கடிதம் – சுந்தர ராமசாமி குறித்த ஜெயமோகனின் நூல் வெளியீடு

This entry is part [part not set] of 33 in the series 20051125_Issue

அ பாரதி


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு

வணக்கம்.

சுந்தர ராமசாமி குறித்த ஜெயமோகனின் நூல் வெளியீடு பற்றிய அறிவிப்பைக் கண்டேன். எரியூட்டுவதற்குள் 80 பக்கக் கட்டுரை எழுதியவர் ஜெயமோகன். சு.ரா. இறந்து ஒரு மாதம் கழித்து இவர் வெளியிடும் நூல் குறைந்தது 500 பக்கம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். 200 பக்கங்களுக்குள் நிறுத்திக்கொண்டுவிட்டார். பின்னாளில் இன்னும் எழுத்க்கூடும் என நினைத்துச் சமாதானம் செய்துகொண்டேன். அதுவும் எதிர்வினைகயாக யாரேனும் ஓரிரு வரிகள் எழுதித் தொலைத்துவிட்டால் அவர்களைத் திருப்பியடிக்க சில நூறு பக்கங்களாவது கைவசம் இருக்க வேண்டுமல்லவா ?

நூலுக்கான அறிமுக (விளம்பர ?) குறிப்பைப் பார்த்தேன். சு.ரா.விற்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட தினத்தின் காட்சிகள் கல் நெஞ்சையும் உருக்கும்வண்ணம் சித்தரிக்கப்பட்டிருந்தன. சு.ரா.வை மிகவும் விரும்பும் வாசகர்களில் பலரை இந்த வரிகள் மிகவும் பாதிக்கும் என்ற வகையில் நூலுக்கான சிறந்த விளம்பரமாக இது அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நூல்கள் நிறைய வர வேண்டும், அவை நன்றாக விற்க வேண்டும் என விரும்புகிறேன். நூல்களுக்குச் சிறந்த முறையில் விளம்பரம் செய்வதையும் இவ்வகையில் ஆதரிக்கிறேன். ஆனால் சு.ரா.வின் சடலத்தின் பின்னணியில் அதைச் செய்திருப்பது அவ்வளவு கெளரவமான செயலாக இல்லை. உயிர்மையில் வெளியான ஜெயமோகனின் கட்டுரையில் சு.ரா.வின் ஆளுமை மற்றும் படைப்புப் பற்றி உயர்வாகப் பேசும் வரிகள் பல உள்ளன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டுச் சடலத்தின் பின்னணியில் நூலை முன்வைப்பது நாகரிகமான செயலாகப் படவில்லை.

சு.ரா. உயிரோடு இருக்கும்போது இதைவிடவும் மோசமான முறைகளில் அவரை ஜெயமோகன் புண்படுத்தியதுண்டு என்பதற்கு என்னிடம் ஏராளமான ஆதாரங்கள் – இருநூற்றுச் சொச்சம் பக்கங்கள் எழுதும் அளவுக்கு – உள்ளன. சொல் புதிது இதழுக்கு சு.ரா. எழுதிய வாசகர் கடிதத்தைக்கூட உரிய முறையில் வெளியிட மறுத்தவர்தான் இந்த சிஷ்யப் பிள்ளை. இதுபோலப் பல சம்பவங்கள் நடந்துள்ளன. இன்று உயிர்மையில் ‘உருக்க ‘மாக எழுதப்பட்டிருக்கும் கட்டுரையும் கண்டனத்திற்குரிய பல அம்சங்களைக் கொண்டிருக்கிறது. சு.ரா.வுக்குப் புகழஞ்சலி செலுத்தும் தோற்றத்துடன் சு.ரா.வை இழந்த சோகத்தைப் பேசினாலும் சு.ரா.வைப் பல கோணங்களிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அது தாழ்வாகச் சித்தரித்திருந்தது. மாதிரிக்குச் சில அம்சங்கள்:

– சு.ரா.வின் வாசிப்பு மிகவும் குறைபட்டது

– அவரது எழுத்து வெளிப்பாடு மிகவும் கட்டுப்படுத்தப்பட்டு இயல்புத் தன்மை அற்றிருந்தது

– இந்தியா, மார்க்ஸியம், அமெரிக்கா ஆகியவை குறித்த அவரது பார்வைகள் வாசிப்பு மற்றும் தத்துவ அடித்தளம் அற்றவை

– தன்னைத் தாண்டிச் செல்லும் காலம் குறித்த வலி அவருக்கு இருந்தது,

– விஷ்ணுபுரம் போன்ற முயற்சிகளை அவர் பொறாமையுடநும் உதாசீனத்துடனும் அணுகினார்

– ஜே.ஜே. சில குறிப்புகளே தமிழிலக்கியத்தின் உச்சபட்ச சாதனை என நம்புபவர்களையே அவர் தன்னுடன் வைத்துக்கொண்டிருந்தார்

முதலான பல விஷத் துளிகள் கலந்த கண்ணீர் அஞ்சலிதான் அந்தக் கட்டுரை. இவை அனைத்தும் இயல்பான முறையில் வெளிப்பட்டிருந்த அக்கட்டுரை சுந்தர ராமசாமியை விடவும் ஜெயமோகனைப் பற்றியே அதிக ‘உண்மை ‘களைப் பறைசாற்றியது. அந்த வகையில் அது முக்கியமான கட்டுரைதான். கட்டுரையில் தகவல் பிழைகளும் மலிந்திருந்தன. பிரகாசமான பல வரிகளினூடே பொதியப்பட்டிருந்த இந்தக் கண்ணி வெடிகள் பலரது கண்ணுக்குப் படவில்லை என்பதில் வியப்பில்லை. பட்டவர்களும் இதுபற்றிப் பேசுவதே சு.ரா.வின் நினைவைக் களங்கப்படுத்தும் செயல் என்று பேசாமல் இருந்திருக்கலாம். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆயினும் இறுதி மரியாதைக் காட்சிகளின் பின்னணியில் ஒரு நூல் அறிமுகப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் சிறிதளவேனும் இதைப் பற்றிப் பேச வேண்டும் எனத் தோன்றுகிறது. சு.ரா.வுடன் பல ஆழ்ந்த நட்பும் மதிப்பும் கொண்டுள்ள பலரும் – அவர்களில் சிலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள் – சு.ரா. பற்றிய ஜெயமோகனின் பார்வை மற்றும் அணுகுமுறை குறித்த தங்களது கருத்தை வெளிப்படையாக முன்வைப்பார்களா ?

*

கவிஞர் மனுஷ்ய புத்திரனுக்கு ஒரு வார்த்தை: சு.ரா. உயிரோடு இருந்தபோது அவரைப் பற்றி முருகேச பாண்டியன் எழுதிய கட்டுரையைப் பிரசுரிக்க மறுத்தது, அசோகமித்திரனை சு.ரா. அவதூறு செய்கிறார் என்ற அபாண்டமான குற்றச்சாட்டைக் கொண்ட ஜெயமோகனின் கட்டுரையைப் பிரசுரித்தது, சு.ரா. புகைப்படக் கண்காட்சியைக் கேலி செய்து கடிதம் எழுதிப் பலருக்கும் அதை அனுப்பியது எனக் கடைசிக் காலத்தில் சு.ராவுக்குக் ‘கசப்பின் விஷத்தைக் ‘ கொடுத்துவந்த மனுஷ்ய புத்திரன் அதற்காக மன்னிப்பும் கோரியிருக்கிறார். இந்த உணர்வின் வெளிப்பாடாய் இந்தக் கட்டுரையையும் நூலையும் வெளியிடுவதைத் தவிர்த்திருக்கலாம். அப்படி அவர் தவிர்க்காததால் தன் கைவசம் மிச்சமிருக்கும் விஷத்தை சு.ரா.வின் கல்லறையின் மீது தெளிக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

*

தன்னைப் பற்றியும் சு.ரா.வைப் பற்றியும் ஜெயமோகன் எழுதும் மகா வாக்கியங்களுக்கெல்லாம் விரிவாக பதில் எழுத முடியும். ஜெயமோகனுடனும் சு.ரா.வுடனும் நெருங்கிப் பழகியவன் என்னும் முறையில் இயல்பாகவே என்னால் இதில் பல விஷயங்களை ஆதாரபூர்வமாகவும் திட்டவட்டமாகவும் எதிர்கொள்ள முடியும். ஆனால் அதைச் செய்ய இது நேரமில்லை. சு.ரா. இறந்த செய்தி வந்து சேர்ந்த கணத்தின் கனம் மனத்தில் இன்னமும் கணிசமாகத் தங்கியிருக்கும் நிலையில் அவரது ஆளுமை, பங்களிப்பு, அவரைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் குறித்த விவாதங்களில் இறங்குவது உசிதமாகப் படவில்லை. எனவே துளியும் எனக்கு அதில் விருப்பமில்லை. உயிர்மையில் ஜெயமோகனின் கட்டுரையைப் படித்ததும் அதற்கு பதில் எழுத வேண்டும் என்ற என்று எழுந்த எண்ணத்தை இதன் காரணமாகவே இன்றளவிலும் செயல்படுத்தாமல் இருக்கிறேன். மிகுந்த செயலூக்கத்துடனும் அதிரடியாகவும் தன் கருத்தை முன்வைப்பவர்கள் சொல்வதே உண்மை/சரி என்பதாக ஆகிவிடக்கூடும் என்பதால் சிறிய அளவிலேனும் எதிர்ப்புக் குரல் பதிவாக வேண்டும் என்பதற்காக இந்தக் குறிப்பை வேறு வழியின்றி எழுதுகிறேன்.

அ. பாரதி

aravindanmail@gmail.com

Series Navigation

அ பாரதி

அ பாரதி