்படுகின்ற கீறல், சிராய்ப்பு, சின்ன விழுப்புண்களை அம்மாவிடம் சொல்லாமல் மறைத்து விடுவோம். நாங்களே திருட்டுத்தனமாக சைபால் எடுத்து அப்பிக் கொள்வது, காயத்தின் மேல் மண் அள்ளி பூசுவது, எருக்கம்பால்விட்டுக் கொள்வது என்ற கொடூரமான வைத்திய முறைகளை பின்பற்றி எப்படியோ சரி செய்து கொண்டு விடுவோம். அம்மா மறுநாள்குளிப்பாட்டி விடும்போது ‘ஆ! ஐயோ, அங்க தேய்க்காதே. இங்க தொடாதே ‘ என்று கத்தி உண்மையை கக்கி விடுவோம். குளிக்கும் போதே அடிபட்ட வலியுடன் உண்மைகளை மறைத்ததற்காக முதுகில் மேலும் ஒரு அடி! எவ்வளவு நல்ல அம்மாவாக இருந்தாலும் இந்த மாதிரி சமயங்களில் கொஞ்சம் வெறுப்பாகத்தான் இருக்கும்.இந்த மாதிரி பயங்கர வைத்திய முறைகளை வேறு கேட்டு விட்டு அதிர்ச்சியடைந்து அந்த ஐடியா கொடுத்தப் பையனையும் திட்டி நாம் எவ்வளவு அப்பாவியாக இருக்கிறோம். மற்ற பசங்க எப்படி விவரமாக இருக்கிறார்கள். அவர்கள் எப்படியெல்லாம் நம்மை உபயோகித்துக் கொள்கிறார்கள் என்பதையும் எடுத்துரைத்து(இந்த குற்றச்சாட்டு இன்று வரை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது!!)அவர்களுடன் இனிமேல் விளையாடக் கூடாது என்ற அச்சுறுத்தலுடன் வேறு மருந்து போட்டு பிளாஸ்ட்டர் ஒட்டி சிசுருஷைகள் செய்வாள். இந்த பிரச்சனை நமக்கும் அம்மாவுக்கும் நடுவில் மட்டும் இருந்தால் பரவாயில்லை. சில சமயம் அப்பாவிடம் போய் சொல்லி விடுவாள். இதெல்லாம் எங்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்காது என்று தெரிந்து கொண்டே! இரண்டு பேரும் சேர்ந்து திட்டும் போது அம்மாவிடம் மட்டும் தான் மனத்தாங்கல் அதிகமாகிவிடும். இந்த விரிசல் அதிகமாகும் முன் நம் கண்ணீரைக் கண்டு அம்மா மனமிரங்கி நமக்குப் பிடித்த உருளைக் கிழங்கு ரோஸ்ட் பண்ணி சமாதானம் செய்து விடுவாள். சாப்பிட்டு முடிக்கும் போது யாருடன் சேரக் கூடாது என்று சொன்னாளோ அந்த ஆசாமியே வந்து விளையாடக் கூப்பிடுவான். வாயேத் திறக்காமல் அனுப்பி வைத்து விடுவாள்.

அப்படித்தான் ஒரு நாள் விளையாடி கொண்டிருந்த போது ஒரு நண்பன் மாடியிலிருந்து தவறி விழுந்து விட்டான். தலையிலிருந்து ரத்தமாகக் கொட்டுகிறது. இவ்வளவு பெரிய அடியை சமாளிக்கும் அளவுக்கு கை வைத்தியம் தெரியவில்லை. அவன் அழுது கொண்டேவீட்டுக்கு ஓடிப் போய் விட்டான். எதிர் பாராத இந்த திருப்பத்தை பார்த்து மற்றவர்களும் பயந்து ஓடி விட்டார்கள். நாங்கள் எங்கே ஓடுவது ? கொஞ்ச நேரம் கழித்து அவன் அம்மா அந்த பையனுடன் வீட்டுக்கு வந்து விட்டாள். ‘யாருடா மணிய கீழே தள்ளி விட்டது ? ‘ ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அவனை நம்பியார் பாணியில் பார்த்தோம். மாடியிலிருந்து தவறி விழுந்ததைச் சொல்லாமல் அம்மாவுக்குப் பயந்து கொண்டு யாரோ தள்ளி விட்டதாகப் போய் புளுகியிருக்கிறான். அப்போதுதானே தன் மேல் எந்த விதத் தவறும் இல்லை என்று அனுதாப அலை வீசும்! இந்த சத்தத்தைக் கேட்டு அம்மா வந்து விட ‘ என்ன உங்க குழந்தைகளை பாத்துக்க மாட்டாங்களா ? விளையாடும்போது என்ன பண்றாங்கன்னு கொஞ்சம் கவனிக்கக் கூடாதா ? ‘ என்று அபத்தமாக சண்டைக்கு வர ‘உங்க பிள்ளையை நாங்க எல்லாரும் சேர்ந்து தள்ளி விட்ட மாதிரி பேசறீீங்களே! விளையாடும் போது இந்த மாதிரி அடி படத்தான் படும். இன்னும் ஏழெட்டு பேர் சேர்ந்து விளையாடினாங்க! அவங்க வீட்டுகெல்லாம் போய் விசாரியுங்க ‘ என்று பெரியவர்களுக்கிடையில் ஒரு சின்ன சண்டை உருவாகி விட்டது. அப்புறம் நடந்ததைக் கேட்கவே வேண்டாம். ஏற்கனவே எங்கள் நடத்தையால் மனம் நொந்து போயிருந்த அம்மா இனிமேல் அந்த பையன் நம் வீட்டு பக்கமே வரக்கூடாது. அவனை எந்த விளையாட்டிலும் சேர்த்துக் கொள்ளவே கூடாது என்று கடைசி முறையாக எச்சரித்தாள். இரண்டு மூன்று நாள் கொட்டமெல்லாம் அடங்கி சோகத்துடன் வீட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருப்போம். வீட்டில் இருந்து கொண்டு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தின்பதற்கு என்னயிருக்கிறது என்று சமையல் ரூமில் புகுந்து டப்பாவையெல்லாம் உருட்டுவது, அதைத் தேடுகிறேன் இதைத் தேடுகிறேன் என்று பெட்டிகளை குடைவது, அப்பா வைத்திருக்கும் புது பிளேடுகளை எடுத்து விஷமம் செய்வது, எங்களுக்குள் அடிக்கடி அபிப்ராய பேதம் ஏற்பட்டு அடிதடியில் இறங்குவது போன்ற பிடுங்கல்கள் தாங்க முடியாமல் அம்மாவே வெளியில் போய் விளையாடுங்கள் என்று துரத்தி விடுவாள். விளையாடிக் கொண்டிருக்கும் போது அடிபட்ட அந்த பையன் தலையில் கட்டுடன் ஏக்கப் பார்வை பார்த்துக் கொண்டு ஓரமாக நின்று கொண்டிருப்பான். நாங்கள் கண்டு கொள்ளவே மாட்டோம். கெஞ்சிக் கேட்டாலும் ‘போடா! எங்கம்மா உன்னை சேத்துக்கக் கூடாதுன்னுட்டாங்க ‘ என்று நிர்தாட்சண்யமாக மறுத்து விடுவோம். நாங்களும் தாய் சொல்லைத் தட்டாமல் இருப்பதில் எம்ஜியாருக்கு சளைத்தவர்களில்லை என்று காட்ட வேண்டாமா ?அவன் வீட்டுக்கு போய் அழுது புரண்டு என்ன செய்வானோ அவன் அம்மா வெள்ளைக் கொடியுடன் சமாதானப் புறாவாக வந்து விடுவாள். ‘ஏண்டா எங்காத்து மணிய சேத்துக்க மாட்டாங்களா ? ‘ என்று என் அம்மாவிடமும் போய் ‘என்ன மாமி நீங்களாவது சொல்லக்கூடாதா ? அன்னிக்கு ரத்தமா கொட்றதைப் பாத்து பயந்து போய்ட்டேன். அவர் வந்து பாத்தார்னா என்ன பதில் சொல்றது ? ‘ என்று இறங்கி வந்து பேசுவாள். அப்பாக்கள் பொதுவாகவே குழந்தைகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டவிட்டாலும் இந்த மாதிரி அடிபட்டு ரத்தக் களறியாகவந்தால் அம்மா மேல் பாய்வார்கள். ‘வீட்ல இருந்து ஒழுங்கா கண்காணிப்பா குழந்தையை பாத்துக்க முடியவில்லை! மத்யான தூக்கம்தான் உனக்கு முக்கியம் ‘ என்று குத்திக் காட்டுவார்கள். அம்மா வந்து நாங்கள் விளையாடுவதை கவனிக்க வேண்டும் என்பது ‘மிஷன் இம்பாஸிபில் ‘. டிடெக்டிவ் ஏஜென்ஸியில் சொல்லி டிடக்டிவ் ஏற்பாடு செய்தால் கூட அவர் முறையான ரிபோர்ட் தர முடியாது. அம்மா எப்படி அடிபடிவதற்கெல்லாம் பொறுப்பேற்க முடியும் ? நிறைய எழுதிவிட்டேன் போலிருக்கிறது. அடுத்த வாரம் ‘திருவிளையாடல்கள் ‘ தொடரும்.

சித்ரா ரமேஷ்

சிங்கப்பூர்

kjramesh@pacific.net.sg

—-

Series Navigation

சித்ரா ரமேஷ்

சித்ரா ரமேஷ்