சுனாமி என்றொரு பினாமி.

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

ருத்ரா


‘புல்லை நகையுறுத்தி
பூவை வியப்பாக்கி ‘
நீரில் மலர்ச்சி தந்து
கதிரவன் புத்தொளியில்
கைகோர்த்து விளையாடிவரும்
கடற்பூங்காற்றே
இப்படியொரு
கடல் பூதத்தை
எப்போது கர்ப்பம் தரித்தாய் ?

சுநாமியே
நீ என்ன அந்த எமனுக்கு
பினாமியா ?
கிளிஞ்சல்களையும்
பூநுரைகளையும்
கரையோரம்
ஒதுக்கி விளையாடும்
அலைசிறுமியே!
இப்படி
பிணங்களையொதுக்கி
‘பாண்டி ‘ விளையாடி
அகலக்கால் வைத்த
அசுரப்பெண்ணாய்
எப்போது உருமாறினாய் ?

சுண்டல்பொட்டலங்களும்
காதலர்கள்
முத்தங்கள் இட்ட
இனிய எச்சில் தடங்களுமே
இரைந்துகிடக்கும்
மெரீனா
இன்று சடலங்களில்
அல்லவா
பொட்டலம் கட்டப்பட்டு
மரண ஓலங்களில்
மல்லாந்து கிடக்கிறது.

கண்ணகி
தலைவிரிகோலமாய்
மியூசியத்தில்
கிடத்திவைக்கப்பட்டிருக்கிறாள்
என்று தானே
அரசாங்க ஆவணங்கள்
எல்லாம்
மெளனமாய்
புளகாங்கிதம் கொண்டிருந்தன.
இந்தோனேசீய
சுமத்திராத் தீவிலிருந்து
இப்படியொரு
காற்சிலம்பை
கழற்றியுடைப்பாள்
என்று
கனவிலும் கருதவில்லையே.

குளிக்கப்போன
குமரிக்கண்டத்துப்பெண்ணே!
நீ
மூழ்கிப்போனாய்
என்றிருந்தோம்.
ஆனால்
கொஞ்சம்
முகத்தில் மஞ்சள் பூசிக்கொள்ளலாம்
என்று நீ
தலை நிமிர்ந்திருக்கிறாயே.
அதனால்
இந்த மஞ்சள் முகங்கள் எல்லாம்
குங்குமம் இழந்து போயின.
இந்த மனிதங்கள் எல்லாம்
சதைக்குவியல்கள் ஆயின.

உன்சீற்றத்தை
இப்படி
கவிதையெழுதுவது போன்ற
கையாலாகாத தனமும்
போலித்தனமும்
நிறைந்த
அயோக்கியத்தனம்
வேறு உண்டா ?

நாங்கள்
மரபுகளுக்கெல்லாம்
முக்காடு போட்டு விட்ட
புதுக்கவிஞர்கள்.
தினம் தினம்இங்கே
கண்ணீர் அஞ்சலிக்கவிதைகளுக்கு
பஞ்சமில்லை.
உயிரெழுத்தை
எடுத்துவிட்டு
வெறும் மெய்யெழுத்துக்கள்
எனும்
சவங்களைக்குவித்துவைத்து
கவியரங்கம் நடத்த
நீயும்
இந்த விருதுபெற்ற கவிஞர்களுக்கு
அழைப்புமடல் அனுப்பிவிட்டாய்.
இந்த சமுதாயம்
கண்விழிக்கவேண்டும் என்று
கொஞ்சமும்
கவலைப்படாத
இந்த அரிதாரப்புலவர்கள்மீது
உன் லாவாவைத் துப்பினாலும்
உன் சீற்றம்
இவர்களுக்கு
எங்கே உறைக்கப்போகிறது ?

கதாநாயகிகளின்
தொப்பூளில்
மையம் கொண்டிருக்கும்
பஞ்சவர்ணப்புயல் பற்றி
சொற்களை
அடுக்கிவிளையாடும்
இந்த ஜிகினாக்கவிஞர்கள்
உன்னைப்பற்றியும்
பரணி பாட
வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஜாக்கிரதை!
ஆழிப்பேரலைகளே!
ஊழிப்பிரளயத்தின்
உன்மத்த மூச்சுகளே!
இவர்களின்
மகுடிக்கு மயங்கி
மறுபடியும்
கரையோரம் வந்து விடாதீர்கள்

கம்பியூட்டரில்
கோடிகோடியாய்
சம்பாதித்து
பீட்சா தின்றுகொண்டிருக்கிறோம்.
ஜுரம் பிடித்த
இந்த சந்தைப்பொருளாதாரத்தில்
அந்த நேனோ டெக்னாலஜியும்
அசுரவேக கணினிகளும்
செல்கள் எனும்
கைப்பிடித் தொலைபேசிகளும்
தங்கள்
கல்லாப்பெட்டிகளை குவிக்க
மனித நேயத்தையே
தினம் தினம்
கசாப்பு செய்துகொண்டிருக்கின்றன.
அறையில் அரங்கேறும் அசிங்கங்கள்
உள்ளங்கையில் அம்பலம்.
இந்த மானுடத்தை
வணிகவெறியின்
தசைப்பிண்டமாய்
பிய்த்து தின்று கொண்டிருக்கின்றன.
ஆன்மீக வேட்கையின் ஓநாய்கள்
ஆயிரக்கணக்காய்
கோரைப்பற்களின் வாய்பிளந்து
மனித நீதியை
குதறித்தின்று கொண்டிருக்கின்றன.

ச்ச்ச்சீ நீங்கள் எல்லாம்
மனிதர்கள் தானா ?
என்று
குறியிட்டுக்காட்டத்தான்
இந்தக்கடலோரங்களில்
கொப்பளித்தாயா ?

கடலுக்கடியில்
‘டாஸ்மாக் ‘
எவன் டெண்டருக்கு எடுத்தது ?
பேயலையே
அங்கு மொத்தத்தையும்
குடித்துவிட்டு
இங்கு எங்கள் உயிர்களையெல்லாம்
குடித்து தீர்த்துவிட்டாயே!
உருப்படுவாயா நீ ?

இது என்ன
கடலோரங்களா ?
இல்லை
உடலோரங்களா ?
கனக்கிறது நெஞ்சு.

ஆயிரம் விண்கலங்கள்
எங்களுக்கு
வானத்தில் உண்டு.
இப்போது தான் தெரிகிறது
வெறும்
மின்மினிப்பூச்சிகளை மட்டுமே
இவர்கள்
சூரியன்கள் என்றும்
சந்திரன்கள் என்றும்
மற்றும்
செவ்வாய் புதன்கள் என்றும்
பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள் என்று.

இவர்களின்
தேசிய விஞ்ஞானமே
சந்திரனை விழுங்கும்
ராகு கேது
பாம்புகளைப்பற்றித்தானே.
இவர்களின்
வானிலை அறிக்கைப்பஞ்சாங்கத்தில்
வெறும்
அமாவாசைத் தர்ப்பணங்களே
அங்கம் வகிக்கும்போது
சுனாமிகளின் சூத்திரங்கள்
புலப்படுவது எங்ஙனம் ?

அதோ
அந்தக்கடல் மணலில்
புதைந்து கிடப்பது
உடல்கள் மட்டும் அல்ல.
மதிப்பிற்குறிய
நம் ‘கலாம் ‘ அவர்களின்
விஞ்ஞானம் பற்றிய
கனவுகளும் தான்.

சக மனித சினேகிதர்களே!
இற்றுப்போனது
சித்தாந்தங்கள் என்று
சிந்தனைகள் ஏதும்
செய்திடவேண்டாம்.
அதனால் மீண்டும் அழைக்கிறேன்
தோழர்களே!
மானுடம்
குழிக்குள் மூடப்படும்
வெறும் சடலங்கள் இல்லை.
அழுகிய அந்த கல்வெட்டுகளில்
அழுகாத எழுத்துக்கள்
இன்னும் உயிர்த்துக்கொண்டு தான்
இருக்கின்றன.
மண்மூடிப்போனாலும்
மண்மூடிப்போகாது
மனிதனின் போராட்டம்.

கடலின் சுனாமிகளுக்கு
கலங்கவேண்டாம்.
நாட்டுக்கு நடுவேயும்
சுனாமிகள் சீறிவரட்டும்.
ஆம்..
இந்த முறை
அது மையம் கொண்டு
கொந்தளித்துவருவது
மனிதநேயமாக மட்டுமே!
ஆம்..
மனிதநேயமாக மட்டுமே!
வங்கியின்
காசோலைகளாக
வரைவோலைகளாக
குவியட்டும் அந்த அலைகள்.

====ருத்ரா
26.12.2004.
epsi_van@hotmail.com

Series Navigation

ருத்ரா

ருத்ரா