கடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்த சொல்கிறதா ?

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

இப்னு பஷீர்


பெண்களை பெற்றவர்களுக்கே சுமையாக, மற்றவர்களுக்கு வெறும் போகப்பொருளாக, காட்சிப்பொருளாக, விளம்பரங்களில் ஒரு கவர்ச்சி அங்கமாக மதிப்பிட்டு வைத்திருக்கும் இக்காலத்தில், இஸ்லாம் அவர்களின் அந்தஸ்தை எந்த அளவுக்கு உயர்த்தி வைத்திருக்கிறது என்பதை விளக்க ஒரு முழு ‘திண்ணை ‘யும் போதாது.

பெண் குழந்தைகளை உயிருடன் குழி தோண்டி புதைத்துக் கொண்டிருந்த காட்டரபிகளிடையே வந்த இஸ்லாம், அந்த கொடிய பழக்கத்தை வேரறுத்து பெண்களும் ஆண்களுக்கு சரிநிகர் சமமாக வாழும் உரிமை பெற்றவர்கள் என்பதை நிலை நிறுத்தியது.

(இந்தக் கொடுமை நம் தமிழகத்தில் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்!)

ஆணும் பெண்ணும் ஒரே ஆத்மாவிலிருந்து படைக்கப்பட்டவர்கள் என்ற குர்ஆன் வசனம், அவர்களுக்கிடையே எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை என்று அறிவிக்கிறது. பெண்கள், கல்வியறிவு பெற, சொத்துக்கள் வாங்க, விற்க, வாரிசுரிமை பெற, கட்டாயத் திருமணத்தை நிராகரிக்க, விவாகரத்து கோர என அவர்களின் சம அந்த ?தை நிலை நாட்ட உரிமைகளை வழங்கியது இஸ்லாம்.

மேலும்,

திருமணத்தின் போது கணவன்தான் மனைவிக்கு ‘மஹர் ‘ தொகை கொடுத்து மணமுடிக்க வேண்டும்.

மனைவியின் சொத்தில், வருமானத்தில், கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை, அந்த மனைவியே விரும்பி அளித்தாலொழிய.

என மேலும் பல உரிமைகளையும், ஏழாம் நூற்றாண்டிலேயே, வழங்கியது இஸ்லாம்.

இன்றைய சூழ்நிலையில் உலகின் பல நாடுகளிலும் (இந்தியா உட்பட), மத, இன வேறுபாடின்றி, பெண்கள் பலவித கொடுமைகளுக்கும், அடக்குமுறைக்கும் ஆளாக்கப்படுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. இதில் சில முஸ்லிம்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய உண்மையே!

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளை, அவர்கள் பெற முடியாமல் முஸ்லிம் ஆண்களே தடையாக நிற்க என்ன காரணம் ?

– அவர்கள் இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களை சரியாக புரிந்து கொள்ளாதது.

– அவர்கள் வாழும் பகுதியில் உள்ள பிற மத பெரும்பான்மையினரின் கலாச்சாரங்களின் தாக்கம்.

இதற்கெல்லாம் இஸ்லாத்தையே குறை கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதம் அல்ல.

அயான் ஹிர் அலி இஸ்லாத்தை முழுமையாக புரிந்திருந்தால், அவர் தனது மத நம்பிக்கையை கைவிட நேர்ந்திருக்காது. கேரள எழுத்தாளரும் கவிஞருமான கமலா தாஸ் எத்தகைய முறபோக்கு சிந்தனை உடையவர் என்பதை நாடே அறியும். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவினார். ‘பிற்போக்கு எண்ணம் உடையது, பெண்களை அடிமைப்படுத்துகிறது ‘ என்றெல்லாம் வர்ணிக்கப்படும் இஸ்லாம், கமலா தாஸை எப்படி கவர்ந்தது ? அவரே சொல்கிறார், ?இரண்டு காரணங்கள்: 1. பர்தா முறை 2. இஸ்லாம் பெண்களுக்கு வழங்கும் பாதுகாப்பு. ? இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக காட்டப்படும் பர்தாவே, ஒரு முற்போக்கு சிந்தனை உள்ள பெண்மணியை இஸ்லாத்தின் பக்கம் கவர்ந்து இழுத்திருக்கிறது.

இஸ்லாத்தில் பிறந்த ஒருவர் அதை சரியாக புரிந்து கொள்ளாததால், அதை விட்டு வெளியேறி, அதன் கொள்கைகளை விமர்சனம் செய்து கொண்டுள்ளார். மாற்று மதத்தில் பிறந்த ஒருவர், இஸ்லாத்தின் கொள்கைகளால் கவரப்பட்டு இஸ்லாத்தை தழுவுகிறார். முன்னவருக்கு இஸ்லாம் கிடைத்தது by chance. அதன் பெருமையை அவரால் உணர முடியவில்லை. பின்னவருக்கு இஸ்லாம் by choice. இஸ்லாத்தில் பிறந்தவர்களைவிட, அதை புரிந்துணர்ந்து அதை தழுவுபவர்களே இஸ்லாத்தை நன்கு அறிந்தவர்கள்.

இப்னு பஷீர்

ibunubasheer@yahoo.com.sg

Series Navigation

இப்னு பஷீர்

இப்னு பஷீர்