கடிதம் ஹா ஜின்: காத்திருக்கும் மாப்பிள்ளை கதைகள்

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

நூல்நயன்


சீன அமெரிக்கரான ‘ஹா ஜின் ‘ எழுதிய காத்திருப்பு நாவல் பற்றிய

  • ஜெயமோகனின் எண்ணங்களைப்

    படித்தேன். ‘சீனாவின் இன்றைய வாழ்க்கையின் ஒரு சித்திரத்தை ஒரு மனிதனின் வாழ்க்கையில் வலிமையாக பிணைத்துக் காட்டுவதனால் இது முக்கியமான நாவல். அதற்கு அப்பால் நகராத காரணத்தால் மிக முக்கியமான நாவல் அல்ல ‘ – என்று தன்னுடைய தனிப் பாணியில் விமர்சனத்தை முடித்திருந்தாலும், இந்த ஆங்கில நாவலைப் படிக்கும் வாய்ப்பு அல்லது முனைப்பு இல்லாத பல தமிழ் வாசகர்களுக்குப் பயன்படும் விதத்தில் இதன் சாரத்தை சிறப்பாகவும், சுருக்கமாகவும் தொகுத்துக் கொடுத்துள்ளார் ஜெயமோகன். நம் தமிழ் எழுத்தாளர்கள்/விமர்சகர்களிடம் (19)90-களில் எழுதப்பட்ட அமெரிக்க/ஐரோப்பிய ஆங்கிலப் படைப்புகளைப் பற்றிக் கேட்டால் பெரும்பாலும் மவுனம்தான் விடையாகக் கிடைக்கும். சிலர் 19ஆம் நூற்றாண்டு/20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் எழுதப்பட்ட சில படைப்புகளின் பெயர்களை விட்டெறிவார்கள் அல்லது ஜெர்மன், ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ், பிற உதிரி மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சில படைப்புகள்/எழுத்தாளர்களின் பெயரை உச்சரித்து நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தி விடுவார்கள். மேலும் சிலரோ 1892-ல் செக்காவ் எழுதிய ‘வார்டு எண் ஆறு ‘ கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்காதவர்களுடன் இலக்கியம் பேசமுடியாது என்று ஜல்லியடித்து விடுவார்கள். அப்படி இல்லாமல், 90-களில் எழுதத் தொடங்கிய ஆங்கிலப் படைப்பாளிகளின் எழுத்துகளை ஜெயமோகன் போன்றவர்கள் படித்து, அது பற்றித் திண்ணையின் இலக்கியப் பக்கங்களில் சொல்ல முன் வந்திருப்பது தேங்கிக் கிடக்கும் நவீன தமிழ் இலக்கியச் சூழலை ஒருசில அங்குலங்கள் முன்னகர்த்த உதவுவதோடு, தமிழ் வாசகன் மரபிலக்கியத்திடமோ/திரைப்படப் பாடல்களிடமோ ஒட்டு மொத்தமாகச் சரணடைந்து விடும் விபரீதத்தைத் தடுக்கவும் உதவும்.

    ஹா ஜின் எழுதிய ‘மணமகன்/மாப்பிள்ளை கதைகள் ‘ (Bridegroom: Stories) என்ற சிறுகதைத் தொகுப்பு ஜெயமோகனால் முன்வைக்கப்படும் நாவலை விட முக்கியமான தொகுப்பு. இத் தொகுப்பு பற்றியும் ஜெயமோகன் விரைவில் எழுதவேண்டும். ஹா ஜின் அமெரிக்காவில் வசிப்பதால் அவர் ஒரு முதலியத்தின் கைப்பாவை என்று இடதுசாரிகள் குதிக்கக் கூடும். அதனால் என்ன ? சீனாவை இன்று ஆள்பவர்களே முதலியத்தின் கைப்பாவைகள் தானே ? இதில் ஹா ஜின் என்ன மோசமாகி விடப் போகிறார் ? அவராவது ஒரு ஜனநாயக நாட்டிலாவது வாழ்கிறார். சக மனிதரை எதிரி போலவோ அல்லது தம்மைக் காட்டிக் கொடுத்து விடுவாரோ என்ற பயத்துடனோ பார்க்காமல் வாழும் உரிமை அவருக்கு இருக்கிறது. அவரால் மாவோயிச அபத்தங்களையும், முதலியத்தின் அபத்தங்களையும், இவற்றிடையே நிகழும் தற்கால மோதலில் சாதாரண சீன மக்கள் படும் அவதிகளையும் சிரிக்கச் சிரிக்க – அதே நேரம் நம் மனம் வெகுவாகப் புண்படும்படியான துக்க உணர்வை எழுப்பிய வண்ணமும் தன் கதைகளை எழுத முடிகிறது. அது ஒன்றே போதும். படைப்புகளில் நாம் நாட வேண்டியது நம்பிக்கையை அல்ல. சான்றுகளை, தொடர்ந்த விசாரிப்பை, கேள்விகளை. அது ஹா ஜின் போன்றவர்களால் தான் நடக்கிறது. இடதுசாரிகளுக்கும் தெளிந்த விசாரிப்புக்கும் வெகு தூரம் என்பது நமக்குத் தெரிந்ததுதானே.

    ஹா ஜின்னின் ஒரு சுருக்கமான நேர்காணலைப் படிக்க:

  • ஹா ஜின் நேர்முகம்

    noolnayan@verizon.n

    Series Navigation

  • நூல்நயன்

    நூல்நயன்