அமைதியுறுவாய்

This entry is part of 35 in the series 20060127_Issue

சாரங்கா தயாநந்தன்


திருநிலமே தாயே
நீ நலமா ?
இருவருடங்களாயிற்று
உன்மடி முட்டி.
எனினும் பிரிவில்லை.
உயிர் கலந்தாய் அம்மா
ஆதலினால்
தினமுன் முகமுலவும்
மனம்.
புல்,பூண்டு ,பூச்செடிகள்
புதுத் தாளம் இயற்றுகின்ற
வயற்குருவி
நெல், நெடுபனை , நீலஏரி
நிதமுமங்கு பாடுகின்ற
நீர் நாரை
கல் கடல் கனிமரங்கள்
கண்மலர்ந்த பூமியிலே
வாழும் மக்கள்
எல்லாம் நின்றுலவும்
நெஞ்சம்.
இன்று வாடிக் கிடக்குதம்மா.
மூடிக் கிடந்த போரூற்றின்
வாயிலிலே
மீள்திறப்பின் ஆரவாரங்கள்.
ஆழ் மனசு துடிக்கிறது.
உன்னிடத்தில் வாழ்கையிலே
ஆடி களித்திருந்த
அற்புத நாள்களினும்
உயிர் காவி
ஓடித் திரிந்த நாள்கள்
அதிகம் தாயே.
மீளவும் ஓர் போர்ப்பாட்டா ?
நினைவே மிகக் கொடுமை.
அமைதியுறுவாய் தாயே.
உன்குடிகள் மகிழ்ந்திருக்க
முன்னேற்றம் பல நிகழ
நிதம் மலர்வாய் அம்மா
நித்ய பூஞ்சிரிப்போடு.

—-
nanthasaranga@gmail.com

Series Navigation