மெல்லத் தமிழினிச் சாகும்

This entry is part [part not set] of 33 in the series 20091119_Issue

பா.பூபதி


இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
துன்பங்கள் நீங்கும், சுகம் வரும், நெஞ்சினில்
தூய்மை உண்டாகிவிடும், வீரம் வரும்- பாரதிதாசன்

மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவின் வாசலில் உள்ளவர்களின் பேச்சில் அவசியம் இடம் பெரும் வாக்கியம் இது ‘பிழைக்க மாட்டார் என்றால் சொல்லிவிடுங்கள், வீட்டுக்கு கொண்டு போய்விடுகிறோம்” ஏன் இப்படி சொல்கிறார்கள் என்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் எவ்வளவு முக்கியமானவராக இருந்தாலும் அவரை காப்பாற்றும் முயற்சிக்கு ஆகும் கடன் எனும் கடலில் மற்றவர்களும் மூழ்கிவிடும் அபாயம் இருக்கிறது என்பதால் தான். கிட்டத்தட்ட நம் தாய் மொழி நிலமையும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவரின் நிலையில்தான் உள்ளது. தமிழ் மொழியை இழக்க யாருக்கும் விருப்பமில்லை அதே சமயத்தில் அதை நம்பினால் நாம் பிழைக்க முடியுமா என்ற ஐயமும் அனைவரின் மனதிலும் உள்ளது.

நாங்கள் தமிழ் மொழிப்பற்றாளர்கள் என்று சொல்லிக்கொண்டு தங்களுடைய குழந்தைகளை தமிழ் வழிக்கல்வி பயில வைத்தால், குழந்தைகளின் எதிர்காலம் குன்றிவிடும் என்பது பெற்றோர்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்த எண்ணம் அவர்களின் ஆழ்மனதில் இருப்பதால்தான் குழந்தைகளை ஆங்கில வழிக்கல்விக்கு அனுப்புகிறார்களே தவிர யாரும் தமிழ் மொழியை வெறுப்பதனால் அல்ல. தமிழ் வழிக்கல்வி கற்ற மாணவர்களும் தரனியாளுகிறார்களே என்ற கேள்வி எழும். ஆனால் அவர்களின் பெற்றோர்களுக்கும் தங்களின் பிள்ளைகளை ஆங்கில வழி கல்விக்கு அனுப்ப ஆசையாகத்தான் இருக்கும் தங்களின் வறுமையின் காரணமாகவே பிள்ளைகளை தழில் வழிக் கல்வியில் படிக்கவைக்கிறார்கள். வறுமையிலும் பெருமை பெறும் மாணவர்கள் அவர்கள்.

திருக்குறளில் வள்ளுவர் ஒரு உதாரணம் சொல்லியிருப்பார் “யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது” இதற்கு அர்த்தம் தங்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு வராத மாதிரி ஏற்பாடுகளை செய்து கொண்ட பிறகு ஒரு செயளில் இறங்குவது. இதைத்தான் இன்றைய அரசியல் தலைவர்கள் தமிழ் மொழி விசயத்தில் செய்துகொண்டிருக்கிறார்கள். தங்களுடைய பிள்ளைகள், பேரன்கள் ஆகியோரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களை ஆங்கில வழி கல்வி பயில அனுப்பிவிட்டு தமிழ் மொழியை காக்காமல் நாங்கள் துயில என சூளுரைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதை யாரும் கேள்வி கேட்டுவிடாமல் இருக்க “தமிழ் வாழ் போன்றது, ஆங்கிலம் கேடயம் போன்றது” என வசனம் பேசி மழுப்புகிறார்கள்.

ஒரு பிள்ளையை நன்றாக வளர்க்க விரும்பும் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும். உண்மையான அக்கறை இருந்தால் அந்த பிள்ளையின் வாழ்விற்கு தேவையான நல்ல விசயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். அவன் முன்னேற பல வாய்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தன்னுடைய பிள்ளையின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். அதை விட்டுவிட்டு கண்ணே மணியே பெயர் மாற்றி மாற்றி கொஞ்சிக்கொண்டிருந்தால், தன் மகன் சிறப்படைவான் என்று எண்ணுவது மூடத்தனம். அதைத்தான் இப்போதுள்ள தலைவர்கள் தமிழ் விசயத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்க்கிறோம் என்ற பெயரில் தமிழுக்கு சிறப்பு பெயர்கள், சிறப்பு அந்தஸ்துகள் ஏற்படுத்திக்கொடுக்கிறார்களே தவிர மொழி வளர்ச்சிக்கு தேவையான ஆக்கபூர்வமான செயல்பாடுகளை எவரும் செய்வதில்லை. தமிழ் மொழிக்காக உழைத்த சான்றோர்களுக்கு சிலை வைக்கவும், பேருந்து நிலையங்களுக்கு அவர்களின் பெயர் வைக்கவும்தான் நம் பெரியோர்கள் முயற்சிக்கிறார்களே தவிர அவர்கள் விட்டுச்சென்ற தமிழ் மொழி சார்ந்த பணிகளை தொடர யாரும் முயற்சிப்பதில்லை.
தமிழ் மொழியில் அப்படி என்ன சிறப்புள்ளது என்று கேள்வி எழுந்ததும், ஏன் இல்லை என்று பாரதியார் வீம்பாக பேசவில்லை, ஏனெனில் அவருக்கு உண்மை நிலை தெரியும். அதனால் கோபம் கொண்டபோதும் அவர் நிதானத்தை இழக்கவில்லை. குறைகளாக சொன்னவற்றை நிறைகளாக மாற்ற விரும்பினார்.

புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை – அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

இப்படி ஒரு குற்றச்சாட்டை கேட்டதும். தமிழில் உள்ள குறைகளை கலையவேண்டும் என விரும்பினார் பாரதி. அதனால் தமிழில் குறைகளை நீக்கவும், அதை வளர்ச்சியடையச் செய்யவும். பின் வருமாறு கூறுகிறார்.

சென்றி டுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
தந்தை அருள்வலி யாலும் – இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்,
இந்தப் பெரும்ப்ழி தீரும் – புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.

அந்த காலத்தில் பாரதி சொன்னதை இந்தக்காலம் வரை யாரும் செய்யவில்லை என்பது யதார்த்தமான உண்மை. தமிழுக்கு சிறப்பு சேர்க்கிறோம் என்று கூறிக் கொண்டு தமிழுக்கு கலைநயமான பெயர்களை சூட்டிக்கொண்டிருக்கிறார்களே ஒழிய, கலைச் செல்வங்களை யாரும் கொணர்ந்திங்கு சேர்க்கவில்லை, தமிழின் மதிப்பை அதிகரிக்கவில்லை அப்படி செய்திருந்தால் தமிழின் நிலமை இவ்வளவு மோசம் ஆகியிருக்காது.

சமுதாயத்தில் உள்ள பெரிய நிறுவங்களுக்கு வேலை தேடிச் செல்லும் போது, நேர்முகத் தேர்வில் அவர்கள் கேட்கும் இரண்டு கேள்விகளுக்குக்கூட ஆங்கிலத்தில் பதில் சொல்லத்தெரியாமல் விழிக்கும் போதே, நாம் இந்த வேலைக்கு வழிதவறி வந்துவிட்டோம் என்பதை உணர்த்திவிடுகிறோம். பதில் சொல்லத் தெரியாமல் விழித்துவிட்டு எனக்கு ஆங்கிலம் கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும் என்று தமிழில் கூறும் போது, சேற்றில் இருந்து எழுந்துவரும் பன்றியை பார்ப்பது போல பார்ப்பார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எவன் படிக்கத்துணிவான் தமிழை. தமிழ் படித்தால் வாழ்வு நிச்சயம் செழிக்கும் என்ற சூழலை உருவாக்காதவரையில் தமிழ் மொழியில் நிச்சயம் வளர்ச்சி இருக்காது. தமிழுக்கு புதிய அந்தஸ்த்து ஏற்படுத்தி தருவது, மாநாடு நடத்துவது என வரலாற்றில் இடம் பெரும் செயல்களையே செய்து கொண்டிருந்தால், தமிழும் நிகழ்காலத்தை விட்டு விலகி வரலாற்றில் இடம் பெற்று விடும்.

தமிழ் நமக்கு வேண்டும் என விரும்பினால், அதற்கு தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு தமிழ் வாள் போன்றது ஆங்கிலம் கேடயம் போன்றது என வார்த்தை ஜாலம் காட்டிக்கொண்டிருந்தால், பாரதியின் கவிதையில் வருவதுபோல மெல்ல தமிழ் சாகாது மிக விரைவாகவே சாகும்.

Series Navigation

பா.பூபதி

பா.பூபதி