மகளிர் தினம்

This entry is part of 14 in the series 20010318_Issue

திலகபாமா, சிவகாசி


சக்கர வியூகத்துள்
புகுந்துவிட்ட அபிமன்யுவாய்
சமுதாய வியூகத்துள் பெண்ணும்
உள் புக மட்டுமே
உணர்த்தப்பட்டவளாய்
கபடதாரி கண்ணனாய்
வியூகத்தில் உனை மாட்ட
வலை விரித்தபடி
காதல் பாசம் விட்டு
காசு பணம் மட்டுமே
பிரதானமாய் என்னும்
வறண்ட சமூகம்

சேதாரம் ,கூலி இல்லையென்ற
பொன்னகை வியாபாரத்தில்
தன்மானம்சேதாரமாக்கும்
உரசல்களுக்கு கூலி நாடும்
உன்மத்தர்களின் செய்கைதாண்டி
இலஞ்சமெனும் புலி
அன்பளிப்பெனும் பசுத்தோல்
அணிந்த கதையாய்
குலுக்கல்களை
போட்டிகளாய் அறிவித்தபடி
சிந்தனை சிறகொடித்துபின்
முதுகு தடவும்வேடனாய்
வீட்டு எஜமானனாய் மாறிப் போன
சின்னத்திரையின்இருள் தாண்டி
உப்பு புளி காரம் தாண்டி
பால் சிட்டையின் விளிம்பு தாண்டி
கசங்கிய படுக்கைவிரிப்புகளின்
சுருக்கம் தாண்டி

தொலைகாட்சி தொடர்கதை தாண்டி
கடவுள் பக்தி,கண்ணீர்
கழுத்துத் தாலி செண்டிமென்ட் தாண்டி
ஒன்றுக்கு ஒன்று இலவசங்கள் தாண்டி
விளம்பரங்களின் வலை விரித்தல் தாண்டி
உறவுச் சிக்கல்களை
பின்னல்களாக்கியபடி
காலச் சக்கரம் தாண்டி
மீள வேண்டும் பெண்ணே
அர்ச்சுனனாய்
கெளரவர்களின் கதை முடித்து
தப்பித்தல்களின் பாதையை
ஒப்புவிக்க பழகாது
ஞானச் செருக்கொடு
ஞாலம் வாழ வைப்போம்
பெண்ணாய் உனை நீ
பேணுதல் விடுத்து
மனித நேயம் பூக்கும்
மானுடமாய் அறி யுனை
தினம் தினம் வந்து போகும்
தினமெனினும்
தீர்ந்து போகும் உணர்வுகளையும்
தின்று செரிக்கும் உணர்வுதனையும்
உணர்ந்து கொள்ளும் தினமாய்
உணர்ந்தால் அதுவே
உன்னை உணரும்
உனை உணர்த்தும்
மகளிர் தினமாகும்

Series Navigation