9 கேள்விகளும் – உண்மையின் மையப்புள்ளியும்

This entry is part of 39 in the series 20070920_Issue

கே. ஆர். மணிநிறைய விழுமியங்கள், தத்துவங்கள், கோட்பாடுகள் காலாவதியாகின்றன. சில மட்டும் முழுமையாகயில்லாவிட்டாலும் ஒரளாவாவது தங்களை சரிசெய்துகொண்டு உண்மையென்ற மையப்புள்ளி நோக்கிபோகின்றன. மக்களுக்கு எப்போதும் நாணயத்தின் இருபக்கங்களும் முழுவதுமாய் தெரிவதில்லை. தெரிந்தாலும் பகுத்துணர நேரமே, முதிர்ச்சியோ கிடைப்பதில்லை. சில கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்வதன் மூலமே உண்மை என்கிற மையப்புள்ளியை நோக்கி நம்தேடல் தொடங்கும்.
நீண்டு தொடரும்……..

சில நேரங்களில் சில கேள்விகள் :

1) பாஜக ஆட்சியில்தானே இந்த சேதுசமுத்திரத்திட்டம் ஆரம்பித்தது ? இப்போது ஏன்
அது எதிர்க்கிறது ? அரசியல் ஆதாயம்தேடித்தானே ?

அப்படித்தான் தெரிகிறது. அப்படியும் இருக்கலாம். எப்போதெல்லாம் மக்கள் நலத்திட்டங்கள் அரசியலின் வாக்குறுதியாக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதன் உண்மை முகம் தோற்கடிக்கப்படுவது சகித்துக்கொள்ளமுடியாத உண்மை.

2) தலைவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்குபதிலாக அவரின் மகள் வீட்டில் செய்தது தவறுதானே ?

ஆம். தவறுதான். மிகப்பெரிய தவறு. குடும்பம் வேறு. அரசியல் வேறு. அம்பை எய்தவனை விட்டுவிட்டு வேடிக்கைபார்ப்பவர்களை முட்டும் அலங்காநல்லூர் மாட்டின் கதைபோலயிருக்கிறது. எதிர்ப்புகள் தமிழகத்தில் நடத்தப்பட்டிருக்கவேண்டும். அங்கு செய்யமுடியாத கையலாகதனத்தின் வெளிப்பாடே இது. குடும்பம் ஆட்சியில் மட்டும் பங்குபெறுகிறது, பாபத்திலும் பங்கேற்கட்டுமே என்று வால்மீகிக் கேள்விகளை கேட்காதீர்கள். தவறு. தவறுதான். நல்ல மானிடதர்மத்திற்கு அது அழகல்ல.

2. அ) இதன் தொடர்ச்சி/ பின் விளைவு எவ்வாறு அமையலாம் ?

வாய்ப்பு 1 : கொஞ்ச நாளைக்கு பிறகு மறந்துபோகிற அரசியல் சண்டையாக மாறலாம்.
வாய்ப்பு 2 : நாளைக்கு தமிழரிருக்கும் எல்லாயிடங்களிலும் இது தொடரப்படலாம். எப்படி சங்க பரிவாரம்
இந்துக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளின் பிரதபலிப்பு என்று சொல்லப்படுகிறதோ, தமிழக முதல்வரின்,
ஒரு சில பழுத்து, விழப்போகிற திராவிடத்தலைகளின் காலம் காலமான எதிர்ப்பும், அடித்தளமற்ற ஆரவராமான இந்து எதிர்ப்பும் தமிழகத்தின் மொத்தக்குரலென நம்பப்படலாம். அல்லது நம்புவிக்கப்படலாம்.
வாய்ப்பு 3 : தமிழகத்தில் இந்துத்துவத்தின் வேர் மேலும் ஆழப்படலாம். தேசிய கட்சிகள் தமிழகத்தில் பலப்படுவது மிகமுக்கியமான ஒன்று. ராமரை ஆதரிக்காத திராவிட கட்சிகள் அடுத்த மாநிலத்திற்கு தாவுவதற்கு/ பரவுவதற்கு நல்ல காரியமாய் அமையலாம்.
வாய்ப்பு 4 : [நீங்களும் கொஞ்சம் யோசியுங்கள் ]

3) தமிழக முதல்வரின் பேச்சு இந்துக்களின் இதயத்தை புண்படுத்துவதாக அமைவதாயிருக்கிறதே. இவரது எதிர்ப்பை வேறு நல்ல வார்த்தைகளில் சொல்லியிருக்க கூடாது ?

இது என்ன புதுசா ? இந்து திருடன், இது சூத்திர ஆட்சி, ஏன் சீதை முதுகில் மூன்று கோடில்லை என்பதான மலிவான, ஆரோக்கியமற்ற தளத்திலிருந்து எழுந்த கொள்கைகளால் கட்டமைக்கப்பட்ட அரசியல் கட்சியிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்கமுடியும். இரத்தத்திலே ஊறிய திராவிட பராம்பரியத்தின் எதிர்ப்புக்கொள்கைதானேயிது. எதிர்த்தாலும் நல்ல, ஆரோக்கியமான வார்த்தைகளால் எதிர்க்கிற கம்யூனிஸ்டு கட்சிகளின் முதிர்ச்சியை நீங்கள் எதிர்பார்ப்பது உங்களின் தவறு. மற்றவர்களை புண்படுத்துவதன் மூலமும், ஆக்ரோசமாய், நாராசமாய் பேசுவதன் மூலமே தங்களின் கருத்துக்கள் பரப்பப்பட முடியும் என்று நம்புகிற தத்துவ ஆதாரமும், சில போலியான வெற்றியும் கொண்டவர்களிடம் வேறேதை எதிர்பார்க்கீறீர்கள். கனிமீது நம்பிக்கையற்று காய் மீதான நம்பிக்கை கொண்ட பழைய தலைமுறையது. கனிந்தால் நல்ல மொழி வருமென எதிர்பார்ப்பதைவிட வேறென்ன சொல்ல ?

4) ராமசேது சமுத்திரத்தை ஒரு நடுநிலை இந்தியான எப்படி எதிர்கொள்வேன் ?

ராம் கட்டியதாகவேயிருந்தாலும், ராம் ஒரு தியாகத்தின் பிரம்மம். வேறு வழிகளிருந்தாலும் தான் கட்டிய பாலத்தை இடிக்கவேண்டுமென்றால் தயக்கமின்றி தருபவன். தனது அரசாங்கப்பதவியையே தந்தவனுக்கு இது சூஜுபி.. இதை இடிப்பதன் மூலம் மட்டுமே பாலம் கட்டமுடியும் என்ற நிலையிருந்தால் அவன் மேல் பாரத்தை போட்டு ஆரம்பிக்கலாம். மற்ற வழிகளிலும் குறைந்த செலவில் அதுமுடியுமென்ற பட்சத்தில் அதை கையாள்வதே சிறந்தது. நம்புவர்களுக்கும், நம்பாதவர்களுக்கும் ஒரு லெவல்
ப்ளேயிங் பீல்டு கொடுத்தாகவேண்டும். நம்புவர்களுக்கு – நாட்டில் நலந்தான் முக்கியமென உணரச்செய்யலாம். என்ன தேர்தல்முடியும் வரை பொறுத்திருக்கவேண்டும் ஒரு ஆரோக்கியமான விவாத சூழலுக்காக.

5) ‘சிவில் போர். .போய்க்கொண்டிருக்கிறது. எரிகிற தீயில் முதல்வரின் வார்த்தைகள் எண்ணெய் ஊற்றும்..’ அத்வானியின் கமெண்ட் ?

பதில்: ஓவர் பில்டப். இல்லாத போரை எதற்கு தேவையில்லாமல் ஆரம்பிப்பானேன்..செய்ய வேண்டியது நிறையயிருக்கிறது. தமிழகத்தில் பாஜ காலுன்ற இந்த திராவிட மண்குதிரைகள் தேவைதான். எவ்வளவு சீக்கிரம் தேசிய கட்சிகளின் பலத்தை பெருக்கமுடியுமோ அவ்வளவு சீக்கரம் வளர்க்கப்பாருங்களய்யா..

6) ஒரு முஸ்லிம் கடவுளை இப்படி சொல்லியிருந்தால் என்னவாயிருக்கும் ?

இது ஒரு தேவையற்ற ஆனால் தேவையான ஒப்பிடு. உண்மை என்கிற மையப்புள்ளியை நோக்கி போகிற எந்த இந்துவுக்கும் இந்த உறுத்தலிருக்க கூடாது. அதுதான் வாசுதேவ குடும்பகத்தின் சிறப்பே. ஆனால் பொய் மதச்சார்பின்மை பேசுகிற காங்கிரசு முதலான கட்சிகள், இதை ஆழமாய் யோசிக்கவேண்டும்.

7) சங், தமுமுக, விஹபி போன்ற அடிப்படைக்குழுக்கள் தேவையானவையாயென்ன ? அவற்றை அழிப்பதால் நிரந்திரமான அமைதி ஏற்படுமல்லவா ?

வீட்டிற்கு எப்படி காவலாளி முக்கியமோ அதுபோல அடிப்படை குழுக்களான விஎஸ்பி போன்ற குழுக்கள் அவசியம். அவைகள் வீட்டிற்கு வெளியில் தேவையான வேலைக்கு மட்டுமே நிறுத்தப்படவேண்டுமேயன்றி, வீட்டின் தலைவனுக்கான அதிகாரத்தை வாசலின் கூர்கா எடுத்துக்கொள்ளக்கூடாது. அடிப்படை குழுக்கள் எல்லா மதத்திற்கும் அவசியமானதும் கூட. ஆனால் அவை கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கவேண்டும். அவை எழுப்பும் குரல்களின் நியாயம் பொதுத்தளங்களுக்கு உடனடியாக கொண்டுவரப்படவேண்டும். சரிசெய்யப்படவேண்டும். ஒரு தரமான ஜனநாயகத்தின் வேலை இதுபோன்ற அடிப்படைக்குழுக்களுக்கு அதிகமான வேலை இல்லாமல் செய்வதேயாகும். இது முஸ்லிம் குழுக்களுக்கு பொருந்தும். அவையனைத்தும் ஜனநாய
கோட்டுக்கள் நின்று செயல்படவேண்டுமென்பதை சொல்லத்தேவையில்லை.

8) காங்கிரசு ஏன் திமுகவை இப்படி பேசாதீங்க என்று சொல்லக்கூடாது ?

அப்பூ.. என்ன ஜோக் சொல்றீங்க.. ஏற்கனவே சிவப்பு குத்து தாங்கமுடியலை. திருப்பி கறுப்புகிட்டவேற அடிவாங்கணுமா.. எங்களுக்கு அப்படியெல்லாம் தீர்மானமான மானம், கொள்கை, கருத்துன்னு வெச்சிக்கரதில்லை.. நாங்க தீர்மானமாயிருக்கறது.. எப்படியாவது
அஞ்சு வருசத்தை கழிச்சு கூட்டிடணும்னுதான.. என்று யாராவது காங்கிரசுக்காரர் சொன்னால் நீங்கள் யாரும் அதிர்ச்சியடையமாட்டீர்கள்தானே.. காங்கிரசு, மற்றும் பிஜேபி கட்சிகளிடம் கொஞ்சம் கண்டிப்பாய் நடந்துகொண்டால் இந்த மாதிரி
தான் தோன்றித்தனமான பிரச்சனைகள் தாண்டி நம் தேசம் முன்னேறும்.

தேசிய கட்சிகளேநீங்கள் உண்மையிலே ஆன்ம பலம் பெறவேண்டிய நேரமிது. நீங்கள் அரசியல் அரங்குகளின் ஜோக்கர்களாக மாற்றப்பட்டீர்கள் என்பது தான் சோகமான உண்மை. சாட்டைக்குப்பயந்து உங்களின் ஆட்டம் நாட்டிற்கு நல்லதல்ல. இது உங்களுக்கான புழுதிவாரித்துற்றல் நேரமல்ல. வருகிற தேர்தலுக்கும் முகம் காக்கும் கவசமாய் வார்த்தை ஜம்பம் விளையாடவேண்டாம். ஒரு மத நம்பிக்கை எவ்வளவு தூரம் விவாதிக்கப்படலாம் என்பது பற்றிய ஆரோக்கியமான
கட்சிதாண்டி விவாதம் வருவதற்கான அருமையான தருணமிது. காங்கிரசு கட்சி நல்ல மென்மையான, முதிர்ந்த தலைவர்களை கொண்டகட்சி. அது தனது குரலை உயர்த்தி கோடு கிழிக்கும் நேரம். உங்களுக்கென எப்போதும் பயணிக்கிற திராவிடக்குதிரையென்று
எதுவுமில்லை. ஆனாலும், உங்கள் குரலின் உண்மை நடுநிலை இந்துக்களின் வலிக்கு கொஞ்சம் மருந்து தடவலாம். பாஜக மட்டுமல்ல காங்கிரசும் எப்போது தேவையோ அப்போது இந்துக்களுக்காக பேசும் என்று நம்புவார்கள்.

9) கண்ணகி கரடியென்றவுடன் கத்தியகுரல் ஏன் ராமனுக்கு மட்டும் அபஸ்வரம் வாசிக்கிறது ?

நம்பிக்கை என்பது எல்லாவற்றிகும் ஒன்றுதான் என்று நம்ப மறுத்து பழக்கப்பட்ட மனம். கண்ணகி ஒட்டு வாங்கித்தருவாள். ராமன் ஒட்டு வாங்கித்தருவாரா ? ராமன் தோட்டத்திலும் நம்பிக்கை மணக்கலாம் என்று நம்பவுதற்கு நாமென்ன பகுத்தறிவற்றவர்களாயென்ன ?

கூடிய விரைவில் தமிழக பாடப்புத்தகத்தில்/கேள்வித்தாளில் இவை இடம்பெறலாம் :

அ) ராம் – குடிகாரன் – கட்டுரை வரைக.
ஆ) இந்து என்றால் திருடன் என்று பொருள்.. விளக்கவுரை எழுதவும்.
இ) சீதை எந்த நர்சிங்ஹோமில் குழந்தை பெற்றாள் ? ஆதாரத்துடன் படம் வரைக.
ஈ) தசரதன் சாப்பிட்ட லேகியமேது ? எவ்வாறு இத்தனை மனைவிகளை சமாளித்தார் ?
எ) ஆரியமாயை – நீள்கட்டுரை வரைக..
ஏ) கண்ணகியின் திருப்புகழ் எழுதவும்.

[உங்களுக்கும் சில வினாக்கள் சேர்க்கவேண்டுமெனில் திண்ணைக்கு அனுப்புங்கள். திண்ணை ஆவன செய்யும்.]


mani@techopt.com

Series Navigation