தமிழ் அறிஞர்கள் பங்கேற்க முடியாமல் போனது யார் பிழை?

This entry is part [part not set] of 31 in the series 20091023_Issue

நேசமுடன் வெங்கடேஷ்


வழக்கம்போல், உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அரசியலாகிவிட்டது. ஐ ஏ டி ஆர் அமைப்புத் தலைவர் கரோஷிமா ஒத்துக்கொள்ளாததால், ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, செம்மொழி மாநாடு ஆகிவிட்டது. உடனே, அதிமுகவும் மதிமுகவும் இதில் பங்கேற்கமாட்டோம் என்று அறிவித்துவிட்டன. இது 2011ல் வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலை மனத்தில் கொண்டு, திமுக புகழ் பாடும் மாநாடாக இருக்கப் போகிறது என்று இக்கட்சிகள் நினைக்கின்றன.

விஜய்காந்தும் தமிழக பா.ஜ.க.வும் கரோஷிமா சொல்வதுபோலவே தேவைப்படும் கால அவகாசத்தைக் கொடுத்து மாநாடு நடத்தினால் என்ன என்று கேட்கிறார்கள். அடுத்த வாரம், கருணாநிதியை ராமதாஸ் சந்திக்க உள்ளதாகத் தெரிகிறது. இதை ஒரு முகாந்தரமாக வைத்துக்கொண்டு, ராமதாஸ், திமுகவுக்குள் தன் கூடாரத்தை மாற்றிக்கொள்ள முயலலாம்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, 1995ல் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாடு பற்றி ஒரு தவறான தகவலைத் திரும்பத் திரும்ப எழுதியும் பேசியும் வருகிறார்கள். இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு, எம்.எல்.ஏ. ரவிக்குமார் ஜுனியர் விகடனில் தான் எழுதும் பத்தியிலும் இதையே சொல்லியிருக்கிறார்.

அதாவது, கார்த்திகேசு சிவத்தம்பி, வேலுப்பிள்ளை ஆகிய இலங்கைத் தமிழ் அறிஞர்களை எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ளவிடாமல் நாடு கடத்தி அவமானப்படுத்தியது அன்றைய ஜெயலலிதாவின் அதிமுக அரசு.

இது எப்படி உண்மையாக இருக்க முடியும்?

1. ஒரு மாநிலப் போலீஸ், எப்படி ஒருவரை நாடு கடத்த முடியும்?
2. மேலும், அந்த மாநாடு நடப்பதற்கு எட்டு, ஒன்பது மாதங்களுக்கு முன்பே, யார் யார் என்னென்ன கட்டுரைகள் வாசிக்கப் போகிறார்கள், எந்த அமர்வுக்கு யார் தலைமை தாங்கப் போகிறார்கள் என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதன் அடிப்படையில்தான், வெளிநாட்டு அறிஞர்களுக்கு அழைப்புகளை அனுப்பி, அவர்களும் வர ஒத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் அவமானப்படுத்துவதுதான் அதிமுக அரசின் நோக்கம் என்றால், முதலில் ஏன் இவர்களை அழைக்கப் போகிறார்கள்? நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப் போகிறார்கள்?
3. நாடுக்குள் ஒருவரை அனுமதிப்பது என்பதோ, அனுமதிக்கக்கூடாது என்பதோ மத்திய அரசின் முடிவு. அங்கே இருக்கும் பல்வேறு துறைகளின் முடிவு. உள்துறையின் முடிவு. இந்தத் துறைகள் கடைசிநேரத்தில் விழித்துக்கொண்டு வீராவேசமாக சில செயல்களைச் செய்யக் கூடும். அது எப்படி மாநில அரசின் தவறாக ஆகும்?
4. அப்படியே ஒருவரை நாடு கடத்த மத்திய அரசின் துறை ஏதேனும் முடிவு செய்துவிட்டால், மாநில அரசால் ஏதாவது செய்ய முடியுமா? நிச்சயமாக முடியாது. ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட முடியாது. ஜெயலலிதா நினைத்திருந்தால் முடியாதா? சண்டை போட்டு எப்படியேனும் தமிழ் அறிஞர்களைப் பங்கேற்க வைத்திருக்க முடியாதா? நிச்சயம் முடியாது. என்ன மாநில உரிமை பேசினாலும், இறுதி முடிவு மத்திய அரசுடையதுதான்.

மேலும் இதுதான் முதல் நிகழ்ச்சியும் அல்ல. ஏற்கெனவே, இலங்கைத் தமிழ் அறிஞர்கள் அனுமதிக்கப்படாத மாநாடுகள் உண்டு. வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள் எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள முடியாமல் போனது மிகவும் வருந்தத்தக்க விஷயம். ஆனால், அதற்கு அதிமுக அரசுதான் பொறுப்பு என்று பேசுவது, முழுவதும் அரசியல். திமுக அரசு இருந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும்.

அதை அரசியல்வாதிகள் பேசலாம். பொய்யும் புறம்பேசுவதும் அவர்கள் தொழில். படித்த விவரமானவர்களும் யோசிக்கத் தெரிந்தவர்களும் தமிழ் அறிஞர்களும் பேசக்கூடாது. அது இழுக்கு.
============
http://www.nesamudan.com
venkatesh@nesamudan.com

Series Navigation

நேசமுடன் வெங்கடேஷ்

நேசமுடன் வெங்கடேஷ்