Submission – ஒரு குறும்படம், மற்றொரு ஃபட்வா

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

ஆசாரகீனன்


முழு உடலையும் மறைக்கும் உடையணிந்த ஒரு பெண். கண்கள் மட்டும் வெளியே தெரியும் அந்தப் பெண் தொழுகையை ஆரம்பிக்கிறாள். அவளது மேலாடை மெல்லியதாக கண்ணாடி போல உரு மாறுகிறது. அவளது மார்பிலும் வயிற்றிலும் குரானின் வரிகள் தெரிகின்றன.

மேலும் சில பெண்கள் தோன்றுகிறார்கள். திருமண உடையில் ஒரு மணப்பெண். அவள் முதுகுப் பகுதி திறந்திருக்கிறது. அதிலும் குரான் வரிகள். ஓர் ஆண் தன் உடைமையான பெண்ணை அவன் விரும்பும் நேரத்தில், அவன் விரும்பும் இடத்தில், அவன் விரும்பும் விதத்திலெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற இறைவனின் கட்டளை அவள் முதுகில் எழுதப்பட்டுள்ளது.

உருவங்கள் மாறுகின்றன. இன்னொரு பெண் தரையில் விழுந்து கிடக்கிறாள். அவளது முதுகிலும், கால்களிலும் சாட்டையால் அடிக்கப்பட்டதன் ரத்த விளார்கள். காயங்கள் நிறைந்த அவள் உடலில் காணப்படும் குரான் வாசகம் சொல்வதோ தகாத உறவு வைத்துக்கொண்டாலோ அல்லது திருமணத்தை மீறிய பாலுறவு கொண்டாலோ அதற்குத் தண்டனை 100 கசை அடிகள் என்பதை. இக் காட்சியின் போது சாட்டையின் உறுமல் ஒலி நம்மை உறைய வைக்கிறது. மென்மையான இசையின் பின்னணியில் அரேபிய சித்திர எழுத்துகளின் அச்சுறுத்தும் எழில் நம் கண்முன் விரிகிறது.

– இக்காட்சிகள் இடம்பெற்றிருப்பது ‘சரணாகதி ‘ (Submission) என்ற சுமார் 10-நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படத்தில். இது சமீபத்தில் டச்சு (நெதர்லாந்து) தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. அயான் ஹிர்ஸி அலி (Ayaan Hirsi Ali) என்ற பெண்ணே இப் படத்தின் கதையை எழுதியவர். இவர் சோமாலியா நாட்டிலிருந்து அகதியாக வந்து தஞ்சம் புகுந்தவர். தற்போது நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். இப்படம் ஆகஸ்டு மாதம் திரையிடப்பட்டதில் இருந்தே நாடு தழுவிய அளவில் ஒரு பெரிய சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது.

34 வயதாகும் ஹிர்ஸி அலி ஒரு முஸ்லிமாகப் பிறந்து வளர்ந்தவர் என்றாலும், பின்னர் தம் மத நம்பிக்கையைக் கைவிட்டவர். இஸ்லாமிய நாடுகளில் மட்டுமல்லாமல் ஐரோப்பாவில் வாழும் முஸ்லிம் பெண்களும் இத்தகைய வெளியே தெரிய வராத, பரந்துபட்ட வன்முறைக்கு ஆளாகும் கொடுமையை பிறர் கவனத்துக்கு கொண்டு வருவதே தன்னுடைய நோக்கம் என்றும், இஸ்லாத்தைத் தாக்குவது அல்ல என்றும் சொல்கிறார் ஹிர்ஸி அலி.

வன் கொடுமைகள், முறை தவறிய உறவுகள், கட்டாயத் திருமணம் மற்றும் புலம் பெயர்ந்த இளம் பெண்கள் தற்கொலை செய்து கொள்வது ஆகியவற்றை பிம்பங்கள் வாயிலாகச் சொல்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் இவர். இப் பிரச்சினைகள் பற்றி இவர் கடந்த சில ஆண்டுகளாக பேசியும், எழுதியும் வந்தாலும் மக்களிடமிருந்து இவை மிகவும் மறைக்கப்பட்டதாகவே இருந்து வருவதாகவும் ஹிர்ஸி அலி கருதுகிறார். ‘முஸ்லீம்கள் இதை மறுக்கிறார்கள், பல டச்சுக்காரர்கள் இதைப் பற்றிப் பேசினால் மதக் கலவரம் வந்து விடும் என்றும் தாம் இனவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு விடுவோமோ என்றும் அஞ்சுகிறார்கள் ‘, என்றும் இவர் குறிப்பிடுகிறார்.

இக் குறும்படத்தில் சொல்லப்படும் நான்கு பெண்களின் கதைகளும் இஸ்லாத்தை – குறிப்பாக ஐரோப்பாவில் எப்படி நவீனப்படுத்துவது என்பது பற்றிய புதிய விவாதத்தை நெதர்லாந்தில் கிளப்பியிருக்கிறது.

நெதர்லாந்தின் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தங்கள் வழக்கப்படி, ஹிர்ஸி அலிக்கு மரண தண்டனை விதித்துள்ளனர். இவரை 24-மணி நேரமும் ஆயுதம் தாங்கிய இரு பாதுகாவலர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

16 மிலியன் மக்கள் தொகை கொண்ட நெதர்லாந்தில் சுமார் ஒரு மிலியன் முஸ்லீம்கள் வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள். இவர்களுள் ஹிர்ஸி அலி போன்றவர்கள் மிகச் சிலரே. பிறப்புறுப்பை வெட்டிச் சிதைப்பது, அடி உதை, பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைப்பது போன்ற காட்டுமிராண்டித்தனமான பழங்கால வழக்கங்களைப் கடைபிடிக்காமலேயே இஸ்லாத்தைப் பின்பற்ற முடியும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் இந்தச் சிலர். மேலும், இவர்கள் இஸ்லாத்தை நவீனப்படுத்துவதை பெண்கள் – குறிப்பாக ஐரோப்பிய முஸ்லிம் பெண்களே முன்னின்று நடத்த வேண்டும் என்றும் சொல்கின்றனர்.

இந்தப் படத்தின் இயக்குனர் தியோ வான் கோ. இந்தப் படத்தின் அரசியலை மறுக்க முடியாது என்கிறார் இவர். ஆனாலும் முஸ்லீம்கள் இப் படத்தைக் கண்டு இவ்வளவு அதிர்ச்சியடைவது தேவையற்றது என்கிறார். இப்படத்தை எடுப்பதில் தாம் மிகவும் எச்சரிக்கையாக இருந்தாகவும், அதிர்ச்சி தரவேண்டும் என்று தான் விரும்பியிருந்தால் இக் குறும்படம் வேறு மாதிரி இருந்திருக்கும் என்கிறார் வான் கோ.

இக் குறும்படம் இஸ்லாமிய தொழுகையுடன் ஆரம்பிக்கிறது. பின்னர், கதைசொல்லி தங்கள் துன்பங்களை நீக்கும்படி அல்லாவிடம் முறையிடும் நான்கு பெண்களின் கதையைச் சொல்லத் தொடங்குகிறார். நால்வருள் ஒரு பெண் கட்டாயத்தின் பேரில் தான் மிகவும் வெறுக்கும் ஆணையே திருமணம் செய்து கொள்ளும்படி நேர்ந்து விடுகிறது. மற்றொரு பெண் தன் அப்பாவின் சகோதரராலேயே கற்பழிக்கப்பட்டு, கருவுறுகிறாள். மற்றொரு பெண் தன் காதலனுடன் உடலுறவு கொண்டதற்காக சாட்டையால் அடிக்கப்படுகிறாள். மற்றொரு பெண்ணோ தன் கணவனால் தொடந்து அடித்து நொறுக்கப்படுகிறாள். இப் பெண்கள் அனைவரும் அல்லாவிடம் மிகவும் பக்தி கொண்டவர்கள் என்றாலும் அல்லா தங்களைக் கைவிட்டு விட்டதாக உணர்கிறார்கள்.

அடித்து நொறுக்கப்பட்ட ஒரு பரிதாபமான முகம் க்ளோஸ்-அப்பில் காட்டப்படும் போது, கதைசொல்லி சொல்கிறார்: ‘அல்லாவே, ஈடிணை இல்லாதவனே! பெண்களைப் பாதுகாப்பவர்கள் ஆண்களே என்று நீ சொல்கிறாய், ஏனென்றால் பெண்களை விட ஆண்களுக்கு அதிக வலிமையைத் தந்தவன் நீ. ஆனால், நானோ வாரத்துக்கு ஒரு முறையாவது என் கணவனின் கை வலிமையை என் முகத்தில் உணர்கிறேன். ‘

கற்பழிக்கப்பட்ட பெண் சொல்கிறாள்: ‘அல்லா, நீ விரும்பியபடியே என் உடலை முழுவதும் மறைத்தபடியே எப்போதும் இருக்கிறேன். இப்போது நான் என்னைக் காக்கச் சொல்லி வேண்டும் போதும் என்னை எதிர்நோக்கும் சவக்குழியைப் போலவே நீ மெளனமாக இருக்கிறாய். ‘

நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கும் ஹிர்ஸி அலி முஸ்லிம் பெண்களின் அடிப்படை மனித உரிமைகள் பற்றி The Son Factory, The Cage of Virgins என்ற இரு புத்தகங்களையும் எழுதியுள்ளார். மேலும், நெதர்லாந்து நாட்டில் மத அடிப்படையில் ‘கெளவரக் கொலை ‘ என்ற பெயரில் பல இளம் முஸ்லிம் பெண்கள் தங்கள் சகோதரர்கள், தந்தை மற்றும் உறவினர்களாலேயே கொல்லப்படுவதாகவும், அதைக் காவல்துறையினர் குடும்பத் தகராறு என்று பதிவு செய்து மூடி மறைத்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தப் படத்தின் ஒரு சில காட்சிகளையும் இயக்குனர் வான் கோவுடனான உரையாடலையும் பின் வரும் ரியல் ஆடியோ கோப்பில் காணலாம்:

http://cgi.omroep.nl/cgi-bin/streams ?/tv/nps/nova/bb.20040830-a.rm ?proto=rtsp&start=0:0:1:0.165&end=0:0:7:23.51

சொல்லவே வேண்டியதில்லை. இருந்தாலும் ஊதுகிற சங்கை ஊதி வைப்போம். ஐரோப்பிய இடதுசாரிகள் இது பற்றி வாயே திறக்கவில்லை. ஏனென்றால், ஏதேனும் சொல்லித் தொலைத்தால் இவர்களின் தற்கால நண்பர்களான அரேபியர்களுக்குக் கோபம் வந்துவிடும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வேரறுக்க இன்று இடதுசாரிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவது வஹாபி+சவுதி அரேபிய உலக ஏகாதிபத்தியம் மட்டும்தானே!

இந்திய இடதுசாரிகள் பற்றியோ கேட்கவே வேண்டாம். இக் குறும்படம் இந்தியாவில் கவனம் பெறாமல் தடுக்க எல்லா முயற்சிகளையும் வெளிப்படையாகவே செய்வார்கள். மேற்கு வங்க அரசு இதை அதிகாரபூர்வமாகவே தடை செய்யும். ‘மவுண்ட் ரோடு மாஒ ‘ ஹிண்டு பத்திரிகை வழக்கம் போல இதைப் பற்றிக் கண்டு கொள்ளாது அல்லது எதிர்மறையான செய்திகளை வெளியிடும்.

அண்மையில் வெளிவந்துள்ள சீன தேசியத்தை வலியுறுத்தும் ‘ஹீரோ ‘ (ஜெட் லி நடித்தது) என்ற சீன மொழிப் படத்திற்கு இந்தியாவில் வரவேற்பை உருவாக்கி எவ்வளவு சீக்கிரம் இந்தியாவை சீனாவின் காலனி ஆக்கலாம் என்பது போன்ற தீவிர கவலைகள் ஹிண்டுவுக்கு இருக்கும்போது எங்கோ ஐரோப்பாவில் இஸ்லாம் மீது மாற்றுச் சிந்தனை உள்ள முஸ்லிம் பெண்கள் விமர்சனம் வைப்பது குறித்து அக்கறை காட்டுவதை இப் பத்திரிகையிடம் எதிர்பார்க்க முடியாதுதானே ?

இன்னொரு தகவல். இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் இடதுசாரியினருக்கும், குறிப்பாக அமெரிக்க இடதுசாரிகளுக்கும் உள்ள உறவை அம்பலப்படுத்தும் ஒரு புத்தகம் வெளிவந்திருக்கிறது. David Horowitz எழுதியுள்ள Unholy Alliance : Radical Islam and the American Left என்ற இந்தப் புத்தகத்தை ஆங்கிலம் அறிந்த எந்த ஓர் இடதுசாரியும் தப்பித்தவறி கூட படித்து விடாமல் இருந்து தம் புனிதத்தைக் காத்துக் கொள்வதோடு, ஸ்டாலின், மாஒ, பால்பாட் போன்ற தங்கள் இஷ்ட தெய்வங்களின் கடைக் கண் பார்வைக்குத் தகுதி உள்ளவர்களாகவே தொடர்ந்து விளங்கி வருவார்களாக.

aacharakeen@yahoo.com

பின் குறிப்பு:

நியூயார்க் டைம்ஸ் மற்றும் எக்ஸ்பேடிகா பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது

ஹிர்ஸி அலி

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்