Last kilo byte – 17 கொக்கு மீனை திங்குமா ?

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue

கே. ஆர். மணி



சில்லறை வியாபாரத்தில் பெரிய நிறுவனங்கள் இறங்குவதில் ஏற்படும் மாற்றங்களை அறிய ICRIER என்கிற ஆராய்ச்சி நிறுவனம் பத்து நகரங்களில், 2020 சில்லறை வியாபாரிகள், 1300க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், 100 இடைத்தரகர்கள் மற்றும் கிட்டத்தட்ட 200
விவசாயிகளிடம் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. ஆச்சரியமாக, அதிசியமாக அந்த நிறுவனத்தின் வலையதள மின்னஞ்சலுக்கு அதனது நீண்ட அறிக்கை கேட்டு அனுப்ப, அடுத்தநாளே 200 பக்கத்திற்க்கும் மேற்பட்ட அந்த அறிக்கை வந்துசேர்ந்தது.

கார்பரேட் என்றாலே பயம், பயம். அவைகள் உட்கார்ந்தால் பயம், நின்றால் பயம். குளித்தால் பயம், குனிந்தால் பயம் என்கிற பய பஜனைகளை அதிகமாக சில அரசியல் கட்சிகள் தேவைக்கதிகமாகவே சொல்லிவைத்திருக்கின்றன. என்னெல்லாம் சொல்லப்பட்டன. சொல்லப்படுகின்றன.

அ) பெரிய மீன்கள் சந்தைக்கு வருவதால் சின்ன சின்ன சில்லறை கடைகள் அஸ்தனமாகிவிடும், அவர்களின் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்படும்

ஆ) சிறு தொழில் நசிந்து பெருமுதலாளிகள் தேசத்தை லாபத்திற்காக மட்டுமே கபளீகரம் செய்துவிடுவார்கள். ஓலிகாபாலி ஒரு சிலரால் மட்டுமே சந்தை கட்டுப்படுத்தப்படும் என்கிற நிலைமை உருவாகும்

இ) சந்தை பொருளாதாரம் என்கிற பெயரில் பெருமீன் கொழுக்க சிறுமீன் தெருவுக்கு வரும். பெரிய நிறுவனங்களின் பிராண்டை விற்கும் சிறுநிறுவனங்களாக, அவர்களது Supply chainல் ஒரு கணிக்கப்படாத
அங்கமாக மாறலாம்.

ஈ) விவசாயிகளின் கைகள் மிகப்பெரிய எண்ணிக்கை வாங்குதல்(Bulk volume purchase) என்கிற பெயரில் மறைமுகமாய் முறுக்கப்படும். வாங்குபவரின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளதால் நிகர லாபம் சுருக்கப்படலாம்.

எ) பொருள்களின் விலைகள் ஒரு சிலரால் தீர்மானிக்கப்பட்டு கூரையைத்தொடும். வேறுவழியின்றி அவைகள் மிகப் பெரும்பாலாராலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

பெருமீன்கள் சிறுமீன்களை முழுங்கியதா முழுங்குமா.. முழுங்கமுடியுமா… இதெல்லாம் சரி, அறிக்கை என்ன சொல்கிறது ?

அ) சிறு சில்லறை வியாபாரிகளின் 8-9% நிகரலாபம் முதலிரண்டு வருடங்களில் குறைகிறது. ஆனால் அது ஐந்து வருடங்களில் கிட்டத்தட்ட சரிசெய்யப்பட்டுவிடுகிறது.

ஆ) கடந்த 21 மாதங்களில் 151 சிறு சில்லரை வியாபாரங்கள் மூடப்பட்டன். அதில் 61 வியாபாரங்கள் பெருநிறுவனங்களில் போட்டிகளால்தான் மூடப்பட்டன. இது 4.2%த்தை குறிக்கிறது.

இ) பாதிக்கு பாதிபேர் மொத்தவிற்பனையில் சரிவு ஏற்பட்டதாக சொன்னார்கள். மற்றவர்கள் தங்களது விற்பனையில் ஏற்றமோ, மாற்றமோயில்லை என்பதை குறிப்பிட்டார்கள். மேற்கு, வடக்கு இந்தியாவில் இந்தபாதிப்பு அதிகமாக தென்பட்டதாக தெரிகிறது.

ஈ) சில்லறை வியாபாரிகளின் வியாபார மாற்றத்தில், பெருமீன்களின் வரவால் துணிவியாபாரம் அதிகமாகவும், பழகாய்கறி வியாபாரம் குறைவாகவும் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
[துணிகளின் வாங்கும் முறையில் ஏற்பட்ட மாற்றங்களும் இதற்கு காரணமாயிருக்கலாம். துணிகள் வாங்கி தைக்கும் முறை மறைந்து எழுந்து வளரும் பிராண்டுகளின் ரெடிமேட் யுகம் காரணமாயிருக்கலாம். எங்கு வாங்கினால் என்ன, வெங்காயம் வெங்காயம்தானெ..? ]

உ) ஆச்சரியமாக அடிதட்டு வாடிக்கையாளர்கள் பெரிய மால்களில் (Mall) மற்றும் சூப்பர் மார்க்கெட்களிலும் குறைந்தவிலையில் அதிகமான பொருட்களை பெறுகிறார்கள். விவசாயிகள் தங்கள் எப்போதும் மண்டிக்கு விற்கும் விலையை விட 60% விலை அதிகமான
விலைக்கு விற்கிறார்கள்.

ஊ) தற்போது கிட்டத்தட்ட 360 பில்லியன் டாலர் மதிப்புள்ள சில்லறை சந்தை 590 பில்லியன் டாலராக 2011-12ல் மாறலாம். ஓவ்வொரு வருடமும் 16% வளர்ச்சியை கொண்டு பெருகும்.

எ) இந்த பெரிய சந்தையில் 96% நிறுவனப்படாத சின்ன சில்லறை வியாபாரிகளே ஆட்சி செலுத்துவார்கள். பெரு நிறுவனங்கள் மொத்த சந்தையில் வெறும் 4 சதவீதம் மட்டும் கைப்பற்றும். – இது முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஓன்று.

ஏ) ஆனால் பெருமீன்கள் 40-50% தனிப்பட்ட வளர்ச்சி ஆண்டிற்கு அடையும்போது சின்ன மீன்கள் வருடத்திற்கு 10% மட்டுமே வளர்ச்சியடையும்.

[தொழில்நுட்ப வளர்ச்சி, கொஞ்ச சந்தைநோக்கிய கூரான வியூகமைத்தல் என்கிற சில மாற்றங்களை கொண்டுவருவதன் மூலம் சிறு சில்லறை வியாபாரிகளும் மேலும் வளர வாய்ப்புள்ளது என்கிறார் ICRIERன் நிர்வாக இயக்குநர்]

உலகமயாமதலின் முக்கிய கட்டத்திலிருக்கும் நமக்கு சில்லறை வியாபாரம், மருந்து, இன்சுரன்ஸ், போன்ற அடிமட்ட மக்களை தொடும் வியாபாரத்துறைகளில் நேரப்போகிற மாற்றங்களை அறிவியல் பூர்வமாக அணுகுவதும், நேரத்திற்கேற்ப, ஒரு செயலால் விளைந்த பின்னூட்டத்திற்கேற்ப (Feedback), மாறும் சூழலுக்கேற்ப மாற்றிக்கொண்டேயிருப்பது அவசியமான ஓன்றாகும். கூரியகவனம், தற்கால, நடுக்கால மற்றும் நீண்டகாலத்தேவைக்கேற்ப தங்களது எண்ணங்களை மாற்றிக்கொள்வது ஒரு நிறுவனத்திற்குமட்டுமில்ல ஒரு தேசத்திற்கு தேவையானது. ஜாக்வெல்ஸ் GE சொல்வதுபோல, ஒரு நிறுவனமோ( தேசமோ) தற்காலத்திற்குமட்டும் வெற்றி பெற்று அதன் விளைவுகளால் எதிர்கால தோல்விக்கு தானே குழிபறித்துக்கொள்கிறதென்றால் அதைவிட முட்டாள்தனம் வேறெதுவுமிருக்க முடியாது.

இதெல்லாம் நிறுவனத்திற்கு அடித்தொழுகிற அரசியல்வாதிகளின் ஞானித்தனமான அறிக்கைகள். சுத்த ஹம்பக் என்கிறார் என் சிகப்பு சிந்தனை நண்பர். எனக்கு அப்படித்தோன்றவில்லை. சிறுவியாபாரிகளை நாம் குறைத்து மதிப்பிடுவதாக தோன்றுகிறது. சந்தைகளுக்கு ஏற்ப தங்களை, தங்கள் தொழில் நுட்பங்களை மாற்றிகொள்ள தயங்காதவர்கள் சிறுவியாபாரிகள். பெரிய நிறுவனங்களைவிட அவர்கள்
வெகு எளிதாக தங்களை மாற்றிகொள்ளமுடியும். பெருநிறுவனங்களுக்கு அதீத வாய்ப்பு கொடுக்காமல், சிறுவியாபாரிகளுக்கு சில சில சலுகை கொடுப்பதன் மூலம் ஒரே மாதிரியான லெவல் ப்ளெயன்ங் (Level playing) தளத்தை ஏற்படுத்திகொடுக்கமுடியும்.

கணிப்பொறிகள் இந்தியாவின் வேலை வாய்ப்பை சுத்தமாக அழித்துவிடும், மக்கட்தொகை பெருகிய இந்தியதேசத்திற்கு இத்தகைய தொழில்நுட்பங்கள் தேவையில்லை என்று 80களின் இறுதியில் மிகப்பெரிய குரல் எழுந்தது. கணிப்பொறி ஏன் மக்களுக்கு அன்றாட வாழ்க்கையில் உதவாது என்று அப்போது கல்லூரியில் நாங்கள் தலையை பிய்த்துக்கொண்டோம். மாற்றங்கள் மானுடத்தின் அவசியம் என்றாலும் அதனை பற்றிய பயம்தான் நம்மை பய மாயைக்கு கொண்டுசெல்லுகிறது. அதை பற்றிய உண்மை அறிவை பயத்தின் அளவை
குறைக்கலாம்.

கொக்கு மீனை திங்குமா, இல்லையினா மீனை கொக்கை திங்குமா.
எதுவும் எதையும் திங்காது என்கிறது கள ஆய்வு.


netwealthcreator@gmail.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி