• Home »
  • கதைகள் »
  • ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம் – பகுதி இரண்டு)

ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம் – பகுதி இரண்டு)

This entry is part of 32 in the series 20060210_Issue

கரு.திருவரசு


காட்சி 2.

காட்சி நிகழும் இடம்- வண்ணப் பூஞ்சோலை.

காட்சியில் வருவோர்: சங்கக் காலத்து இளங் காதலர் இருவர்.

(சிறிய கட்டுக்குடுமிகொண்டு, அக்குடுமியில் பூச்சூடிய இளைஞன். அழகிய இளம்பெண்.)

காட்சி நிலை: புன்னை மரத்தடியில் காதலர் சந்திப்பு.

ஆண்- (அச் அச்சென்று தும்முகிறான்.)

பெண்- வாழ்க வாழ்க! அத்தான் உங்களை யாரோ நினைக்கிறார்கள் போலிருக்கிறதே! யாரோ என்ன, எவளோ உங்களை நினைக்கிறாள். அதுதான் உங்களுக்குத் தும்மல் வருகிறது. யாரவள், யாரவள் ? நான் இனி உங்களோடு பேசமாட்டேன். (என்று ஊடல் கொள்கிறாள்)

ஆண்- அப்படியெல்லாம் ஒன்றுமில்லை கண்ணே! என் மூக்கில் ஏதோ துரும்பு பட்டுவிட்டதுபோலும், அதுதான்… (என்றவன் மீண்டும் தும்மல் வருவதுபோல் தோன்றவே கையால் மூக்கை அழுத்தி அதை அடக்க முயல்கிறான்.)

பெண்- தும்மினால் அது எனக்குத் தெரிந்துவிடுமோ என்று தும்மலை நீங்கள் அடக்கப்பார்க்கிறீர்கள்.(சிணுங்கிக் கொண்டே) எனக்குத்தெரியும், அவள் மீண்டும் மீண்டும் உங்களை நினைக்கிறாள்.

ஆண்- இல்லை கண்ணே, அப்படியெல்லாம் எதுவுமில்லை. நான் எனக்கு வரும் தும்மலை அடக்கவில்லை. அந்தத் தும்மல்தான் வருவதுபோல் வருகிறது, அப்புறம் வரமாட்டேன் என்று மூக்கிலேயே சிக்கிக்கொள்கிறது. ஆங், ஆங்…அச்! அச்! (என்று தும்முகிறான்)

பெண்- (தன்னைமறந்து வழக்கம்போல வாழ்த்துகிறாள்) வாழ்க! நலமே வாழ்க!

ஆண்- எனக்குத் தெரியும் உன் கோபமெல்லாம் வெறும் பொய்க்கோபம். கண்ணே, என்னைத் தவறாக நினைக்காதே, சந்தேகப்படாதே! நாம் பிரிந்திருக்கும்போது நீ என்னை நினைக்கிறாயோ இல்லையோ, நான் எப்போதும் உன்னைத்தான் நினைப்பேன்!

பெண்- பார்த்தீர்களா பார்த்தீர்களா! ஒருவருக்கு எப்போது நினைவு வரும் ? ஒன்றை மறந்தால்தானே அது நினைவுக்கு வரும். நீங்கள் அடிக்கடி என்னை மறக்கிறீர்கள், அந்த மறதிக்குப் பிறகு – மறதிக்குப் பிறகு என் நினைவு வருகிறது. உம்…

ஆண்- இல்லை கண்ணே, எனக்கு மறதியே இல்லாத உறுதியான நினைவு. அதுவும் எப்போதுமே உன் நினைவு.

பெண்- அது சரி, அது சரி. உங்கள் அழகிய குடுமியில் ஒரு மாற்றம்.(கொஞ்சம் நிதானித்து அவன் குட்டைக் குடுமியைத் தொட்டுப்பார்த்து) என்றுமில்லாத காட்சியாய் இன்று பூச்சூடி வந்திருக்கிறீர்களே, ஏன் ? யாரோ ஒருத்திக்கு அழகு காட்டத்தானே இந்தப் பூச்சூடல்!

ஆண்- அம்மவோ அம்மவோ! அப்படியெல்லாம் எதுவும் இல்லை. பூவும் உனக்குத்தான் இந்தக் கோவும் உனக்குத்தான்! என் கண்களை உற்றுப்பார்! (என்று அவளை இவன் உற்றுப் பார்க்கிறான்)

பெண்- நீங்கள் என்னை உற்று உற்றுப் பார்ப்பதன் பொருள் எனக்கு நன்றாக விளங்குகிறது!

ஆண்- என்ன விளங்குகிறது ?

பெண்- எவளோ ஒருத்தியின் அழகோடு என்னழகை ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள். எனக்குத் தெரியாதா… அதுதான்! அதுதான்!

ஆண்- ஐயகோ ஐயகோ! ஐயப்படுவதற்கும் ஓர் அளவில்லையா!… நான் என்ன செய்வேன்!

(அந்தக் காதலர் இருவரின் காட்சி அப்படியே இருளில் மறைய, அரங்கின் மறுகோடியில் வட்டமான ஒளியில் புலவரும் கவிஞரும் வருகின்றனர். அவர்களின் முன்னைய உரையாடல் தொடர்கிறது)

புலவர்- ஊடுதல் காதலுக்கு இன்பம்தான். அதுவே கூடுதலாகிவிட்டால் என்ன ஆகும் ?

கவிஞர்- என்ன ஆகும், நீங்கள் சொன்னதுபோல் கூடுதல், அதாவது கூடல்!

ஊடுதல் காமத்திற் கின்பம்! அதற்கின்பம்,

கூடி முயங்கப் பெறின்! (குறள் 1330)

புல- அது சரி கவிஞரே! நாம் இங்கே பார்த்த காதலரில் ஆண்மேல் பெண் கொள்ளும் ஐயம் உணவில் உப்புப்போல என்று சொல்லப்படும் ஊடலின் பாற்படுமேயன்றி ஐயத்தின் பாற்படுமோ!…

கவிஞ- ஆமாம் புலவரே! காதலர் என்ற நிலையில் அதற்குப்பெயர் ஊடல். காதல் முற்றிக் களவுமணம் வரை சென்று தொடரும் வாழ்க்கையிலே அது நடந்தால், அது கானல்வரிக் காட்சிபோல் ஆகிவிடாதா ?

புல- தமிழ்க்காவியங்களில் மணிமுடியான சிலப்பதிகாரத்தில் வரும் கானல்வரிக் காட்சியைத்தானே சொல்லுகிறீர்கள்!

கவிஞ- ஆமாம் புலவரே! இளங்கோ தந்த சிலம்பின் கதைப்படி கோவலன் மனைவி கண்ணகியின் வாழ்வை அறிந்தோ அறியாமலோ எடுத்துக்கொண்ட மாதவியின் காதல் வாழ்வைக் கானல்வரிப் பாடல் வடிவிலே வரும் ஊடல் இடறுகிறது.

புல- ஊடலுக்கு ஐயம்தான் முதல் ஊற்றுக்கண். ஆண் பெண் இருவருக்குமே ஊடல் வரும். ஊடல் நேரத்தில் பெண் பொறுமை காக்கிறாள். ஆண் ஆத்திரப்படுகிறான், அவசரப்படுகிறான்!

கவிஞ- ஆமாம் புலவரே! கோவலன் மாதவி ஊடல் காட்சி அப்படித்தான் முடிகிறது. இந்திரவிழாவின் உச்சமாக நிகழும் காதல் விளையாட்டுகளில் ஒன்றுதான் கோவலன் மாதவி பாடும் கானல் வரி. கோவலன், தான் யாரோ ஒரு பெண்ணை நினைத்துப் பாடுவதுபோல முதலில் பாடுகிறான். அந்தப் பாடலை வாங்கி, ஏங்கி அவளும் அப்படியே பாடுகிறாள்.

(வட்ட ஒளியில் தெரிந்த புலவரும் கவிஞரும் இருளில் மறைய, மொத்த அரங்கையும் இருள் மூடுகிறது.)

(காட்சி நிறைவு, நாடகம் தொடரும்)

—-

thiru36@streamyx.com

Series Navigation