கடிதம் அக்டோபர் 7, 2004 -சிந்தனையை சிதறடிக்கும் கருத்து திரிபுகள்

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

ஃபைசல்


மனுஸ்மிருதியும் ஆர்.எஸ்.எஸ்-ம் என்று நான் எழுதியதற்குண்டான பதில்கடிதமாக நீலகண்டன் எழுதியதை பார்த்தேன். உண்மைச் சுடும் என்பார்கள். அவரை அதிகமாகவே சுட்டுவிட்டது என்று நினைக்கிறேன். அவசரத்தில் கடிதத்தை எழுதியவர் யார் என்று கூட அவர் பார்க்கவில்லை. இதையே பார்க்காதவர் எப்படி நான் வைத்த கருத்துக்களை முழுவதுமாக பார்த்திருப்பார் என்று நாம் கவலைப் பட வேண்டியதில்லை. கற்பனைகளையும் கருத்து திரிபுகளையும் கைகாரியம் செய்பவர்கள் இதையெல்லாம் படித்துப்பாராமல் கருத்துக்களை திரிப்பதிலேயே கண்ணாயிருப்பார்கள்.

திருவாளர் நீலகண்டன் அவர்களே.. ஆர்.எஸ்.எஸ்-ம் மனுஸ்மிருதியும் என்ற கடிதத்தை எழுதியவர் இப்னு பஷீர்

இல்லை. பாவம் அவரது பெயரை மாய்ந்து மாய்ந்து எழுதி திட்டிவிட்டார்கள். இப்னு பஷீர் என்னை மன்னிப்பார் என்று நினைக்கிறேன். (நீலகண்டன் அவர்களே நீங்களும் ஒரு sorry அவருக்கு சொல்லிவிடுங்கள்)

மனுஸ்மிருதியின் கருத்துக்களை அப்படியே எடுத்து எழுதுகிறார் கோல்வால்கர். சாதி பாகுபாடுகளை எங்கேயாவது கண்டித்து எழுதியிருக்கிறாரா என்று பார்த்தால் அதுவும் நம் கண்ணில் படவில்லை. ஆனால் பலஇடங்களில் வக்காலத்து வாங்கியும் அதை ஆதரித்தும் அதுதான் இந்து மதமென்றும் குறிப்பிடுகிறார். இதை நாம் குறிப்பிட்டவுடன் இது அவரது கருத்து. அது இவரது கருத்து என்று மழுப்பல் வார்த்தைகளை அள்ளிவிடுகிறார்.

இந்து தர்மம் என்று எழுதியதில் மோசடி ஒன்றும் இல்லை. வேறு ஒரு மேற்கோளின் வார்த்தைகள் இடம் மாறிவிட்டது அவ்வளவுதான். ஆனால் அதை மட்டுமே பிடித்துக் கொண்டு மற்றுள்ள கருத்துக்களுக்கு படிப்பவர்கள் கவனம் சென்றுவிடாமலிருக்க வார்த்தைக்கு வார்த்தை முயற்சிக்கிறார். ஆனால் பொய் தன்னைத் தானே அடையாளம் காட்டிவிடும் என்ற பழமொழிக்கு ஒப்ப அவரது ஒப்புக்கு சப்பான வார்த்தைகள் எதுவுமே இங்கு எடுபடவில்லை.

இறுதியில் தனது கருத்து திரிபுகளில் தனக்கே திருப்தியில்லை, தான் சொல்வதில் உண்மை எதுவும் இல்லை என்று உணர்ந்தவுடன் தனக்கு தனது குருசீ கோல்வாக்கரின் Bunch of Thoughts உடன் தனக்கு முழு உடன்பாடு இல்லை என்று கூறுகிறார். தனது அறிவின்மையை காரணம் காட்டுகிறார்.

பூனாவில் ஊர்வலம் போனதைப் பற்றி அவர் குறிப்பிடவேயில்லை. ஊர்வலத்தில் மனுஸ்மிருதியை அலங்கரித்துச் சென்றதைப் பற்றியும் அவர் எதுவும் குறிப்பிடவில்லை. நான் நினைத்தேன் ஊர்வலத்தில் எனக்கு முழு உடன்பாடு இல்லை என்று கூறுவாரோ என்று. ஆனால் அந்த விஷயத்தை அவர் தொடவே இல்லை. அதை மறுப்பதற்கு அவரிடம்

சரக்கு எதுவும் இல்லை.

மனுஸ்மிருதியின் கருத்துக்களை நூற்றுக்கு நூறு அப்படியே பிரதிபலிக்கும் கருத்துக்களை கோல்வாக்கரின் புத்தகத்திலிருந்து நாம் எடுத்து எழுதினால் அது ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சி என்கிறார். ஒருவேளை ஆங்கிலேயர்தான் இவ்வாறு அவரை எழுதவைத்தார்களா என்பது கோல்வாக்கருக்கும் நீலகண்டனுக்கும் மட்டுமே தெரியும்.

வர்ண வியாவஸ்தா என்பது குறித்து கோல்வாக்கரின் மேற்கோள்களை குறிப்பிட்டவுடன் அது பகவத்கீதையின் கருத்துக்கள் என்கிறார்.

இப்படிச் சொல்வதின் மூலம் நமது கவனத்தை இவர்களின் மீதிருந்து சிதறடித்து பகவத்கீதையிலிருந்து கருத்துக்களை சொல்ல ஆரம்பித்துவிடுவேன் என்று நினைத்திருக்கலாம். அதன் மூலம் இந்து சகோதரர்கள் அனைவரையும் நமக்குஎதிராக திருப்பிவிடலாம் என்றும் நினைத்திருக்கலாம். ஆனால் சமுதாயத்திற்கு எதிரானவர்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் என்றுதான் நினைக்கிறோமே தவிர அனைத்து இந்து சகோதரர்களுமல்ல.

மனுதர்மத்தின் கருத்துக்களை நாம் எழுதியவுடன் நமது கவனத்தை திருப்பும் விதமாக அது கீதையின் கருத்து அதைத்தான் குருசீ எழுதினார் என்கிறார். மோசடி மேற்கோள்கள் என்கிறார்.

எது மோசடி மேற்கோள் ? ஒருவேளை நான் எழுதிய கருத்துக்கள் அதே Bunch of Thoughts புத்தகத்தில் கோல்வாக்கர் மறுத்து எழுதிய கருத்துக்களை அவர் ஆதரித்து எழுதுகிறார் என நான் எழுதினால் அது மோசடி மேற்கோள் என ஒத்துக் கொள்ளலாம். ஆனால் கோல்வாக்கர் மாய்ந்து மாய்ந்து மனுதர்மத்தை ஆதரித்து எழுதுகிறார்.அதற்காக அவர் பகவத்கீதையை மேற்கோள் காட்டுகிறார். மற்றவர்களின் கருத்துக்களை ஆதாரம் காட்டுகிறார். அதையே நாம் மேற்கோள் காட்டும்போது மிகஎளிதாக மற்றவர்கள் மீது பழிபோட்டுவிடுகிறார்.

இங்கே கருத்து திரிபுகளை அவர்தான் செய்கிறாரே அல்லாமல் நாம் செய்யவில்லை. இவர்களுக்கென்று ஒரு மரபு உண்டு. எப்போதெல்லாம் பிறர் குற்றம் குறைகளை சுட்டிக் காட்டுகிறார்களோ அப்போதெல்லாம் அந்த குறைகளை மற்றவர்கள் மீது திருப்பி விடுவதுதான். இப்போதைக்கு நாம் குற்றச்சாட்டு வைத்தவுடன் அதை பகவத் கீதை மீதும் லாலா ஹர்தயாள் மீதும் திருப்பி விடுகிறார்.

நான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட பல மேற்கோள்களுக்கு எந்த விளக்கங்களையும் ஆதாரப்பூர்வமாக அவர் மறுக்கவில்லை. மாறாக வியாக்கியானங்களை மட்டுமே குறிப்பிடுகிறார். இதோ இன்னுமொரு மேற்கோளை குறிப்பிடுகிறேன். இதற்கு என்ன வியாக்கியானத்தை கொடுக்கிறார் என்று பார்ப்போம். அல்லது இதையும் வேறு யாரோ எழுதினார் என்று சொல்கிறாரோ என்னவோ ?

‘புருஷ சுக்தாவில் நம்மை உருவாக்கிய கடவுள் யார் என்பது கூறப்பட்டிருக்கிறது. அதுவே நமது இந்து இனத்துக்கான அடையாளம். சூரியனும் நிலவும் நமது கடவுளின் இரண்டு கண்கள். நட்சத்திரங்களும் ஆகாயமும் கடவுளின் தொப்புளில் தோன்றியவை. பிராமணன் நமது கடவுளின் தலை. அரசர்கள் (சத்திரியர்கள்) அவனது கைகள். வைசியர்கள் அவனது தொடை மற்றும் சூத்திரர்கள் அவனது பாதம். இதன் அர்த்தம் இந்த நான்கு பிரிவுகளைக் கொண்டவர்களே இந்து மக்கள். அதுவே நமது கடவுள் ‘.

(It is clear from the following description of the almighty in pursha sukta, where in it is stated that the Sun and moon are his eyes, the stars and skies are created from his nabhi and brahmin is the head, king the hands, vaisyas the thighs and sutra the feet. This means that the people who have this four – bold arrangement ie the hindu people, is our god – Bunch of thoughts)

இந்து சகோதரர்களை ஒற்றுமையாக இருக்க விடாமல் தடுப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட சதித்திட்டம் தான் இந்த வர்ணாசிரம சிந்தாந்தம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த மண்ணின் மைந்தர்களை நீ கடவுளின்

பாதத்திலிருந்து பிறந்தவன் நீ சூத்திரன் என்னைத் தொடாதே தெருவில் வராதே கோயிலுக்குப் போகாதே என்றெல்லாம் கூறுகிறார்கள். பகவத் கீதையிலே வர்ணாசிரமத்தை குறிப்பிட்டிருந்தாலும் அந்த வர்ணாசிரத்தை எப்படி நடைமுறைப் படுத்துவது போன்ற சட்டத்திட்டங்களுக்கான நூல் தான் மனுஸ்மிருதி.

மனிதர்களை மாட்டை விட கேவலமாக நடத்தச் சொல்லிடும் ஒரு கோட்பாட்டை கையில் வைத்துக் கொண்டு அதை நடைமுறைபடுத்துவதற்காக வேண்டியும் எங்கே இதை நாம் இதை நடைமுறைப் படுத்தினால் இந்து மதத்தை விட்டு இந்த தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் ஓடிவிடுவார்களோ என பயந்து நாமெல்லாம் இந்து என்ற ஒரு போலி முழக்கத்தின்

அடிப்படையில் இந்துத்துவ வெறி ஊட்டப்படுவதற்காக ஆர்.எஸ்.எஸ் என்ற இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

இதுவரையில் இந்தியாவில் பல லட்சக்கணக்கான இடங்களில் சாதீயக் கொடுமைகளினால் தாழ்த்தப்பட்ட இந்து

சகோதர சகோதரிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சாதி இந்துக்களால் உயிரோடு எரிக்கப்பட்டிருக்கிறார்கள். நிர்வாணப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். மலத்தை சாப்பிட வைத்திருக்கிறார்கள். எத்தனை இடங்களில் ஆர்.எஸ்.எஸ் இவற்றை கண்டித்திருக்கிறது. சாதி இந்துக்களுக்கு எதிராக எத்தனை இடங்களில் போராட்டங்கள் நடத்தியிருக்கிறது. எதுவும் கிடையாது. சாதீய பாகுபாட்டை ஒழிக்கத்தான் ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு மாயை என்பது இதிலிருந்தே விளங்கிக்கொள்ள முடியாதா என்ன ?

இந்து மதத்திற்குள் வருபவர்களுக்கான சாதி அடையாளத்தைப் பற்றி குறிப்பிடும்போது நீலகண்டன் பிறைநதிபுரத்தானுக்கு பூநூல் அணிவிக்கதயார் என்று எழுதியிருந்தார். (இந்த விஷயத்தில் சகோ. பித்தனின் கருத்துகளுடன் நான் ஒத்துப்போகிறேன். இருந்தாலும்) இந்த கருத்து நீலகண்டனின் தனிப்பட்ட கருத்து என்றே நான் கருதுகிறேன். (நீலகண்டனுடைய பல கருத்துக்கள் இந்துத்துவத்திற்கெதிராகவும் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராகவும் இருக்கிறதை வரவேற்கிறேன்) காரணம் இந்து மகாசபையின் சிறப்பு மாநாடொன்று அலகாபாத்தில் (பிப். 1924) கூட்டப்பட்டது. அதில் இயற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு கூறுகிறது.

‘தாழ்த்தப்பட்டோர் பள்ளி கோயில் பொது நீர்நிலை ஆகியவற்றை பயன்படுத்துவதை தடுக்கக்கூடாது. எனினும் அவர்களுக்கு பூநூல் அணிவிப்பதும் வேதங்கள் பயிற்றுவிப்பதும் அவர்களோடு சமபந்தி போஜனம் செய்வதும் வேதத்திற்கும் இந்து மரபுக்கும் எதிரானது. எனவே இந்து ஒற்றுமையை கருதி இந்து சீர்திருத்தவாதிகள் இந்து மகாசபையின் பெயரால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் ‘ (JJFஜோர்டன்ஸ், சுவாமி சிரத்தானந்தரின் வாழ்வும் பணிவும் 1981 பக். 142)

‘இந்துவல்லாதவர்கள் இந்து மதத்திற்குள் வரலாம். ஆனால் அவர்களுக்குச் சாதி அந்தஸ்து எதுவும் வழங்கப்படமாட்டாது ‘ (அதேநூல்)

இந்த கருத்துக்களுக்கு நீலகண்டன் என்ன பதில் வைத்திருக்கிறார். சாதி அந்தஸ்தை வழங்குவதும் பூநூல்

அணிவிப்பதும் இந்து மதத்தின் அடிப்படையில் இவரால் செய்ய முடியாது. இவர் இந்து மதத்திற்கு அப்பாற்பட்டு அதற்கு எதிராகத்தான் செய்யவேண்டும். இவர் தெரிந்தே தான் இப்படி கூறுகிறாரா இல்லை திண்ணை வாசகர்களை திருப்தி படுத்த உண்மைக்கு மாற்றமாக பேசுகிறாரா என்பதற்கு அவர்தான் பதில் சொல்லவேண்டும்.

குறிப்பு :

1. அடிமைகள் குறித்தும் பத்வா குறித்தும் கேள்விகள் எழுப்பியிருந்தார். அவருக்கு இங்கே பதில் எழுத

ஆரம்பித்தால் விவாதம் திசைமாறிவிடும் என்ற காரணத்தால் தனிக் கட்டுரையாக வரும் வாரத்தில் எழுத ஆரம்பிக்கிறேன். மறக்காமல் பத்வா குறித்தும்.

2. சகோதரர் பித்தன் அவர்களின் கருத்துக்களுக்கு எதிர்கருத்தாக சாவர்க்கரைப் பற்றி பல விளக்க(!)ங்களை வைக்கிறார். ஒருவேளை பித்தன் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. ஏனென்றால் வருடங்களை எல்லாம் குறிப்பிட்டு எழுதுவதால் ஒருவேளை இது சரியென்று யாரும் நினைத்துவிடவும் வேண்டாம். (ஆர்.எஸ்.எஸ் பற்றியும் இப்படித்தான் எழுதிக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது). சாவர்க்கரைப் பற்றிய பல குறிப்புக்கள் என்னிடம் இருக்கிறது. அவர் ஒரு கோழை, ஒரு தேசத்துரோகி, நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒரு துரும்பை கூட எடுத்து போட்டிராதவர், நமது நாடு துண்டாக்கப்பட்டதற்கு முக்கிய காரணகர்த்தா என்று பல ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. வரும் வாரங்களில் திண்ணை-யிலேயே அதை எழுதி அனுப்புகிறேன். அப்போது இவர்கள் என்ன

பதில்(!)களை வைத்திருக்கிறார்கள் என்றுதான் நாமும் பார்ப்போமே. Lets wait and see

faiseldmm@hotmail.com

Series Navigation

ஃபைசல்

ஃபைசல்