ஜனா கே
நானும் என் மௌனமும்
———–
நதிக்கரையில் அகன்ற மரத்தடியின்
தனித்த இருக்கையில் நானும்
என் மௌனமும்
கிளையை பிரிந்த இலையின்
காதில் கிசுகிசுத்து செல்லும் தென்றல்
என் ஈரமான நினைவுகளை
என்னை ஆற்றுப்படுத்துவதாய் மெல்லத்தழுவி
பின் தள்ளிவிழும்
என் நினைவுசுமந்த இலை
சில குளிர்ந்த தருணங்களையும்
கடைசியாய் ஓர் கனத்த நினைவையும்
காற்றும் இலையும் பேசியிருக்கையில்
தூங்கிபோயிருக்கும் என் மௌனம்
ஒற்றைத்துளி கண்ணீரோடு
மீண்டும் சந்திப்போமென எனக்குள் சொல்லி
மௌனம் பிரிந்து மெல்ல நடப்பேன்
ஒற்றை இலையோடு
தூங்காதிருப்பவனின் இரவு…
—–
அந்தரத்தில் உடலை தக்கையென மிதக்கவிட்டு
இருளைபிழிந்து கண்களில் ஊற்றி
தூக்கத்தின் பாதையில் அலைந்து திரியும்
நினைவுகளையெல்லாம் அடக்கிவிட்டு
தூக்கத்தை சேருவதற்குள்
பின்னாலிருந்து அழைப்பு வருகிறது
அடுத்தநாளை தொடங்கவாவென
எனக்கே தெரியாத என் ரகசியங்கள்
என்னிடமே ஒளிந்திருக்கின்றன
எனக்கே தெரியாத ரகசியங்கள்
கனவில் பார்த்ததெல்லாம்
காலையில் மறந்த ரகசியம்
படுக்கையை திருப்பிபோட்டதில்
மூச்சுத்திணறி இறந்த ரகசியங்கள்
ரகசியமென காதில் சொல்லிப்போன
புரியாத மொழியின் ரகசியங்கள்
காற்று இழுத்து வந்து
என் அறையில் போட்டுப்போன
பெயர் தெரியாதவனின் தற்கொலை
செய்துகொள்ளும் முறைகளின் பட்டியலில்
எந்த முறையில் செத்துப்போனான்
என்ற ரகசியம்
யாருமில்லாத வேளைகளில்
என் குரல்மட்டும் வெளியே வந்து
என்னிடமே எப்படி பேசுகிறது
என்ற ரகசியம்
இப்படி என்னிடமே இருக்கின்றன
எனக்கே தெரியாத ரகசியங்கள்
மழைக்கு ஒதுங்கிய நினைவுகள்
————————
மழை பெய்து கொண்டிருந்தது
சிமெண்ட் பலகையின்
காலடித்தடங்களில் தெறித்த
நீரோடு சில நிகழ்வுகளும்
தெறித்தன
உதட்டுவரி பள்ளங்கள் பதிந்த
தேநீர் கோப்பையில் இருந்து
உதடுகள் வழி பொசுக்கப்பட்டன
சில நினைவுகள்
பழுப்பேறிப்போன காகிதங்கள்
படபடத்ததில் சிதறிப்போயின
சில கையெழுத்துகள்
கிர்ர்ரென இழுத்து
அடிநெஞ்சிலிருந்து துப்பிவிட்டு
சாம்பல் கொண்டு
மூடவேண்டியதாயிற்று
சில நினைவுகளை
இனிமேல் இந்த
இடிந்த வீடு பக்கம்
மழைக்கு கூட ஒதுங்கக்கூடாது
போதும் எனக்கு…
——-
சடசடவென ஆரம்பித்து
சட்டென நிற்கும் மழைக்குபின்
செம்மண் கொடுக்கும் வாசத்திற்கு
நிகரான சுகந்தம் வேறெதுவும்
தருவதில்லை
————————————————————-
ஒரே நாள் பிஸ்கட் உண்ட
பெட்டிகடை நாய்குட்டி என் கை
நக்கும் ஈரம் தரும்
மகிழ்ச்சியை போல்
வேறெதுவும் தந்ததில்லை
————————————————————–
நீ எனை கை விட்ட
அந்த பனி இரவின்
அடர்த்தி போல்
நீளம் போல்
வேறெதுவும் இருந்ததில்லை
அந்த கடுங்குளிருக்கான
வெப்பத்தை என் செல்ல
நாயின் கண்ணீர்போல்
எந்த கம்பளியின் கதகதப்பும்
தேநீரின் சூடும் தந்ததில்லை.
———————————————-
ஓர் இறுகிய கணத்தை
இதமாக்க,
குளிர்ந்த தென்றலும்
சிறு மலரும்
போதாமல் இருந்ததில்லை.
குரங்குகள் அழித்த கானகம்
அழிக்கப்பட்ட கானகத்தினுள்
எழுப்பபட்ட சுவர்களுக்கிடையில்
அமர்ந்திருக்கின்றன பரிணாமப்பட்ட
குரங்குகள்
ஒரு பெட்டிக்குள்ளிருந்து
சுவரில் பட்டு எதிரொலிக்கிறது
கண்ணில் கானகம் மறையா
ஒரு சிங்கத்தின் கர்ஜனை
k.m.janarthanan@gmail.com
- அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா?
- மாய ருசி
- பிணங்கள் விழும் காலை
- ஜனா கே – கவிதைகள்
- அரிதார அரசியல் – பி.ஏ.ஷேக் தாவூத் பற்றி..
- “அநங்கம்” மலேசிய இலக்கியத்தின் மாற்று அடையாளம்
- மறுபடியும் பட்டு அல்லது காஞ்சீவரம்
- “தவம் செய்த தவம்” – கவிதை நூல் பற்றிய சில எண்ணங்கள்:-
- காஞ்சியில் அண்ணாவின் இல்லத்தில்
- சாகித்திய அகாதமியின் : Writers in Residence
- இரவில் நான் உன்னிடம் வரபோவதில்லை
- பெண் கவிதைகள் மூன்று
- சமாட் சைட் மலாய் கவிதைகள்
- பலிபீடம்
- மொழி வளர்ப்பவர்கள்
- ப.மதியழகன் கவிதைகள்
- அம்மையும் அடுத்த ப்ளாட் குழந்தைகளும்
- வாழும் பூக்கள்
- தொலைந்த கிராமம்
- வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…
- தலைவன் இருக்கிறார்
- எட்டிப் பார்க்கும் கடவுளும் விமர்சனங்களும் எதிர்வினைகளும்
- ‘யோகம் தரும் யோகா
- ஜாதிக்காய் கிராமத்தின் அழிவு
- ஏழைகளின் சிரிப்பில்
- இந்தியக் கணினியுகமும், மனித சக்தி வளர்ச்சியும்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்திமூன்று
- மனிதர்கள் எந்திரர்களின் உணர்வுகளை புரிந்து நடக்கவேண்டும்
- விரல் வித்தை
- அடையாளம்