பெண்களுக்கு வரதட்சிணை கொடுத்துத்தான் திருமணம் செய்யவேண்டும்.

This entry is part [part not set] of 40 in the series 20030809_Issue

சின்னக்கருப்பன்


பெண்களுக்கு வரதட்சிணை கொடுக்கக்கூடாது என்ற கொள்கையைப் போல ஒரு பெரிய ஆணாதிக்கச் சிந்தனை இருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. வரதட்சிணையை எதிர்த்து பேசுபவர்கள் எல்லோரும் பொலிடிகலி கரெக்ட் ஆன ஆசாமியாக ஆகிவிடுகிறார்கள். மேடையில் உரத்து முழக்கமிடும் பெண்களாயினும் சரி ஆண்களாயினும் சரி, வரதட்சிணையை எதிர்த்துவிடுவோம், கல்யாணம் ஆகும் போது கண்ணும் காதும் வைத்தாற்போல முடித்துவிடுவோம் என்பதுதான் நிலைமையாக இருக்கிறது. இந்த பம்மாத்து கூப்பாட்டுக்கு ஏற்றாற்போல, வரதட்சிணை ஒழிப்புச் சட்டமும் போட்டாய்விட்டது.

வரதட்சிணைப் பேய், பெண்ணை விலைக்கு விற்கிறார்கள், இன்ன மாதிரி கதைகளும் கட்டுரைகளும் கவிதைகளும், (அட அதுக்குத்தான் பஞ்சமே இல்லையே) எழுதித்தள்ளிக்கொண்டிருக்கிறார்கள் நம் ஊரில். எதற்காக வரதட்சிணை, ஏன் வரதட்சிணை, வரதட்சிணையின் பொருளென்ன என்பது மாதிரி எந்தவிதமான ஒரு விவாதமோ அல்லது பேச்சோ இல்லாமல் எல்லோரும் தடாலடியாக பேசுவதில் வாயை மூடிக்கொண்டு போகிறார்கள். நமக்கேன் வம்பு, நாமும் வரதட்சிணையை எதிர்த்துப் பேசிவிடுவோம் என்பதுதான் முற்போக்கு சிந்தனையாளர்களின் நிலைப்பாடாக இருக்கிறதே ஒழிய, அதனை அறிவுப்பூர்வமாக அணுகுவோம் என்பது இல்லை.

என் அம்மாவின் அப்பாவுக்கு (என் அம்மா வழி தாத்தாவுக்கு) இரண்டு வீடுகள் இருக்கின்றன. அவருக்கு மூன்று பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள். என்ன ஆயிருக்கும் என்று சொல்லுங்கள். இரண்டு வீடும் இரண்டு பையன்கள் எடுத்துக்கொண்டார்கள். பெண்களுக்கு அம்போதான். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்பது சமீபத்தில்தான் சட்டமாக நிறைவேறியிருக்கிறது. அதற்கு முன்னால் என்ன ? சொத்தில் சம உரிமை என்றிருந்தாலும், சொத்தை இன்று அனுபவிப்பது யார் ? ஆஸ்திக்கு பையன் ஆசைக்குப் பெண் என்பதுதானே இன்றைய பழமொழி, நேற்றைய பழமொழி ? இப்படிப்பட்ட லட்சணத்தில், வீட்டுத்தலைவர்களாக இருக்கும் ஆண்கள், தங்கள் பெண்களுக்கு வரதட்சிணையும் கொடுக்க மாட்டோம், சொத்துக்களும் ஆண்களுக்குத்தான் என்பது போன்ற பம்மாத்தை எப்படி முற்போக்காக ஆக்கிவிட்டார்கள் என்பதுதான் எனக்கு ஆச்சரியமானது.

இன்றுதானே வங்கியில் பணிபுரியும் மனிதர்களும், இன்னும் கணினியில் பணிபுரியும் மனிதர்களும். முன்னால் என்ன இருந்தது ? பெரும்பான்மை விவசாயம்தானே இருந்தது ? இன்றைக்கும் பெரும்பான்மை விவசாயமும் சிறுதொழில்களும்தானே இருக்கின்றன. மத்தியதர வர்க்கத்தின் மதிப்பீடுகளையும் மத்தியதர பொருளாதார சிக்கல்களையும் எல்லா மக்களுக்கும் பொதுவானதாக இவர்களே நினைத்துக்கொண்டு எல்லோருக்குமான ஒரு நிலைப்பாட்டை எடுப்பதாக நினைத்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

பெண்ணுக்கு 15இலிருந்து 20 வயதுக்குள் திருமணம் செய்து வைத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அந்தப் பெண்ணுக்குச் சேரவேண்டிய சொத்தை கணக்கிட்டு அந்தப் பெண்ணுடன் அனுப்பி வைத்தார்கள். அது வரதட்சிணை என்ற பெயரில் அந்தப் பெண்ணுக்குச் சென்றது. அது எப்படி தவறாகும் ?

அந்த சொத்துப் பிரிவுக்குப் பின்னால், அப்பாவின் சொத்தில், அதாவது நிலத்தில் இன்னும் பல உற்பத்தி கருவிகளில் வேலை செய்வது திருமணமாகிச் சென்றுவிட்ட பெண் இல்லையே ? அப்பாவின் கடனையும் அப்பாவின் சொத்தையும் அப்பாவின் தொழிலையும் உற்பத்தி கருவிகளையும் மகன் எடுத்துக்கொள்கிறான். அப்பா உயிருடன் இருக்கும்போதே, அப்பாவுடன் இணைந்து வேலை செய்கிறான். அந்த உற்பத்தியின் பங்கு எப்படி திருமணமாகிச் சென்றுவிட்ட பெண்ணுக்குச் சேர இயலும் ? சேர இயலாதல்லவா ? ஆனாலும், திருவிழாக்களிலும் பண்டிகைகளிலும் பிறந்த வீட்டிலிருந்து வரும் சில பரிசுப்பொருட்கள் அந்தப் பெண்ணுக்கு சந்தோஷத்தை தராமல் இருக்குமா ? எதிர்பார்க்காமல் இருப்பாளா ?

இதுதான் வரதட்சிணையின் அடிப்படை.

இரண்டாவது ஏதோ ஆண்கள்தான் வரதட்சிணை கேட்கிறார்கள் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். இன்னும் கிராமங்களில் பரிசப்பணம் என்னும் வழக்கம் இருக்கிறது. என் நண்பர் தன்னுடைய மனைவிக்கு இரண்டு ஏக்கர் நிலம் எழுதிவைத்துத்தான் திருமணம் செய்து கொண்டார். இல்லையென்றால் பெண் கிடைக்காது. இதனையும் எதிர்த்துப் பேச வேண்டியதுதானே ? இதனையும் விபச்சாரம் இன்ன பிற வார்த்தைகளில் வர்ணிக்க வேண்டியதுதானே ? பெண் செய்தால் சரி ஆண் செய்தால் குற்றம் என்பதுதானே முற்போக்குச் சிந்தனை ?

இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் வாழ்வது கிராமங்களில்தான் இன்னமும். அங்கு சிறுதொழில்களும் விவசாயமும்தான் நடக்கிறது. கணினித்தொழிலோ அல்லது வங்கித்தொழிலோ அல்ல. அங்கு இருக்கும் பொருளாதார நிலைகளுக்கு ஏற்றபடிதான் அங்கு உறவு முறைகள் இருக்கும். பழக்க வழக்கங்கள் இருக்கும். ஆனந்தவிகடனின் மத்தியதர வர்க்கத்தின் மதிப்பீடுகளும் உறவு முறைகளும் அல்ல.

அங்கு பெண்கள் அதிகமானால் வரதட்சிணை பலம் பெறும். ஆண்களுக்கு பெண்களின் தேவை அதிகமானால் பரிசப்பணம் பலம் பெறும். இதுதான் நியாயம். காதலரிருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்ட இன்பத்துக்கு அவ்வப்போது சாப்பாடு போட பொருளாதார நிலையும் வேண்டுமல்லவா ?

சரி இன்னொரு விஷயம். எந்த ஜாதிகளில் வரதட்சிணை அதிகமாக இருக்கிறது என்று கணக்குப்பாருங்கள். அவை பெரும்பாலும் பணக்கார ஜாதிகளாக இருக்கும். ஆளும் சாதிகளாக இருக்கும். அவைகளில் இருக்கும் சொத்து ஆண்வழி குடும்பத்துக்கே செல்லும். பெண்வழி குடும்பத்தின் பங்கு வரதட்சிணையாகப் போய் சேரும். பணக்கார ஜாதிகளுக்குள்ளேயே இருக்கும் தாரதம்மியங்களுக்கு ஏற்ப, அவரவர் பெண் கொடுத்துக்கொள்கிறார்கள் அல்லது பெண் எடுத்துக்கொள்கிறார்கள். பெரும்பாலும் சண்டை வருவதெல்லாம், சொன்னபடி வரதட்சிணை கொடுக்காமல் பெண் வீட்டு ஆண்கள் ஏமாற்றும்போதுதான் வருகிறது. குடும்பச் சொத்து மீது ஆண்களுக்கு இருக்கும் பாசம், வரதட்சிணை கேட்கிறான் என்று மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை திட்டும் வேஷத்தின் கீழ் இருக்கிறது. பெரும்பாலும் இப்படிப்பட்ட ஆண்களே எழுத்தாளர்களாகவும், மத்திய வர்க்கத்தின் ஒழுக்க நிலைப்பாடுகளை ஏற்படுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள்.

எந்த ஜாதிகளில் பரிசப்பணம் இருக்கிறது என்று பாருங்கள். அது பெரும்பாலும் ஆண்களும் பெண்களும் சேர்ந்து உழைக்கும் உழவர் குடிகளாகவும், ஏழை ஜாதிகளாகவும் இருக்கும். இங்கு சொத்து உள்ளவனிடமே பெண் வருவாள். ஏனெனில் பெண் சும்மா உட்கார்ந்து தின்னுபவளல்ல. உடல் வருத்தி கணவனுக்குச் சமமாக நிலத்தில் வேலை செய்பவள். அப்படி ஒருவனோடு வரும்போதும், குழந்தைகளை விட்டுவிட்டு ஓடிவிட்டால் என்ன செய்வது என்று இரண்டு ஏக்கரை தன் பெயரில் பரிசப்பணமாக எழுதி வாங்கிக்கொண்டுதான் வருவாள். இவர்கள் ஆனந்த விகடன்களில் எழுதுவதில்லை. அதனால், இந்த ஆண்களின் ‘சோகம் ‘ தெரிவதில்லை. (சோகம் என்ற வார்த்தையை கேலியாகப் பயன்படுத்தியிருக்கிறேன். இது சோகமும் அல்ல, பம்மாத்தும் அல்ல. இவர்கள் இதனை சோகம் என்று சொல்வதும் இல்லை. வெறும் நடைமுறை)

இன்றைய மத்தியதர வர்க்கம், பெரும்பாலும் பணக்கார ஜாதிகளிலிருந்து வந்தது. அது கூடவே பணக்கார ஜாதிகளின் ஆணாதிக்க சிந்தனையையும் கூடவே எடுத்துக்கொண்டு வந்திருக்கிறது. பெண்விடுதலை என்ற பெயரில் கூடவே வரதட்சிணை எதிர்ப்பையும் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறது.

ஆகவே பொத்தாம்பொதுவாக வரதட்சிணை எதிர்ப்போம் என்பது போலித்தனமானது. நடைமுறைக்கு ஒவ்வாதது. வரதட்சிணையோ அல்லது பரிசப்பணமோ நடைமுறைக்கு ஒவ்வாததாக ஆகும்போது அது தானாக கழன்று கொண்டுவிடும். இன்று வரதட்சிணைக்குப் பதிலாக பெண் படித்தவளாக வேலைக்குப் போகக்கூடியவளாக இருக்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருக்கிறது. இதற்கும் வரதட்சிணைக்கும் என்ன வித்தியாசம் ? இரண்டுமே குடும்பத்துக்கு வரும்படி வரக்கூடிய அடிப்படை கொண்டவைதானே ? பெண் வேலைக்குப் போகக்கூடியவளாக இருக்கவேண்டும் என்று ஆண் எதிர்பார்ப்பதையும் ‘வன்கொடுமை ‘ என்று அழைத்து கதை கவிதையும் எழுதப்படலாம். அது எனக்கு இன்றைய சூழ்நிலையில் ஆச்சரியமாகவும் இருக்காது.

நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் பெண்கள் நல்ல வேலை பார்க்கும் ஆண்களைத்தான் தேர்ந்தெடுத்துக் ‘காதலிக்கிறார்கள் ‘. ஆண்களும் விவரமாகவே வேலை செய்யும் பெண்களை ‘காதலிக்கிறார்கள் ‘. இவர்களில் எனக்குத் தெரிந்து மூன்று ஜோடிகள் திருமணம் செய்து கொண்டார்கள். யாருமே வரதட்சிணை வாங்கவுமில்லை கேட்கவுமில்லை. தேவை என்ன ? (இத்தனைக்கும் பெண்ணின் அம்மா தன் பெண்ணுக்காக சின்ன வயதிலிருந்து சேமித்து வைத்திருந்த தங்கநகைகள் அனைத்தையும் போட்டுத்தான் திருமணம் செய்வித்தார்). லாட்டரியில் இரண்டுவகையாகப் பணம் தருவார்கள்.ஒரேயடியாக வாங்கிகொள்ளலாம் அல்லது மாதாமாதம் வாங்கிக்கொள்ளலாம். முதலாவது வரதட்சிணை வழக்கம் என்றால் இது இரண்டாவது வகை தானே ?

எல்லோருமே பணக்காரர்களாகவோ அல்லது எல்லோருமே ஏழைகளாகவோ இருந்தால் வரதட்சிணையும் இருக்காது; பரிசப்பணமும் இருக்காது. தார தம்மியம் இருப்பதால்தான், தன் குழந்தை நல்ல வாழ்க்கைப்படவேண்டும் என்ற அக்கறை இருப்பதால்தான், கூடவே வரதட்சிணையாகப் பொருளையும் பணத்தையும் கொடுத்து ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தித்தருகிறார்கள் பெண்ணைப் பெற்றவர்கள்.

மேலும் இந்தியாவில் திருமணம் என்பது இதுவரை (இன்றைய தேர்ந்தெடுத்து ‘காதலிப்பவர்களை ‘ விட்டுவிடுங்கள்) இரண்டு நபர்களுக்கு இடையேயான உறவு அல்ல. இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான உறவு. இந்த உறவின் அடிப்படை, அந்த பெண்ணுக்கு புகுந்த வீட்டில் இருக்கும் மதிப்பு. அந்த மதிப்புக்கு அடிப்படை அந்த பெண் எந்த அளவுக்கு அந்த குடும்பத்துக்கு முக்கியமானவள் என்பதை வைத்து. அது அவள் கொண்டு வரும் வரதட்சிணையின் அடிப்படையில்தானே இருக்கும் ? அல்லது அவள் வேலை செய்து கொண்டுவரும் பணத்தின் அடிப்படையில்தானே இருக்கும் ? பெண்ணிடம் எந்த எதிர்பார்ப்பையும் ஒரு ஆண் வைத்துக்கொள்ளக்கூடாது ஆனால் ஒர் ஆணிடம் எல்லா எதிர்பார்ப்பையும் பெண்கள் வைத்துக்கொள்ளலாம் என்பது எப்படி சரியானதாக இருக்கமுடியும் ? இதனை நான் ஒரு விதண்டாவாதத்துக்குக் கேட்டாலும், ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு காரணமாக சண்டை என்று வரும்போது இத்தனை ஆயுதங்களும் பிரயோகிக்கத்தான் படுகின்றன. அதனைத் தாண்டி ஆணின் தேவை பெண்ணுக்கும் பெண்ணின் தேவை ஆணுக்கும் இருக்கின்றது. அதனால்தான் குடும்பம் என்ற ஒன்று இருக்கிறது.

வரதட்சணை சட்டபூர்வமாக இல்லாத இன்றைப் பொழுதும் கூட லட்சக்கணக்கான திருமணங்கள் வரதட்சணையுடன் தான் ஜாம் ஜாமென்று நட்டக்கின்றன. பிரசினையும் எதுவும் இல்லை. ஓரிரு ஏனென்றால் சட்டமோ இல்லையோ ஒரு சமூகம் தன்னைக் காத்துக் கொள்ளும் வழிமுறைகளை அறிந்து தான் வைத்திருக்கிறது.

ஓரிரு திருமணங்களில் தான் இந்தப் பிரசினைகள் பூதாகாரமாகின்றன. இந்தப் பிரசினைகள் எவரிடையில் தோன்றுகின்றன ? நிச்சயம் மத்திய தரவர்க்கத்திடம் தான். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதை பொருளாதார உயர்வாய்ப் புரிந்து கொண்ட இவர்கள் அடுத்த படிநிலைக்குச் செல்வதற்கு வரதட்சணையை உபயோகிக்கிறார்கள், தம்முடைய சாதி , தம்முடைய வர்க்கம் அல்லது தம்முடைய தற்கால இருப்புக்கு ஒரு படி மேல் சம்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று பெண்களைப் பெற்றவர்கள் விரும்புவதால் தான் வரதட்சணையைத் தர பெண்களின் பெற்றோர் முன்வருகிறார்கள். இது தான் விவேகமானதும்ம் கூட.

***

நிஷா சர்மாவைக் கிட்டத்தட்ட ஒரு புரட்சி நாயகி அளவிற்கு உயர்த்தி அந்தப் பெண்ணுக்குப் புகழாரங்கள் சூட்டப் படுகின்றன. அவர் சம்பந்தப் பட்ட நிகழ்ச்சியைக் கவனித்தால், அவர் வரதட்சணையை எதிர்த்து அல்ல, ஒப்புக் கொண்ட தொகைக்கு மேலாக வரதட்சணை கேட்டவர்களைத் தான் நிராகரித்திருக்கிறார். நிஷாவின் பெற்றோர் 15 லட்சம் வரையில் திருமணச் செலவிற்கும், வரதட்சிணைக்கும் செலவிட்டிருக்கிறார்கள். அதற்குமேலும் மணமகன் வீட்டார் கேட்டதால் தான் நிஷா போலிசுக்குப் போயிருக்கிறார். 15 லட்சம் வரதட்சணை அல்ல , அதற்கு மேல் கேட்டால் தான் வரதட்சணை என்று யாரும் சொல்ல மாட்டார்கள் என்று நம்புகிறேன். இந்த நிஷா சர்மாவிற்கு இவ்வளவு பெரிய விளம்பரம் எந்தப் பயனும் அற்றது. அர்த்தமற்றது. பெண்களின் அமைப்புகள் ஏன் நிஷா சர்மாவை இபப்டித் தலையில் வைத்துக் கூத்தாடுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. உண்மையான பிரச்னையை அணுகாமால், வெற்று கோஷங்களில் திருப்தி அடைவது இது.

வரதட்சனை கேட்டு மாமியார்கள் கொடுமை செய்கிறார்களே என்று சொல்லலாம். ஸ்டவ்கள் வெடிப்பதும் , பெண்கள் இதற்கு அஞ்சித் தற்கொலை செய்து கொள்வதும் பற்றிக் கேட்கலாம். பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்று வசனம் பேசலாம். ஆனால் மாமியார் மருமகள் சண்டை என்பது ‘பொருளாதாரம் ‘ சம்பந்தப் பட்டதல்ல. இதற்கான விளக்கத்தைக் கேட்டு ஃப்ராயிடிடம் தான் போக வேண்டும். கொலைகளில் வரதட்சணைக் கொலைகள், வரப்புக் கொலைகள், காதல் கொலைகள் என்றெல்லாம் எதுவும் இல்லை. கொலைக்குரிய தண்டனையை அவரவர் அனுபவிக்கட்டும். வரதட்சணையைத் தடை செய்து விடுவதால் இந்தக் கொலைகள் நின்று விடும் என்பது கனவே. (மாமியார் மருமகள் சண்டையில் வரதட்சிணை என்பது ஒரு அன்றைய காரணம் மட்டுமே. அது பிரச்னை இல்லையென்றாலும் இன்னொரு விஷயத்தைப் பற்றி சண்டை வரத்தான் செய்யும்)

இப்படிப் பட்ட மாமியார்களுடன் போராடத் தெம்பில்லாமல் , அம்மாபிள்ளையான மாப்பிள்ளைகளின் அலட்சியத்தாலும், ஆணவத்தாலும் தற்கொலை முடிவிற்குச் செல்லும் பெண்களுக்கு ஒரு துளி கண்ணீர் விடலாம். ஆனால் இந்தக் கண்ணீர் எதிர்காலத் தற்கொலைகளைத் தவிர்க்காது. வரதட்சணையைச் சட்டபூர்வமாய் ஆக்கியிருந்தால் இந்தத் தற்கொலைகளைப் பெரும்பாலும் தவிர்த்திருக்கலாம்.

வரதட்சிணை கொடுக்கப்படவேண்டும். ஆனால் அதற்கு சரியான வரைமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.

வரதட்சிணையில் பிரச்னையே அதனை சட்டப்பூர்வமாக ஒப்புக்கொள்ளாததுதான். வரதட்சிணை வாங்கும்போதே, அல்லது கொடுக்கும்போதே, அரசாங்கப்பதிவேட்டில் பதியும்போது இத்தனை ரூபாய் பெறுமானமுள்ள தங்கம், ரூபாய் வரதட்சிணையாகக் கொடுக்கிறோம் என்று எழுதிவைத்தால், மணமுறிவு என்று வரும்போது அந்த ரூபாயையும் தங்கத்தையும் வெளியேறும்போது மனைவி பெற்றுக்கொண்டு வெளியே வசதி இருக்கும்.

எண்ணிப் பாருங்கள் , வரதட்சணை சட்ட பூர்வமானதாய் இருந்தால், இரண்டு குடும்பத்தினரும் ஒப்புக் கொண்ட தொகை இது என்று கையொப்பமிட்டு பத்திரங்கள் தயார் செய்திருந்தால், நிஷாவின் திருமண நாளன்று அடாவடியாக பையன் வீட்டார் மிகுந்த தொகையக் கேட்டிருக்க முடியாது. கேட்டாலும் பத்திரத்தைக் காட்டி சட்ட பூர்வமாய் நடவடிக்கை எடுத்திருக்க முடியும்.

இன்று திருமணம் செய்யும்போது வரதட்சிணை தடை செய்யப்பட்டிருப்பதால் அது பற்றிப் பேசப்படுவதில்லை. ஆகவே, திருமண முறிவு சமயத்தில், முன்னர் வரதட்சிணையாக எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் ?

ஆகவே வரதட்சிணை சட்டப்பூர்வமாக ஆக்கப்பட வேண்டும்.

இரண்டாவது எவ்வளவு வரதட்சிணை கொடுக்கப்பட வேண்டும் என்பது பெண்ணின் பிறந்த வீட்டின் அன்றைய சொத்து சம்பந்தமானதாக இருக்க வேண்டும்.

பிறந்த வீட்டின் பூர்வீகச்சொத்து, நிலபுலன்கள், தங்கம், மற்றும் வங்கிக்கணக்கு ஆகியவற்றின் மொத்த மதிப்பு 10 லட்சமாக இருக்கும் பட்சத்தில், குடும்பத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கை (தாய் தந்தை தாத்தா ஆண் பையன்கள், பெண்பிள்ளைகள் ஆகியோர் ) 10 ஆக இருக்கும் பட்சத்தில், திருமணமாகும் பெண்ணுக்கு 1 லட்ச ரூபாய் சேர வேண்டும். அந்த 1 லட்ச ரூபாயிலிருந்து திருமணத்துக்கு ஆகும் செலவும், வரதட்சிணையாக் கொடுக்கும் பணமும் சட்டப்பூர்வமாகப் பதியப்பட வேண்டும். இது ஒரு சொத்துப் பிரிப்பாக சட்டப்பூர்வமாகச் செய்யப்பட வேண்டும். அந்த பெற்றோர் (பெரும்பாலும் தந்தை) தன் சொந்த வருமானத்தில் சம்பாதித்த சொத்துக்களில் எவ்வளவு வேண்டுமானாலும் தன் மகளுக்கோ மகனுக்கோ எழுதி வைக்க உரிமை உண்டு. அதனை அந்த சொத்துப்பிரிவின் போதும் உபயோகிக்கட்டும்.

அதற்குப் பின்னர், அந்தப் பெண், தன்னுடைய பிறந்த வீட்டுச் சொத்துக்களில் உரிமையை இழந்துவிடுகிறாள். அதன் பின்னர் பிறந்த வீட்டிலிருந்து வரும் நன்கொடைகள் அன்பு நன்கொடைகளாக வரலாமே தவிர, கேட்டுப்பெறும் உரிமையை அவளும் புகுந்த வீட்டினரும் இழக்கின்றனர்.

பின்னர் அவள் விவாகரத்தாக ஆகும்போது, தான் கொண்டுவந்த சொத்துக்களுக்கான உரிமையை தான் எடுத்துச் செல்ல உரிமை பெறுகிறாள். கூடவே குழந்தைகளுக்கான மேற்செலவுக்கும், ஜீவனாம்சத்துக்கும் உரிமையை அவள் எவ்வளவு சம்பாதிக்க வலிமை உள்ளவள், கணவன் எவ்வளவு சொத்து அல்லது சம்பாத்யம் உடையவன் என்பதைப் பொறுத்து அமையப்படலாம்.

***

வரதட்சிணை கொடுத்துத்தான் திருமணம் செய்யப்படவேண்டும். மற்றெல்லாம் வெறும் பூச்சுற்றல்.

***

karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்